… முனைவர் கடவூர் மணிமாறன் …
பெருந்தலை வர்நம் காம ராசரின்
பெருமை அருமை பேசிடும் உலகம்!
கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர்
நல்லதோர் ஆட்சியை நடத்திய இனியர்;
யாவரும் போற்றும் ஏழைபங் காளர்!
மேவிய உழைப்பால் மேன்மை சேர்த்தவர்;
பச்சைத் தமிழர் இவரெனப் புகழ்ந்து
மெச்சிய தலைவர் தந்தை பெரியார்!
அணைக்கட் டுகள்பல ஆய்ந்து கட்டிய
இணையிலா முதல்வர் இவரே அன்றோ!
அவரவர் குலத்தின் தொழிலைத் தொடர்ந்தே
அவரவர் பிள்ளைகள் செய்திட – வேண்டி
வெறிமிகு கொடியோர் இழுத்து மூடிய
அறிவுக் கோட்டம் ஆறா யிரமாம்
பள்ளிகள் தன்னை மீண்டும் திறந்தவர்!
எள்ளி நகைப்போர் எண்ணம் மாற்றியே
எளிமை நேர்மை இலக்கணம் வகுத்தவர்;
எளியோர் இல்லார் பிள்ளைகள் இன்புற
நண்பகல் உணவுத் திட்டம் கொணர்ந்தவர்;
எண்ணிலாத் தொழில்சார் நிறுவனம் தொடங்கிய
கண்ணியம் மிக்கார் கடமை மறவர்;
பன்னரும் மாண்பினர் படிக்கா மேதை!
நிலக்கரிச் சுரங்கம் நெய்வேலி தன்னில்
மலர்ந்திட வழிவகை இனிதே கண்டவர்!
இந்திய விடுதலைப் போரில் தாமும்
வெந்திறல் காட்டிய வீரிய மிடுக்கால்
ஆண்டுகள் பலவாய் அருஞ்சிறை உழன்றார் !
வேண்டும் சமூக மாற்றம் விளைத்தார்!
நெருப்பெனக் கனன்ற எழுபத் தாறின்
நெருக்கடி நிலையை நிமிர்ந்தே எதிர்த்தார்!
சமத்துவ மாண்பினைச் சாற்றிய இவர்புகழ்
தமிழ்போல் இந்தத் தரணியில் நிலைக்குமே! ♦