அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (298)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஆகஸ்ட் 16-31 2022

கனடா நாட்டின் உயரிய உலக விருது!
கி.வீரமணி


6.12.1999 அன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடைந்தேன். அங்கு, பெரியார் பெருந்தொண்டர்கள் முருகு சீனிவாசன், சு.தெ.மூர்த்தி மற்றும் சோ.வி.தமிழ்மறையான் முத்துக்குமார், ராமன், லட்சுமணன், திருப்பதி ந.மாறன், கவிதா மாறன் மற்றும் தோழர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அதையடுத்து நடந்த விருந்து நிகழ்ச்சியின்-போது, அத்திவெட்டி ஜோதி மற்றும் சு.தெ.மூர்த்தியின் சார்பில் இ.வி.சிங்கன் சால்வை அணிவித்தனர். உரத்தநாடு தமிழமுதன், இரா.இராஜா ராஜகுமார், ராமன், லக்குமணன், அ.இனியதென்றல் ‘கடிகாரம்’ அதியமான், குடியரசி ஆகியோர் புத்தகங்களும், இ.வி.சிங்கன் ‘விடுதலை’ மலருக்கும், முருகேசன், செல்வம், புலவஞ்சி நக்கீரன், திராவிடமணி ஆகியோர் நன்கொடைகள் வழங்கினர்.

8.12.1999 இரவு மலேசியாவின் பிரிக்ஃபீல்ட்ஸ் ஜாலான் அப்துல் சமட் பெண்கள் சாரணியர் மண்டபத்¢தில் மலேசிய திராவிடர் கழக முன்னாள் தேசியத் துணைத் தலைவர் பி.எஸ்.மணியம் _ கிளியம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகன் சிவசங்கரனுக்கும், கிருஷ்ணன் _ சின்னம்மாள் ஆகியோரின் மகள் கோமளாவுக்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்த உறுதிமொழியைப் பின்பற்றிக் கூறச் செய்து திருமணத்தை நடத்தி வைத்தேன். இந்த மணவிழாவில் பங்கேற்கவந்த டத்தோ சுப்ராவிற்கு சால்வை போர்த்தி சிறப்பு செய்தேன். அதன் பின் சிங்கப்பூர் சென்றேன். 19.12.1999 அன்று சிங்கப்பூரில் நடந்த அரங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை-யாற்றினேன்.
ராஜகோபாலாச்சாரியாருக்குப் பிறகு அவருடைய கட்சி கிடையாது. அவருடைய சமுதாய உணர்வுகள் பல பேரிடம் இருக்கும். ஆனால், இந்த அமைப்பைப் பொறுத்தவரையில் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.


மனித நேயத்தைத் தான் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் கொண்டுள்ளது. மொழிப் பற்று, ஜாதி, மதம், கடவுள் இவையெல்லாம் எமக்குக் கிடையாது. அதற்குப் பதிலாக எமக்கு மனித நேயம்தான் மிக முக்கியம். மனிதர்கள் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்றார். ஏன் ஜாதி, மதம், கடவுள், மொழிப் பற்று கூடாது என்று சொன்னால், இவை மனிதனைப் பிரிக்கின்றன. மனிதனை வேற்றுமைப்படுத்துகின்றன. மனிதர்களில் ஒருவர் எஜமானர்; இன்னொருவர் அடிமை என்றும், இன்னொருவர் தகுதி உள்ளவர்; மற்றொருவர் தகுதி அற்றவர் என்றும் ஆக்குகிறது. ஆண், பெண் பேதம் இவை எல்லாம் கூடாது என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துக்கு எவ்வளவு செல்வாக்கு வந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அறிவால் மனிதர்கள் முன்னேற முடியும். நாடுகள் முன்னேற முடியும். அந்த அறிவு மக்களை ஒன்றுபடுத்த வேண்டுமே தவிர, மக்களைப் பிரிக்கக்கூடாது என்பதற்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு. இது எதிர்காலத்தில் உலகளாவிய நிலைக்குப் போகும். அப்படி இருக்கின்ற அறிவு, சுதந்திரஅறிவாக இருக்க வேண்டும். அறிவுக்கு நாம் நிறைய தடை போட்டுத் தடை போட்டு, சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பது கைவிலங்கைவிட, கால் விலங்கைவிட ஆபத்தானது. மூளைக்குப் போடுகின்ற விலங்கு. இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னார். அந்த மூளை விலங்கை அகற்ற வேண்டும். அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம். தமிழர்கள் பழம் பெருமைகளையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அறிவுத் துறையிலே மிகப் பெரிய மாற்றங்கள் வந்துவிட்டன. இதைப் பற்றித்தான் இங்கு தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். முதலில் வந்தது விவசாயப் புரட்சி அலை. இரண்டாவது வந்த அலை தொழில் புரட்சி அலை. மூன்றாவது இப்பொழுது வந்திருக்கக் கூடிய அலை மின்னணுவியல் புரட்சி அலை. இதை ஒட்டி மிகப் பெரிய கருவிகளாக இருந்தவையெல்லாம் இப்பொழுது மிகச் சிறியவையாக வந்தாகிவிட்டன.


“நீ சுதந்திர மனிதனாக இரு; உன்னுடைய அறிவுக்குத் தடை போடாதே; நான் சொல்வதையும் கேட்காதே! இன்னொருவர் சொல்லுவதையும் கேட்காதே! உங்களுடைய அறிவு என்ன சொல்லுகின்றது என்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் தன்னம்பிக்கை-யோடு வாழுங்கள்.’’ இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். அதேபோல ஆண் பெண் என்ற பேதமெல்லாம் காட்டாதீர்கள் என்றும் சொன்னார்.
மனிதன் சமுதாயத்திலே இருக்கக்கூடிய ஓர் அங்கம். மனிதன் அடுத்தவர்களுக்கு உதவி பண்ண வேண்டும். இதயத்தால் சிந்திக்க வேண்டும். சாதாரண மூளையால் சிந்திக்கின்ற மனிதர்களைவிட இதயத்தால் யார் சிந்திக்-கின்றார்களோ அவர்களே மனிதர்களில் மிக உயர்ந்தவர்கள். ஏனென்றால் இதயமும் வேலை செய்ய வேண்டும்; மூளையும் வேலை செய்ய வேண்டும்.

வெறும் மூளையால் மட்டுமே சிந்திப்பவன். வெறும் கெட்டிக்காரனாக இருப்பானே தவிர, அவன் மனிதநேயம் உள்ளவனாக இருக்கவே முடியாது. தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம் _ மனிதநேயம், அன்பு. ஒருவருக்கு ஒருவர் பேதம் இல்லாமல் இருக்க வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்படி உதவ முடியவில்லையா?
அடுத்தவரைத் தூக்கிவிட வேண்டும் என்று நினைப்பதை விட்டுவிட்டு, அடுத்தவருடைய காலைப் பிடித்து இழுக்காமல் இருந்தால் நல்லது என்ற உணர்வுகளைப் பெற வேண்டும்.
இன்றைக்கு இந்தியாவில் நேர் எதிரான தத்துவங்களைக் கொண்ட இரண்டு இயக்கங்கள் உள்ளன. 1925லே சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார் அவர்கள். இதற்கு நேர் எதிரானது சமஸ்கிருதக் கலாச்சாரத்தைக் கொண்ட, ஆரியத்தை வலியுறுத்துகின்ற, மனித நேயத்திற்கு விரோதமான, மனிதர்களில் எல்லோரும் சமம் இல்லை, மனிதர்களுக்குள் பேதம் உண்டு, ஆண் பெண் சமமாக இருக்க முடியாது என்று கூறுகிற, இன்னும் கேட்டால் கணவன் இறந்தவுடன் மனைவியை உயிரோடு எரிக்க வேண்டும் என்பன போன்ற தத்துவங்களைக் கொண்டதுதான் இந்து மதம். அதன் அடிப்படைத் தத்துவம்தான் புராதனக் கலாச்சாரம்.

இந்தக் கலாச்சாரத்தைக் காப்பாற்ற இந்தியாவிலே வடநாட்டிலே 1925லே தொடங்கப்பட்ட இயக்கத்திற்குப் பெயர்தான் ஆர்.எஸ்.எஸ். ‘ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய தத்துவமும், தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவமும் நேர் எதிரானது.
ஒன்று மனுதர்மம்; மற்றொன்று மனித நேய தர்மம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆட்சிக்கே வந்துவிட்டது. நாங்கள் அதைத் தடுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.
பெரியார் கொள்கை என்பது ஒரு சூப்பர் மார்க்கெட் மாதிரி. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகிறவர்கள் எல்லா சாமான்களையும் வாங்குகிறார்கள் என்பது அதற்கு அர்த்தமல்ல. எல்லா சாமான்களையும் நீங்கள் வாங்கினால்-தான் உண்டு. இந்தச் சாமான்களை மட்டும் வாங்கினால் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று சொல்லுவது கிடையாது. யார் யாருக்கு எது எது தேவையோ அதுபோல, சிங்கன் அவர்களுக்குத் தேவையான செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தார். அதுமாதிரி உலகளாவிய நிலையிலே தந்தை பெரியார் கொள்கைமீது பற்றுக் கொண்டவர்-கள் ஏராளமாக இருக்கிறார்கள்.


கனாடாவில் உள்ள மகளிர் எல்லாம் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு இந்த மாதிரி சிந்தித்தவர்களே கிடையாது என்று சொன்னார்கள். மகளிருக்காகப் போராடியதும், தந்தை பெரியார் அவர்களுடைய சமத்துவ உணர்வும் அவர்களைப் பெரிதும் ஈர்த்தது.
பெரியாரியலை வாழ்வியலாகக் கொள்ளுங்கள். அது உங்களை வளர்க்கும். உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சமுதாய வாழ்க்கையாக இருந்தாலும் சரி, ஒருவர் பெரியாரியலைத் தன்னுடைய வாழ்வியலாகப் பின்பற்றினால் அவர் தாழ முடியாது; வளர முடியும். அவர் வீழ முடியாது; முன்னேற முடியும்.
எனவே, முன்னேற்றமுள்ள ஒரு சமுதாயத்தை -_ உலகத்தோடு போட்டி போடக் கூடிய ஒரு சமுதாயத்தை _ 21ஆம் நூற்றாண்டிலே வரக்கூடிய ஒரு சமுதாயத்தை நாம் காண வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் பெரியாரியலைப் பின்பற்றக் கூடியவர்களாக மாற வேண்டும் என்று கேட்டு இதையே வேண்டுகோளாக வைத்து _ இவ்வளவு அருமையான நேரத்தை எனக்காகக் கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
26.12.1999 அன்று காலை 10:00 மணியளவில் புதுக்கோட்டை எம்.கே.ஆர் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் சுப.குமரவேல் _ கும.மலையரசி ஆகியோரின் செல்வன் ம.கும.வைகறைதாசன், தேவக்கோட்டை மு.சுந்தரமூர்த்தி_தவமணி ஆகியோரின் செல்வி மு.சு.கண்மணி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை நடத்திவைத்தேன்.


நிகழ்வில் நான் எழுதிய, ‘வாழ்வியல் அறிவோம்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. நூலினை புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் மு.அறிவொளி வெளியிட முதல் பிரதியை அ.இ.அ.தி.மு.க பிரமுகர் கே.பி.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். பின்னர் மணவிழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மு.சு.கண்மணி வரவேற்று உரையாற்றினார். மணமக்களை அறிமுகப்படுத்தி பி.இர.மாதவன் உரை யாற்றினார். நிறைவாக, இணையேற்பு உறுதிமொழி கூறச் செய்து சிறப்புரை யாற்றினேன்.

1.1.2000 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் புத்தாயிரமாவது ஆண்டு நிகழ்ச்சி விருந்துடன், கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் _ வேலு பிரபாகரன், இயக்குநர் ஜெயதேவி, தமிழ்நாடு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், மக்கள் நல உரிமைக் கழக பொதுச் செயலாளர் பண்ருட்டி ச.இராமச்சந்திரன், ‘இனமுரசு’ சத்யராஜ், அ.தி.மு.க. அவைத் தலைவர் டாக்டர் நாவலர் ஆகியோர் கலந்துகொள்ள, நான் நிகழ்விற்கு தலைமை வகித்தேன். இந்த நிகழ்வில் நாவலர் அவர்கள் ஆற்றிய உரை அவரது மரண சாசனமாக அமைந்தது

.
கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெற்றி வேங்கை வேலு.பிரபாகரன் ஆகியோர் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்கள்.
அனைவரும் உரையாற்றிய பின் இறுதியாக இரவு 12:30 மணிக்கு நான் நிறைவுரை யாற்றினேன்.
தஞ்சை வல்லம் பெரியார்- மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ‘பெரியார் புத்தாயிரக் குடில்’ திறப்பு விழா 22-1-2000 அன்று முற்பகல் 11:00 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. என் தலைமையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கருப்பையா மூப்பனார் அவர்கள் பெரியார் புத்தாயிரக் குடிலை திறந்து வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆர்.நல்லகண்ணு, ராஷ்ட்ரீய ஜனதா தள மாநிலத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில், பெரியார்- மணியம்மை கல்வி அறக் கட்டளைக்காக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ரூபாய் அய்ந்து இலட்சத்தினை நன்கொடையாக அளிப்பதாக அதன் தலைவர் ஜி.கே.மூப்பனார், தமிழக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன் அவர்கள் மூலமாக அறிவித்தார்.

மூப்பனார் அவர்கள் உரையில், “நான் நினைக்கின்றேன். வள்ளுவர் குறளில் சொல்லியிருக்கின்றார்,
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ் சொல்”
இது வீரமணி அவர்களுக்கே ணீதீsஷீறீutமீறீஹ் பொருந்தும். அந்த மாதிரி அய்யா அவர்களுக்கு அவர் உதவியாற்றுகின்றார்.
அதோடு அவரவர் எச்சத்தால் காணப்படும் என்று சொல்லுவார்கள். அய்யா அவர்களுக்குப் பிள்ளை இல்லை. அய்யா அவர்களுக்கு வீரமணி அவர்கள்தான் பிள்ளை. வேறு யாரும் பிள்ளை இல்லை.


சமுதாயத்திற்கு இன்றைய தினம் எது தேவையோ எதைச் செய்தால் சமுதாயம் பயன்படுமோ அய்யா அவர்கள் சொன்ன கருத்துகளுக்குப் பலன் கிடைக்குமோ – அந்தப் பணியை வீரமணி அவர்கள் செய்ய முன்வந்து இந்தக் கல்லூரிகளையும், பல்வேறு சூழ்நிலைகளையும் ஏற்படுத்தியிருப்பது என்பது மிகுந்த பாராட்டுக்கும். மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்றாகும். அதற்காக மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அடைகின்றேன்’’ என்று குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் நான்காம் ஆண்டு விழா இரண்டு நாள்கள் நடைபெற்றது. இரண்டு நாள்களின் நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்புரையாற்றினேன். 25.1.2000 மாலை 6:00 மணிக்கு சென்னை இராசா அண்ணாமலை மன்றத்தில் இயல்_-நாடக விழாவாக நடைபெற்றது. ச.இராசரத்தினம் தலைமை வகித்தார். நடிகமணி டி.வி.நாராயணசாமி, மயிலை நா.கிருட்டினன், இயக்குநர் வேலு.பிரபாகரன், ரேடியம். எஸ்.பகீரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவிஞர் செ.வை.ர.சிகாமணி வரவேற்புரையாற்ற, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் படத்தினை இயக்குநர் ஜெயதேவி அவர்களும், டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் படத்தினை நானும், திறந்து வைத்தோம். விழாவில், மருத்துவர் எம்.எஸ்.இராமச்சந்திரா (பண்டுவப் புலமை), மருத்துவர் ச.ஞானசவுந்தரி (மகப்பேறு மருத்துவ வல்லுநர்), மருத்துவர் சோம.இளங்கோவன் (வட அமெரிக்க திராவிடர் கழகம், சிகாகோ), எழுத்தாளர் பவா சமத்துவன் (சிறுகதைகள், நாடகங்கள்) ஆகியோர் பெரியார் விருது வழங்கப்பட்டு பாராட்டப்-பட்டனர். வேலு.பிரபாகரன் மேற்பார்வையில் இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் வழங்கிய ‘மசக்கை மாப்பிள்ளை’ மற்றும் ‘மனிதனை நினை’ ஆகிய நாடகங்கள் நடத்தப்பட்டன. பேரா.தவமணி நன்றி கூறினார்.

பெரியார் முத்தமிழ் மன்றத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இசை விழா 26.1.2000 மாலை சென்னை பெரியார் திடலில் வழக்குரைஞர் கோ.சாமிதுரை தலைமையில் நடைபெற்றது. பொறிஞர் சோ.ஞானசுந்தரம், பேரா.ஞான. அய்யாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை யாற்றினார். உடுமலை நாராயணகவி அவர்களின் படத்தினை பாவலர் அ.மறைமலையான் அவர்களும், பொறிஞர்
ப.தண்டபாணி அவர்களின் படத்தினை மருத்துவர். பஞ்சாட்சரம் அவர்களும், திறந்துவைத்து உரையாற்றினார்கள். விழாவில் வீரா.முனிசாமி (பர்மா சுயமரியாதை இயக்கத் தலைவர்), ‘திராவிடமணி’ நல்லதம்பி (மலேசிய தி.க.) முனைவர் கரு.நாகராசன் (பகுத்தறிவு படைப்பிலக்கியம்) வான அறிவியலார் சற்குருமூர்த்தி (பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மய்யம்) ‘பல்கலைச் செல்வன்’ தவில் பாஸ்கர் ஆகியோர் ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டு பாராட்டப்-பட்டனர். நாயன இசை விருந்தும், கலைக் கோட்டம் குழுவினரின் நாட்டுப்புறக் கலைகள் (மதி.அன்பரசன்) கலை விருந்தும் வழங்கப்-பட்டன. எம்.கே. காளத்தி நன்றி கூறினார். இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற அமைப்பாளர் பேரா.அ.இறையன் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்.

தஞ்சைக்கருகில் உள்ள வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கிற்கு, கனடா நாட்டின் உயரிய உலக விருது 3.2.2000 அன்று வழங்கப்பட்டது.
கனடா அரசு, வளரும் நாடுகளில் உள்ள பல கல்வி நிறுவனங்களைத் தங்கள் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் _ இவைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அந்தந்த நாட்டின் வறுமை ஒழிப்பு, பரவலான கல்வி வளர்ச்சி, இரு நாடுகளுக்கும் பரஸ்பர அனுபவங்களை ஏற்றுப் பயன் பெறுதல் முதலிய நோக்கத்தோடு, ‘CIDA’ (சிடா) Canadian International Development Agency) என்ற ஓர் அமைப்பினை உருவாக்கி, அதன்மூலம் பல உலக நாடுகளில், கனடாவின் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் இணைப்புப் பங்குதாரர்களாக்கி, அதனை ஒழுங்குபடுத்திட (AUCC) Association of Universities of Canada, (ACCC) Association of Community Colleges, இவை போன்ற சர்வதேச தொடர்பு நிறுவனங்களையும் பணித்துள்ளது.

சர்வதேச சாதனை விருது!
கடந்த 20 ஆண்டுகளாக இப்படிப்பட்ட திட்டங்களை கனடா அரசு நடைமுறைப்-படுத்தி வந்த போதிலும், முதல்முறையாக இந்த 2000இல்தான் இதில் யார் மிகவும் சிறப்பாகச் சாதனை புரிகிறார்களோ, அவர்களுக்கு சர்வதேச சாதனை விருது (Award of Excellence) தருவது என்று கனடா நாட்டு சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சு முடிவு செய்து நடைமுறைப் படுத்தியது.
கனடா நாட்டின் மாகாணங்களில் ஒன்றான நியூ ஃபவுண்ட் லாண்ட் _ லாப்ரடார் மாநிலத்தில் உள்ள “காலேஜ் ஆஃப் நார்த் அட்லாண்டிக் கல்லூரி’’ (College of North Atlantic) இது அம்மாநிலத்தில் உள்ள 21 கல்லூரிகளை இணைத்து நடத்தப் பெறும் பல்லாயிரக் கணக்கான மாணவ _ மாணவிகள் படிக்கும் தொழிற்கல்லூரி _ அம்மாநிலத் தலைநகர் செயின்ட் ஜான் நகரில் உள்ளது.
இக்கல்லூரி இந்தியாவில் உள்ள வல்லம் – பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கோடு 3 ஆண்டு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. 1995ஆம் ஆண்டில் மூன்று ஆண்டுகள் இரு கல்லூரிகளும் இந்த ஒப்பந்தப்படி பல புதிய துறைகளில் பணிபுரிந்து ஒன்றுக்கொன்று பயன்பெற்றன. 1998இல் இது முடிவடைந்தது.

ஆசிரியர்கள், மாணவிகள் பரிமாற்றம்!
கனடாவின் நார்த் அட்லாண்டிக் கல்லூரியிலிருந்து 7 கனடா நாட்டுப் பேராசிரியர்கள், மூன்று மாணவர்கள் ஆகியோர் வல்லம் கல்லூரிக்கு வந்ததோடு, தமிழ்நாட்டின் பல தொழிற்சாலைகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கும் பெரியார் பாலிடெக்னிக் மூலம் சென்று பல தகவல்களை அறிந்தனர்.
அதுபோல அந்த 3 ஆண்டு காலத்தில், பெரியார் பாலிடெக்னிக்கிலிருந்து ஆண்டுக்கு 2, 3 பேர் வீதம் இருபாலரும் மொத்தம் 9 பேர் கனடா நாட்டிற்குச் சென்று தக்க பயிற்சி பெற்று வந்தனர். நமது நாட்டில் நடத்தப்பெறும் அத்திட்டத்தின் வெற்றிக்கு அப்பயிற்சி பெரிதும் அடிகோலியது.

நிபுணர் குழு ஆய்வு!

3 ஆண்டுகள் முடிந்து, அதன் பயன், விளைவுகள் எப்படி இரு நாடுகளுக்கும் மிகவும் சிறப்பாக அமைந்தது என்பதை ‘CIDA’ அமைப்பு, பல்துறை நிபுணர்களைக் கொண்ட குழுவினை நியமித்து, எல்லா கல்லூரிகளின் பணிகளில் சிறப்பு விருதுக்கு உரியவை எவை என்பதை ஆய்வு செய்து தேர்வு செய்தது.
நிபுணர் குழு இறுதி ஆய்வு செய்து, 6 நிறுவனங்களை (3 பல்கலைக்கழகங்கள், 3 கல்லூரிகள் என்று) தேர்வு செய்து அறிவித்தனர். அந்த 3 கல்லூரித் தகுதிகள் ஆசியா (இந்தியா), ஆப்பிரிக்கா (ஜோர்டன்), லத்தீன் அமெரிக்கா (நிகரகுவா) ஆகிய மூன்று நாட்டுக் கல்லூரிகளுக்குக் கிடைத்தன.
ஆசியாவில் சிறப்புத் தகுதி பெற்ற வல்லம் கல்லூரி
ஆசியாவில் ஒரே ஒரு கல்லூரி சர்வதேச அளவில் சிறப்புத் தகுதி பெற்றது என்ற பெருமை நமது வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கிற்குக் கிடைத்தது.
அந்த சர்வதேச விருது வழங்கு விழா, கனடா நாட்டின் தலைநகரமான ஒட்டாவோ (ளிttணீஷ்ணீ) நகரில் உள்ள பிரபல ஓட்டல் ‘சாத்தோலோரியர்’’ மண்டபத்தில் கனடா நாட்டு பன்னாட்டு ஒத்துழைப்பு அமைச்சகம், சிமிஞிகி, கிஹிசிசி, கிசிசிசி ஆகிய நான்கு அமைப்புகளும் சேர்ந்து பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை நடத்தின.

கனடா தலைநகரில் சிறப்பான விழா
அது 6 நாடுகளின் சிறப்பினை உணர்ந்து, ஆறு நாடுகளின் தேசியக் கொடிகளும் மேடையை அலங்கரித்தன. தேசிய கீதம் மற்றும் இணைப்புரைக்குப் பிறகு நிகழ்ச்சிகள் தொடங்கின. அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த அரங்கில் சுமார் 10, 12 வட்ட மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டு, எதிரில் மேடை வண்ணமயமாக அமைக்கப்பட்டிருந்தது.
சர்வதேச கூட்டுறவு அமைச்சர் மரியா முன்னா (அம்மையார்), CIDA, AUCC, ACCC-யின் தலைவர்கள், கனடாவிற்கான இந்தியன் அய்க் கமிஷனர் (தூதர்) திரு.ரஜினிகாந்த் வர்மா ஆகியோருடன் பெரியார் பாலிடெக்னிக் தலைவரான நான், நார்த் அட்லாண்டிக் கல்லூரியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எட்னா டர்ப்பின் (அம்மையார்) மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் இருவர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற கல்லூரியாளர்களுக்குக் கிட்டாத பெருமை நமக்குக் கிட்டியது.
முதலில் சர்வதேச அமைச்சர் மரியா முன்னா, வந்த விருந்தினர்களை வரவேற்றும், சிறப்பு விருது பெற்ற அமைப்புகளைப் பாராட்டியும், இத்திட்டத்தினால் கனடா அரசு உலகளாவிய நிலையில் ஏற்படுத்த விரும்பும் பல மாறுதல்கள் பற்றியும் சுருக்கமாக, ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய இரு மொழிகளில் (கனடா 2 மொழிக் கொள்கை கொண்ட நாடு என்பதால்) உரையாற்றினார்.

அடுத்து கனடா பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்திக் கொண்ட இணைப்புக் கல்லூரி-களுடன் சிறப்பு விருதுக்குரிய நான்கு கல்லூரித் தலைவர்களை மேடையில் அழைத்து, விருது வழங்கப்பட்டது.
மேடைக்கு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கின் தலைவரான என்னையும், நார்த் அட்லாண்டிக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் எட்னா டர்ப்பின் அம்மையாரையும் அழைத்தார்கள். பலத்த கைத்தட்டல் இடையே இருவரும் மேடைக்குச் சென்றோம். முதலில் கனடா நாட்டு நார்த் அட்லாண்டிக் கல்லூரிக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் எட்னா டர்ப்பினுக்கு விருதினை அமைச்சர் மரியா முன்னா வழங்கினார்.

அதற்கடுத்து பெரியார்-_மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத் தலைவரான என்னிடம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கிற்கான விருதினை வழங்கினார். மண்டபத்தில் பலத்த கரவொலிக்கிடையே அமைச்சர் மரியா முன்னாவிற்கு நன்றி தெரிவித்து விருதினை நான் பெற்று மேடையில் நின்றேன். எனது துணைவியார் திருமதி. மோகனா வீரமணி அவர்களையும், அடுத்து பேராசிரியை பர்வீன் அவர்களையும் கூட்டத்தினர்க்கு அறிமுகப்-படுத்தினார்.

எட்னா டர்ப்பின் அவர்களது இரண்டரை நிமிட உரையில், பெரியார் கல்லூரியின் சிறப்பு ஆற்றல், தகுதி, திட்டத்தை அமல்படுத்திய பாங்கு, இவற்றைப்பற்றியெல்லாம் குறிப்பிட்டு விட்டு, இவற்றை இவ்வளவு செம்மையாக நடத்தி வெற்றி பெறுவதற்கு மூலகாரணமாக அமைந்தது அதன் தலைவர் திரு.வீரமணியின் தலைமைத்துவம்தான் என்று பாராட்டினார்.
நான், கனடா நாட்டு அரசுக்கும், ‘சிடா’வுக்கும், ACCC அமைப்புக்கும், நார்த் அட்லாண்டிக் கல்லூரிக்கும் நன்றி கூறிவிட்டு, குழுவின் கூட்டு முயற்சியின் (Team Spirit) வெற்றியே இது என்று குறிப்பிட்டதோடு, இதற்கெல்லாம் மூலகாரணம் தந்தை பெரியார் என்பதையும், 1925ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய சுயமரியாதை இயக்கமும், அதன் மனிதநேயக் கொள்கைகளும்தான் இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது என்பதையும் விளக்கி (ஆங்கிலத்தில்) இரண்டரை மணித் துளிகள் உரையாற்றினேன். ஜோர்டன், நிகரகுவா நாடுகளுக்குரிய சிறப்பு விருதும் அவர்களின் நன்றி உரையும் தொடர்ந்தன.ஸீ
(நினைவுகள் நீளும்…)