அதானி-மோடி அந்தரங்கக் கூட்டணி பற்றி அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை காவிகளின் கார்ப்பரேட் ஆட்சியைப் புரிந்துகொள்வோம்!

2023 பிப்ரவரி 16-28, 2023 முகப்பு கட்டுரை

மஞ்சை வசந்தன்

        கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வைச் சந்தித்த போது, அதானி, உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பிறகும் கூட, மிக நீண்ட காலம் மூன்றாம் இடத்திலேயே அதானி நீடித்திருந்தார்.
ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், பணக்காரர்கள் பட்டியலில் 12ஆம் இடத்தில் உள்ளார். இவர்களுக்கு இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசம் வெறும் 4 பில்லியன் டாலர்களாக உள்ளது.
அதானி குழுமம் கடந்த 10 ஆண்டுகளாக பங்குச் சந்தையில் செய்த மோசடிகள், பொய்க்கணக்கு, பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது உள்ளிட்டவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும்படியான அறிக்கை ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம்  அண்மையில் வெளியிட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஜனவரியில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை ‘உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தது, வெளிநாடுகளில் ‘ஷெல்’ நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஹிண்டன் பர்க் அறிக்கை வெளியான சில நாட்களில் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு தடாலடியாக வீழ்ச்சி கண்டது. அந்த குழுமத்திற்குட்பட்ட 7 நிறுவனங்களின் பங்குகளும் சரமாரியாகச் சரிந்துள்ளன.

குறிப்பாக, அதானி டிரான்ஸ்மிஷன்ஸ், அதானி டோடல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகளும் 30 சதவிகிதத்திற்கும் கீழாக குறைந்துள்ளன. அதானி குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 5 சதவிகித அளவுக்கு சரிவு கண்டுள்ளன.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு அதானி குழுமத்தில் அடங்கிய முக்கிய நிறுவனங்களின் மதிப்பு சுமார் ரூ. 37 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அதானி குழுமம் ஒட்டுமொத்தத்தில் அய்ந்தில் ஒரு பங்கு, அதாவது சுமார் ரூ 42 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பை இழந்துள்ளது.

அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள சரிவு அதன் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பை கடுமையாகப் பாதித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 787 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இரண்டே நாட்களில் அவரது சொத்து மதிப்பு ரூ 185 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால் உலகப் பணக்காரர்கள் வரிசையிலும் ஏழாம் இடத்திற்கு கவுதம் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதானி எண்டர்பிரைசஸ் கூடுதல் பங்குகள் வெளியீடு, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் பங்குச்சந்தையில் பின்னடைவைச் சந்தித்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் திரட்டுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி பங்கு வெளியீட்டில் இறங்கியது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்குச்சந்தையில் அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட ரத்தக்களரி இங்கும் எதிரொலித்துள்ளது.

அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் எல்அய்சி, எஸ்பிஅய்க்கு ரூ.78,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, ‘‘ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல், இந்த நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்’’ என்று அதானி குழுமம் 413 பக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. அதானி குழுமத்தின் விளக்கத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், “எங்களது புகார்களுக்கு விளக்கம் தராமல் இந்தியா மீது தாக்குதல் என்று அதானி குழுமம் கூறுவது கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி” என்றும், தங்கள் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தை தாங்கள் ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தேசியக் கொடியைப் போர்த்திக் கொண்டு, நாட்டைக் கொள்ளை அடிக்கும் முயற்சியில் அதானி குழுமம் ஈடுபடுகிறது. 413 பக்க அதானியின் அறிக்கை 30 பக்கங்கள் மட்டுமே தங்கள் ஆய்வறிக்கைக்கு விளக்கம் அளிப்பதாக உள்ளன என்றும், முறைகேடுகளுக்குச் சம்பந்தம் இல்லாத தகவல்களைத் திணித்து இருக்கிறார்கள் என்றும், 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் அதானி குழுமம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தேசியவாதத்தால் தங்களது மோசடியை அதானி குழுமம் மறைக்க முடியாது என்றும், தங்கள் குழுமத்தில் அதிக பங்கு வைத்திருப்போர் பற்றி தெரியாது என அதானி குழுமம் கூறியிருப்பதை ஹிண்டன்பர்க் சுட்டிக்காட்டியுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்று கூறும் அதானி குழுமம், சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தது..

ஆனால், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமோ, ஆய்வறிக்கையில் நாங்கள் முன்வைத்த எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் அதானி குழுமம் பதிலளிக்கவில்லை. நாங்கள் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை கைவசம் வைத்துள்ளோம். அதானி குழுமம் விரும்பினால், அமெரிக்க நீதிமன்றங்களில் கூட வழக்கு தொடுக்கலாம், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார் என்று சவால் விடும் ரீதியில் பதில் கொடுத்துள்ளது .
அதானி குழுமத்தின் பங்குகளில், எல்.அய்.சி நிறுவனம் ரூ.300 கோடி எஸ்.பி.அய், தொழிலாளர் ஓய்வூதிய நிதி ரூ.100 கோடி, எஸ்.பி.அய் காப்பீட்டு நிறுவனம் ரூ 128 கோடி முதலீடு செய்துள்ளன. அதானி குழும பங்குகளின் வீழ்ச்சியால் எல்.அய்.சி. நிறுவனம் இரண்டே நாட்களில் ரூ 16,380 கோடி ரூபாயை இழந்துள்ளது. அதாவது எல்.அய்.சி வசமுள்ள அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு அந்த அளவுக்கு இறக்கம் கண்டுள்ளது.

பங்குச்சந்தையில் வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கும் அதானி குழுமத்தில் எஸ்.அய்.சி. எஸ்பிஅய் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மீண்டும் முதலீடு செய்திருப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அந்த இரு நிறுவனங்களிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நாள் சேமிப்புக்கு ஆபத்து எழுந்திருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது.
நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கே ஆபத்தான இந்த நிகழ்வு பற்றி, நாடாளுமன்றத்தில் சில நாட்களாக எதிர்க்கட்சிகள் அனலைக் கக்கின. இரு அவைகளிலும் சூடு பறந்தன.

அதானி பிரதமர் கூட்டுகவுதம் அதானியின் வளர்ச்சி என்பது நரேந்திர மோடியின் அரசியல் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது. குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியின்போது 2002இல் நடத்தப்பட்ட மதப் படுகொலைக்குப் பிறகு இந்திய தொழில்துறை சம்மேளனத்தால் குஜராத்(CII)கண்டிக்கப்பட்டபோது, அதானி மட்டும் மோடிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அவருடன் நண்பரானார். வைர வியாபாரிகளாக இருந்தது அவர் குடும்பம். அதிலும் பல முறைகேடுகள், வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தின் நிருவாகத்தை எடுத்து நடத்தத் தொடங்கியதுதான் அதானியின் வளர்ச்சியின் முதல் புள்ளி. பின்னர் மோடி குஜராத் முதல்வராக இருந்த 13 ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சி கண்டது அதானி குழுமம். அதற்குச் சாதகமாக பல வசதிகளைச் செய்து கொடுத்தார் மோடி. அதன் பலனாக மோடி பிரதமர் வேட்பாளரானபோது நாடு முழுவதும் அதானி குழுமத்தின் விமானங்களிலேயே பயணித்து பிரச்சாரம் மேற்கொண்டார். மோடி முதல்வராக இருந்தபோதும், பிரதமரான பிறகும் அவரது வெளிநாட்டுப் பயணங்களிலெல்லாம் அதானியும் உடன் சென்றார். பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பேசினார்; வர்த்தக உறவுகளை மேற்கொண்டார். இந்தத் தகவல்களெல்லாம் அவ்வப்போது ஊடகங்களில் செய்திகளாகவும், விமர்சனங்களாகவும் வெளிவந்தவைதான்.
‘எல்லாம் தொழில் வளர்ச்சிதானே, நாட்டுக்கு நன்மைதானே’ என்ற கேள்வி எழும். ஆனால், எங்கே பிரச்சினை வருகிறது என்றால், அதானி பெற்றுள்ள மிகப்பெரும் தொகையிலான வங்கிக் கடன்கள்; அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.அய்.சி செய்துள்ள பிரமாண்டமான முதலீடு.

வங்கிகளில் ஸ்டேட் பாங்க் 27,000 கோடி ரூபாய் அதானிக்குக் கடன் கொடுத்துள்ளது. பிற வங்கிகளும் கொடுத்துள்ளன. அதானி குழுமத்துக்கு மொத்தம் 70,000 கோடி முதல் 80,000 கோடி வரை வங்கிக் கடன்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதனாலென்ன, எல்லா நிறுவனங்களும் கடன் வாங்கும்தானே என்றால் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதானி குழுமம் கடன்கள் வாங்க அடிப்படையாக இருப்பது அதன் சொத்தின் மதிப்பு. அந்த சொத்தின் முக்கிய வடிவம்  அதன் பங்குகளின் மதிப்பு. இதில்தான் பிரச்சினை!
அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த மூன்றாண்டுகளில் இறக்கை கட்டிப் பறக்கத் துவங்கியது. எட்டு மடங்கு வளர்ச்சி அல்லது 800% வளர்ச்சி. எப்படி பங்கின் மதிப்பு அதிகரித்தது என்று பார்த்தால், ஷெல் கம்பெனிகள் எனப்படும் மொரிஷியஸ் போன்ற வரிவிலக்கு நாடுகளில் இயங்கும் ‘லெட்டர் பேட்’ நிறுவனங்கள் அதானியின் பங்குகளை கொள்ளை விலைக்கு வாங்குவதுதான் காரணம். அந்த நிறுவனங்கள் அதானி பங்குகளை வாங்குவது தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லாதவை.
இந்த நிறுவனங்கள் பலவற்றுக்கும் அதானியின் அண்ணன் வினோத் அதானிக்கும் தொடர்பு இருக்கிறது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்று பார்த்தால் அதானி நிறுவனத்தில் அவருக்குள்ள பங்குகள் மூலம் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள்.
அதாவது அதானி குடும்பத்தினரே தங்கள் பங்குகளையே அயல் நாட்டு ஷெல் நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்கு வாங்கி பங்கின் மதிப்பை அதிகரிக்கின்றனர். பின்னர் மதிப்பைக் காட்ட கடன் வாங்குகின்றனர்.

இப்படிச் செய்வது மிகப்பெரிய பங்குச் சந்தை முறைகேடு. பங்குச் சந்தை வர்த்தகத்தைக் கண்காணிக்கும்  மேற்பார்வை செய்யும் செபி (SEBI – Securities and Exchange board of india) என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி. இது மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவது என்பதால் அரசாங்கத்தினை நோக்கித்தான் விரல்கள் நீளுகின்றன.
“இந்திய நிதிச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் எல்.அய்.சி., எஸ்பிஅய் ஆகிய இரண்டுமே அதானி குழுமத்தில் ஏராளமான முதலீடுகளைச் செய்துள்ளன. இதனால், அதானி குழுமத்திற்கு எழுந்துள்ள நெருக்கடி நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையிலும், அந்த பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.” என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

“ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் குறித்த ஆய்வறிக்கை குறித்து ஒரு அரசியல் கட்சி வினைபுரியத் தேவையில்லைதான். ஆனால் அதானி குழுமம் ஒன்றும் சாதாரண நிறுவனம் அல்ல, பிரதமர் நரேந்திர மோதி, குஜராத் முதலமைச்சராகப் பதவி வகித்த போதே அவருக்கு நெருக்கமானவராக அறியப்படும் கவுதம் அதானியுடையது. ஆகவே ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும்போது இந்தப் பிரச்சினையை எழுப்பிய அவர், ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளையும் அடுக்கினார்.
இந்த நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
ஆனால், பிரதமரின் இந்த உரையில், ராகுல் காந்தியின் கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெறவில்லை. அதானி விவகாரத்தில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதுகுறித்து இராகுல்காந்தி தெரிவித்துள்ளதாவது:
‘‘பிரதமர் அதிர்ச்சியில் இருந்தார், எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. நான் எந்தச் சிக்கலான கேள்வியையும் கேட்கவில்லை. அவர் (அதானி) உங்களுடன் எத்தனை முறை சென்றிருக்கிறார்?’’ அவர் உங்களை எத்தனை முறை சந்தித்தார்? என்பன போன்ற எளிய கேள்விகளைத்தான் முன்வைத்தேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை

அதேநேரம் அவர் ஆற்றிய உரை எனக்குத் திருப்தி அளிக்கவில்லை, ஆனால், உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அதாவது அதானி விவகாரத்தில் விசாரணை குறித்து எந்தப் பதிலும் இல்லை.
பிரதமர் மோடிக்கு, அதானி நண்பர் இல்லை என்றால், அவர் விசாரணைக்கு ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்புத் துறையில் போலி நிறுவனங்கள், பினாமி பணம் கைமாறியது குறித்து விசாரணை இல்லை. இது குறித்து பிரதமர் மோடி எதுவும் கூறவில்லை.
இதன் மூலம் பிரதமர் மோடி, அதானியைப் பாதுகாத்து வருவது உறுதியாகி இருக்கிறது.
இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு பிரச்சினை ஆகும். எனவே இந்த பிரச்சினையில் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருக்க வேண்டும்.

இது ஒரு மிகப்பெரிய ஊழல். ஆனால், மோசடி என்று கூட பிரதமர் மோடி சொல்லவில்லை. அவர் நிச்சயமாக அதானியைப் பாதுகாக்க முயற்சிக்கிறார். அதை நான் புரிந்து கொண்டேன். அதன் பின்னால் காரணங்களும் உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுப்பியுள்ள கண்டனக் குரல்:
‘‘சோஷியலிசம்’ என்பதற்கு எதிராக அரசின் பொதுச் சொத்துகள் தனியாருக்கு –  கார்ப்பரேட் பெருமுதலாளிகளான அதானி, அம்பானி, டாடா, பிர்லாக்களுக்கு விற்பனை அல்லது நீண்ட காலக் குத்தகை என்கிற பெயரால் ‘தாரை’ வார்க்கப்படுகின்றன!
அரசமைப்புச் சட்ட முகப்பில் உள்ள மூவகை நீதிகளும் இந்த பெருமுதலாளித்துவ திமிங்கலங்களால் பெரிதும் பறிக்கப்படுவதற்கு ஒன்றிய அரசு துணை போகிறது என்ற வேதனை மக்களிடையே பரவலாகப் பேசு பொருளாகி வருகிறது.
அரசமைப்புச் சட்டம் அளித்த மூன்று வகை நீதிகள்: 1. சமூகநீதி 2. பொருளாதார நீதி 3. அரசியல் நீதி.
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பது சமூகநீதி, தனியார்க்கான பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசுடைமைகள் மாற்றப்படுகின்றன – மக்கள் சொத்து தனியார் வசமாகி பொருளாதார நீதி அடிபடுகிறது.
தனியார்த் துறைக்கு மாற்றப்படும்போது, சமூகநீதி இட ஒதுக்கீடு அதில் இல்லாது, நாட்டின் மிகப்பெரும்பான்மையான மக்களின்
உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஏற்கெனவே வேலையில் சேர்ந்துள்ள பதவி, பணியில் இருக்கும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டியினர் எல்லாம் வெளியே அனுப்பப்பட்டு, முதலாளிகளின் விருப்பம்போல அவர்களது ‘சாம்ராஜ்யம்’ நடைபெறும் _ஒருசார்பு நிலையே நிலைத்துவிடும் அபாயம் கண்கூடு.

தோற்றத்தில் ஜனநாயகம் – உள்ளே அது பண நாயகம்
மூன்றாவது, பெரும்பாலான மக்களான 85 சதவிகிதம் மக்களை வெறும் வறுமைக்கோட்டுக்கும் கீழே தள்ளி, வாக்களிப்பது, ‘ஒரு நபர், ஒரு ஓட்டு!’ அரசியல் சமத்துவம் என்பதுகூட, அரசியலில் மேலெழுந்த வாரியாக சமத்துவமாகக் காணப்பட்டாலும், அங்கே பெருமுதலாளிகளின் தேர்தல் நிதி உதவிகள்மூலம் அவர்கள் விரும்பும் ஆட்சி யாளரை, கட்சியாளரை பணத்தாலடித்தும் ஆட்சிகளை அமைக்கும் ஒரு நிலையை உண்டாக்குகிறார்கள்.
தோற்றத்தில் ஜனநாயகம்  உள்ளே அது பண நாயகம் அதனை திரைமறைவில் நடத்துவோர் பெரும் பெரும் கார்ப்பரேட் திமிங்கலங்கள் என்பதே!

அரசியல் நீதியும் நீர்மேல் எழுத்துகளாகி வருகிறது – இந்தியத் திருநாட்டில்!
நம் நாட்டில் பெரும் பெரும் கப்பல் துறைமுகங்கள் -அதானிகள் கையில்!
பல தொழில்களும் அவர்களிடத்தில். அதற்காக – தனி முதலாளிகள் சட்டம் திருத்தப்பட்டு, அவர்களுக்குத் தனிச் சலுகைகள்.

ராகுல் காந்தியின் ஆணித்தரமான கேள்விகளுக்குப் பதில் இல்லை!

இதனை இரண்டு நாள்களுக்குமுன் ராகுல் காந்தி ஆணித்தரமாக மக்களின் கேள்விகளை நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காக எடுத்து வைத்தார்.அந்தக் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை!

பிரதமர் அளித்த பதில் பொத்தாம் பொதுவில் ‘தத்துவ’ உரைகளாகவே இருந்தன.

மக்கள் ராகுல் காந்தி போன்றவர்கள்  காங்கிரஸ் தலைவர் கார்கே போன்றவர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசிய பேச்சுகளுக்குரிய  எழுப்பிய கேள்விகளுக்குரிய பதிலளித்து ‘‘அவர்கள் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை;

அதானிகளுக்கு ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியோ, பிரதமர் மோடியோ சலுகைகள் ஏதும் காட்டவில்லை” என்று அடித்துக் கூறாமல், ஆதாரப்பூர்வமாக மறுக்காமல், ‘‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொன்ன” பழைய பழமொழியை நினைவூட்டுவதாகவே உள்ளது!

அதானி, உலகப் பணக்காரர்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு 609 ஆம் இடத்தில் இருந்தார்; திடீரென எப்படி இரண்டாம் இடத்திற்கு வந்தார் – ‘மாயவித்தை’ எப்படி நடந்தது? என்ற கேள்விக்கான விடை கிடைத்ததா?

நம் நாட்டுப் பொருளாதாரமும் சுருண்டு போயிற்று!

சில ஆண்டுகளுக்குமுன் – கோவிட் 19 கொடுந் தொற்று காரணமாக நம் நாடே கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்பட, தொழிற்சாலைகள், கடைகள், சிறுகுறு தொழில்கள் எல்லாம் முடங்கி, மடங்கி, அடங்கி மூடி வைக்கப்பட்ட வரலாறு காணாத சோகம் சூழ்ந்தது; கோடிக்கணக்கானோர் வேலையிழந்து நடந்தே சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்; வேதனையால் தாக்குண்டனர்; நம் நாட்டுப் பொருளாதாரமும் சுருண்டு போயிற்று!

அதில் ஓர் அதிசயம்  அக்காலத்தில் அதானியின் ஒரு நாள் வருவாய் 1000 கோடி ரூபாய்; அம்பானிகளின் வருமானமும் பல மடங்கு உயர்வே!
தகவல் தொழில்நுட்பத்திலும்கூட (அரசு நிறுவனம் ஒப்புக்கு மட்டும்) அத்துணையும் ‘ஜியோ’ மாதிரி – முதலில் இலவச அறிமுகத் தூண்டில், பிறகு படிப்படியாக அதன் சிறகுகள் விரிவாகி இன்று பல நூற்றுக்கணக்கான மக்களை வீழ்த்தும் மற்றொரு வித்தை!
அரசு விமான நிறுவனங்களான ஏர் இண்டியா, இண்டிகோ ஆகியவை ரூ.17,000 கோடி குறைந்தவிலையில், அதுவும் தவணை முறையில் விற்கப்பட்டுவிட்டன டாடாக்களுக்கு.

சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்குக்கூட அரசு விமான சேவை நடத்தாத ஒரே நாடு நம் நாடுதான் (பா.ஜ.க. அரசே!) இதன்மூலம் பயன் யாருக்கு? 99 சதவிகித மக்களை, முடக்கிவிட்டு ஒரு சதவிகித கார்ப்பரேட் ஆதிக்கக் கொடி தலைதாழாது பறக்கிறது!

ஒன்றிய அரசு மவுன சாமியாராக உள்ளது!

மக்கள் கைபிசைந்து நிற்கும் நிலை; பதிலளிக்காமல் ஒன்றிய அரசு மவுன சாமியாராக உள்ளது!

இதனை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்; எதிர்க் கட்சித் தலைவர்கள் உணர்ந்து, ஒற்றுமையுடன் ஓரணியில் நின்றால்தான் 2024இல் நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று காட்டி, கார்ப்பரேட்டுகளின் பண நாயகம், ஜாதி, மத நாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தைக் காத்திடமுடியும்’’  இவ்வாறு, தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் கூறியுள்ள கருத்துகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் கருத்தில் கொள்ளவேண்டும். ராகுல் காந்தி அவர்களின் துணிவுமிக்க தெளிவான எதிர்வினைகள் இந்திய மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாய் உள்ளன. எனவே, இந்தியா முழுமைக்கும் ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, பாசிச பா.ஜ.க. அரசின் மக்கள் எதிர் செயல்களைத் தடுத்து, எதிர்த்து முறியடித்தாகவேண்டும்.
கார்ப்பரேட்டுகளின் பணம், அவர்களின் ஊடகங்களின் ஒத்துழைப்பு இவற்றின் துணை கொண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுச் செயல்படுகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு பல லட்சம் கோடிகளை சலுகை, தள்ளுபடி, மானியம் என்ற பெயர்களில் கொட்டிக் கொடுத்து வளர்த்துவிடும் அதே வேளையில், ஏழைகள், அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரத்தை மேலும் மேலும் சீரழித்தும், அவர்களைக் கல்வி, வேலை வாய்ப்புகளை நெருங்கவிடாமல் செய்யும் சதிவேலைகளையும் கவனமாக ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது. அதன்மூலம் பெரும்பான்மை மக்களைக் கொண்ட சூத்திரப் பிரிவை மீண்டும் கட்டமைக்க அது முயற்சிக்கிறது.
எனவே, இது வெறும் பொருளாதாரப் பிரச்சனை மட்டுமல்ல; இதில் சமுதாயம் சார்ந்த சிக்கலும் சேர்ந்தேயுள்ளது என்பதை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.

பொதுத் துறையை ஒழிப்பதன் மூலம் மேற்கண்ட சதித்திட்டத்தை சங்பரிவார் கும்பல் சாதுர்யமாகச் செய்து வருகிறது.
எனவே, கார்ப்பரேட்டுகளுடன் கைகோத்து இந்திய நாட்டின் மக்களாட்சி, சமூகநீதி, இறையாண்மை, சமத்துவம் அனைத்தையும் ஒழித்துக்கட்டி, பாசிச சனாதன வர்ணாசிரமக் கட்டமைப்பை உருவாக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பியின் சதித்திட்டத்தை முறியடிக்க, வரும் தேர்தலில் இந்த பி.ஜே.பி. ஆட்சியை அகற்றி, சமத்துவ, ஜனநாயக, சமஉரிமை காக்கும் நல்லாட்சியை அமைக்கவேண்டியது கட்டாயக் கடமையாகும். அப்பணியை இப்போதிலிருந்தே இந்தியா முழுமைக்கும் எல்லா மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செயல்பட வேண்டும். தனிப்பட்ட பகை, தற்செருக்கு இவற்றைப் புறந்தள்ளி, பி.ஜே.பி.யை அகற்றவேண்டும் என்ற ஒற்றை இலக்கில் ஒன்று சேர்ந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச் சார்பற்ற, ஜனநாயக சக்திகள் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு உழைக்கவேண்டியது ஒவ்வொரு ஜனநாயக அமைப்புகளின் கட்டாயக் கடமையாகும்!