நடிகர் மயில்சாமி மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. மறைந்த பிறகுதான் சிலரின் சிறப்புகள் பற்றி வெளியில் தெரியவரும்.
அந்த வகையில் மயில்சாமி அவர்கள் சிறந்த இன உணர்வாளர், கல்விக்காக நிறைய உதவி செய்தவர், மொத்தத்தில் மனிதாபிமானம் மிக்க மனிதர் என்பதை பலரும் தத்தம் பதிவுகளில் வெளிப்படுத்தி உள்ளனர்.
திரைத்துறையில் இருப்பவரும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்-பாளருமான கரு.பழனியப்பன் அவர்கள் தம் இரங்கலில் பல தகவல்களையும் குறிப்பிட்டு, இறுதியில் மயில்சாமி ஓர் பெரியாரின் மாணவன் எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்குச் சிலர், அவர் எப்படி பெரியார் உணர்வாளர் ஆவார்? அவர் சிவபக்தர், எப்பொழுதும் நெற்றியில் திருநீறும், குங்குமமும் வைத்திருப்பார் எனப் பின்னூட்டம் இட்டிருந்தனர்.
இவர்கள் இன்னும் அறியாமையில் இருக்கிறார்களே என்பதுதான் நம்முடைய வேதனை. இன்னும் படிக்கத் தொடங்கவில்லையே என்பதுதான் நமது வருத்தம். திருநீறும், குங்குமமும் வைத்தவர்களுக்குப் பெரியார் தலைவராக இருக்க முடியாது என்று நினைக்கக்-கூடிய அளவிற்குத்தான் இவர்களுடைய சிந்தனை வளர்ச்சி இருக்கிறது!
“கருப்புச் சட்டை போட்டவர்கள்தான் பெரியார் தொண்டர்கள் என்பதில்லை; வெள்ளைச் சட்டை அணிந்த பெரியார் தொண்டர்களும் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்”, எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். இதுபோன்ற செய்திகளை எல்லாம் பின்னூட்டமிட்ட நண்பர்கள் அறிய வேண்டும்.
“பெரியார் என்பவர் வெறும் கடவுள் மறுப்பாளர் மட்டுமே” என்பது பார்ப்பனிய ஊடகங்கள் செய்த மிகப்பெரிய பிரச்சார முறைகளில் ஒன்று! இதைத்தான் சில தமிழர்கள் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். “பெரியார் பேசாத துறைகளே இல்லை” என்பதை இவர்கள் எப்போது அறிவார்கள் என்பதுதான் நம்முடைய ஏக்கமாக இருக்கிறது.
உலகத்தில் எவ்வளவோ அறிஞர்கள், தத்துவஞானிகள் இருந்திருக்கிறார்கள். பொருளியல் பேசுவார்கள், அறிவியல் பேசுவார்கள், மனோதத்துவம் பேசுவார்கள், மருத்துவம் பேசுவார்கள். ஆனால், அனைத்தையும் பேசிய தத்துவத் தந்தை என்றால் அவர் பெரியார் தான்!
பெண்ணியலாளர்கள் அழகாகச் சொல்வார்கள் அவர் தந்தை பெரியார் மட்டுமல்ல; எங்களின் “தாய்” பெரியாரே என்பார்கள். ஆக, ஒரு மனிதரை தந்தையாகவும், தாயாகவும் நினைக்கக்கூடிய அளவிற்கு இந்த மண்ணில் மாற்றங்களைச் செய்தவர் அவர்!
இந்தியாவின் பிற மாநிலங்களில் “கடவுள் இல்லை” என்கிற வாசகத்தைக் கூட கேள்விப்படாதவர்கள் இருப்பார்கள். அதேபோல ஜாதியையும் மதத்தையும் கடுமையாக விமர்சனம் செய்வதைக் கூட அறிந்திருக்க மாட்டார்கள்.
நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தம் இறுதிப் பேருரையைப் பெரியார் திடலில் ஆற்றிய போது, “பெரியார் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருக்கலாம்; ஆனால் மறுப்பவர்கள் யாரும் கிடையாது”, என்று சொன்னார்.
அதேபோல தமிழ்நாட்டில் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கலாம். ஆனால் கடவுள் இல்லை என்கிற தத்துவத்தைக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. அதேபோல மதத்தையும், ஜாதியையும் தொடர்ந்து விமர்சனம் செய்கிற ஓர் இயக்கம் இந்த மண்ணில் இருப்பதை எவரும் அறியாமல் இருக்க முடியாது.
எவ்வளவு பெரிய பக்தராகவும் இருக்கட்டும், மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க.வில் கூட இருக்கட்டும். ஆனால், அவர்கள் சுற்றத்தில், நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒரு “பெரியாரிஸ்ட்” இருந்தே தீருவார்!
தமிழ்நாடு எப்போதுமே நீறுபூத்த நெருப்பு! எந்த நேரத்திலும் தத்துவப் புரட்சி வெடிக்கும். சில பிரச்சனைகள் எழுகிற பொழுது ஆத்திகர்_ நாத்திகர் வேறுபாடு இல்லாமல், கட்சிக் கண்ணோட்டம் இல்லாமல் ஒன்று கூடி குரல் எழுப்புவது தான் தமிழ்நாட்டு வரலாறு!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் திட்டத்தில் திருநீறு அணிந்து, கலர் வேட்டி கட்டி, உத்திராட்ச மாலை போட்டு பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்கள் என்றால் அந்தப் பக்திக்கும், அந்த நாத்திகத் தலைவனுக்கும் இடையில் உள்ள பிணைப்பை அறிந்து கொள்ள முடியும்!
இந்து மதம் வேண்டாம் என்று சொன்ன பெரியார் தான், இந்து மதத்தில் உள்ள தமிழர்களுக்காகப் போராடினார். அதேபோல கிறிஸ்துவ, இஸ்லாமிய தமிழர்களுக்கும் பெரியாரின் தத்துவமே வழிகாட்டி நின்றது_ நிற்கின்றது.
எனவே, பெரியார் ஏதோ ஓர் இயக்கத்திற்கு உரியவர் அல்லர்! அனைத்து மனிதர்களுக்கும் ஆனவர்! அவர் ஓர் வரலாறு! அவர் ஒரு சகாப்தம்! புரிந்து கொள்வீர்!