மொழி என்பது ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவியாய்த் தொடங்கி, காலப்போக்கில் கருத்துக்கருவூலமாய், கருத்து பரப்புக் கருவியாய் வளர்க்கப்பட்டது. காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப கருத்தேற்றங்களும், படைப்பாக்கங்களும் மொழியுள் புகுத்தப்பட்டன. இவை அடுத்து வரும் தலைமுறைக்கு காலக்கண்ணாடியாய் மாறின.
மொழியென்று பார்க்கும்போது, மனித இனத்தின் தொல்குடிகளில் தமிழ் மக்கள் பேசிய தமிழே தொன்மையானது, முதலானது ஆகும் என்பது உலகில் உள்ள அனைத்து மொழி அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.
காலத்தால் மூத்தது என்பது போல கருத்து வளத்தாலும், வாழ்வியல் தெளிவாலும் நெறியாலும் உலகில் உயர்தர மொழியாகவும் தமிழ் உயர்ந்து நிற்கின்றது. உலகில் உள்ள பல மொழிகள் உருவாக்கப்பட தமிழே மூலமாகவும் அமைந்தது.
இப்படிப்பட்ட நிலையில் ஆரியர்கள் இந்தியாவுள் பிழைக்க நுழைந்து, மெல்ல மெல்லப் பரவி, காலப்போக்கில் மூடநம்பிக்கைகளை, சடங்குகளைப் புகுத்தி ஆதிக்கம் செலுத்தினர். தமிழ்மொழியிலிருந்து சமஸ்கிருதத்தைச் செயற்கையாக உருவாக்கி அது கடவுளின் மொழி என்று உயர்த்தி நிறுத்தினர். மறுபக்கம் தமிழை ‘நீசபாஷை’யென்று தாழ்த்தி ஒதுக்கினர்.
இதன்மூலம் மொழியை ஓர் ஆதிக்கக் கருவியாக ஆரியர்கள் ஆக்கினர். இதிகாசங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள் என்று தங்கள் நலனுக்காகப் பலவற்றை எழுதி, அவற்றைத் தமிழ் மொழியுள்ளும் நுழைத்தனர்; தமிழ் மொழியுள்ளும் சமஸ்கிருதத்தை நுழைத்தனர். இதனால், மொழி அமைப்பாலும், உள்ளடக்கத்தாலும் பாழாக்கப்பட்டது.
கட்டுமானம், கலை, இசை, வாழ்வியல், அறிவியல், கணிதம் என்று பல்லாற்றானும் சிறந்து விளங்கிய தமிழ், புராண, இதிகாச மூடக்கருத்துகளின் தொகுப்பாக மாற்றப்பட்டு, கால வளர்ச்சிக்கேற்ற பல்துறைக் கருத்துகள் தமிழில் ஏற்றப்பெறாமலே போயின.
தந்தை பெரியார்தான் இந்த நுட்பத்தை உணர்ந்து, தமிழை, ஏன் எல்லா மொழிகளையும் காலத்திற்கேற்ற கருவியாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தினார்.
தமிழ் எழுத்தில் சீர்திருத்தங்களைச் செய்து அதை நடைமுறைப்படுத்தினார். அறிவியல் உட்பட பல்துறைக் கருத்துகளை தமிழல் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உலக மொழிகளில் பலவற்றிலிருந்து இவற்றை மொழிப் பெயர்த்து தமிழில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மொழியென்பது மனித இனத்தின் போர்க்கருவி, அது காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும். கண்டம் விட்டுக்கண்டம் தாண்டும் ஏவுகணைகள் வந்த பின்பு வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டு எப்படி வெற்றி பெற முடியாதோ அதேபோல், உலகநாடுகள் அறிவியலின் உச்சத்துக்குச் சென்று, நிலவு, செவ்வாய் என்று கால்
பதிக்கும் நிலையில், நிலவு, சிவபெருமான் தலையில் உள்ளது என்ற புராணங்களைத் தமிழில் கற்பித்துக் கொண்டிருந்தால்,
உலக மக்களோடு போட்டியிட்டு நாம் வெல்ல முடியுமா? உயர முடியுமா? சாதிக்க முடியுமா? எனவே, காலத்திற்கு ஏற்ப மொழியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். ஒவ்வாதவற்றை ஒதுக்கி, உகந்தவற்றைப் புகுத்தி மொழியை காலத்திற்கேற்ப மாற்றியமைக்கவேண்டும் என்பது கட்டாயமாகும்.
இக்கருத்துக்களை, அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற 11ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வலியுறுத்திப் பேசி, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் வழிவகுத்துள்ளார்கள்.
நன்கு சிந்தித்து தொகுக்கப்பட்ட தன் உரையை அந்த மாநாட்டில் மிகத்தெளிவாகவும், உறுதியாகவும், உணர்வு பூர்வமாகவும், அக்கறையுடனும் பதிவு செய்தார்கள். தமிழின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகட்டும். அக்கருத்துக்களை இனி பார்ப்போம்.
மொழியை விழிபோலக்கருதிப் பாதுகாக்கவேண்டும் என்று சொல்வார்கள்
ஆனால், பெரியார் அவர்கள் ஒரு தனித் தன்மையோடு மொழி பற்றி கருத்து கூறினார்கள்.
எனவே, போர்க் கருவியான மொழியை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தவேண்டும். புதுமையாக்கத்தோடு மேம்படுத்தவேண்டும். இதன் அடிப்படையில்தான்
‘இணைய காலகட்டத்தில் தமிழ்மொழி’ என்ற தலைப்பைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.சில பேர் நினைக்கலாம்; தமிழ் மொழியைப் போர்க் கருவி என்கிறார்களே என்று. ஆதிகாலத்தில் அம்பும், வில்லும் போர்க் கருவிகளாக இருந்தன.
ஆனால், அம்புக்கும், வில்லுக்கும் எவ்வளவுதான் பழம்பெருமைகள், புராணப் பெருமைகள், அங்கே விட்டது, இங்கே திரும்பி வந்தது என்கிற பெருமைகள் இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் அது பயன் படாது.
மொழி ஒரு போர்க்கருவி என்பது மொழி மீதான பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்க்கும் வல்லமை கொண்டிருக்க வேண்டும் என்பதையே குறிக்கும்.
ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு போர் என்பது இருக்கிறதே – அது மொழியின்மீது தாக்கப்படும் பொழுது, மொழியின்மீது வீசப்படும்பொழுது, அதனை எதிர்கொள்வதற்கு மொழி ஒரு போர்க் கருவியாக இருந்தால் மட்டும்தான் முடியுமே தவிர, இல்லாவிட்டால் அந்த மொழியே காணாமல் போகக்கூடிய மொழியாகிவிடும். இதுதான் பெரியாருடைய சிந்தனை. அதைத்தான் மிகத் தெளிவாகச் சொன்னார் தந்தை பெரியார். போர்க் கருவி என்று சொல்வதற்குத் தமிழ் மொழிக்குத் தகுதி உண்டு.
மலேசிய நாடு, சிங்கப்பூர் நாடு எல்லாம் ஒன்றாக இருந்த காலகட்டத்தில்,என்ன நடந்தது என்று சொன்னால் இந்திய நாட்டிலிருந்து ஒரு மொழியை உருவாக்க வேண்டும். ஒரு துறையை உருவாக்க வேண்டும் என்று நினைத்த நேரத்தில், அந்தத் துறை சமஸ்கிருதத் துறையாகத்தான் இருக்கவேண்டும். வடமொழிதான் இருக்க வேண்டும். என்று உள்ளே வைத்து, நுழைத்திட இங்கே சில சூழ்ச்சிகள் நடந்தன.
அதனை முறியடித்த பெருமை தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களைச் சார்ந்ததாகும்.
தமிழவேள் அவர்கள் இன்றைக்கும் “தமிழ்முரசை’’ நம் கைகளில் கொடுத்துவிட்டு, முரசறையும்படியாகச் செய்து, அவர் மறையவில்லை. வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பட்டியலில் வரக்கூடியவராக சிறப்பான இடம்பெற்றுள்ளார்.
அப்பொழுதுதான், “ஏன் நீங்கள் தமிழ் மொழித் துறையை அமைக்கக்கூடாது? சமஸ்கிருதத்தை ஏன் கொண்டு வருகிறீர்கள்? தமிழ் மொழி செம்மொழி இல்லையா? தமிழ் மொழி என்ன வழக்கொழிந்த மொழியா? என்றெல்லாம் கேட்டார்.
அதற்கு வேறுவிதமான பதில்கள் கிடைத்தன. அதற்கு நிதியில்லை என்று சொன்னார்கள்.
உடனே தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள், ‘‘இதோ நாங்கள் திரட்டுகிறோம், தமிழர்களிடமிருந்து நிதி திரட்டுகிறோம், இந்த நாட்டில், இந்த மண்ணிலுள்ள மக்களிடமிருந்து நிதி திரட்டுகிறோம்‘’ என்று சொல்லி,‘‘தமிழ் எங்கள் உயிர்’’ என்ற தலைப்பு கொடுத்து, ‘தமிழ்முரசு’ இதழில் செய்தி வெளியிட்டு, நிதி திரட்டி தனி இருக்கை வைக்கக்கூடிய அளவிற்குச் செய்கிறோம் என்ற செயலாக்கத்தின் விளைவாகத்தான், தமிழுக்கு இடம் கொடுத்தது மலேசிய பல்கலைக் கழகம்.
இப்பொழுது சொல்லுங்கள், தமிழ் போர்க் கருவியா, இல்லையா? என்று. இப்பொழுது சொல்லுங்கள், இது பண்பாட்டுப் படையெடுப்புக்கான போர் அல்லவா? என்று.
அந்தப் போர் அறிவுப் போர்
அந்தப் போர் அறப் போர்
அந்தப் போர் உரிமைப் போர்
1918 இல் மார்ச் 30, 31 ஆகிய நாள்களில், தஞ்சை, திருச்சி பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது.
அம்மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:
தீர்மானம் 8 (ஆ)
எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர் தரமாக உருவாக்கப்பட்ட பலதிறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டு செம் மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
முன்மொழிந்தவர்: திரு.ஜே.பி.நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை.
வழிமொழிந்தவர்: திரு.ந.மு.வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
ஆதரித்தவர்: திருமதி அலர்மேலுமங்கை தாயாரம்மாள், சென்னை.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு நம் மொழி செம்மொழியாக இருக்கிறதென்றால், அதற்கான முயற்சி அப்போதே எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
செம்மொழித் தகுதி நமக்கு இருந்தும், மூத்த மொழி, முன்னோடி மொழி, எப்பொழுது தோன்றியது என்று மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத காலத்தின் முன்னோடியான மொழி, – ஆதிகால மொழி என்ற பெருமை நமக்கு இருந்தால் மட்டும் போதாது; செம்மொழித் தகுதி இருந்தால் மட்டும் போதாது; வாய்மொழியாக அது இருக்கக்கூடாது; சட்டப்பூர்வமாக செம்மொழியாக ஆக்கப்படவேண்டும் என்று ஆக்கிய பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய முயற்சிக்குரியதாகும். இந்திய அரசால் அது ஏற்கப்பட்டது.
இந்திய அரசு அதை ஏற்றுக் கொண்டதன் நோக்கம் என்ன? நாங்கள் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக இந்த நூலில் வெளியிட்டு இருக்கிறோம்.
‘‘கவர்ன்மெண்ட் ஆர்டர் நோட்டிஃபிகேசன் மினிஸ்ட்ரி ஆஃப் ஹோம் அஃபேர்ஸ்’’ என்று மிகப்பெரிய அளவிற்கு டில்லியில் 2004 ஆம் ஆண்டு அந்த ஆணை வந்தது.
அதற்குப் பிறகுதான் தமிழ் செம்மொழியானது சட்டப்பூர்வமாக.என்ன செய்தார்கள் திராவிட இயக்கத்தவர்கள் என்று கேட்டால், மற்றவர்கள் போன்று பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, மக்களுக்குத் அறிவுறுத்தி, தெளிவுறுத்தி, அதற்குப் பிறகு மக்களைப் பண்படுத்தி, ஓர் அரசாங்கம் இதனைச் செய்தாகவேண்டும் என்று முடிவெடுத்து, எங்கள் நாட்டு ஒன்றிய அரசாங்கத்தில் பாராட்டுத் தகுந்த அளவிற்கு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ் – தி.மு.க. – மற்றவர்களும் இருந்த நேரத்தில்தான் நண்பர்களே, தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற தகுதி சட்டப்பூர்வமாகக் கிடைத்தது.
ஆனால், ஓர் உண்மை வெளியே வந்தது.. அது என்னவென்று சொன்னால், அதுவரையில் அதிகாரப்பூர்வமாக சமஸ்கிருதம் -வடமொழி செம்மொழியாக இல்லை. அறிவிக்கப்படவில்லை. காரணம் என்ன?
சமஸ்கிருதம் என்கிற ஒரு மொழிக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டும் என்பதல்ல. நமக்கு வெறுப்பு முக்கியமல்ல; ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்ற பெருமை நமக்கு உண்டு என்பதை எல்லோரும் இங்கே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்; சொல்லிக் கொண்டு வருகிறோம்; நாளையும் சொல்வோம். அதுதான் நம்முடைய தனித்தன்மை..
இன்னொரு மொழியைப் பார்த்து ‘நீஷ பாஷை’ என்று நாம் சொன்னதுண்டா?
ஒரு மொழி ‘தேவபாஷை’
இன்னொரு மொழி ‘நீஷபாஷை!’
ஒரு மொழி ‘கடவுள்’ பேசக்கூடிய மொழி
இன்னொரு மொழி சாதாரண ‘நீசர்’கள் பேசக்கூடியது.
தமிழ்மொழி பேசினால், தீட்டாகும் என்று ஒரு சமயம் சொன்னால், அந்தச் சமயத்தை எதிர்க்காமல் இருக்க முடியுமா?
கிருமிகளை அழிக்காமல், உடல்நலத்தைப் பேண முடியுமா? அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும்.
இது அரசியல் அல்ல இது வாழ்வியல் அறிவியல் நோய்நாடி நோய் முதல்நாடுகின்ற அறிவியல் இது.
மூன்று மொழிகள் தேவை என்கிறார்கள். ஆங்கிலத்தால் தமிழ் கெட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் நமக்கு தமிழ் ஆங்கிலம் இரண்டும் போதும். தமிழின் பெருமையை உலகறியச் செய்தததில் ஆங்கிலத்திற்குப் பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியுமா?
இன்னுங்கேட்டால், எந்த ஆங்கிலேயனும், எந்த ஜி.யு.போப்பும், ஆங்கில அறிஞர்கள் யாரும் தமிழை ‘‘நீஷ பாஷை’’ என்று சொல்லவில்லை. தங்கள் மொழியை
‘‘தேவபாஷை’’ என்று சொல்லவில்லை.
எப்படியெல்லாம் பண்பாட்டுப் படையெடுப்பு வந்தது என்பதற்கு அடையாளமாகச் சொல்லுகின்ற நேரத்தில், ‘ஆரிய மாயை’யில் அண்ணா அவர்கள் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
“அண்ணா அவர்கள் “வச்சணந்தி மாலை” என்கிற குறிப்பை’’ 1940ஆம் ஆண்டில் எழுதியிருக்கிறார்.
நம்முடைய மொழி – இலக்கியம் மட்டுமல்ல; இலக்கணமும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு அடையாளமாக அண்ணா சொல்கிறார்,
‘‘பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது. ஆரியருடைய பிராமண -க்ஷத்திரிய -வைசிய- சூத்திர என்ற ஜாதிப்பிரிவுகள் மக்களிடையே நிலவின், ஒருகால் ஒழிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி, நாட்டின் அறிஞர் என்றெண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளனர்.’’
எவ்வளவு பெரிய பண்பாட்டுப் படையெடுப்பு – இது யாரால் தடுத்து நிறுத்தப்பட்டது? இப்படிப்பட்ட சிந்தனையாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இன்னமும் அந்த ஆபத்து நீங்கிவிடவில்லை.
எப்பொழுது வேண்டுமானாலும் நோய்கள் வரும்; எப்பொழுது வேண்டுமானாலும் அந்தக் கிருமிகள் உள்ளே நுழையும். அதற்காகத்தான் இந்தக் கருத்தை எடுத்துத் தெளிவாகச் சொல்லுகிறோம்.
மேலும் அண்ணா தொடர்கிறார்,
‘‘‘ல, வ, ற, ன’ என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது. தமிழ் மொழிக்கே சிறப்பாக வுள்ள ழ, ற, ன என்ற மூன்றெழுத்துக்களும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்-பட்டுள்ளன. வடமொழி ‘ல, ள’வாக-வும் ஒலித்திடுமானாலும் தமிழுக்கே சிறப்பாகத் தனி எழுத்தாகவுள்ள ‘ற’ ‘ழ’ வடமொழியில் இல்லை. இவை சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன?
ஆரியரிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடிய அளவு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத்தான் ஆரியர், ”சூத்திரர்” (தாசி மக்கள்) என்று நான்காம் வருணத்தாராய் வழங்கினர் என்பதன் விளைவன்றோ? இவ்வகந்தையை ஒழிக்க விரும்புமறிஞர்கள் இவ்விலக்கணத்தை நிலவிட விட்டு வைக்க முடியுமா?
பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டுமாம். இது இலக்கிய வழக்கற்றது. ஆனால், இலக்கணத்தில் விதியாகப் புகுந்துள்ளது.
பாக்களில் சிறந்த வெண்பாவெனும் ஒண்பா பார்ப்பனருக்கு; பார்ப்பனரை ஆசிரியராகக் கொண்ட அரசர்க்கு அதற்கடுத்த ஆசிரியப்பா; வைசியருக்கு -வகை பல குறைந்த கலி; சூத்திரர் என்ற திராவிடருக்கு; ஆரியர் உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா! தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல் இடமா?’’
என்று அண்ணா அவர்கள் கேட்டு சிந்திக்க வைத்ததினுடைய விளைவுதான் இது.
ஆகவே, ஒரு போர்க் கருவியை எப்படி நாம் பயன்படுத்தவேண்டுமோ, அக்கருவி தயாராக இருக்கவேண்டும். நவீன முறையில் போர்க் கருவிகள் மாறிக் கொண்டிருக்கவேண்டும் என்கின்ற அடிப்படையில்தான், தந்தை பெரியார் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே 1935 ஆம் ஆண்டிலேயே செய்தார்.
தமிழில் 247 எழுத்துகளை வைத்துக்கொண்டு, நாம் தமிழை வளர்க்க முடியுமா? தமிழை முன்னேற்ற முடியுமா? அதிலும் இப்பொழுது ‘யுனிகோட்’ போன்று வந்துவிட்ட நேரத்தில், இன்றைக்கு எல்லோருடைய கைகளிலும் அலைபேசி இருக்கிறது; அதில் நீங்கள் தமிழ் மொழியில் டைப் செய்கிறீர்கள் என்றால், ஒலி அமைப்பாக வைத்துக் கொண்டுதான் செய்கிறீர்கள். இது அறிவியல் காலம் அல்லவா!
“ஆர்ட்டிஃபிசியல் இன்ட்டலிஜென்ட்’’என்று சொல்லக்கூடிய நுண்ணறிவு பரந்துவிட்ட காலமல்லவா! இந்தக் காலத்திற்கேற்ப இந்த மொழி இணைய வழியிலே போய், அந்த உலகப் போராட்டத்தில், பல மொழிகள் போராட்டத்தில் தனித்து நிற்கவேண்டாமா?
பிறகு என்னாயிற்று என்றால், அந்த எழுத்துக் கணினித் துறையில் பயன்படக் கூடிய அளவிற்கு வந்த பிறகு, தந்தை பெரியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள், பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று சொல்லியே அதற்கு ஆணை போட்டார்.
அதை முதல் முறையாக எந்த வெளிநாடு ஒன்று செயல் படுத்தியது? என்றால், அது சிங்கப்பூர்தான். அதற்குப் பிறகு மலேசியாவும் செயல்படுத்தியது.
எப்படி என்று சொன்னால், உரத்தின்மூலம் தான் உணவு தயாராகிறது; உணவு தயாராவதற்கு உரம் மிகவும் முக்கியம். இதை யாரும் மறுக்க முடியாது. அந்த உணவுதான் நம்மை வாழ வைக்கிறது என்பது உண்மை. ஆனால், அதற்காக உரத்தின்மூலம்தானே உணவு வருகிறது; எனவே, உரத்தையே நாங்கள் உணவாகக் கொள்கிறோம் என்று யாராவது சொல்ல முடியுமா? அப்படி சொன்னால்தான், ஏற்க முடியுமா? அப்படி ஏற்றால், அது பகுத்தறிவிற்கு ஒத்ததாக இருக்க முடியாது.
அதுபோலத்தான் இந்தப் பழம்பெருமை என்பது நமக்கு உரமாக இருக்கவேண்டுமே தவிர, அது ஒருபோதும் உணவாக இருக்கக்கூடாது. அதன்மூலமாக நம் மொழி வளர முடியாது என்பதற்காகத்தான் – இப் பொழுது நாம் அறிவியல் யுகத்தில் இருந்துகொண்டி ருக்கின்றோம்.
மொழிப் போராட்டத்தில், பல போட்டிப் போர்களில் நாம் முன்னால் நிற்கவேண்டுமானால், இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு வந்திருக்கின்ற காலகட்டத்தில் கூட, மிக முக்கியமாக நம் மொழி வரவேண்டும் என்றால், புதிய சிந்தனைகள் க்ஷ, புதிய கண்டுபிடிப்புகள், புதிய கருவிகள் பற்றிய கருத்துகள் தமிழில் வரவேண்டும். மூட கருத்துகள் விலக்கப்படவேண்டும்.
மாற்றமே இருக்கக்கூடாது; மாற்றமே கூடாது என்று சொல்வதற்குப் பெயர் சனாதனம்.அது இயற்கைக்கும், அறிவுக்கும் மாறுபட்டது.
புத்தர் காலத்திலிருந்து மாறாதது ஒன்று உண் டென்றால், மாற்றம்தான். காரல் மார்க்சும் அதைத்தான் சொன்னார். மாறாதது மாற்றம் ஒன்றுதான் என்று.
ஆனால், அறிவியல் ரீதியான ஆய்வுகள் பெருக வேண்டும். ஆனால், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பெருமைப்படவேண்டிய நாம், இங்கு தமிழ் இருக்கிறதா? என்று கேட்கவேண்டிய கேள்விகளும் இருக்கின்றன. அதை ஏன் ஆய்வாளர்கள் தொடுவதில்லை? இதுதான் நம் கேள்வி.
தமிழன் கட்டிய கோவில், அக்கோவிலில் வழிபாடு நடத்தும்பொழுது தமிழ் மொழிக்கு
உரிமை இல்லை. தமிழ் மொழியில் வழிபாட்டிற்காக இன்னமும் தமிழ்நாட்டிலேயே கூட போராடவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
கோவில் கோபுரங்களை தமிழன் கட்டினான், சிறப்பான சிற்பங்கள் என்பதெல்லாம் பெருமை தான். ஆனால், கோபுரத்தின்மேல் குடமுழுக்கு நடத்துகிறார்கள் அல்லவா! அதுகூட திராவிட இயக்கத்தால்தான் கும்பாபிசேகம் குடமுழுக்காயிற்றே தவிர, அதற்குமுன் கும்பாபிஷேமாகவே இருந்தது. அதற்குப் பிறகுதான், திருக்குட நன் னீராட்டுவிழாவாக ஆயிற்று!
கும்பாபிஷேகம், திருக்குடநன்னீராட்டு விழாவாக ஆனதுதான் இவர்களாலே முடிந்ததே தவிர, அங்கே கோபுரத்தின்மேல் ஏறுவதற்கு, அங்கே தமிழ் மொழியை அமர்த்துவதற்கு வாய்ப்பு உண்டா? என்பதுதான் இன்றைய கேள்வி.
இன்னுங்கேட்டால், நிலவிற்குச் சென்றவர், அங்கே தமிழ் மொழியை நிறுத்த முடியும். செவ்வாய்க்கோளுக்கும் தமிழ் மொழியைக் கொண்டு போகக்கூடிய ஆற்றல் உண்டு. தமிழர்கள் தயாராகிறார்கள்.
ஆனால், கோவில் கர்ப்பக்கிரகத்திற்குள் தமிழ் மொழி போகவில்லையே. தமிழில் சொன்னால், தீட்டாகிவிடும் என்று சொல்லுகிறார்களே!
தமிழில் பேசினால், தீட்டாகிவிடும் என்றுசொன்ன மடாதிபதித் தலைவர்களும் இருக்கிறார்களே அதைப்பற்றியெல்லாம் பேசாமல், எப்படி நீங்கள் தமிழை வளர்க்க முடியும்?
எனவேதான், தமிழ் எங்கெங்கெல்லாம் இல்லையோ, அங்கெல்லாம் தமிழை உள்ளே விடுங்கள். உள்ளே விடுவதற்குத்தான் தமிழ்ப் போர்க்கருவியாக இருக்க வேண்டும்; தமிழர்கள் போராளிகளாக இருக்கவேண்டும்; தமிழர்கள் மானமுள்ளவர்களாக இருக்கவேண்டும்; தமிழர்கள் அறிவுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
இந்த ஆராய்ச்சியை முதலில் செய்யுங்கள்; உங்களால் அது முடியவில்லையானால், யாரால் முடிகிறதோ, அவர்களுக்குக் குறுக்கே நிற்காதீர்கள்; குறுக்கு வியாக்கியானம் செய்யாதீர்கள்; திசை திருப்பாதீர்கள்; திரிபுவாதங்களைச் செய்யாதீர்கள்.
உடல் நல்ல நிலையில் இருக்கவேண்டும்; மொழி நலத்தைப் பாதுகாக்கவேண்டும்; மொழி பரவவேண்டும்; மொழியின் மூலமாக நம் இனம் காப்பாற்றப்படவேண்டும்.
ஆனால், தமிழர்கள் வாழ்ந்தால், இன உணர்வோடு வாழ்ந்தால், மொழி உணர்வோடு வாழ்ந்தால், பகுத்தறி வோடு வாழ்ந்தால், முன்னேற்ற நோக்கோடு வளர்ந்தால், நிச்சயமாக இந்த இனம் வளர்ந்தால், மொழி வளரும். அப்படி மொழி வளரும்பொழுது, இன்னமும் அந்தப் பழைமையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்க முடியாது.
நீண்ட காலத்திற்கு முன்பே, அறிஞர்கள் தமிழிலேயே சொல்லியிருக்கிறார்கள்; ‘‘பழையன கழிதலும், புதியன புகுதலும்‘’ இதைச் சொல்லிக் கொடுக்காத தமிழாசிரியர்கள் உண்டா?
ஆனால், நடைமுறையில் இன்று பழையன கழிதல் இருக்கிறது. ஆனால், புதியன வருதல் கிடையாது என்ற நிலை உள்ளது. “பழையனவற்றில் பயனுடையவை இருத்தலும்; புதியன வருதலும்“ என்ற நிலை ஏற்படவேண்டும்.
செல்போன் வைத்துக் கொண்டிருப்போம்; அதை வைத்து என்ன வியாக்கியானம் சொல்வோம் என்றால், காலையில், சமஸ்கிருத சுலோகத்தைக் கேட்பதுதான், சுப்ரபாதம் கேட்பதுதான் மிக முக்கியம் என்று சொன்னால், விஞ்ஞானம் எப்படிப் பயன்படுகிறது? அறிவியல் எப்படிப் பயன்படுகிறது? என்று கேட்கின்ற நேரத்தில் நண்பர்களே, இது வெறுப்புப் பிரச்சாரம் அல்ல! இதுதான் நம்முடைய இருப்புப் பிரச்சாரம்; இருப்பு சரியாக இருந்தால்தான் நல்லது. அதைப் புரிந்துகொள்ளுங்கள்!
நீங்கள் நெருப்பு என்று கருதினாலும், இதுதான் உங்கள் சமையலுக்குப் பயன்படக்
கூடியது என்கிற கருத்தைச் சொல்லி விடைபெறுகிறேன்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
வளர்க அறிவியல் தமிழ்!”
என்று ஆசிரியர் தம் உரையில் குறிப்பிட்டார்கள்.
ஆசிரியரின் அறிவுறுத்தலை அனைவரும் ஆழமாய்க் கருத்தில் கொள்ள வேண்டும்.
மொழியென்பது வணக்கத்திற்குரியதாகவோ, பூசைக்குரியதாகவோ, கொள்ளப்படுவதற்கு மாறாக, அதன் வளப்பத்திற்கும், வளர்ச்சிக்கும், எளிமைக்கும், பரப்புவதற்கும் தொடர்ந்து வழிகாணவேண்டும், மேம்படுத்த வேண்டும். ஆதுவே மொழிக்கு நாம் செய்யும் சரியான தொண்டும், மரியாதையும் ஆகும்.
வழக்கொழிந்த செத்தமொழியைத் தூக்கித் நிறுத்தி 130 கோடி மக்கள் மீது திணித்து, தமிழ் போன்ற உண்மையான செம்மொழிகளை அழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து அவரவர் தாய் மொழியைக் காப்பாற்ற வேண்டும்.
உலகில் உள்ள அறிவியல் கருத்துகளை, பிறதுறை கருத்துகளையெல்லாம் அவரவர் தாய்மொழியில் பெயர்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
எல்லா கருத்துகளும் அவரவர் தாய்மொழியில் இருந்தால் பிற மொழியின் துணையின்றி அனைத்தையும் கற்றுச் சிறக்க முடியும். உலகத் தொடர்புக்கு ஆங்கில மொழியை இணைப்பு மொழியாக ஏற்பதில் தப்பேதும் இல்லை.
தாய் மொழிக்கான உரிமைகளை எவரும் பறிக்க நாம் அனுமதிக்கக்கூடாது. கல்விக்கூடங்களிலும், கோயில்களிலும், ஆட்சித்துறையிலும், நீதித்துறையிலும் தாய்மொழியின் பயன்பாடு கட்டாயம் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இருக்கும்படிச் செய்ய வேண்டும்.
அறிவிற்கு விலங்கிட்டு பிறர் நம்மை அடிமைப்படுத்தாமல் தடுக்க, அவர்கள் முயற்சியைத் தகர்க்க தாய் மொழியில் அனைத்துத்துறை அறிவும் இருக்கும்படியாகச் செய்து, அவற்றை அனைவரும் கற்று, விழிப்புடன் வாழ்ந்து சிறக்கவேண்டும். அதற்கு தாய்மொழியே சரியான கருவி!
அதை காலத்திற்கு ஏற்ப வளப்படுத்துவது கட்டாயம்! ♦