கிளாஸ்கோ மாநாட்டில் தமிழ்நாட்டின் குரல்
கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர் பேசியது குறிப்பிடத்தக்கது.
இவர் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சூரிய மின்சக்தியில் இயங்கும் இஸ்திரி (Iron Box) வண்டியை உருவாக்கி கவனம் பெற்றவர். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் துவங்கிய ‘எர்த்ஷாட்’ பரிசு (Earthshot Prize) விருதுக்கான இறுதிப் போட்டிக்கு தேர்வானவர்களில் வினிஷாவும் ஒருவர்.
இவரின் உரையில், “உலகத் தலைவர்களின் பழைய விவாதங்கள், நடைமுறைகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் புதிய எதிர் காலத்திற்கான புதிய பார்வை எங்களுக்குத் தேவை. எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.
எங்களுடன் சேர உங்களை அழைத்தாலும், நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். ஆனால், தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உலகத் தலைவர்களின் வெற்று அறிவிப்புகள் என சந்ததியினரை கோபமடையச் செய்துள்ளது. ஆனால், நாங்கள் கோபத்தில் நேரம் செலுத்த விரும்பவில்லை. செயல்பாட்டில் இறங்கி இருக்கிறோம்.
நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல, பூமியைச் சேர்ந்த பெண்ணும்தான்’’ என்ற அவரது இயல்பான பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முதல் பெண் அமெரிக்க அதிபர்
250 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்கிற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கொலோனோஸ்கோபி எனப்படும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரம், 25 நிமிடங்களுக்கு மயக்க நிலையில் இருந்தார். அந்தக் குறிப்பிட்ட சில மணி நிமிடங்களுக்கு கமலா ஹாரிஸ் அதிபராக பதவி வகித்துள்ளார்.
புதினாவின் மருத்துவ குணம்!
* புதினாக்கீரையில் உயிர்ச்சசத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
* அடிக்கடி விக்கல் ஏற்பட்டால் புதினாக் கீரையை சூப் செய்து சாப்பிட்டால் குணம் கிடைக்கும்.
* ரத்தத்தைச் சுத்தி செய்வதில் மிகச் சிறந்த பங்காற்றுகிறது.
* புதினாவை சட்னி, சாறு என்று எந்த விதத்தில் பயன்படுத்தினாலும், இதன் பொதுக் குணங்கள் மாறாது.
* அசைவம் மற்றும் கொழுப்புப் பொருள்களை எளிதில் செரிக்கச் செய்யும்.
* புதினா இலைகளை சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் குடித்தால், மூச்சுத் திணறல் குணமாகும்.
* புதினாவை நிழலில் காய வைத்து, பாலில் சேர்த்துக் கொதிக்க வைத்து, அருந்தினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
புகை பிடிக்க தடை
நியூசிலாந்தில், புகை பிடிக்கும்
பழக்கத்தை முற்றிலுமாக தடை செய்யும் விதத்தில் 2008ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்கள் யாரும்
சட்டப் பூர்வமாகக் கடையில்
சிகரெட் வாங்க முடியாது.
இதன் மூலம் தற்போது
14 வயதான குழந்தைகளும்
அதற்கு குறைந்த குழந்தைகளும்
இனி சிகரெட் வாங்கவே முடியாதபடி
இந்தச் சட்டம் அமைந்துள்ளது.
நியூசிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் சுமார்
4500 பேர் புகை பிடிப்பதால்
இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரறிஞர் அண்ணா மறைவுக்கு தந்தை பெரியாரின் இரங்கல் உரை!
நாமெல்லோரும் அறிஞர் அண்ணா அவர்கள் முடிவெய்தியதை முன்னிட்டு நமது அனுதாபத்தைக் காட்டிக் கொள்வதற்காக இங்கே கூடியிருக்கிறோம். அண்ணா அவர்களைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருத்தமாகும். பெரும்பாலும் அவரைப் புகழ்வதற்காகவே நாம் இங்கே கூடவில்லை. அவருடைய தொண்டுக்கு நன்றி காட்டவும், அவரைப் பின்பற்றி அவர் கூறியுள்ள கொள்கைகளைப் பரப்பவும் கூடியிருக்கிறோம்.
அண்ணா அவர்கள் மாபெரும் பகுத்தறிவுவாதி. இரண்டாவது, அவர் காரியத்திலேயும் அதைக் காட்டிக் கொண்டார். மூன்றாவது, அவர் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மூட நம்பிக்கைகள் தனக்கு இல்லை என்று அதைக் காட்டுவதற்கு எங்குமில்லாத திருமண விஷயத்திலே, கடவுள், மதம், ஜாதி, சம்பிரதாயக் காரியங்கள் இருக்கக்கூடாது என்று, அதில் கூடாது என்று, கருத்து கொண்ட சுயமரியாதைத் திருமணம், சீர்திருத்தத் திருமணம் என்பதைச் சட்டமாக்கினார். சட்டமாக்கினாரென்றால், திருமணத்தைச் சட்டமாக்கியதே, முக்கிய கருத்துமல்ல. அதிலே கொண்டு வந்து கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தைப் புகுத்தக் கூடாது என்ற கருத்திலே.
இப்படிப் பல விஷயத்திலேயும் அவர், தான் பகுத்தறிவுவாதி என்பதையும் உண்மையாக அவர் மக்களுக்கு எடுத்துக் காட்டி மக்களை எல்லாம் அந்தப் பக்கத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்று ரொம்பப் பாடுபட்டார். அவ்வளவு செய்த மகானுக்கு இன்று இங்கு இவ்வளவு பெரிய மாபெரும் கூட்டம் அவர் காலமான அன்றைக்கும், அவரின் இறுதி ஊர்வலத்திலும் 30 லட்சம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள் என்றால், அவர் தன்னுடைய கருத்தை மட்டிலும் காட்டினார் என்பதல்லாமல் இந்த நாட்டு மக்களையே ஓரளவுக்கு அவர் பண்படுத்தி விட்டார் என்பது தான் அதனுடைய கருத்தாகும். முடித்துக் கொள்ளுகிறேன்.
(6.2.1969 அன்று நடைபெற்ற அண்ணா இரங்கல் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை – நூல்: பெரியார் சிந்தனை திரட்டு.)