பதிவு செய்யப்படாதவள்

2023 சிறுகதை டிசம்பர் 1-15, 2023

… டி.கே. சீனிவாசன் …

‘அதோ, அந்த ஜன்னலைப் பாருங்கள்! கம்பிகளுக்கிடையே காணப்படும் அவள் முகம் கவலை நிறைந்திருப்பானேன்? அவள் வாழ்வில் ஒளி மறைந்துவிட்டதே; அவளைப் பார்த்துக்கொண்டே போகும் பலரில் எவராவது அவள் வாழ்வில் படிந்த தூசியைத் துணிந்து தட்டிவிட எண்ணினீர்களா?”

இதைத்தான் அவன் அந்த வீட்டுப்பக்கம் போகும் போதும் வரும்போதும் உலகத்தைப் பார்த்துக் கேட்க நினைத்தான். வாயைத் திறந்து கேட்கவில்லை. அவளைப் பரிவாகப் பார்ப்பதும் உலகை ஆத்திரமாக நோக்குவதும் அவன் எண்ணத்தை வெளிப்படுத்தின.

அவள் யார் தெரியுமா? எதிர்வீட்டு ஜன்னலருகே நின்று இரக்கமற்ற உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாளே அவளேதான்!
பருவத்தில் பாழாக்கப்பட்ட பாவை; மலரும் வேளையில் சருகாக்கப்பட்ட மலர்.

அவள் கண்களில் கவர்ச்சி மறையவில்லை. அதரங்களில் இன்பத்தின் துடிப்புகள் இருந்து கொண்டுதான் இருந்தன. ஆனால், உலகம் இன்ப எல்லையிலிருந்து அவளை நீக்கிவிட்டது. மஞ்சளும் குங்குமமும் மட்டும் அவள் முகத்தில் இருந்திருந்தால், சுமங்கலி பூஜைக்கு அவளுக்குத்தான் முதல் தாம்பூலம் வைத்து அழைத்திருப்பார்கள்.

அவன் அவளைப் பார்த்தான். பார்வையில் இரக்கம் தானிருந்தது.
இரக்கம் காலப்போக்கில் வேறொரு உருவடைந்தது.

வேறொன்றுமில்லை; சாதாரண அன்புதான். எப்போதும் சாதாரண அன்புதானே காதலாக மாறும்! அது போலத்தான் நடந்தது.
அவன் கவிஞனாக இருந்திருந்தால், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை ஒத்திருந்த அவள் முகத்தினைப் பற்றி ஒரு காவியம்
புனைந்திருப்பான். சித்திரக்காரனாக இருந்திருந்தால் அள்ளி விழுங்கும் அவள் விழிகளையும் அருகே வரவேற்கும் அதரங்களையும் ஓவியமாகத் தீட்டியிருப்பான். சிற்பியாக இருந்திருந்தால் அங்கலட்சணங்கள் அத்தனையும் அமைந்த அந்தப் பேசும் சிலையைப் பேசாச் சிலையாக்கியிருப்பான்.
மூவரில் ஒருவராகவும் இல்லாத காரணத்தால் அவளைப் பார்த்து மகிழ்ந்து மகிழ்ச்சியால்
நெகிழ்ந்து, நெகிழ்ச்சியால் தூண்டப்பட்டு, அவளைப் பார்ப்பதையே அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டான்.
அவளுக்குத்தான் என்ன இவன்மேல் திடீர்க் காதலா?

தன் தலையில் அழிக்க முடியாமல் எழுதப்பட்ட எழுத்தை எண்ணி எதிரிலிருக்கும் ஏகாம்பரநாதரைத் துதித்துக் கொண்டிருந்தாள்.
ரயில் வண்டியில், ஒரு பெட்டியில் இடமில்லாவிட்டால் அடுத்த பெட்டியிலாவது கிடைக்குமா என்று தேடுவோமே, அதைப்போல இந்த ஜன்மத்தில் கிடைக்காத இன்பம் அடுத்த ஜன்மத்திலாவது கிடைக்க வேண்டுமே என்று ஆண்டவனுக்கு மனுச் செய்து கொண்டிருந்தாள்.

கேட்பாரற்றுக்கிடந்த அந்தக் கோயிலுக்குத் திடீரெனக் கிராக்கி ஏற்பட்டது. தனிமையிலேயே இருந்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு அந்த ஆண்டவன் வந்ததும், எல்லோரும் துணைக்கு அங்கே கூட ஆரம்பித்தார்கள்.

எனக்கு மட்டும் உயர்ந்த பண்பு என்கிறார்களே அது இருந்திருந்தால், எதிர்வீட்டு எழில்வல்லியின் பலமான பக்திதான் அந்தக் கோவிலுக்கு அத்தனை மகிமையைக் கொடுத்தது என்று எழுதியிருப்பேன். ஆனால், சாதாரண அறிவு படைத்த என்னால் அழகி ஒருத்தி கண்முன்னால் காட்சி அளிக்கிறாள் என்றால், இதைப் பார்ப்பதைத் தவிர ஊர்க் காளைகளுக்கு வேறென்ன வேலை, என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

தன்னை ஈடேற்றி வைத்த அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் அந்த ஏகாம்பரநாதர் எண்ணியிருக்க வேண்டும்.
அவன் அவளைப் பார்த்தான்; ஏகாம்பரநாதன் மன்மதனைப் பார்த்தான்; மன்தமன் தன் பாணத்தைப் பார்த்தான்; பாணம்
இருவர் உள்ளங்களையும் ஊடுருவிப் பார்த்தது. பாணம் பாய்ந்தவுடன் இருவர் கண்களும் ஒன்றுக்குள் ஒன்று பார்த்தன!
காதல் தெய்வத்தின் ஸ்தலபுராணமல்ல இது. ‘ரசிகமணி’கள் ஸ்டைலில் எழுதினால் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு சாம்பிள்!

எது எப்படியிருந்தாலும் விதவையாயிற்றே என்று அவளை அவன் வெறுக்கவில்லை. “சட்டையில் கிழிசல் இருந்தால் ஒட்டுப் போடுகிறோம்; அதைப்போல விட்டுப் போன அவள் வாழ்வைக் கட்டுப்போடுவோம்; அதற்கு ஈடாக அவள் இதயம் நிறைந்த அன்பை நமக்களிப்பாள்” என்ற எண்ணத்தின் சாயல்தான் பலர் அவளைப் பார்த்தும், இவன் பார்வையை மட்டும் தனித்துக் காட்டியது.

காதல் வளர ஆரம்பித்தது. முதலில் கண்கள் பேசின; பின்னர் கடிதங்கள் பேசின; காதல் வளர்ச்சியின் கடைசிக் கட்டமாகிய உதடுகள் பேசுவதற்குத் தடையாக அந்த ஜன்னல் கம்பிகள் இருந்தனர்!

இவர்கள் இருவரும் தமக்கிடையே இருந்த தூரத்தைக் குறைத்துக்கொள்வது, ஏகாம்பரநாதருக்குத் திடீரென ஏற்பட்ட அந்தப் பக்தர்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆண்டவனுக்கு அத்தனை கஷ்டப்பட்டு ஆராதனைகள் நடத்தியும், அந்தச் ‘சாமி’யும் வரந்தரவில்லை இந்த ‘அம்மா’ளும் சரி சொல்லவில்லை என்றால் ஏன் அவர்களுக்குக் கோபம் வராது?

கூடிக் கூடிப் பேசினர். பேசியதோடு நிற்கவில்லை; வீதியெல்லாம் தூற்றினர். “விதவையின் விழிகளில் ஒளி தோன்றலாமா” என வாதிட்டனர். “தாலியறுத்தவள் தகாதன செய்ய நினைக்கலாமா” எனத் தத்துவம் பேசினர். “மஞ்சளோடு மங்களமும் மறையவேண்டாமா” என்று மதவாதம் பேசினர். இவர்களுக்குத் தெரியாது. மலரும் பூவின் மணத்தைத் தடுக்க எந்த வேலியும் பயன்படாது என்று!

இதற்கிடையில் அவளும் அவனும் இன்பக் கற்பனைகளை எழுப்பி மகிழ்ந்திருந்தனர்.
வெடுக்கென ஜடையைப் பிடித்திழுத்தான்.

“என்னை விடுங்கள்” என்றாள்.
இது ஒன்றும் அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. “என்னைத் தொடுங்கள்” என்றா ஒரு பெண் வாய் வீட்டுச் சொல்வாள்? வேதனையைப் பொருட்படுத்தாது வெட்கத்தை வெளிப்படுத்தும் அவள் விழிகள் அவனுக்குத் தெம்பையளித்தன. குனிந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளுக்குள் பார்வையைப் பாய்ச்சினான். குளிர்ச்சியாலே மலர்ந்திருந்த குதூகலம் அவன் உள்ளத்தைக் கொள்ளை
கொண்டது. தொட்டிழுத்தான்; கிட்ட வந்தாள். கட்டிப்பிடித்தான்; துவண்டு விழுந்தாள்.

பிறகு….?

எல்லோருக்கும் தெரிந்த நிகழ்ச்சிகளை எழுத்துருவாக்கி வேறு படித்துத் தொலைக்க வேண்டுமா?

இது ஒரு காட்சி, அவன் கற்பனையில் நடந்தது.

“உங்களுக்கு நேரம், நாழியே கிடையாதா? வீட்டு வேலை பாக்கியிருக்கு. விடுங்கள்.”

“நீ இருக்கும் போது நேரமே தெரிவதில்லை கண்ணே!”

“பைத்தியம் பிடிச்சுடப் போகுது.”

“முந்தியே பிடிச்சுட்டுதே. அதனாலேதான்…”

“அய்யோ! இப்ப பாருங்க, அத்தைகிட்டப்-போயி இதையெல்லாம் சொல்றேன்.”

“என்னான்னு சொல்லுவே?”

“சீ! இந்த ஆம்பிள்ளைங்களுக்கே வெட்கம், மானம் ஒன்றும் கிடையாது. நாக்கைப் பாரு நாக்கை! எது பேசுகிறதுன்னு தெரியறதே இல்லை!”
இருவரும் நினைத்துப் பார்த்தார்களே தவிர, நேரடி நடவடிக்கைகளில் இறங்கவேயில்லை!
இதற்குள் ஊரே அவர்களுக்கு எதிராகத் திரண்டுவிட்டது.
எங்கள் வீடு அவள் வீட்டுக்கு எதிர்வீடுதான். ஒரு நாள் நான் அறைக்குள் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுக் கிழவர் என் தம்பியோடு பேசிக்கொண்டிருந்தார். அது என் காதுகளில் விழுந்தது.

“தம்பி அந்த எதிர்த்த வீட்டு முண்டை இருக்கிறாளே…?”

“என்ன தாத்தா வயசானவங்க வாயிலே வந்தபடி பேசலாமா?”

“இல்லை தம்பி, அவன் அவகிட்டக் கடுதாசி குடுத்தான். என் கண்ணாலே பார்த்தேன்.”

“வெளியிலே பறந்து வந்திருக்கும்; எடுத்துக் குடுத்திருப்பான்.”

“இதெல்லாம் ஒனக்குத் தெரியாது தம்பி. நீ சின்னப் புள்ளே, எனக்கு இதிலே எல்லாம் ரொம்பப் பழக்கம் நம்ப தெருவிலே இப்படி நடக்கலாமா?”
தெருப்பற்று அந்தக் கிழவருக்கு அளவுக்கு மீறி ஏற்பட்டுவிட்டது. குப்பைத் தொட்டிகளில் குழந்தைகளைக் காண விரும்பினார்களே தவிர, தொட்டிலில் தவழ வேண்டும் அந்தக்குழந்தைகள் என்று நினைக்கவேயில்லை. எல்லோரும் சேர்ந்து அவளுடைய அப்பாவிடம்
தூது போனார்கள். “அநீதி நடக்கிறதே, அடக்கவேண்டாமா?” என்று முறையிட்டார்கள். ஆனால், அவள் அலட்சியம் செய்துவிட்டாள்.
ஒருநாள் அவன் வந்தான். கையில் இருந்த கடிதத்தை வீட்டுக்குள் வீசியெறிந்து விட்டுத் திரும்பும் நேரம், “டேய்” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். குச்சியை எடுத்துக்கொண்டு ஒரு கிழவன் ஓடோடி வந்தான். ஓங்கியடித்தான் இவனை. இவன் கைகள் மட்டும் பூப்பறிக்கப் போகவில்லை அல்லவா! போட்டான் ஒரு போடு கிழவன் மண்டை பிளந்தது. “அய்யோ, அப்பா” என்று அலறிக்கொண்டே ஓடிவந்து, தகப்பன் மேல்விழுந்தாள் இவனுடைய அவள்.
கூட்டம் கூடிவிட்டது. ஆனால், ஏகாம்பரநாதர் மட்டும் மூடிய கண்களைத் திறக்கவே இல்லை!

தூக்குமேடை அருகே கருப்புத்துணி போர்த்துக் கொண்டு நிற்கும் அவன் மேல் வைத்த பார்வையைத் திருப்பி அந்த வீட்டைப் பாருங்கள்.
ஜன்னலுக்கப்பால் திரை விழுகிறதே ஏன் தெரியுமா? வீட்டிலே இன்பங் காணாதவன் எவனோ அவளைத் தேடி வந்திருக்கிறான்.
அனாதையான அவள் வாழ்வை நடத்த வழுக்கி விழுந்துவிட்டாள். படிக்காத எந்தப் பெண்ணும் மூலதனம் இல்லாமல் நடத்த முடியும் தொழில் இது ஒன்றுதானே இன்றைய சமுதாயத்தில்!

கதாசிரியர்கள் உரிமைகள் பதிவு செய்யப்
பட்டது என்பார்களே, அது முன்பு. இப்போது, அவள் உரிமைகள் பதிவு செய்யப்படாதவள்!- ♦