சர்.ஏ. இராமசாமி (முதலியார்) அவர்கள் நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே (1917) கட்சியில் இருந்தவர். 1918இல் டாக்டர்
டி.எம்.நாயர் இங்கிலாந்து சென்று பார்ப்பனரல்லாதார் உரிமைக்கு போராடி மறைந்த நிலையில், கூர்ம வெங்கட் ரெட்டி (நாயுடு) அவர்களுடன் இணைந்து இங்கிலாந்து சென்று நீதி கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி, அதற்கான சான்றுகளை பிரிட்டன் நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார்.
1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். பிரிட்டன் அரசின் இந்தியத் துறை அமைச்சரின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
சர் ஏ. இராமசாமி (முதலியார்) அவர்கள் மிகச்சிறந்த சட்ட மேதை, அரசியல் அறிஞர், நீதி கட்சியின் ஆங்கில நாளேடான ‘JUSTICE’ இதழில் 1929ஆம் ஆண்டு அவர் வரைந்த ‘ஆசிரிய உரைகளும் கட்டுரைகளும்’ வரலாற்று ஆவணங்களாகப் போற்றப்படுகின்றன. மாவீரர் வாரம் (HERO’S WEEK) என்ற தலைப்பில் சர் ஏ.இராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகள் புகழ் வாய்ந்தவை.
ஜனவரி 23,1946 அன்று சர்ச் ஹவுஸ்,லண்டனில் நடைபெற்ற அய்.நா. பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
– பொ.இரவிந்திரன், கழனிப்பாக்கம்.