எலிகளுக்குப் பக்கத்தில் எப்போதும் இருக்கிறது அந்தப் பூனை! – கட்டுரை

2023 கட்டுரைகள் மார்ச் 16-31,2023

வி.சி.வில்வம்

உலகம் முழுவதும் “ஆதிக்க மனநிலை” பரவிக் கிடக்கின்றது. எத்தனை விதமான ஆதிக்கம் என்பதை கணக்கிட்டுப் பார்க்க முடியாது! ஒரு நொடி கிடைத்தாலும் தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்திவிடும் கோர நிலையில் தான் மனிதன் இருக்கிறான் என்பதை.
உலகில் நடந்து வரும் அனைத்துக் குற்ற நிகழ்வுகளுக்கும் அல்லது அமைதி இழந்து தவிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோ ஓர் ஆதிக்கம் காரணமாக இருந்து வருகிறது.

மேலை நாடுகளில் வியத்தகு நாகரிகங்கள் வந்துவிட்டன. லேசாக இருமினால் கூட, அருகிலுள்ள மனிதரிடம் மன்னிப்புக் கேட்பது அங்கே நடைமுறையில் இருக்கிறது. அதே நயத்தகு மனிதரிடம் ஆதிக்க மனநிலை வந்துவிட்டால் 500 பேரைச் சாகடிக்கிற அணு ஆயுதமும் அவர்களிடம் உள்ளது.

ஆதிக்க மனநிலை என்பதுதான் என்ன?தாங்கள்தாம் பெரியவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம். அந்த எண்ணத்திற்குக் கடுகளவு இடையூறு நேர்ந்தாலும் எதிராளி அமைதி இழப்பான் அல்லது மன உளைச்சலுக்கு ஆளாவான்.

உலகம் முழுவதும் இப்படியான ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகிற மனிதர்களை நாம் அறிந்தால் ஒருவேளை உணவைக் கூட நிம்மதியாக ருசிக்க முடியாது. இந்தக் கொடூரங்கள் நம்மைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காகவே பல நேரங்களில் கண், காது இரண்டையும் செயலிழக்கச் செய்துவிடுகிறோம்.

சரி… இந்த ஆதிக்க மனநிலையால் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அனைத்துத் தரப்பிலும் கூடுதல் குறைவு இருக்கிறது. ஆனால், மிகமிக அதிகப் பெரும்பான்மையாகப் பாதிக்கப்படும் இனம் எது தெரியுமா? அவர்கள்தாம் பெண்ணினம்!

மார்ச் 8 உலக மகளிர் தினம் என்பது அவர்களுக்கான நாள். உலகம் முழுவதும் அவர்கள் வகிக்காத பதவிகள் இல்லை; பெறாத ஊதியம் இல்லை; அடையாத பெருமைகள் இல்லை; தொடாத உயர்வுகள் இல்லை. எனினும் இவையனைத்தும் போராடிப் போராடிப் பெற்றவை! ஆண்களுக்குப் போலவே இயல்பாக இருந்தவை அல்ல! அதேநேரம் சரி பகுதியினராக வாழும் உலகப் பெண்களுக்கு மேற்குறிப்பிட்ட உயர்வு என்பது மிக மிகக் குறைவான விழுக்காடே ஆகும்!

காவல்துறையின் உயர்ந்த அதிகாரியாக ஒரு பெண்மணி இருப்பார். ஒரு சாதாரண இளைஞன் அதாவது “அந்த ஆண்” இந்த அதிகாரியை எப்படிப் பார்ப்பான்? முதலில் பெண்ணாகவே பார்ப்பான். தேவை எழுந்தால் மட்டுமே காவல்துறை அதிகாரியாகப் பார்ப்பான். இது அந்த இளைஞரின் குற்றமா? சமூகக் குற்றமா? என்பதைப் பிறகு பார்க்கலாம். எனினும், பெண்கள் குறித்த மனநிலையில் மாற்றங்கள் அதிகரிக்கவில்லை.

பெரியார் கூறியதைப் போல பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எலிகள் அலங்கரிக்கப்படலாம், நகைகள் மாட்டிக் கொள்ளலாம்; வருமானம் பெறலாம்; பதவிகள் அடையலாம்; விமானத்தில் பயணம் செய்யலாம்; இன்னும் நிறைய நிறைய செய்து கொள்ளலாம். எனினும், ஒவ்வொரு எலிக்குப் பக்கத்திலும் ஒரு பூனை இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது! நாம் ஆணாக இருப்பதால் இதை மறந்துவிடலாம். ஏனெனில் நாமும் பூனைகள் தான்! ஆனால் எலிகள் ஒருபோதும் மறந்து அயர்ந்துவிட முடியாது.

இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கத்தால் மற்றவர்கள் அடையும் துன்பங்களை நாம் அறிவோம்! அதுபோலத்தான் ஆண்களால் பெண்கள் அடையும் துன்பங்களும்! எந்த ஒன்றையும் ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து பார்ப்பதைப் போல, பெண்ணடிமைத் தனத்தின் நுட்பத்தைப் பெரியாரின் பகுத்தறிவுக் கண்ணாடி அணிந்தால் மட்டுமே தெரிய வருகிறது.

நீரிழிவு நோயாளி ஒருவர், ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும் போது எப்படி கவனமாக இருக்க வேண்டுமோ, வாகன ஓட்டுநர் ஒருவர், விபத்திலிருந்து தப்பிக்க ஒவ்வொரு கணமும் எப்படி விழிப்புடன் இயங்க வேண்டுமோ அப்படித்தான் பெண்களின் வாழ்க்கை முழுவதும் இருக்கிறது. இதைப் பொய் என்றோ, மிகைப்படுத்தல் என்றோ நீங்கள் கருதினால் அநேகமாக நீங்களும் ஆணாக இருக்கக் கூடும்.
எவ்வளவோ மாற்றங்கள், வெற்றிகள் வந்த பிறகும் இதுபோன்ற எதிர்மறைக் கருத்துகள் தேவையா எனச் சிலர் நினைக்கலாம். நேர்மறை சிந்தனைக்கு நாம் எதிரானவர் கிடையாது. மார்ச் 8 உலக மகளிர் தினத்தில் நாமும் திளைக்கிறோம்! அதேநேரம் பதவிகள், வசதிகள், பெருமைகள், உயர்வுகள் போன்ற வெளிப்படையான மாற்றங்களைப் பெற்ற பெண்ணினம், அக வாழ்க்கையில் அதாவது உள்ளுக்குள் எவ்வளவோ துன்பங்களை, துயரங்களை, அடக்குமுறைகளைச் சந்தித்து தான் வருகிறது! இந்த மனோவியல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து அவர்கள் முற்றாக வெளி வர வேண்டும்!

ஆண்கள், பெண்கள் என்பதைத் தாண்டி, மனிதர்கள் என்கிற ஒரே பதத்தை இந்த உலகம் அடைய வேண்டும்!
“ரொம்ப முற்போக்காகப் பேசுவதாக நினைப்போ?”, என்று யாராவது கேட்டால் அதற்கும் பெரியாரின் வார்த்தைகளில் பதில் இருக்கிறது.
‘‘பெண்ணுரிமை என்பது யாரோ ஒருவருக்கு என்று எண்ணாதீர்கள். நம் அம்மாவுக்கு, சதோதரிகளுக்கு என்று நினைத்துக் கொள்ளுங்-கள்’’ என்பார்!

குடும்பமோ, சமுதாயமோ ஆணும், பெண்ணும் உரிமையுடனும், விருப்பப்படியும், தடைகள், தளைகள் இன்றியும் வாழவேண்டும்.
பெண்ணை மட்டும் அடக்கி அடிமைப்-படுத்துவது குடும்பத்தையும் குலைக்கும், சமுதாயத்தையும் கெடுக்கும்.
நம் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதைவிடப் வேறென்ன மகிழ்ச்சி நமக்கு இருந்துவிடப் போகிறது!