சிறுகதை : துளசி

மார்ச் 16-31,2022

பிரியா கிருஷ்ணன்

பாலன் டீக்கடை ஊருக்கு வெளியே எல்லையில் அமைந்திருந்தது. வழக்கமாக இந்நேரம் மில்லிலிருந்து ஆள்களை ஏற்றி வரும் வண்டி வந்திருக்க வேண்டும். 30லிருந்து 40 பேர் பரபரப்பாக இறங்கி, டீயும் பிஸ்கட்டுமாய் இருந்திருக்க வேண்டிய நேரம். ஆனால் இன்று, இதுவரை அதுமாதிரி எதுவும் நடக்கவில்லை. ஸ்டவ்வின் ஃப்ளேமை குறைத்தான். பால் கொதித்துப் போயிருந்தது.

அடுத்த 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று அவனது கடையை வேகமாகக் கடந்து போனது. 100 மீட்டர் இடைவெளியில் தினசரி வருகிற மில் பஸ் வந்து நின்றது.

பாலன் தயாரானான்…-

மக்கள் இறங்கி வந்தனர். டீயும் பிஸ்கட்டு-மாய் ஒவ்வொருவரும் கேட்டு வாங்கிக் கொண்டனர். மில்லில் ஆறுமுகம் இறந்துபோன செய்தியை அவர்கள் மாற்றி மாற்றிப் பேசிக்கொள்ள ஆம்புலன்ஸில் சென்றது ஆறுமுகம் உடல் என்பது பாலனுக்குப் புரிந்து போனது.

கூட்டம் கலைந்தது.

பாலன் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

‘பாலா பாலா’ என்று உரக்கக் கூறியபடி லோகு பெரியவர் அவனைத் தேடி வந்தார்.

பாலனுக்கு என்று உள்ள ஒரே ஒரு சொந்தம்தான் பெரியவர்.

“கடையைக் கட்டி வெச்சுட்டு வாலே’’ என்று பாலனை அவசரப்படுத்தினார்.

“எங்கே?” என பாலன் புரியாமல் திருப்பிக் கேட்டான்.

என்னலே இப்படி கேட்குறே விஷயம் தெரியாதா தொளசியோட புருஷன் எறந்துட்டானாமே ஒரு நடை நாய்க்கர் வீடு வரை போயிட்டு வருவோம்லே”

லோகு பெரியவர் விவரம் கூற ஆறுமுகம் எறந்துட்டான் என அத்தனை பேரும்  அறிவித்தபோது அதிர்ச்சியுறாத பாலனின் மனது, தொளசியோட புருஷன்” என்று பெரியவர் கூறியதும் திடுக்குற்றுக் கலங்கினான்;  அவளது முகமும் நினைவில் வந்து போனது. எப்படி அதை மறந்தோம்?

பெரியவர் மீண்டும் அவனை உசுப்பிவிட, “நாம் அங்கே போனா சரியா வருமா?” பாலன் தயங்கினான்.

“எழவு வீட்டில் பேதம் இல்லடா” என்று அழுத்தமாகக் கூறியதோடு நில்லாமல் அவரே கடையை அடைக்கும் வேலையைப் பார்த்தார். பாலனும் தயாரானான்.

நாய்க்கர் வீடு ஊரின் நடுவே அமைந்து இருந்தது. ஊர் கூட்டம் அதற்குள் வந்து சேர்ந்திருக்க, தற்காலிக பந்தலும், வாசலில் பெஞ்சுகளும் போடப்பட்டிருந்தன. ஆறுமுகம் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தான். பெண்களின் அழுகை ஓலம் துவங்கியிருந்தது.

மரண வீட்டின் அனைத்து அம்சங்களும் அமைந்து போயிருந்த வாசலில் நாய்க்கர் சோகமாக நின்று கொண்டிருந்தார்.

பெரியவரும் பாலனும் கூடத்தில் ஆறுமுகத்தைப் பார்த்து வணங்கிவிட்டு நாய்க்கரின் கைகளைப் பிடித்து ஆறுதல் வழங்க, பாலன் தயங்கித்தான் நின்றான். நாய்க்கர் அவர்களை உட்காரச் சொல்ல, சென்றமர்ந்தனர்.

துளசியின் தம்பி கார்த்திக் வந்திருந்த அனைவருக்கும் காபி, டீ வழங்கிக் கொண்டே, பெரியவர் அருகே அவன் வரும்போது, பாலன் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தான். பெரியவர் அவனை நிறுத்தி,

“எப்படிலே இப்படி திடீர்னு? என மரண விவரம் கேட்க….

“நைட் ஷிப்ட்ல நெஞ்சடைச்சு மயங்கி விழுந்திருக்காரு. ஆஸ்பத்திரி எடுத்துட்டு போற வழியிலேயே மூச்சு நின்னுடுச்சு’’ என்று கூறி முடிக்கும் முன் அழுகை வெடித்தது.

கார்த்திக்கின் பொறுமையான _ அமைதியான அந்தப் பதிலை பாலன் எதிர்பார்க்கவில்லை.

கார்த்திக் இடம் விட்டு அகன்றதும்,

“சாராயம் குடிக்கறது அளவா இருக்கணும். நேரங்காலமே இல்லாம அதுவே கதின்னு கெடந்தா இப்படித்தான். பாவம் தொளசி..!”

அருகிலிருந்தவர்கள் அங்கலாய்த்தனர். அது, பாலனை வெகுவாய்த் தாக்கியது.

அனைவரும் உண்மையைப் பேசினர்.

“துளசி…!’’ மனதினுள் ஒருமுறை அழுத்தமாய் உச்சரித்துப் பார்த்தான்.

நினைவுகள் பின் நோக்கி நகரத் தொடங்கியது.

ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே ஊரில் அனாதையாய் வந்து நின்றவன்தான் பாலன். கேரளாவிலிருந்து ஏதோ வேலை நிமித்தம் பழநி வந்து சில காலம் டீக்கடை, அது இது என்று காலம் தள்ளிவிட்டு தனியே கடை போடும் முயற்சியில் இந்த ஊர் வந்து சேர்ந்ததும் முதன் முதலாக அவன் சென்று பார்த்தது லோகு பெரியவரைத்தான்.

காரண காரியங்கள் தேவைப்படவில்லை. பாலனைப் பார்த்ததும் மிகவும் பிடித்துப்போய் கடை ஏற்பாட்டைச் செய்து கொடுத்தார். அவனுக்கு சிறிதே எனினும் மிக மிக அழகாய் அமைந்துபோனது டீக்கடை. அவன் எதிர்பார்த்தே இருக்காத ஒரு வாழ்க்கை. காரணம், பெரியவர். அவரை பெரிதும்  மதித்தான்.

கடை துவங்கிய நாளிலிருந்து நாயக்கரின் வீட்டிலிருந்துதான் இரண்டு நேரமும் அவனுக்கு பால் வந்தது.

கொண்டு வருபவள் துளசி. ஆரம்ப காலத்தில் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் அமைதி காத்தவள். நாளாக நாளாக அவனின் மலையாளம் கலந்த தமிழை கிண்டலடிக்கவும் திருத்தவும் துவங்கினாள்.

பாலனுக்கு மலையாளம்தான் தாய்மொழி. கேரளா கோட்டயம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து பிழைப்புத் தேடி தமிழ்நாட்டுக்கு வந்து இதோ இந்த ஊரில் வேலைகள் பழகினான். மரியாதைகள் பழகினான். இந்த மொழி மட்டும் கொஞ்சம் திணறலாகவே இருந்தது. நிறைய உளறுவான். சிரித்தார்கள். துளசி மட்டுமே அதை ரசித்து வார்த்தைகளைத் திருத்தினாள்.

தினசரி -_ நான்கு வார்த்தைகளாவது சொல்லிக் கொடுத்தாள். அவனும் ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டான்; பயிற்சி எடுத்தான். கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சில் மாற்றம் காண்பித்தான்.

தான் கொண்டு வரும் கறந்த பாலின் குணம் கொண்டவள் துளசி. அம்மா இல்லை. அப்பா தம்பி மாமா இவர்கள்தான் குடும்பத்தில்.

பாலனுக்கு துளசி வருகிற நேரமெல்லாம்  மகிழ்ச்சி பொங்கும். கள்ளங்கபடமில்லாத அவளின் பேச்சு அதே ரகமான அவனுக்கு மிகமிகப் பிடித்துப் போனது.

“ஆமா உன்னோட தகாபுகா தமிழை சரியாக்கி வுட்டதுக்கு இந்த டீச்சருக்கு குருதட்சணை ஒண்ணுமில்லையா?”

பாலனைப் பார்த்து பளீரென ஒரு நாள் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

பாலன் அவள் முகம் பார்த்தான். அவனும் மிக அழகானவன். தப்பித்தவறிக் கூட அதிகம் என நினைக்கிற ஒரு வார்த்தையும் பேசாதவன். பதில் பேசத் தயங்கினான்…

“ம்மம்… என்ன யோசனை?” விழிகளை அகலப்படுத்தி அவனுக்கு மிக அருகில் வந்து சொல்லு பாலா, குருதட்சணை எங்கே?” என்றாள்.

அவன் கண்கள் கலங்கின. என்ன புன்ணியம் செய்தேன் _ இதுபோன்று யதார்த்த ஜீவன்களை வாழ்க்கையில் சந்திக்க… என மனதினுள் பேசிக் கொண்டான்.

துளசி கவனித்தாள்.

“பாலா, பாலா’’ என்றாள்.

“குருதட்சணை கேட்டதுக்கா கண்-கலங்குறே?’’ பதறினாள்.

“இல்லே’’ என மறுத்தான்.

“இந்த அனாதைக்குக் கூட இவ்வளவு அன்பா ஒரு குரு கெடச்சுச்சுன்னு நெனைக்கும் போது மனசு சந்தோஷிக்குது. தட்சணைக்கு என்னிடம் தகுதி இருக்குதான்னு யோசிக்குது. என்ன வேணும்’’ கேளுங்கோ…

குரல் கம்மிக் கம்மிப் பேசினான். அது துளசிக்கு மிகவும் பிடித்திருந்தது.

“அப்படீன்னா சரி, மனசுல இதைப் பதிய வச்சுக்கோ. எப்போ வேணும்னாலும் வந்து கேப்பேன். இல்லேன்னு சொல்லாமத் தரணும் சரியா?” என்றாள்.

“தரும்’’ என்றான். துளசி மகிழ்ந்தாள்; திரும்பினாள். பாலன் என்னவாக இருக்கும்? என்று யோசித்துக் குழம்பினான்.

அவள் அப்படிக் கேட்டுவிட்டுப் போன அடுத்த நாளிலிருந்து நாய்க்கரின் மகன்தான் இரண்டு நேரமும் பால் கொண்டு வந்தான். பாலனுக்குக் காரணம் புரியவில்லை. யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. அவனுக்கு மண்டை குழம்பியது. அவள் வராது போனதற்கு, தான் ஏதேனும் வகையில் காரணமாக இருக்கிறேனா… பலவாறாக யோசித்தான். வாய்ப்பே இல்லை என்பதை உறுதி செய்தான்.

வேலை செய்யப் பிடிக்கவில்லை. புத்தி முழுக்க அவள் பற்றிய சிந்தனை. யாரிடமேனும் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தைரியமும் இல்லை.

மிக மிக ஓய்ந்து போனான்.

மாதங்கள் கடந்தன.

அவள் வந்து கொண்டிருந்த காலங்களில் அவளைப் பற்றி அதிகம் அசைபோடாத மனது அவள் வராத காலங்களில் அவளைத் தவிர எது பற்றியும் நினைக்கவில்லை.

அவனது செயலில் இருந்த வேறுபாட்டை பெரியவர் உணர்ந்தார். அவரது வீட்டில் தானே அவனின் உறக்கம்.

என்னதாண்டா ஆச்சு…? ஏதாவது ஊர் ஞாபகமா? வேண்ணா ரெண்டு நாள் போயிட்டு வாயேன். பத்து பதினஞ்சு நாளா உன்னோட போக்கு சரியில்லையே…?” உரிமையோடு அதட்டினார்.

அவன் அமைதி காத்தான். –

மீண்டும் மீண்டும் அவர் கேட்கவே பேசிவிடலாம். இல்லையேல் பைத்தியம் பிடிக்கும் என்கிற முடிவில்,

“இல்லேச்சா. நாய்க்கர் வீட்டுப் பொண்ணு தொளசி -திவசம் பால் கொண்டு வருன்னது. பெட்டென்னு வருனில்லா. என்னைக் கொண்டு எந்தங்கிலும் சல்யம் உண்டோன்னு ஒரு ஆலோசனை”

நேரடியாகக் கூறாமல் இப்படிப் பேச…

“அட அறிவுகெட்டவனே உன்னாலே பிரச்சினையா. அய்யோ அய்யோ… அவளோட கெட்ட நேரம்டா. திடீர்னு அவள் மாமன் ஆறுமுகத்தோட அவளுக்குக் கல்யாண ஏற்பாடு நடக்குது. அறிவுகெட்ட அவளோட அப்பனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் குடிகார நாய்க்கு கொடுக்கப்போறாரு.”

அவர் பேசி முடித்தபோது பாலனுக்கு குபுகுபுவென வியர்த்தது. கீழே விழுந்தான். பெரியவருக்கு திகீரென்றது. ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்தார். மடியில் கிடத்திக் கொண்டார்.

“என்னாலே ஆச்சு… மேலுக்கு முடியலயா? ஆஸ்பத்திரி போவமா? பதறினார்.

பாலன் மறுத்தான். –

“ஒண்ணுமில்லே” என்றான்.

உள்ளே சென்று படுத்தான்.

“குடிகாரனுக்கு” என்கிற வார்த்தை அவனை நோகடித்தது. தொள்சீ நீ நல்லா இருக்கோணும்” என்று மனதாரக் கூறிக் கொண்டான்.

உறக்கம் வரவில்லை.

நடு ஜாமமிருக்கும் வீட்டின் வெளிக்கதவு தட்டப்பட்டது. பெரியவர் சென்று திறந்தார்.

அதிர்ந்தார். –

துளசி நின்றிருந்தாள். எதுவும் புரியாமலே அவளை உள்ளே அழைத்து கதவைச் சாத்தினார்.

“பாலன் இருக்காரா…?’’

அவள் கேட்டபோது குரல் பாலன் காதிலும் விழுந்து துள்ளி எழுந்தான். அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாய் அருகில் வந்தான். துளசி துவண்டு போயிருந்தாள்.

“என்னாலே.. என பெரியவர் பாலனைப் பார்க்க, “ஒண்ணுமில்லே” என அவன் பதிலளிக்க துளசியை பெரியவர் பார்த்தார்.

“வந்து வந்து போன போது பாழாப்போன மனசுக்கு எதுவுமே தெரியலே மாசக் கணக்கிலே பார்க்காம தவிச்சப்போ பாலாவோட அன்பு எனக்கு கண்டிப்பா தேவைன்னு பட்டுச்சு. பாழுங்கிணத்திலே தள்ள வீட்டில் தலைகீழா நிக்கிறாங்க. எனக்கு பாலனோட வாழணும். அவன்தான் புருஷனா வேணும்…”

தயங்கவில்லை. முடிவு செய்து வந்திருக்-கிறாள். முழுவதுமாய் போட்டுடைத்தாள்.

பெரியவர் நிதானமாய்க் கேட்டுக் கொண்டார். பாலன் இந்த எல்லைவரை யோசித்ததில்லை. எனவே, அதிர்ச்சியுற்றான்.

“தொளசீ இது எந்தா?’’ பதறிப் போனான்.

“குருதட்சணை என்னைக்காவது கேட்பேன்னு சொன்னேனே… எனக்கு நீ வேணும்… உன்னை மாதிரி அன்பானவனை _ நல்லவனை நான் பார்த்திருக்கக் கூடாது… பார்த்துட்டேன்; பழகிட்டேன். நீ தப்பா ஒரு வார்த்தை கூட பேசினவன் இல்லை. ஆனா அது எல்லாமா சேர்ந்துதான் எனக்குள்ள இப்படி ஒரு முடிவு எடுக்க வெச்சது…’’

“முடியுமா?’’ என்றார் பெரியவர். பாலன் இது எந்தவித தவறும் இல்லை என்பதை உணர்ந்த அதே சமயம் துளசியும் தவறில்லை என்பதையும் சேர்த்தே உணர்ந்தார்.

நாளை மறுநாள் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்கும் நேரம் துணிவாகப் புறப்பட்டு வந்திருக்கும் அவளை விட்டுவிடக் கூடாது என்று பெரியவர் திட்டமிட்டார்.

உட்காரச் சொன்னார்; தண்ணீர் கொடுத்தார்.

பாலனையும் உட்காரச் சொல்லி தானும் அமர்ந்தார்.

அய்ந்து நிமிடம் அமைதியாய்க் கழிந்தது.

“அவளப் பார்க்காம இந்த ஒரு மாசமா நீ தவிச்ச தவிப்பு எனக்குத் தெரியாம இல்லை…’’

பெரியவர் அமைதியைத் துரத்திப் பேசத் துவங்க, பாலன் தலைகுனிந்தான். துளசி அவனை புதிதாய் பார்த்தாள்.

“அது வந்து…” என்றிழுக்க,

அவனை சும்மா இருக்கச் சொன்ன பெரியவர்,

“தங்க விக்ரகண்டா தொளசி. இவளை ஒரு தறுதலைக்குக் கட்டி வெக்க அவள் அப்பன் துணிஞ்சுட்டான். எப்போ இவளுக்கு அதில் விருப்பமில்லாம உன்னைத் தேடி வந்துட்டாளோ… யோசிக்க வேண்டாம், விளைவுகளை சந்திக்கலாம்லே நீ தயாராகு’’  முடிவாய் கூறினார்.

துளசி படாரென பெரியவர் காலில் விழ, பாலனும் விழுந்தான்.

இன்றும் நாளையும் துளசியை அங்கேயே தங்க வைப்பது என்றும், இயல்பு மாறாம அனைத்தும் அன்றாடம் நடப்பது போல் நடக்கட்டும்¢; தேடி அலைந்து ஓயட்டும்; நாளை இரவு இங்கிருந்து புறப்பட்டு பழநி சென்று சந்நிதியில் தாலி கட்டிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இரவு யாரும் தூங்கவில்லை வெளியே நாயக்கரின் ஆள்களின் சப்தம் இருந்து கொண்டே இருந்தது. பெரியவரும் பாலனும் ஓரிரண்டு முறை வாசலுக்கு வந்தனர். எதுவுமே தெரியாதது போல் விவரம் கேட்டறிந்தனர்.

விடிந்தது… –

வழக்கம் போல் பாலன் கடை திறந்தான்.

பால் வரவில்லை.

அவனை ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.

அமைதி காத்தான்.

ஊருக்குள் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருந்தது. யார் யாரோ யாராரையோ விசாரித்தனர். பாலனையும் விட்டு வைக்கவில்லை. தெளிவாய் ‘தெரியாது’ என்கிற பதிலைக் கூறினர்.

வீட்டைப் பூட்டிவிட்டு பெரியவரும் கடைக்கு வந்திருந்தார்.

இரவு வந்தது.

பெரியவர் ஊர் முழுக்க கால்நடையாய் நடந்தார். பரபரப்பு அடங்கியிருந்தது.

பெரியவர் இருவரையும் தயார் செய்தார். வீட்டின் பின்புறமாக மூவரும் நடந்து ஒரு இடத்தை அடைந்தனர். அங்கு பெரியவர் நின்று அவர்களை அனுப்பி வைத்தார். நூறடி தொலைவில் ஜீப் ஒன்று நின்றிருந்தது. ஏறிக்கொண்டனர். வெளியூர் ஜீப் என்பதால் எந்த பின்புலனும் தெரியவில்லை ஜீப் கிளம்பியது. பெரியவர் வீட்டினுள் வந்ததும் இறைவனை வேண்டிக் கொண்டார்.

ஜீப் ஊர் எல்லையைக் கடக்கும் பொழுது யாரோ உன்னிப்பாக கவனித்தனர் அதிகாலை 2:00 மணி. –

ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள். தாலி உள்பட அனைத்தையும் பெரியவரே சரி செய்து கொடுத்திருந்தார். குளித்துவிட்டுத் தயாராகலாம் என்று முடிவு செய்தனர்.

விடியற்காலை 4:00 மணியிருக்கும். கதவு பலமாகத் தட்டப்படும் சப்தம் கேட்டது.

இருவரும் பதறிப்போயினர். பாலன் தயங்கித் தயங்கிச் சென்று கதவைத் திறந்தான். திறக்கும் முன்னரே நாய்க்கரும் கார்த்திக்கும். உடன் ஆறு பேரும் உள்ளே நுழைந்து அவனை தாறுமாறாகத் தாக்கத் துவங்கினர்.

கார்த்திக் துளசியின் முடியை கொத்தாகப் பிடித்து முகத்தில் காறித் துப்பினான்.

கதறல் சப்தம் வெளியே கேட்காமல் வாயில் துணி வைத்து அமுக்கி அடித்தனர்.

“ஜாதி கெட்ட நாயே! அனாதப் பரதேசி” என்றெல்லாம் ஏக வசனம். கோபத்தில் தெறித்தது.

எதிர்க்கத் திராணியின்றி அவன் சுருண்டான். சிவந்த உடல் முழுக்க ரத்த விளாராய் மாறிப்போக அவனை ஒட்டுத்துணி கூட இல்லாமல் சுருட்டி வீசிவிட்டு அவளைத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.

பாலன் மயங்கினான்..

இரண்டு ஆண்டுகள் ஓடியிருக்கும். பாலன் பைத்தியமாய்ச் சுற்றினான். ஊருக்குத் திரும்பவும் மனமில்லை. துளசியின் நினைவும், கடைசியாய் நிகழ்ந்த சம்பவங்களும் அவனை வெகுவாகப் பாதித்திருந்தது.

பழநியில் வைத்து திடீரென ஒரு நாள் பெரியவரைச் சந்திக்க நேர்ந்தது.

கதை கதையாய் கூறினார். –

கலங்கினான்.

ஊருக்குத் திரும்ப அழைத்தார். –

மிகமிகத் தயங்கினான்.

“கவலைப்படாதே. நீ எதைப்பற்றியும் நெனச்சு பயப்படற அளவுக்கோ தயக்கம் காட்டவோ அவசியமே இல்லை. நாய்க்கர் அவசரப்பட்டுட்டாருடா. அவரே உணர்ந்துட்டாரு. எல்லாம் தொளசியோட நேரம். வாடா பார்ப்போம். ஊருல எவனும் இதைப்பத்தி பேசப்போறதில்லே..” என உறுதியளித்தார். பெரியவர் பேசியபின் பாலன் யோசிக்கவில்லை

கடை மீண்டும் திறக்கப்பட்டது.

யாரும் எதைப்பற்றியும் அவனிடம் கேட்பதில்லை. அதிகபட்சம் தெரிந்திருக்க-வில்லை துளசியைப்பற்றி நாய்க்கர் வீட்டு கலாட்டாக்கள் பற்றி அவ்வப்பொழுது பேச்சு வரும்போதெல்லாம் ஆர்வம் இல்லாதவன் போல காதுகளில் முழுமையாக வாங்கிக் கொள்வான். நாட்கள் கடந்து கொண்டிருந்தது. இதோ கலாட்டாவின் உச்சகட்டமாய் இன்று ஆறுமுகம் இறந்து போயிருந்தான்.

அனைவரும் சுடுகாடு சென்று திரும்பி இருந்தார்கள். நாய்க்கரைப் பார்த்துவிட்டு பாதி பேர் திரும்பலாயினர்.

பெரியவரும் பாலனும் நாய்க்கர் அருகே செல்ல உள்ளேயிருந்து குழந்தை வீறிட்டழும் சப்தம் கேட்டது. பெண்கள் அனைவரும் –

“துளசீ துளசீ’’ என்றனர்.

நாய்க்கர் உள்ளே சென்றார்.

பெரியவரும் பாலனும் பின் தொடர்ந்தனர்.

“ஒரு சொட்டுத் தண்ணி இல்லை. இவ்வளவு இறுக்கம் எந்தப் பொம்பளைக்கும் ஆகாதும்மா” -_ கிழவிகள் அங்கலாய்த்தனர்.

ஆறுமுகம் வாழும் வரை அழுது தீர்த்திருந்தாள். இன்று அவள் அழவில்லை; குழந்தை அழுது தீர்த்தது.

பெண்கள் அவளைச் சுற்றிலும் நின்று “குழந்தையைக் கொஞ்சம் கவனி” எனக் கெஞ்சினார்கள். பாலனுக்கு ஓர் இடைவெளியில் அவளின் துவண்ட முகம் தெரிந்தது. நாய்க்கர் கூட்டத்தை விலக்கிச் சென்று துளசியை அதட்டினார். அவள் அதற்கும் அசையவில்லை.

பெரியவர் முன்னேறினார்;

பாலனும் உடன் சேர்ந்தான்.

பெரியவர் பாலனைப் பார்த்தார்;0

பாலன் துளசியைப் பார்த்தான்.

உள்ளுக்குள் ஒருவித வெறி வந்தது.

பெரியவரைக் கடந்தான்;

துளசிக்கு அருகே சென்றான்;

குழந்தையைக் கையிலெடுத்தான்;

துளசியை முகம் உயர்த்தினான்.

பாலனைப் பார்த்ததும் மொத்தமாய் உடைந்தாள். ‘ஓவென’க் கதறினாள். பெரியவர் நாய்க்கரைப் பார்த்தார். நாய்க்கர் அமைதியாய் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாலன் துளசியை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

அமைதி நிலவ நடந்தான். குழந்தை அழுகையை நிறுத்தியிருந்தது.

“ஜாதியும் மதமும் மட்டுமா வாழ்க்கை…?”

பெரியவர் நாய்க்கரைப் பார்த்துக் கேட்க, அவர் பதில் பேசவில்லை.

ஊரே வியந்து நிற்க, – பாலன் துளசியோடும் குழந்தையோடும் தெருவில் இறங்கி நடந்தான்.

பெரியவர் பின் தொடர்ந்தார்.

யாரும் எதுவும் பேசவில்லை.

துளசிக்கு இப்படி ஒரு வாழ்க்கைதான் அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *