குறுங்கதை – இ.த.ச.109

ஏப்ரல் 16-30

– தேன் தினகரன்

டவுள் திருடர்களுக்கும் உதவுகிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? கோபாலன், கோவிந்தன் இருவரும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முதலில் கோபாலனை விசாரிக்கிறார்கள்.

நீதிபதி: ஏம்ப்பா இதுக்கு முந்தி வீட்டில திருடுனதாக் கேஸ் போட்டு தண்டனை வாங்கி இருக்க? இப்போ கோவில் உண்டியலை உடைச்சி கொள்ளையடிச்சிருக்கிறியே! கடவுள் நம்பிக்கை கிடையாதா ஒனக்கு?

கோபாலன்: அய்யா, நான் தீவிர முருக பக்தன்யா, நீதிபதி: இதை எப்படிப்பா நம்புறது? நீ வணங்குற முருகன் கோயில்லயே கொள்ளை அடிக்கலாமா?

கோபாலன்: ஏழைகளுக்கு உதவுறவர்தானங்கய்யா அந்த அருள் முருகன். நீதிபதி: ஏழைகளுக்கு உதவுவார்ங்கிறது சரி. திருடர்க்கும் உதவுவாரா?

கோபாலன்: ஆமாங்கய்யா,,,

நீதிபதி: என்ன சொல்ற நீ?

கோபாலன்: பக்தர்களுக்கு அருள் செய்றதுதானய்யா அவனோட கடமை. நான் திருடறதுக்காக பல இடங்களுக்கும் போய் ஒண்ணும் கிடைக்காம ரெண்டு நாள் பட்டினி கிடந்தேன். அப்பதான் முருகன் என் கனவில வந்து, பக்தா! பசியால வாட வேண்டாம். உண்டியல்ல பணம் நிறையா வச்சிருக்கேன்.. எடுத்திட்டுப் போய்ச் சாப்பிடுன்னு சொன்னார்ங்கய்யா… அவர் சொல்லித்தான் செஞ்சேன்.

நீதிபதி: முருகன் கனவில் வந்தார்னு சொல்றியே, அதுக்கும் ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?

கோபாலன்: ஆதாரம் எதுவும் இல்லைங்கய்யா…. அடுத்து கோவிந்தனை விசாரிக்கிறார்.

நீதிபதி: நீ என்ன கோபாலன் கூட்டாளியா?

கோவிந்தன்: இல்லைங்கய்யா… நான் தனியா உண்டியலை உடைக்கணும்ணுதான் போனேன். அந்த நேரத்தில கோபாலன் அங்க வந்திட்டான்.

நீதிபதி: கோபாலன் சாப்பாட்டுக்கு வழி இல்லாம திருடுனதாச் சொல்றான். நீ எதுக்காக திருடுன?

கோவிந்தன்: எதித்துப் பேசுறனேன்னு தயவு செஞ்சி கோவிச்சிக்கக்கூடாது. ஓங்களுக்கு கடவுள் நம்பிக்கைலாம் இருக்கா?

நீதிபதி: ஓ! இருக்கே! எதுக்காக அப்படிக் கேக்கிற?

கோவிந்தன்: அந்த முருகனை வரவச்சி நான் எதுக்காகத் திருடுனேன்னு நீங்களே அவங்கிட்ட கேளுங்களேன். (நீதிபதி யோசிக்கிறார்.) யோசனை என்னத்துக்கு? முருகனுக்கு சம்மன் அனுப்பி வரவச்சி கேளுங்க, நான் சொல்றது நிஜமா இல்லையான்னு…

நீதிபதி: சம்மன் அனுப்பி வராட்டா என்ன செய்றது?

கோவிந்தன்: கு.விமு.ச.87ன் கீழ் அரஸ்ட் போடுங்கய்யா…

நீதிபதி: என்னப்பா சட்டம்லாம் பேசுற? நீ என்ன வக்கீலா?

கோவிந்தன்: இல்லைங்கய்யா… நானும் கொஞ்சம் சட்டம் படிச்சிருக்கேங்க…

நீதிபதி: அது சரி… சட்டத்தை தெரிஞ்சுக்கிட்டே இப்படி தப்பு பண்ணலாமா?

கோவிந்தன்: என் பிரண்டு பெருமாள் கடவுள் இல்லைங்கிறதை சட்ட ரீதியா ஒன்னால நிரூபிக்க முடியுமான்னு கேட்டான். அதுக்காகத்தான் அந்தக் கோவில்ல கொள்ளை அடிச்சேன். நீங்க இந்தக் கேசில முருகன் ஆஜராகணும்னு உத்தரவு போட்டிட்டா அது தெரிஞ்சிரும்ல?

நீதிபதி: அதெல்லாம் என்னால முடியாது. கோயில் உண்டியலை உடைச்சி திருடுனுது இ.த.ச.379, 380ன்படி குற்றம். அதுக்கு தண்டனைய ஏத்துக்கிறியா?

கோவிந்தன்: அய்யா… எனக்கு தண்டனை குடுக்கிறதுக்கு முந்தி அந்த முருகனுக்கும் தண்டனை குடுத்திறணும்…

நீதிபதி: முருகனுக்கா? எதுக்கு?

கோவிந்தன்: செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதும் குற்றம் என்று இ.த.ச.2ல சொல்லப்பட்டிருக்கே. நாங்க கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது அந்த முருகன் அதைத் தடுத்து நிறுத்தி இருக்கணும். அதை வேடிக்கை பாத்துக்கிட்டிருந்ததால இதைக் குற்ற உடந்தைன்னுதான் சொல்லணும். அதுனால முருகனுக்கு இ.த.ச.109இன் கீழ் தண்டனையை நீங்க கொடுக்கலாம்.

நீதிபதி: இப்போ நீதிபதி வேலைக்கு வந்ததுதான் பெரிய தப்புன்னு தெரியுது. அதனால என் பதவியை ராஜினாமா பண்ணிர்றேன். இந்த வழக்கை வேற நீதிபதி விசாரிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *