பெயரைக் கேட்டாலே அலறுகிறார்கள்!

2023 கட்டுரைகள் நவம்பர் 1-15, 2023 மற்றவர்கள்

வி.சி.வில்வம்

பெரியார் என்றதும் நினைவிற்கு வருவது அவரது கொள்கைகளே! எப்படியான கொள்கைகளை அவர் உருவாக்கினார் என்றால், இறந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் அவரை ஒரு சாரார் கடுமையாகத் திட்டும் அளவிற்குக் கொள்கைகளை உருவாக்கினார்!

உலகில் எத்தனையோ பேர், எவ்வளவோ தத்துவங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவை நடைமுறையில் இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால், அந்தத் தத்துவங்களை உருவாக்கியவர்களை இறந்த பிறகு யாரும் திட்டுவது கிடையாது. சில ஆண்டுகளில் அந்த மனிதரையே மறந்துவிடுவார்கள். இதுதான் உலக வழக்கமாக இருக்கிறது!

பெரியார் 24.12.1973 அன்று மறைந்து விட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகும், எதிராளிகள் நம்ப மறுக்கிறார்கள். தினமும் கடுமையாகத் திட்டுகிறார்கள். தூங்கி எழுந்தால் அவர்கள் முன் பெரியார் நிற்பது போல அலறுகிறார்கள். உயிரோடு அவரைக் கண்டபோது எவ்வளவு கோபம் வந்ததோ, அதைவிடவும் அதிகக் கோபம் 50 ஆண்டுகளுக்கு முன் இறந்த பெரியார் மீது இன்னமும் இருக்கிறது என்றால் இது உலக அதிசயம் அல்லவா!

அந்தளவிற்கு அறம் சார்ந்த கொள்கைகளை வகுத்துச் சென்றவர் பெரியார்! அவரை எதிர்ப்பவர்களும் இக்கொள்கையால் பயன்பெற்றே வருகிறார்கள்! பயனடையாத ஒற்றை மனிதரைக் கூட, இங்குக் காண முடியாது! யாருடைய தத்துவத்தை எதிர்த்து இயக்கம் உருவாக்கினாரோ, அந்தப் பார்ப்பனச் சமூகமும் அவரால் ஏராளம் பயன்பெற்றுள்ளது!
சரி! எப்படி அவரால் இப்படியான தத்துவத்தை உருவாக்க முடிந்தது? கடவுள் இல்லை! மதம், ஜாதி, சாஸ்திரம், புராணம் இதிகாசம் இவை எல்லாம் மோசடி என்று அவரால் எப்படிச் சொல்ல முடிந்தது? அதுவும் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு சமூகத்தில்?

அங்கு தான் தனித்தன்மையுள்ள சிறந்த மனிதராய் பெரியார் வெளிப்படுகிறார்! கூடவே நேர்மையும், நாணயமும் இரு பக்கங்களாக அவரிட
மும் அவர் கொள்கைகளிலும் இருக்கிறது! வெறும் உணர்ச்சி வசப்பட்டு மக்களை அழைத்துச்செல்லும் ஒரு வழிப்பாதை அல்ல பெரியார் பாதை! யார் மீதும் திணிக்கப்படாத, எதிர்வினா எழுப்பும் உரிமை தந்து வடிவமைக்கப்பட்ட இருவழிப் பாதை பெரியார் பாதை!

இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பார்பனியத் தத்துவம் நாட்டைச் சீரழித்து வைத்திருந்தது. அதை ஒழிக்க நினைத்த பெரியார், கணிசமாக அதில் வெற்றியும் பெற்றார். எனினும் ஆரியக் கட்டுமானத்தை முற்றிலுமாகத் தகர்த்து எறிந்துவிட்டார். தங்களை நிலை நிறுத்திக் கொள்ள புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்கும் நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் ஆளானார்கள். அதேநேரம் தங்கள் தத்துவத்தைத் தொடர்ந்து பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்குத் தம் இயக்கத்தால் தீங்கேதும் வராமல் பார்த்துக் கொண்டார். அது அவரது மனித நேயம்.

பார்ப்பனியக் கொள்கையின் மீது கடும் கோபத்தில் இருக்கும் பெரியாரிஸ்டுகள், ஒரு பார்ப்பன மனிதரைக் கண்டால் அப்படி நடந்து கொள்வதில்லை. மாறாக தண்மையோடு பேசுகிறார்கள், செயல்படுகிறார்கள், உதவி செய்கிறார்கள். திருச்சி சிறீரங்கத்தில் திராவிடர் கழகத் தோழர் ஒருவர் ஆட்டோ ஓட்டுகிறார். பார்ப்பனர்கள் பலரும், குறிப்பாகப் பெண்கள் இந்த ஆட்டோவில் தான் பயணம் செய்கிறார்கள். பெரியாரியத் தோழர் என்று தெரிந்தே அழைக்கிறார்கள். கொள்கை மாறுபட்டாலும் பாதுகாப்பு உணர்வு, அணுகும் தன்மை, மனிதாபிமானம் எனக் கூடுதல் சிறப்புகளை நம் தோழர்களிடம் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்!

இப்படி கொள்கை வெறுப்பையும் தனிமனித வெறுப்பையும் பிரித்துப் பார்க்கும் தன்மையில் இயக்கத்தை அமைத்தவர் பெரியார். அய்ந்தாயிரம் தோழர்கள் பங்கேற்கும் மாநாடாக இருந்தாலும், தனியொரு பார்ப்பனர் அவ்வழியே செல்லலாம்,

அம்மாநாட்டில் கூட பங்கேற்கலாம். நூறு விழுக்காடுப் பாதுகாப்பு உணர்வைப் பார்ப்பனர்கள் மனதிலும் விதைத்தவர் பெரியார். தகராறு என்பது தத்துவத்தோடு தானே தவிர, தனி மனிதரோடு அல்ல! பெரியார் சொல்கிறார், “நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் பார்ப்பனியக் கருத்துகளையே எதிர்க்கிறேன். மற்றபடி அவர்கள் படிப்பதையோ, நல்ல வேலையில் இருப்பதையோ, நல் வாழ்க்கை வாழ்வதையோ, பணக்காரர்களாக இருப்பதையோ ஒருபோதும் நான் எதிர்க்கவில்லை‌ என்றார். இப்படியொரு தெளிவான கொள்கையை உலகில் யாராவது வகுத்ததுண்டா?

இன்னும் சொன்னால் பார்ப்பனர்கள் தங்கள் குடும்பப் பெண்களை, அதாவது அம்மா, அக்கா, தங்கை, மனைவி உள்ளிட்ட எவரையும் மனிதர்களாக மதிப்பதில்லை. வீட்டிற்குள்ளேயே பூட்டி வைப்பதும், கணவர் இறந்தால் நெருப்பில் தள்ளுவதும், தலையை மொட்டை அடிப்பதுமாகக் கொடுமைப்படுத்தினார்கள்.

அப்படியான பார்ப்பனப் பெண்கள் நிறைய படித்து, உலகம் முழுவதும் சுற்றுகிறார்கள், பணிக்குச் செல்கிறார்கள், முக்கியமாகக் கணவர் இறந்தால் இப்போது மொட்டை அடிப்பதில்லை‌, இறந்து போவதுமில்லை. ஆக பெரியார் கொள்கை எதிராளிகளுக்குக் கூட எவ்வளவு பாதுகாப்பான சிறந்த வாழ்வைத் தருகிறது பாருங்கள்!

விஸ்வகர்மா யோஜனா என்கிற குலத்தொழில் திட்டத்தை இன்றைக்கு பாஜக அரசு கொண்டு வருகிறது. இதற்கு முன் 1953 இல் ராஜாஜி இந்தத் திட்டத்தைத் கொண்டு வந்தார். ராஜாஜியும், பெரியாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இந்தத் திட்டத்தை எதிர்த்து “பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக வைத்திருங்கள், கையில் இருக்கட்டும், தேவைப்படும் என எச்சரித்தவர் பெரியார். இறுதியில் பெட்ரோலுக்கும் தீப்பந்தத்திற்கும் வேலையின்றி பெரியாரே வென்றார். உடல் முழுக்க மூளை கொண்ட மூதறிஞர் ராஜாஜி தோற்று ஓடினார். தோழர்களே, அப்படிப்பட்ட ராஜாஜி மறைவுற்றபோது, சுடுகாடு வரை தள்ளாடித் தள்ளாடிச் சென்று கண்ணீர் வடித்த மனிதநேயர் பெரியார்!

அரிசிச் சோறு தவிர்த்து தானியங்களைக் குறைத்து ஆடு, மாடு, கோழி, பன்றிகளை அதிகம் வளர்த்து புரதச்சத்து நிரம்பிய உணவுகளை உண்ணுங்கள் எனத் தமிழர்களுக்குப் பரிந்துரை செய்தவர் பெரியார்தான். ஆரியர்களுக்கு மட்டும் கொஞ்சம் நெல் விவசாயம் செய்யலாம் எனப் பேசினார். கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், வணங்குபவன் காட்டுமிராண்டி, பரப்புகிறவன் அயோக்கியன் என்று கடுமையாகச் சொன்ன பெரியார் தான், குழந்தைகளைக் கூட வாங்க, போங்க என்று மரியாதையுடன் அழைத்தார்.
அனைவரையும் கேள்விகளால் துளைத்தெடுத்த பெரியார்தான், தன்னைக் கடுமையாக விமர்சித்த மனிதர்கள் மீதும் அன்பும், மரியாதையும் செலுத்தினார்.

கோயிலுக்குப் போகாதீர் என்று சொன்ன பெரியார் தான், போக விரும்பியவர்களுக்கு உள்ளே சென்று வழிபடும் உரிமையும் பெற்றுத் தந்தார்! தமிழ் இலக்கியங்களில் பழமை, மடமைக் கருத்துகள் மண்டியிருந்ததால் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றவர்தான், எழுத்துச் சீர்திருத்தம் மூலம் இன்று உலகம் முழுவதும் தமிழ் அறிவியல் மொழியாக இருப்பதற்குக் காரணமாக இருந்தார்!

இப்படி மடமையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிக்கலுக்கும், பகுத்தறிவால் விடை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானியே பெரியார்! எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும், எவருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்கிற வரையறையோடு கொள்கைத் திட்டம் வகுத்தவர் பெரியார்.

ஆக, அவர்தம் கொள்கைகளை உற்று நோக்கினால் ஆய்வு செய்து பார்த்தால் மனிதர்கள் நலனே விஞ்சும்! மனிதநேயமே கொஞ்சும்!! ♥