ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் (பிறப்பு – 15.9.1893)

2023 செப்டம்பர் 1-15,2023 பெட்டி செய்திகள்

திரு. சவுந்தரபாண்டியன் அவர்கள் மதுரை மாவட்டம், பட்டிவீரன்பட்டியில், 15.9.1893இல் பிறந்தார். இவரின் பெற்றோர் திரு. அய்ய நாடார் – திருமதி. சின்னம்மாள் ஆவார்கள். மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்பும், கல்லூரிக் கல்வியும் பயின்றார். இதன்பின் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அதன்வழி சுயமரியாதை இயக்கத்தில், பெரியார் அவர்களோடு இணைந்து செயல்படத் தொடங்கினார்.

வெறியோடு சுயமரியாதைக் கொள்கைகளைப் பின்பற்ற முனைந்த இவரை, 1929இல் செங்கற்பட்டு மாநாட்டுத் தலைவராக பெரியார் அவர்களும், இயக்கத்தின் முன்னோடிகளும் தேர்ந்தெடுத்தனர். இயக்கக் கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் செயல்களை மேற்கொண்டு வெற்றி கண்டார். நிறைய விதவைத் திருமணங்களையும், கலப்பு மணங்களையும் நாட்டில் நடத்திச் சுயமரியாதைப் புரட்சியில் நல்ல பங்கு எடுத்துக்கொண்டார்.
முதலாம் இந்தி எதிர்ப்புப் போரின் போது பலவிடங்கட்கும் சென்று, மக்களைச் சந்தித்து, உணர்ச்சியைக் கிளறி வீரர்களைப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் செய்தார்.

சென்னை மேலவைக்கு மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பெற்ற பாண்டியனார், இயக்க வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த 1944ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில் பதவிகளை நம்மவர் விட்டுவிடவேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தாரென்றால், தந்தை பெரியாரின் அனைத்து முயற்சிகளுக்கும் எந்த அளவுக்கு தன்னலம் துறந்து துணை நின்றாரென்று புரிகின்றதோ? அய்யா அவர்கள் இவர் மீது அளவில்லாப் பாசம் கொண்டிருந்தார். ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் அவர்கள் 22.2.1953 அன்று இயற்கை எய்தினார்.

வாழ்க ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் அவர்கள் புகழ்!♦