– தஞ்சை பெ. மருதவாணன்
சனாதன தர்மத்தை நிலைநாட்ட கொலை பாதகம் உட்பட எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்பது ஆரிய தர்மத்தின் கொள்கை. கொலை நூலாகிய பகவத்கீதையின் கருத்தும் இதுவே. இக்கொலை பாதகத்தை ஆதரித்துக் காஞ்சிப் பெரியவாள் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய இருளுரை வருமாறு:-
“தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது எப்படி இருந்தாலும் பண்ணவேண்டும். இம்சை என்று பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம்
பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா? அப்படிப் பசு ஹோமம் பண்ணுவதிலே தப்பே இல்லை. பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான
23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப்பெரிய அசுவமேதத்துக்குக் கூட 100 குதிரைகள் தான் சொல்லியிருக்கிறது”. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி ‘யக்ஞம்’ என்னும் தலைப்பில் இதுபற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது).
(விடுதலை 20.5.2023 பக்கம் 2 தலையங்கம்)
இந்த ஆரிய தர்மத்துக்கு ஏற்பவே பவுத்த எதிர்ப்பும் படுகொலைகளும் புஷ்யமித்திரனால் மூர்க்கமாக அரங்கேற்றப்பட்டன. அவை ஒரு தேசியக் கடமையாக சாவர்க்கரின் பார்வையில் எதிரொலித்ததும் அதன் அடிப்படையிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.
பவுத்தத்தின் வீழ்ச்சியை வரவேற்கும் பாரதியார்
மகாகவி என்றும், தேசியக்கவி என்றும் புகழப்படும் சுப்பிரமணிய பாரதியார் எந்த அளவுக்குப் பவுத்தத்தின் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் தமிழாக்கம் செய்துள்ள பகவத்கீதை உரைநூலின் முன்னுரையில் காணமுடிகிறது.
(வெளியீடு சென்னை பூம்புகார் பதிப்பகம், நான்காம் பதிப்பு – 1994)
1. தன்னுடைய முன்னுரையில் பாரதியார் “மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு. அதை நல்ல வேளையாக இந்தியா உதறித் தள்ளி விட்டது” என்று கூறி மகிழ்ச்சி அடைகிறார்.
2. “(யாகத்தில்) கொலைகளைச் செய்தல் மோட்சத்துக்கு வழியென்ற போலி வைதீகரைப் பழி சூட்டி அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத்தான் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும் அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும் இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்திவிட்டார்கள்” என்று கவலைப்படும் பாரதியார் யாகத்தில் உயிர்ப்பலி என்பது சாஸ்திர சம்மதத்தை உடையது என்பதை வசதியாக மறைத்துவிட்டார்.
3. “புத்த மதத்தை வென்று இந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராச்சாரியார் அவதரித்தார்” என்று கூறி புத்தமத வீழ்ச்சியை வரவேற்கும் பாரதியார் அதை நிறைவேற்ற அவதரித்த ஆதிசங்கரரைப் புகழ்ந்து தனது பவுத்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.
4. “தம்மாலே (அதாவது ஆதிசங்கரரால்) வெட்டுண்ட புத்தமதம் என்ற விருட்சத்தின் கிளைகள் பலவற்றை இந்து தர்மமாகிய மரத்துக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்படி எருவாகச் செய்து போட்டார்” என்று புத்த மதக் கொள்கைகளைக் களவாடிக் கொண்டதை வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்ளும் பாரதியார் அதற்காகப் புத்தமதத்துக்கு நன்றி பாராட்டு
வதற்கு மாறாகப் புத்தமத ஒழிப்புக்கு ஆதிசங்கரர் ஆற்றிய துரோகச் செயலைப் பாராட்டி மகிழ்கிறார்.
5. “பத்தினியைத் துறந்தவர்கள் மேலோர் என்று வைத்து அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை வைத்து உலகமெல்லாம் பொய்மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக்கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞானநெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசம் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்தமதத்துக்கு உண்டு. அதை நல்லவேளையாக இந்தியா உதறித்தள்ளி விட்டது” என்று கூறுகிறார். இல்லறத்தைத் துறந்த துறவிகளே மேலோர் என்றும், ஏனையோர் கீழோர் என்றும் புத்தர் கூறாததை மனச்சான்றுக்குப் புறம்பாகவோ அல்லது அறியாமையாலோ கூறும் இவர், உலகமே போற்றும் மனித நேயமிக்க அறநெறியான புத்தநெறியை மனித நாகரிகத்துக்கு எதிரானது என்று கூறித் தனது ஆரிய விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறார். பாரதியாருக்குப் பவுத்தம் கசக்கிறது. வருணபேதம் காட்டும் அநாகரிக ஆரிய வேதங்கள் இனிக்கின்றன. ஆதிசங்கரரைப் போற்றும் இவர் புத்தரைக் குற்றம் சொல்கிறார்.
6. “புத்தமதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பி விட்டது” என்று புத்தர் கருத்துக்கு மாறான ஒரு கொள்கையை அவர் பின்பற்றியதாகப் பாரதியார் கூறுவது அவரது புரிதலின்மையையே புலப்படுத்துகிறது.
புத்தரின் மீதும் பவுத்தத்தின் மீதும் இந்த அளவுக்கு வெறுப்பை உமிழும் பாரதியார்
‘‘பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரதநாடு பழம்பெரும் நாடே’’
என்று எப்படி எழுதினார் என்ற அய்யம் எழக் கூடும். “பார்ப்பனியம் பலநிறம் காட்டும்” என்பதைப் புரிந்து கொண்டால் இந்த அய்யம் எழாது. அறிஞர் அண்ணாவின் “ஆரிய மாயை” எனும் நூலில் காணும், பார்ப்பனியத்தின் இரண்டகத் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பாடலில் வரும் “பேசநா இரண்டுடையாய் போற்றி” எனும் வரிகளை நினைத்துக்கொண்டால் இந்த அய்யம் எழாது.
பலநிறம் காட்டும் பார்ப்பனியம்
1. பலநிறம் காட்டும் பார்ப்பனியத்தின் தந்திர வித்தைகளையும் வஞ்சக சூழ்ச்சிகளையும் கீழறுக்கும் செயல்பாடுகளையும் கண்டறிய வேண்டுமானால் பெரியாரியம் என்னும் கண்ணாடியை அணிந்து கொண்டால் அவை பளிச்சென்று தெரியும்; விளக்கமாகப் புரியும்.
2. பவுத்தத்தின் வீழ்ச்சியைப் பாடமாகக் கொண்டு முன் எச்சரிக்கையுடன், பாழ் செய்யும் உட்பகையான பார்ப்பனியத்தின் ஊடுருவலை முற்றிலுமாகத் தவிர்த்து விலக்கி முன்னறிவுடன் செயல்படும் ஒரே அமைப்பு பெரியாரியக்கமே என்பது மறுக்க முடியாத உண்மையிலும் உண்மை.
3. எடுத்துக்காட்டாக, பார்ப்பனியத்தைப் புரிந்து கொள்ள, பெரியார் நமக்குக் கற்பித்த பாடங்களுள், ஒன்றை அறிந்து கொள்வோம்.
அ. நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு தேர்தலில் இரு வேறு பார்ப்பனர்கள் வேட்பாளர்களாகக் களத்தில் நின்றனர். ஒருவர் லவுகீகப் பார்ப்பனர். அவர் எல்லாரோடும் வேறுபாடு காட்டாமல் நெருங்கிப் பழகக்கூடியவர். நம் தோளின் மேல் கை போட்டுக்கொண்டு உறவாடுபவர். கறிவிருந்துகளில் கலந்துகொண்டு உண்ணும் மாமிசப் பிரியர். முற்போக்குக் கொள்கையாளராகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர். மற்றொருவரோ வைதீகப் பார்ப்பனர். ஆச்சார அனுஷ்டானங்களோடு நாமம் போட்டுக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு அய்தீகவாதியாக வலம் வருபவர். இவர்கள் இருவரில் யாருக்கு வாக்களிப்பது என்று தந்தை பெரியாரை அணுகிக் கேட்டபோது அவர் பளிச்சென்று இப்படிக் கூறினார். “நாமம் போட்ட அந்த வைதீகப் பார்ப்பனருக்கே வாக்களியுங்கள்!’’ திடுக்கிட்ட தோழர்கள் பெரியாரைப் பார்த்து “என்ன அய்யா இப்படிக் கூறுகிறீர்கள்? எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. தங்கள் முடிவுக்கான காரணத்தை எங்களுக்கு விளக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என்று கேட்டார்கள்.
பெரியார் அத்தோழர்களைப் பார்த்து இவ்வாறு விடையளித்தார்: “வைதீகப் பார்ப்பான் கையில் இருப்பது என்ன ஆயுதம் என்பது பளிச்சென்று தெரிகிறது. அந்த ஆபத்தைச் சமாளிக்க முடியும். ஆனால் லவுகீகப் பார்ப்பான் கைகளில் (அதாவது முற்போக்கு முகமூடி அணிந்த பார்ப்பான் கைகளில்) இருப்பது என்ன ஆயுதம் என்று நமக்குத் தெரியாது. இவனைச் சமாளிப்பது அவ்வளவு சுலபமல்ல. (அதாவது இவன் தக்க சமயம் பார்த்து எந்த நேரத்திலும் கீழறுக்கும் வேலையைச் செய்வான் என்பது கருத்து)”
ஆ) தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதற்கிணங்க பார்ப்பனியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது பெரியார் அவர்களை வழிமொழிவதுபோல அதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“I will believe on orthodox Brahmin
But not heterodox Brahmin”
(சென்னையில் நடந்த ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் கருத்து. விடுதலை 7.12.2018, பக்கம் 4)
தந்தை பெரியார் அறிவுறுத்திய இந்த வழிகாட்டு நெறியின் உட்பொருள் என்ன?
முற்போக்கு அமைப்புகளுக்கு விடுக்கும் முன்னறிவிப்பு என்ன? என்பதைப் பார்ப்போம்:-
தமிழ்நாடு உட்பட இந்திய அளவில் இயங்கும் முற்போக்குக் கொள்கை உடைய கட்சிகள் இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவை பார்ப்பனியத்தை அடையாளம் புரிந்துகொண்டு அதன் ஊடுருவலுக்கும் ஆதிக்கத்துக்கும் இடம் கொடாமல் இருக்கும் வரையில் அவை கீழறுக்கும் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள இயலும். இன்றேல் அதன் கீழறுக்கும் தந்திர வலையில் சிக்கிச் சிதறுண்டு போவதைத் தவிர்ப்பது என்பது முயற்கொம்பே.
(நிறைவு)