தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தோழர் வீரலட்சுமி. இவர் சில மலைக் கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டும் ஓட்டுநராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின்
(எமர்ஜென்சி பைலட்) முதல் பெண் பைலட் தோழர் வீரலட்சுமி ஆவார்.
தோழர் வீரலட்சுமி திருமணத்திற்குப் பிறகு, சென்னையில் குடும்பத்துடன் குடியேறினார். இவரின் கணவரும் கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே சுயமாகச் சம்பாதிக்க வேண்டும், குடும்ப நிருவாகத்தில் தன் பங்கும் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இருந்துள்ளது. சென்னையில் உள்ள ‘ஏ நியூ’(‘a new’)என்னும் NGO மூலம் ஓட்டுநர் பயிற்சி பெற்றார். NGO ஏற்பாட்டின் மூலம் ஏர்போர்ட் மெட்ரோவில் பேட்டரி கார் ஓட்டியுள்ளார் இந்த வருமானம் போதுமானதாக இல்லாததால் கால் டாக்ஸி ஓட்டத் தொடங்கினார்.
தோழர் வீரலட்சுமி கார் ஓட்டிக்கொண்டிருந்த வேளையில், ஒரு நாளுக்கு பலமுறை ஆம்புலன்ஸ் வண்டிகள் சென்றுகொண்டிருக்கும், அதைப் பார்த்தபோது இவருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டணும், தானும் இதுபோன்ற சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கொரோனா பொதுமுடக்க காலத்தில் அவரது சொந்த ஊரான போடிக்குச் சென்றுள்ளார். அப்போது 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆள் எடுப்பதை அறிந்துகொண்டு, இண்டர்வியூவுக்குச் சென்றுள்ளார். இண்டர்வியூவில் தேர்வாகி இவருக்கு வேலை உறுதியாகியது.
“பேட்டரி கார் ஓட்டுநர்க்குப் பிறகு ஒரு டிராவல்ஸ் நிறுவனத்திலேயே (டிரைவிங் லைசன்ஸ்) ஓட்டுநர் உரிமம் எடுத்து அந்த நிறுவனத்திலேயே கிண்டியிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு (ரெகுலர் ட்ரிப்பாக) தினசரிப் பயணமாக பேருந்து ஓட்டியுள்ளார். தனியார் நிறுவனத்தில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரும் இவர்தான்.
கொரோனா காலத்தில் நிறை மாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ரொம்பவும் சிக்கலான நிலைமை. அந்தப் பெண்ணின் வீட்டார் ரொம்பவும் பயந்துள்ளனர். இவர் அவர்களுக்கு ஆறுதல் கூறி, மிக வேகமாக ஆம்புலன்ஸ் ஓட்டிச்சென்று அந்தப் பெண்ணை பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். நல்லவிதமாக பிரசவம் ஆனது.
“நீ ரெண்டு உசுரக் காப்பாத்திட்டம்மா’’ன்னு சொல்லி, அவரோட வந்த பெரியவங்க நெகிழ்ந்து போய் வீரலட்சுமி அவர்களை உச்சிமுகர்ந்து பாராட்டியுள்ளார்கள். இந்நெகிழ்ச்சியான நிகழ்ச்சி தன் கண்ணுக்குள்ளயே இருக்கு எனக் கூறும் அவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநராகத் தன் சேவையைத் தொடர்ந்து செய்துவருகிறார். ஆம்புலன்ஸ் முதல் பெண் ஓட்டுநர் தோழர் வீரலட்சுமி பெண்களின் முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும். முன்மாதிரியாகத் திகழ்கிறார். ஓட்டுநர் வீரலட்சுமிக்கு வாழ்த்துகள்.