நாத்திகப் புரட்சியாளர் தூக்கிலிடப்பட்ட நாள் – மார்ச் 23

மார்ச் 16-31,2022

இணையில்லா எதிர்காலத்தை இந்தியா இழந்தது!

ஆம். அவரைத் தூக்கிலிடத் தீர்மானிக்கப்-பட்ட நாள் (23.03.1931) வந்தது. அன்று மாலை 7:30 மணிக்குத் தூக்கிலிட நேரம் குறித்தனர். பொதுவாக விடியற் காலையில்தான் தூக்கிலிடு-வார்கள். ஆனால், ஆங்கில ஆதிக்கவாத அரசுக்கு அதிலும் அவசரம்.

தன் மகனைப் பார்க்கத் துடித்த தந்தைக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. பொழுது இருட்டியது. சிறைக் கதவுகள் அடைக்கப்பட்டன. சிறைக் கண்காணிப்-பாளர்கள், நீதிபதி, காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஓர் அறையில் இருந்தனர்.

ஏழரை மணியை கடிகார முள் எட்டியது.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுடைய கண்கள் கட்டப்பட்டன.

மூவரும் தூக்குமேடையில் ஏறி நின்றனர்.

முதலில் பகத்சிங்கின் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது.

வருகிறேன் சுகதேவ்! வருகிறேன் ராஜகுரு! கலங்காத குரலில் கம்பீரமாய் விடைபெற்றார்.

பகத்சிங் வாழ்க! சுகதேவும், இராஜகுருவும் பலமுறை முழங்கினர். மூவர் உள்ளத்திலும் உணர்வுக் கொந்தளிப்பு.

சரியாக மணி 7:35

இன்குலாப் ஜிந்தாபாத்!

(புரட்சி நீடூழி வாழ்க!)

பகத்சிங்கின் இறுதி முழக்கம் எங்கும் எதிரொலித்தது!

ஆம் அடுத்த நொடியில் சுருக்குக் கயிறு, அந்த அரிய புரட்சி மனிதரின் கழுத்தை நெருக்கியது! இணையில்லா எதிர்காலத்தை இந்தியா இழந்தது!

அடுத்து ராஜகுருவும், அதற்கடுத்து சுகதேவும் தூக்கிலிடப்பட்டனர்.

அவர்களின் உடலையாவது இறுதியாகப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து சிறைக்கு வெளியே காத்திருந்த உறவினர்களுக்குக்கூட காட்டாமல், இறுதிச் சடங்கிற்கு ஏற்றிச் சென்றனர்.

இந்துப்  புரோகிதர் ஒருவரும், சீக்கியப் புரோகிதர் ஒருவரும் அழைத்துச் செல்லப்-பட்டனர்.

யாருடைய உடல்கள் என்ற விவரம் புரோகிதர்களுக்குச் சொல்லப்படவில்லை. விளக்கொளியில், இறந்தவர்களின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வருவதை மட்டும் அவர்கள் கண்டனர். அச்சத்தில் வாய் தடுமாற மந்திரங்களை அவர்கள் ஓதினர். ஒரு காவலர் உடல்-களிலிருந்து ஆடைகளைக் கிழித்தான். ஒரே சிதையில் மூன்று உடல்களையும் அடுக்கினர். மேலும் கீழும் விறகு எளிதில் எரிய மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது.

ஆதிக்கத்திற்கு அடங்காத ஆற்றலாளர்-களின் உடல்கள் அல்லவா! அடம்பிடித்து எரிய மறுத்தன. செத்தும் எதிர்ப்பா? எரிச்சல் அடைந்த காவலர்கள், அவர்களின் உடலை துண்டுத் துண்டாக நறுக்கி தீயில் போட்டனர்.

இரண்டு மணி நேரம் போராடி எரித்து முடித்த சாம்பலை ஒரு கம்பளியில் அள்ளினர். சட்லஜ்  ஆற்றில்  அச்சாம்பல்  கரைக்கப்-பட்டது.

ஓடும் நீரில் சாம்பலாய் அவர்கள் கரைந்தாலும், ஒவ்வோர் இந்தியர் உள்ளத்திலும், ஏன் உலக மக்களின் உள்ளத்திலும் நிறைந்து உணர்வூட்டிக் கொண்டிருக்கிறார்கள், எரியும் போது ஒன்றாக எரிந்து, சாம்பலாய் ஒன்று கலந்த அம் மூவரும்.

வாழ்க பகத்சிங்கின் புகழ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *