சிறுகதை : ஆமை புகுந்த வீடு

2022 சிறுகதை ஜுலை 16-31 2022

அ.அநபாயப் பாண்டியன்

சலசலவெனப் பறவைகளின் சிறகொலி பொழுது புலரப் போவதை உணர்த்தியது. எங்கிருந்தோ சில பறவைகளின் சங்கீத ஒலி அந்த அதிகாலைப் பொழுதை அழகாக்கி-யிருந்தது. அந்த அதிகாலை வேளையில், இராமலிங்க அய்யரின் வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கூடவே சாமி, சாமி என்ற குரலும்! தன் நித்திரைக் கயிறுகள் அறுபட்ட நிலையில் சடக்கென எழுந்த அய்யர், தன் கழுத்தில் கைகளைப் போட்ட வண்ணம் உறங்கிக் கொண்டிருந்த தன்னிரு பெண் குழந்தைகளையும் கண்டு, அவர்களின் கைகளை நீக்கிவிட்டு எழுந்தார்.
எழுந்தவரின் கண்களுக்கு இருள் பழகாததால், கண்களைச் சுருக்கிக்கொண்டு அறையைப் பார்வையால் துழாவினார். கூடவே ‘கொஞ்சம் இருங்கோ வர்றேன்’ என்று குரல் கொடுத்தார். அத்துடன் வெளியிலிருந்து வந்த அழைப்போசை நின்றுவிடவே, அய்யர் நிதானமாகச் சுவரில் உள்ள மின் சுவிட்சைத் தேடி அழுத்தினார். அறையெங்கும் ‘பளீரென’ வெளிச்சம் பரவியது. அந்த வீடு ஒன்றும் அவ்வளவு பெரியதும் இல்லை, மிகச் சிறியதும் இல்லை. நடுத்தரமாகவே காட்சியளித்தது.
இந்த வீடு இவர் தந்தையின் காலத்தி-லேயே கட்டப்பட்டுவிட்டதால், அய்யருக்கு ஒரு குடும்பப் பாரம் குறைந்து போனது. இல்லையென்றால்…. இப்போது அவருக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்து வீடும் கட்டி, குடும்பத்தையும் நகர்த்துவதென்றால் அது பிரம்மப் பிரயத்தனமாகத்தான் இருந்திருக்கும்! பூஞ்சோலைக் கிராமத்தில் கோயில் பூசாரியாக இருக்கும் அவருக்குப் பூசையின்போது கிடைக்கும் சில்லறையும், சம்பளமாக மாதம் 800 ரூபாயும் கிடைக்கும். அதைக் கொண்டுதான் அவர் தன் வாழ்க்கைத்தேரை இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இடையிடையே மற்றக் கிராமங்களிலும் புரோகிதம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும் வாழ்க்கையை நகர்த்திவந்தார்.
சிறிது நீரெடுத்து முகத்தைக் கழுவிக் கொண்டவர், தோளில் கிடந்த துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்தவாறே சென்று கதவைத் திறந்தார். வெளியே நின்றிருந்த அந்த நபரைக் கண்டதும் புரிந்ததற்கு அடையாளமாகத் தலையை ஆட்டியவர், ”வாங்கோ, வாங்கோ, முத்தையா பிள்ளைவாள்! என்ன இந்த நேரத்தில் வந்திருக்கேள்?” என்றவாறே வெளித் திண்ணையில் அமர்ந்து, முத்தையாவையும் அமரச் சொன்னார்.

முத்தையா பிள்ளையோ, “இல்லை சாமி, நீங்க உட்காருங்க” என்றவாறு நின்று கொண்டிருந்தார். அய்யர் மீண்டும் வற்புறுத்தவே முத்தையாவும் அமர்ந்தார். “என்ன, பிள்ளைவாள் காலம்பறவே வந்திருக்கேள், ஏதாவது முக்கியமான காரியமோ?” என்று கேட்டார் அய்யர் _ குரலில் காரணம் அறிய விரும்பும் தொனியுடன். “ஆமா சாமி! இராத்திரியில் இருந்து சரியான தூக்கமே இல்லை, எப்படா விடியும்னு காத்திருந்து ஓடிவந்து நிக்கிறேன் என்றார்’’ முத்தையா பிள்ளை, அவர் குரலில் பயம் பரிபூரணமா-யிருந்தது.
அதைக் கவனித்தவாறே அய்யர், “எதுக்குப் பிள்ளைவாள் கவலைப்படுறேள், என்ன விஷயம் சொல்லுங்கோ சரி பண்ணிரலாம்” என்றார், முத்தையா பிள்ளைக்குத் தைரிய-மூட்டும் குரலில்.
முத்தையா தொண்டையைச் சிறிது செறுமிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார். அய்யரும் ஆவலாய்க் கேட்கக் காதைத் தீட்டிக்கொண்டார். “சாமி, ஒரு ரெண்டு நாளுக்கு முன்னே நம்ம வீட்டுல ஆமை ஒன்னு புகுந்துருச்சு, அதுக்கு முன்னால அதுமாதிரி எப்பவுமே நடந்ததில்லை, நம்ம வீட்டுக்குப் பின்னாலே குளம் ஒன்னு இருக்கா, சரி அதுல இருந்து வந்தது. வழிதவறி வீட்டுல புகுந்திட்டதா நினைத்து விட்டுட்டோம்! இன்றைக்கு என்னடான்னா, ராத்திரி பன்னிரண்டு, ஒருமணி இருக்கும் மறுபடியும் ஆமை வீட்டுக்குள் புகுந்துருச்சு. அதான் ஒரே கவலையா இருக்கு சாமி. எனக்கும் இப்பக் கொஞ்ச காலமா வீட்டுல ரொம்பக் கஷ்டமா இருக்கு. நீங்கதான் ஏதாவது செய்து என்னைக் காப்பாத்தணும் சாமி” என்று குரலில் நடுக்கத்துடன் கூறி முடித்தார். பயம் அவர் குரலில் பாலுடன் தண்ணீராக விரவியிருந்தது.
அவர் கூறக்கேட்ட அய்யர் ஆழ்ந்த சிந்தனையுடன் முகவாயில் உள்ளங்கையைப் புதைத்தவாறு மோட்டு வளையை நோக்கிக் கொண்டிருந்தார். அவரின் முகத்தில் கவலைக் குறி படர்ந்திருந்தது. அது நேரம் போகப் போக இன்னும் பெரியதாகிக் கொண்டே சென்றது. அய்யரின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்ட முத்தையா பிள்ளைக்கும் அது ஒட்டிக் கொண்டது. அவர் அய்யரின் முகத்தையே கூர்ந்து கவனிக்கலானார்.

சுமார் பதினைந்து நிமிடத்துக்கும் மேலாகச் சிந்தனையைச் செலவிட்ட அய்யர் தொண்டையைச் செறுமியவாறே “பிள்ளை-வாள், நீங்க ஏன் முதல்நாள் புகுந்தப்பவே வரலை? இப்போ அது மறுபடியும் உள்ளே புகுந்துருச்சு. சனீஸ்வரனை யாரும் அலட்சியப்-படுத்தக் கூடாது. தெய்வங்களே அவரை அலட்சியப்படுத்திட்டு எவ்வளவு கஷ்டப்-பட்டிருக்காங்க தெரியுமா? நீங்க அப்படி அலட்சியப்படுத்தியிருக்கக்கூடாது.” என்றவரை இடைமறித்த முத்தையா ”தப்புதான் சாமி, தப்புதான்! நீங்கதான் எப்படியாவது காப்பாத்தணும்” என்றார் கவலையுடன்.
மீண்டும் சிந்தனையில் இறங்கிய அய்யர் மேலும் அய்ந்து நிமிடங்களைக் கழித்துவிட்டுச் சொன்னார், “சரி பிள்ளைவாள், நடந்தது நடந்து போச்சு, இனியென்ன செய்யுறது! எல்லாம் அந்த சனீஸ்வரன் பார்த்துப்பான். அவனுக்கு ஒரு பரிகாரம் பண்ணிட்டோம்னா கோபம் தணிஞ்சுருவான்” அய்யரின் குரலில் தெரிந்த நம்பிக்கை முத்தையா பிள்ளைக்கு நாடி நாளங்களில் புது இரத்தத்தைப் பாய்ச்சியது. அவர் முகம் பிரகாசமானது. அத்துடன் கேட்டார் ”சந்தேகம் சாமி, அதான் நான் உங்களைத் தேடி ஓடிவந்தேன். பரிகாரத்துக்கு எவ்வளவு சாமி செலவாகும்?”
பிள்ளையின் முகத்தைக் கூர்ந்து நோக்கிய அய்யர் “பரிகாரத்துக்கு ஒரு அய்ந்நூறு ரூபாய் வரும் பிள்ளைவாள், யாகம் செய்ய ஆயிரத்து அய்ந்நூறு வரும்” என்றார். அதைக் கேட்ட பிள்ளை சிறிது யோசித்தார். அவர் யோசிப்-பதைக் கண்ட அய்யர் பதறித்தான் போனார், தன் பதற்றத்தைக் குரலில் காட்டாதவாறு சாமர்த்தியமாய் மறைத்தவாறே கேட்டார் ”என்ன பிள்ளைவாள், யோசிக்கறீங்க, செலவு ரொம்ப அதிகமா சொல்லிட்டேனா?”
அதைக் கேட்டுப் பதறிப்போன பிள்ளை ”அய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்னுமில்லை சாமி, நம்ம பொண்ணுக்கும் ஒரு தோஷம் இருக்குன்னு ஜோசியர் ஒருத்தர் சொன்னார். அதையும் நீங்களே தீர்த்துட்டீங்கன்னா…” என்று இழுத்தார். இப்பொழுதுதான் அய்யர் முகத்தில் ஒளி பரவியது. அத்துடன் சொன்னார். “அதுக்கென்ன, பிள்ளைவாள் பேஷா செய்துருவோம்னு கூடவே அதற்கும் ஒரு அய்ந்நூறைத் தீட்டினார். வருகின்ற வெள்ளிக்-கிழமை இந்தச் சம்பிரதாயங்களை நடத்தலாம் என்ற அய்யர், பூஜைக்குரிய சாமான்கள்தானே வாங்கிவிடுவதாகவும் சொல்லிவிட்டார். பிள்ளையும் சம்மதித்து அதற்குரிய பணத்தை வீட்டிற்குச் சென்று மகனிடம் கொடுத்தனுப்பு-வதாகக் கூறிச் சென்றார். சென்றவர் சொன்னபடி ரூபாய் இரண்டாயிரத்து அய்ந்நூறையும் மகனிடம் கொடுத்தனுப்பினார்.

அந்த வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியளவில் பிள்ளையின் வீட்டில் பூஜை ஆரம்பமாகியது. பூஜைக்குப் பிள்ளையின் குடும்பத்தினரும் அவரின் உறவில் இரண்டொரு வரும் வந்திருந்தனர். வீட்டின் முன்புறமிருந்த பரந்த முற்றத்தில் களிமண்ணைக் கொண்டு திண்டு செய்யப்பட்டு அதில் யாகம் செய்வதற்கு ஓமகுண்டம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் மேற்புறத்தில் சிலையொன்று சிறிய அளவில் வைக்கப்பட்டு அதற்கு மாலை மரியாதை செய்யப்பட்டிருந்தது. சிலையின் நேரெதிரில் அய்யர் அமர்ந்து கொண்டு, வலப்புறத்தில் முத்தையாபிள்ளையை உட்காரவைத்தார். இடுப்பில் வேட்டி மேல் துண்டைக் கட்டிக்கொண்டு சட்டையில்லாமல் பிள்ளை உட்கார்ந்திருக்க, அய்யரும் அந்நிலையிலேயே இருந்தார். அவர் உடலின் பெரும்பகுதியைத் திருநீறும், குங்குமமும் மறைத்திருக்க, கண்களில் சிவப்பேற அவர் நாவினின்று மந்திரச் சொற்கள் பிரவாக-மெடுத்தன.
முதலில் சனீஸ்வரனுக்கான பரிகாரத்தைச் செய்யத் தொடங்கிய அவர், சில மலர்களைச் சிலையின் மீது தூவியவாறு மந்திரம் ஜெபித்து, நீரைக் கொண்டு அபிஷேகம் நடத்தி அந்நீரைப் பக்தர்களுக்கு வழங்கினார். மீண்டும் சில மந்திரங்களைச் சொல்லிப் பரிகாரத்தை நிறைவு செய்தவர், யாகத்தில் தீ மூட்டி அதில் நெய்யை வார்த்தார். நெய்யானது பெரும் சுவாலையுடன் எரிய அதனுள் சில மலர்களைத் தூவினார். அது எரிந்து சாம்பலானது. அய்யர் மந்திரத்தை உச்சஸ்தாயியில் உதிர்த்தவாறே ஓம குண்டத்தில் நெய்யை வார்த்துக்கொண்டே இருந்தார். மலர்களையும் இடையிடையே மந்திரம் சொல்லி அதில் எறிந்து கொண்டிருந்தார். இவ்விதம் செய்து பூஜையை நிறைவு செய்தவர், பிரசாதத்தை எடுத்துப் பிள்ளையிடம் நீட்டினார். அவர் வாங்கிக்-கொள்ளச் சுற்றியிருந்தவர்களுக்கும் பிரசாதத்தை வழங்கிவிட்டுச் சொன்னார்.
“பிள்ளைவாள் உங்களோட தோஷமும், உங்க மகளோட தோஷமும் இந்தக் கணம் முதல் அழிந்துவிட்டது. இந்த நெருப்பில் விழுந்து சாம்பலான மலர்கள் போன்று உங்கள் கஷ்டங்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இனி உங்கள் வாழ்க்கையில் என்றுமே முன்னேற்றம்-தான்”
அதுகேட்டு முகத்தில் சந்தோஷத்தைப் படரவிட்ட பிள்ளை “ரொம்ப நன்றி சாமி’’ என்றவாறு ஒரு தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப் பழம், தேங்காய் முதலான-வற்றை வைத்து அதில் ஆயிரம் ரூபாய் பணமும் வைத்து அய்யரிடம் நீட்டினார். மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அய்யர், பிள்ளைக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் நன்றியையும் ஆசியையும் கூறிவிட்டு விடைபெற்றார்.

வீட்டிற்கு வந்த அய்யரை அவர் மனைவி வைரம்மாள் வரவேற்றார். அய்யர் கால், கைகளை நன்றாகக் கழுவிவிட்டு வீட்டினுள் நுழைந்தார். மகள்கள் இருவரும் முன்னறையில், அமர்ந்து பாடங்கள் படித்துக்கொண்டிருந்தனர். தந்தையின் வருகையுணர்ந்த இருவரும் புத்தகத்தை மூடிவைத்து விட்டு எழுந்து தந்தையிடம் வந்தனர், அய்யர் தன் கையிலிருந்த பையை மனைவியிடம் கொடுத்து விட்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். அவர் அருகில் வந்து அமர்ந்த இரு மகள்களில் மூத்தவள் கமலாவே முதலில் கேட்டாள். “ஏம்பா… இன்றைக்கு என்ன பூஜை செய்தேள்?”
நம்ம முத்தையா பிள்ளை இருக்காரில்லமா, அவரோட வீட்டுல ஆமை புகுந்துருச்சாம், அதுக்குப் பரிகாரம் செய்யக் கூப்பிட்டிருந்தார். கூடவே சின்ன யாகம் ஒன்னும் நடத்தக் கேட்டார். அதான் முடிச்சுட்டு வந்தேன்” என்றார்.
“ஆமை புகுந்தா தோஷமாப்பா” என்றாள் சின்னவள் சவுமிதா.
“அப்படித்தானேம்மா சாஸ்திரம் சொல்லுது” என்றார் அய்யர்.
“சாஸ்திரம் சொல்றது இருக்கட்டும்பா, நீங்க நம்பறேளா” என்று கேட்டாள் சவுமிதா.
“நான் நம்பறேனோ இல்லையோ, மத்தவங்க நம்புறாங்களேம்மா” என்றார் அய்யர்.
“அப்படின்னா நம்ம வீட்டுல ரெண்டு மாதத்துக்கு முன்னே ஆமை ஒன்னு வந்துச்சுல்லப்பா, அப்போ நாம் எந்தப் பூஜையும் செய்யலையே, நம்மள மட்டும் எதுவும் பண்ணாதாப்பா” என்று கேட்டாள் மூத்தவள் கமலா.

”ஆமை என்னம்மா ஆற்றிவு ஜீவனா _ யோசனை செய்து நுழைய? அதுபாட்டுக்குப் போற போக்கிலே எந்த இடமா இருந்தாலும் நுழையத்தான் செய்யும். அதுக்கெல்லாம் பூஜை செய்துகிட்டிருக்க முடியுமா?” என்றார் அய்யர்.
“அப்போ, அவங்களுக்கு மட்டும் ஏம்பா பூஜை செய்யப் போனீங்க” என்று கேட்டாள் கமலா.
நாற்காலியில் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்த அய்யர் “நான் அந்தப் பூஜையை நடத்தலேன்னா என்னம்மா, பிள்ளை விட்டுறவா போறாரு, இன்னொருத்தர்கிட்ட போயி இதவிட அய்ந்நூறோ, ஆயிரமோ கூடவோ, குறைத்தோ கொடுத்துப் பரிகாரம் செய்யத்தான் போறாரு. அதனாலதான் நானே செய்துட்டேன்’’ என்றார்.
”அவங்கள ஏமாத்துறது பாவமில்லை-யாப்பா?” என்று கேட்டாள் சவுமிதா.

”அப்பிடிப் பாத்தா புரோகிதமே செய்ய முடியாதேம்மா? ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு தருமம் இருக்கு. நம்மாளுக்கு விதித்த தருமம் இது. சரியோ தப்போ செய்துதானே ஆகணும்?”
என்ற அய்யர், நாற்காலியை விட்டு எழுந்து சென்று அலமாரியைத் திறந்தார். அதன் உள்ளிருந்த பை ஒன்றை – எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்தார்.
“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாதுன்னு சொல்றாளே, அது உண்மையாப்பா” என்று கேட்டாள் சவுமிதா.
அதைக் கேட்டுச் சிரித்த அய்யர், “ஆமாம்மா, உண்மைதான். அது, ஆனால், அதைச் சரியா புரிஞ்சுக்காமதான், தோஷம் அது இதுன்னு நம்மள்ட்ட வர்றாங்க” என்றார்.
“என்னப்பா, உண்மைன்னு சொல்றேள், தோஷம்னு சொல்றேள் ஒன்றுமே புரியலையேப்பா” என்றாள் மூத்தவள் கமலா.
“அமீனா என்பவர் கோர்ட்டில் இருந்துவரும் ஆள். கோர்ட்டுக்குப் போன குடும்பம் கெடும். ஆமை என்பது உயிருள்ள ஆமையல்ல; கல்லாமை, அறியாமை, பொறாமை போன்றவை. இவையுள்ள வீடும் கெடும். இதைத்தான் இப்படிச் சொன்னாங்க’’ என்றார்.
“அப்படி இருக்கும்போது இவங்க ஏம்பா, தோஷம் அது – இதுன்னு புலம்பறாங்க’’ என்றாள் சவுமிதா.
“அவங்க அதைப் புரிஞ்சுக்கிட்டா, நம்மளமாதிரி ஆளுங்க. -சாப்பாட்டுக்கு என்னம்மா பண்ணுறது” என்று ஓங்கிச் சிரித்த -அய்யர், தன் மகள்கள் வியப்பும், வேதனையும் நிரம்பிய விழிகள் தன்முகத்தில் படிவதைக் கண்டு அலட்டிக் கொள்ளாது, அந்தப் பரிகார பூஜையில் கிடைத்த ஆயிரம் ரூபாயும், பூஜை சாமான்கள் வாங்கியதில் எஞ்சிய ஆயிரத்து அய்ந்நூறு ரூபாயையும் விரலில் எச்சில் தொட்டு மீண்டும் நிதானமாக எண்ணத் தொடங்கினார்.