வ.உ.சி. 150 ஆவணச் சிறப்பிதழ்
வ.உ.சிதம்பரனாரின் சிந்தனைப் புலம்
– கண. குறிஞ்சி
இடது ஆகஸ்டு
– அக்டோபர் 2022
சமூக அறிவியல் கலை இலக்கியக் காலாண்டிதழ்
வ.உ.சி 150
ஆவணச் சிறப்பிதழ்
ஒ ருவரின் கருத்துகளே அவரின் ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டக் கூடியவை. ஒருவரின் தளராத முயற்சி, செயல்திறன், பிறரது ஆதரவு போன்றன அவரது கருத்துகளின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. சந்திரனை இலக்காகக் கொண்டால்தான், ஏதாவது ஒரு நட்சத்திரத்தையாவது நாம் வசப்படுத்த முடியும். இதை வ.உ.சி அவர்களது வாழ்வும் கருத்துகளும் நமக்கு உணர்த்துகின்றன.
பிரித்தானிய வல்லரசின் கீழ் அடிமைப்படுத்-தப்பட்ட இந்தியாவை விடுதலை செய்வதற்குப் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் வ.உ.சி அவர்களின் முன்னெடுப்பு, தனித்துவமானது. முன் உதாரணம் அற்றது.
பிரிட்டனின் முதுகெலும்பை முறிக்கக் கூடிய ஒரு காரியத்தை வ.உ.சி அவர்கள் மேற்கொண்டார். இத்தகையதோர் முயற்சியை இந்தியத் துணைக் கண்டத்தில் அவரது காலகட்டத்தில் யாரும் சிந்தித்துக் கூடப் பார்த்திருக்கவில்லை.
வெள்ளையரை எதிர்த்துக் கப்பல் ஓட்டுவது என்பது, தற்சார்புப் பொருளாதாரத்தையும், அரசியல் விடுதலையையும் இணைத்த முயற்சி ஆகும். இந்தப் புதுப் பரிசோதனையில் அவரது தனிப்பட்ட வாழ்வும், அரசியல் வாழ்வும் நாசமாகும் சூழல் வந்த பொழுதும், அவர் சிறிதும் பின்வாங்கவில்லை. அதுதான் ஒரு தலைவருக்கு அழகு.
‘என்மனமும் என்னுடம்பும் என்சுகமும் என்னறமும்
என்மனையும் என்மகவும் என்பொருளும் என்மனமுங்குன்றிடினும் யான்குன்றேன் கூற்றுவனே வந்திடினும் வென்றிடுவேன் காலால் மிதித்து’
எனச் சங்காரமிட்டார் வ.உ.சி அவர்கள்.
1908ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மூன்றாம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவிலும் இத்தகைய மன உறுதியையே அவர் வெளிப்படுத்துகிறார்.
‘இனி என் பேரில் கலகக் குற்றம் சாட்டப்-
படும். ஆங்கிலேயர்கள் எச்சரிக்கின்றபடி விலகாவிட்டால் என்னையும் சுட்டுத் தள்ளிவிட இருக்கிறார்கள். யாரோ ஒரு பெரிய போலீஸ் அதிகாரி தம் படையோடு வந்து சுட்டுத்தள்ளும் பட்சத்தில் என்ன செய்யக்கூடும் என்று என்னையே கேட்டால், 35 கோடி ஜனத்தில் 3000 / 4000 பேர் சுடப்பட்டால்தான் என்ன? அப்பேர்ப்பட்ட சாவு எங்களுக்கு விதிக்கப்பட்டதானால், நானும் சிவாவும் சுடப்படத் தயார்தான். மனிதன் இறக்கவே பிறக்கிறான். இன்ன விதமாய் இறக்கிறோம் என்பதைக் கவனிக்கவில்லை. நாங்கள் இறப்பதற்கு அஞ்சவில்லை’ எனும் அவரது பிரகடனம் அவரது உருக்குப் போன்ற வைராக்கியத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும் காந்தியாருக்கு அவர் எழுதிய கடிதத்திலும் நாட்டுக்கான தனது அர்ப்பணிப்-பைத் தெளிவு படுத்துகிறார்.
‘எனது தேசப்பற்றாளர்களுக்காக எனது வாழ்க்கை முழுவதையுமே நான் செலவிடத் தயாராக இருக்கிறேன். என்னுடைய அனைத்து நேரமும் எனது நாட்டுக்கும், நாட்டின் மீது பற்று உள்ளவர்களுக்கும் மட்டுமே ஒதுக்க விரும்புகிறேன். இவை இரண்டுக்கும் பிறகுதான் கடவுளுக்கே கூட நேரம் ஒதுக்குகிறேன்’ எனும் அவரது வாழ்வுதான் அவர் தரும் செய்தியாகும்.
அது மட்டுமல்ல; அவர் இயற்றிய மெய்யறிவு நூலில் ‘மறங்களைதல்’ எனும் தனியே ஓர் அதிகாரத்தை அமைத்து, அதில் எவற்றை எல்லாம் களைய வேண்டும் என அறிவுறுத்துகிறார். அதில் மிக முக்கியமானதோர் கருத்தைப் பதிவு செய்கிறார்.
‘நல்லுயிரை நல்வினையை நற்பொருளைக் காத்தற்குச்
சொல்லியவெல் லாஞ்செயினுந் தோடமிலை – யல்லாமல்
தீயுயிரைத் தீவினையைத் தீப்பொருளைக் காத்தற்காங்காயவெலாம் பாவ மறி’ நன்மையை விளைவிக்கும் உயிர்களையாவது, நன்மையை விளைவிக்கும் செயல்களையாவது. நன்மையை விளைவிக்கும் பொருள்களையாவது பாதுகாக்கும் பொருட்டு பாவச் செயல்கள் செய்தாலும் குற்றம் இல்லை. ஆனால் தீமை விளைவிக்கும் உயிர்களையாவது தீமை விளைவிக்கும் செயல்களையாவது, தீமை விளைவிக்கும் பொருள்களையாவது பாதுகாக்கும் பொருட்டு செய்யப்படும் செயல்கள் எல்லாம் பாவச்செயல்களாகும்.
இதனை நன்றாக அறிவாயாக! – எனும் வ.உ.சி. அவர்களது கருத்து. காந்தியாரிடமிருந்து வேறுபடும் அவரது அணுகுமுறையைப் புலப்படுத்துகிறது.இந்த அணுகுமுறை இலக்கு – வழிமுறை தொடர்புடையதாகும். இலக்கு, பலருக்கும் நன்மை பயக்கும் என்றால், வழிகளில் சில தவறுகள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது வ.உ.சி அவர்களது முடிவாக இருந்தது. ஆனால், காந்தியாரோ இலக்கு, – வழிமுறை இரண்டிலும் புனிதத்தை எதிர்பார்த்தார். இரண்டிற்கும் வரலாற்றில் இடம் உண்டு என்பதுதான் மெய் நடப்பாகும்.
‘அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை எனும் பேராசான் வள்ளுவரது அன்புடைமை அதிகாரக் குறளோடு வ.உ.சி அவர்களது கருத்து இசைந்து செல்வது குறிப்பிடத் தக்கதாகும்.
காந்தியாரோடு பல்வேறு கூறுகளில் வ.உ.சி அவர்கள் வேறுபட்டிருக்கிறார். அரசியல் அணுகுமுறையில் இருவருக்கும் இடையே ஆழமான வேறுபாடு நிலவியது. காரைக்குடிக்கு அருகிலுள்ள சிறாவயல் கிராமத்திலிருந்த தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் ஆசிரமத்திற்கு வ.உ.சி அவர்கள் வந்தபொழுது, ‘அங்குள்ள இளைஞர்கள் இராட்டையில் நூல் நூற்கிறார்களா எனக் கேட்டறிந்தார். ஆம் எனும் ஜீவாவின் பதிலைக் கேட்டதும், வாளேந்த வேண்டிய கைகளில் இராட்டை சுற்றச் சொல்கிறாயே’ எனத் தெரிவித்து ஜீவாவை வ.உ.சி அவர்கள் கடிந்து கொண்டார் என்பது வரலாறு.
சுயராஜ்யக் கோட்பாட்டில் தீவிரப் பற்றுக் கொண்ட வ.உ.சி அவர்களால், காந்தியாரின் சாத்வீகக் கருத்துகளுடன் இசைந்து போக முடியவில்லை. நேதாஜிக்கு முன்பே காந்தியாரின் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்தவர் அவர். காந்தியாரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த
பொழுது கூட, வ.உ.சி அவர்கள் தனது நிலைப்
பாட்டில் சமரசம் செய்து கொள்ளவில்லை.
அரசியலில் திலகரின் வழி நின்று தீவிர-மாகக் களமாடினாலும், சமூகம் குறித்த திலகரின் கருத்துகளை வ.உ.சி அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
எடுத்துக்காட்டாக, பார்ப்பனர் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை மிகவும் இழிவாகக் கருதியவர் திலகர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைத் திலகர் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவில்லை.
எண்ணெய¢ எடுக்கும் செட்டியார்களும், புகையிலைக் கடைக்காரர்களும், சலவையாளர்-களும், அவரைப் போன்ற ஏனையோரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டுமென்று ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பதைத் தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று திலகர் கூறினார். தமது அபிப்பிராயத்தில் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்வதுதான் அவர்களது கடமையே தவிர, சட்டங்களை இயற்றும் அதிகாரங்களைப் பெறுவதற்கு அவர்கள் விழையக் கூடாது’ எனச் சோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் திலகர் பேசியதாக அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுவது கருதத்தக்கது.
இந்திய சமூகத்தில் ஜாதி குறித்த ஒருவரின் கண்ணோட்டம் எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்துதான் அவரை மதிப்பீடு செய்ய முடியும். தமிழகத்தில் பிள்ளைமார் சமூகம், உயர் ஜாதியாகக் கருதப்படுகிறது. அந்தச் சமூகத்தில் பிறந்த வ.உ.சி அவர்கள், ஜாதி வேறுபாடுகளைக் கடுமையாக எதிர்ப்பவராக விளங்கினார். ஜாதிகளை வகைப்படுத்தும் பொழுது பார்ப்பனர் எனவும், பிற ஜாதிகள் அனைத்தையும் ‘தாழ¢த்தும்’ ஜாதிகள் எனவும் சுட்டுகிறார்.
மேலும் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விருதுநகர் இராமையா தேசிகர் எனும் கண்ணிழந்தவரைத் தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருந்தார் வ.உ.சி அவர்கள். அவரது முதல் மனைவியான வள்ளியம்மை தன் கையால் தேசிகருக்கு மிகுந்த அன்புடன் உணவு ஊட்டுவதைக் கண்டு ஊரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் வ.உ.சி அவர்களை ஜாதி விலக்கம் செய்யத் துணிந்தனர். ஆனால் வ.உ.சி அவர்கள் இந்த எதிர்ப்புகளை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அதேபோல், தாழ்த்தப்ட்ட குலத்தைச் சேர்ந்த சகஜானந்தர் என்பவரை வ.உ.சி அவர்கள் சென்னையில் தம் வீட்டிற்குக் கூட்டிச் சென்று உணவு கொடுத்துப் பராமரித்து வந்தார். அவருக்குத் தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களைக் கற்பித்ததோடு, சென்னையை விட்டு ஒட்டப்பிடாரத்திற்குச் சென்ற போதும் சகஜானந்தரை உடன் அழைத்துச் சென்றார். தாம் கலந்து கொண்ட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவரையும் அழைத்துச் சென்றார்.
வ.உ.சி வாழ்ந்த காலகட்டத்தில் இப்படிப்-பட்ட செயல்கள் வியக்கத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், சிறையில் இருந்த பொழுது பார்ப்பான் அல்லது பாண்டி வேளாளன் உணவு சமைத்தால்தான் உண்பேன் எனத் தாம் கூறியதாக, வ.உ.சி அவர்களே சுயசரிதையில் குறிப்பிடுகிறார் என்ற விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. இது மிச்சேல் எனும் சிறை அதிகாரிக்கும் வ.உ.சி க்கும் நடைபெற்ற உரிமைப் போராட்டம் குறித்ததாக நாம் காண முடியும். ஏனெனில்,
“மதகுல வேற்றுமை மனத்திலும் கொள்ளேன்” என்று அதே சுயசரிதையில் அவர் பதிவு செய்வதையும் ஒப்பு நோக்கிக் காண வேண்டும்.
மேலும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த இராமையா தேசிகர் மற்றும் சகஜானந்தர் ஆகியோரைத் தனது வீட்டிலேயே வைத்து வ.உ.சி அவர்கள் பராமரித்த செயலும் இத்தோடு இணைத்துக் காணப்பட வேண்டும். ஜாதி ஒழிப்பு பற்றி வெறுமனே பேச்சில் முழங்காமல், செயலில் வாழ்ந்து காட்டியவர் வ.உ.சி அவர்கள்.
மேலும் திலகர் மற¢றும் காந்தி போன்றோர் பகவத் கீதைக்கு உரை எழுதிய பொழுதும் வ.உ.சி அவர்கள் ஜாதிக் கட்டமைப்பை உயர்த்திப் பிடிக்கும் கீதைக்கு ஒருக்காலும் உரை எழுதவில்லை மாறாக,‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’போன்ற சமத்துவ விழுமியங்களை வலியுத்தும் வள்ளுவரின் திருக்குறளுக்கு உரை எழுதினார்.தவிரவும், 1928இ-ல் செட்டிநாட்டுக்குச் சென்றுஆற்றிய சொற்பொழிவுகளில் பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளை அவர் பதிவு செய்துள்ளார். அவற்றில் சுயமரியாதை இயக்கத்தின் செல்வாக்குத் தெளிவாகக் காணப்படுகிறது. ‘பிறப்பினால் உயர்வு தாழ்வு நமது நாட்டு வழக்கமன்று. ஆரியர் நூல்கள் தமிழ் நூல்களில் கலந்த பின்னரே பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற கோட்பாடு வந்தது. தமிழ்நாட்டு நூல்களில் பிறப்பினால் உயர்வு தாழ்வு கூறப்படவில்லை. புறநானூறு போன¢ற சங்க இலக்கியங்களில் பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் உண்டெனக் காணப்படவில்லை’ எனத் தெளிவு படுத்துகிறார்.
மேலும், 1920ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாநில அரசியல் மாநாட்டில் பங்கேற்ற வ.உ.சி அவர்கள். அரசு வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாருக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அதுமட்டுமின்றி 1927 – ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற மூன்றாவது அரசியல் மாநாட்டில், பார்ப்பனர் அல்லாதாருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த மிக விரிவாக அவர் உரையாற்றியதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜாதி குறித்து முற்போக்கான கொள்கையைக் கொண்டிருந்தது போலவே, மதம் குறித்தும் வ.உ.சி அவர்கள் நல்லிணக்கக் கண்ணோட்டம் உடையவராக இருந்தார். குறிப்பாக மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு அவர் எழுதிய உரையைக் குறிப்பிட வேண்டும். அதன் உரைப்பாயிரத்தில் வ.உ.சி அவர்கள், ‘இவ்வுரையில் ஏனைய உரைகளில் காணப்படும் பல மதக் கோட்பாடுகளும், அவற்றின் கண்டனங்களும் காணப்படா. அவை காணப்படாமைக்குக் காரணம், மக்கள் பல்வேறு பெயர்களோடும், வடிவுகளோடும் காணப்படினும், அவர்களெல்லாம் மக்கள் ஜாதியினர் ஆவது போல, மதங்கள் பல்வேறு பெயர்களோடும், கொள்கைகளோடும் காணப்படினும் அவையெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரே இறைவனைப் பற்றியே பேசுகின்றன என்று யான் கருதுகின்றமையே’ எனக் குறிப்பிடுகிறார்.
அதைத் தொடர்ந்து அவர் சுட்டிக்காட்டும் கருத்துகள் சமகாலப் பொருத்தப்பாடு மிக்கவையாகும். ‘மத வேற்றுமை காண்பவர்களும், பேசுபவர்களும், ‘யான்’ ‘எனது’ என்னும் மதவெறி பிடித்த மக்களே என்றும், நமது நாடு தற்காலம் இருக்கிற ஒற்றுமையற்ற நிலையில், மத வேற்றுமைகளையோ, ஜாதி வேற்றுமைகளையோ, வேறு வேற்றுமைகளையோ காண்பவர்களும், பேசுபவர்களும் தேசத்திற்குத் தீங்கிழைப்பவர்களே என்றும் யான் கருதுகின்றேன்’ என்ற அவரது கருத்து, மதவெறியால் நாட்டைத் துண்டாட நினைப்பவர்களுக்குச் சரியான பாடமாகும்.
அது மட்டுமல்ல, இறை நம்பிக்கையும் சைவ சமய சித்தாந்தங்களில் நல்ல புலமையும் கொண்டிருந்த வ.உ.சி அவர்கள், தனது அரசியல் வாழ்வில் மதத்தைக் கலக்கவில்லை. சமயம் என்பது தனி மனிதனின் தொடர்புடையது என்பதில் அவர் தெளிவாக இருந்து வந்தார். இந்தக் கருத்தில் அவர் காந்தியாருடன் வேறுபட்ட போதும், தமது கருத்தில் உறுதியாக இருந்து வந்துள்ளார். இறுதிவரையில் அதில் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை.
சுதேசாபிமானம், சுதேச ஸ்டீமர் விக்ஞாபனம் ஆகியவையே இதுவரையில் கிடைத்துள்ள வ.உ.சி அவர்களின் அரசியல் கட்டுரைகளில் தனித்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.
வ.உ.சி அவர்களின் முதல் அரசியல் கட்டுரையான ‘சுதேசாபிமானம்’ பகுதியில் ‘சுதேசத்தார் ஒன்று சேர்வதற்கும், ஒற்றுமையாக இருப்பதற்கும் முக்கியத் தடைகள் ஜாதிய அபிமானம், மதாபிமானங்களே! உலகத்தில் தாழ்ந்த நிலைமையை அடைந்த ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்தையும் கவனிப்போமாயின், சுதேசத்தார் ஜாதி பேதம் / மத பேதம் ஏற்பட்டுச் சுதேச ஒற்றுமையையும் பேதப்படுத்தி, சுதேச நிலைமையையும் பேதப்படுத்தினதாகத் தெரியவரும்’ எனத் தெளிவுபடுத்துகிறார்.
இவை தவிர, பல்வேறு மூட நம்பிக்கை-களை எதிர்த்தும் வ.உ.சி அவர்கள் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ‘சிரார்த்தம்’ என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு அளிக்கப்படும் அரிசி, காய்கறி முதலியன பிதுர்களுக்குப் போய் சேரும் என்று கூறுவது பொய்யாகும். இது அப்படி போய்ச¢ சேர்வது உண்மையானால், பிதுர்கள் தங்கள் பிள்ளைகள் மூலம் வாங்கப் பிரியப்படுவார்களே அன்றி, பிறர் மூலம் வாங்கப் பிரியப்பட மாட்டார்கள்.
தென்புலத்தார் என்பதற்கு ஏன் பிதுர்கள் என்று பொருள் கூற வேண்டும்? வள்ளுவர் அவ்வாறு கூறினாரா? தென் – அழகிய / குலத்தார் – அறிஞர்கள் அதாவது ஞானிகள் என்றே பொருள்படுகிறது. தென்புலத்தார் கடன் ஆற்ற வேண்டும் என்றால், ஞானிகள் விட்டுப்போன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதே பொருளாகும். மனுநீதி கண்ட சோழனைப் பற்றிக் கூறும் பொழுது, இப்பொழுது இருக்கும் மனுஸ்மிருதியை நடத்திக் காட்டியமைக்காகவே மனுநீதி கண்ட சோழன் என்ற பெயர் வந்தது என்று பொருள்படும்படியே சேக்கிழார் கூறினார் என்று கூறினார்கள். அவர் அப்பொருட்படி கூறியிருப்பாராயின். அவர் மனுஸ்மிருதியைப் படிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கன்றுக் குட்டியைக் கொன்றதற்காக, கொன்ற மனிதனையே கொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டு இருப்பதை எடுத¢துக¢காட்டினால், மனுஸ்மிருதியில் இதுவரையில் நாங்கள் பார்த்துள்ள கொடுமைகளோடு இதனையும் சேர்த்துச் சொல்கிறோம். எந்த நூலானாலும் குற்றம் இருக்குமானால், அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. நமக்கு கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைக் கொண்டு ஆராய்வோம் கடவுளே எழுதினார் என்று கூறப்படும் நூலினும் பிழை இருக்குமானால், அதனையும் தள்ளவேண்டியதுதான்” எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.
மேலும், பிதுர்க்கடன் செய்தல் குறித்தும் தனது கருத¢துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார். ‘தந்தை தாய் இறந்து போனால், பிணத்தைச் சுட்டுவிட்டு ஏழைகளுக்குச் சாப்பாடு போடலாம், சபிண்டி, திதி முதலிய செய்ய வேண்டும் என்று சொன்னால், அய¢யா அது எங்கள் அப்பனுக்குப் போகாது, நாங்கள் இப்பொழுது விழித்துக் கொண்டோம், இனி ஏமாற்ற முடியாது என்று கூறி விடுங்கள்’ என அறிவுறுத்துகிறார்.
வ.உ.சி அவர்கள் காலம் கடந்து சிந்தித்தவர். பெண்கள் குறித்த அவரது பார்வை இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றன. மனித குல வரலாற்றில் ஆண்-,- பெண்ணிற்கு இடையே தோன்றிய பாகுபாடுதான் முதன்மையான பிரிவினையாகும். புராதனப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர்த்து. ஏனைய சமுதாயப் படிநிலைகளில் பெண்களுக்கான உரிமைகளும், அவர்களது தலைமைப் பாத்திரமும் மறுக்கப்பட்டே வந்துள்ளது. ‘குடும்பத்தில் ஆண் பூர்ஷ்வா வர்க்கமாகவும், பெண் பாட்டாளி வர்க்கமாகவும் இருக்கின்றனர்’ என்று ஏங்கெல்சு இது பற்றிக் குறிப்பிடுகிறார்.
எனவே, இத்தகைய பாகுபாட்டைக் களைவதற்காகப் பெண்களுக்கு உரிய கல்வியை அளிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும்,
அவ்வகையில் வ.உ.சி அவர்களது முன்னெடுப்புகள் போற்றத்தக்கதாக உள்ளன.