வீ.குமரேசன்
பொதுநலம் சார்ந்து கருத்துத் தெரிவிக்கும் போக்கு இன்றைய இளைய தலைமுறையினரிடம் நிரம்பவே நிலவுகிறது. கருத்துத் தெரிவிக்காவிட்டால், தாம் கடமையாக நினைக்கின்ற பொறுப்பிலிருந்து விலகி நிற்கிறோமோ எனும் குற்ற உணர்வு, எண்ணம் மேலோட்டமாக வரவேற்கப்பட வேண்டியதே. இருப்பினும் கருத்து தெரிவிக்கும் முன் – விமர்சனம் செய்திட முனையும் முன், சொல்லக்கூடிய பொருள் பற்றிய ஆழமான புரிதலை தம்மிடம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பையும் கருத்துத் தெரிவிக்கின்ற வேகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது வெகுதொலைவு பின்தங்கியே உள்ளது. சமூக ஊடகங்களில் பங்கேற்கின்ற பொழுது காணுகின்ற செய்திகளுக்கு சற்றும் தாமதிக்காமல், உடனுக்கு உடன் பதிலோ, விமர்சனமோ செய்திடவில்லை என்றால், தமக்கு ஏதும் தெரியாது என பிறர் கருதி விடுவார்களோ என்ற நினைப்பே அதிகமாக உள்ளது. பதில் கூற வேண்டும் என்ற நோக்கம் பழுதில்லாமல் இருக்கும் பொழுது, பதிலும், விமர்சனமும் கருத்துச் செறிவுடன் கூடிநின்றால் எப்படிச் சிறப்பாக இருக்கும் என்பதை நினைத்துச் செயல்படும் பொழுது எழுகின்ற மகிழ்ச்சி, மனநிறைவு ஏராளம் கருத்துச் செறிவுடன் கலந்துரையாடுவதற்கோ, ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்துவதற்கோ ஆயத்தப்படுவதை தமது அடிப்படைக் கடமையாக இளைய தலைமுறையினர் கருதவேண்டும். கருத்துச் செறிவுள்ள, விவாதப் பொருளின் முழுமையான பரிமாணம் புரியாமலேயே பதிவிட முற்பட்டால், உடனுக்குடன் பதிலளித்தோம் என்ற போலியான மனநிறைவு இருந்தாலும், காலப்போக்கில், தமக்கு முற்றிலும் எதிரான ஒரு கருத்து நிலைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டாமே எனும் வெளியிலே சொல்லமுடியாத வேதனையினை அனுபவிக்க நேரிடும்.
‘வரலாற்று அடிப்படையில் நமது மேம்பாட்டுக்கு, – முன்னேற்றத்திற்கு உகந்த கருத்து எது? அதனை மட்டுப்படுத்தி, நம்மை அடக்கி ஆள நினைக்கும் கருத்து எது?’ – என்பதை அடையாளம் காண வேண்டும். கருத்துத் தளத்தில், நடப்புப் போக்கு, எதிரான போக்கு எது? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நியாயமற்ற கருத்து பல நேரங்களில் அலங்காரப் பொலிவோடு பவனி வரும். அதிலே மயங்கி, எதிரிக்கு லாபம் சேர்த்திடும் – நமக்குப் பாதகம் விளைத்திடும் கருத்துக்கு எந்தச் சூழலிலும் ஆளாகிவிடக் கூடாது. Appearances may be attractive; one has to be skeptic – தோற்றங்கள் ஈர்ப்பவையாக இருக்கலாம்; இருப்பினும் அய்யம் கலந்து ஆய்ந்திடும் அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பதுபோல, கருத்துச் சமர் என்பதன் பெயரால் அடிமைத்தனத்திற்கு ஆளாகி விடக் கூடாது. இளவயதில்தான், அலைந்து திரிந்து தேடிப்பிடித்து, ஆய்ந்து, உண்மை நிலை அறிந்திடும் ஆற்றலை உருவாக்கிக் கொள்ள முடியும். வயது கடந்த நிலையில் பட்டறிவின் மூலம் உண்மை நிலை அப்பட்டமாகத் தெரியும்பொழுது, ஒருவர் கடந்து வந்த பாதையில் முரண்பாட்டு முள்கள் நிறைந்ததாக அவர் அறிய நேரிடும் பொழுது, காலத்தை வீணாக்கி விட்டோமே என்ற விரக்தியின் விளிம்பில் நாள்களை நகர்த்திட வேண்டி இருக்கும். பலரும் வந்த பாதை முரண்பட்டது எனத் தெரிந்தும், அதனைக் கைவிடமுடியாது, வெளியுலகிற்கு ‘பின்வாங்கினார்’ என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகக் கூடாது எனப் பயந்து, அதனையே தொடர்ந்து வாழ்வோரும் உண்டு.
நமக்கு உகந்தது எது? எதிரானது எது? எனும் நிலைப்பாடு குறித்து தற்சமயம் பொதுவெளியில் நிலவிடும் ஒரு கருத்தாக்கம் பற்றிப் பேசுவோம்.
‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ எனும் கோரிக்கையானது, வழிபாட்டுத்தளத்தில் வழிபாட்டை நடத்திடும் உரிமை, வழிபடுவர் அனைவருக்கும் உரியது எனும் சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் எழுந்தது. இந்தக் கோரிக்கை வலுப்பெற்று சட்ட வடிவம் பெற்றது வழிபடுவர் நடத்திய போராட்டங்களால் அல்ல; கடவுள் வழிபாட்டின் மீது நம்பிக்கை இல்லாத சுயமரியாதை, பகுத்தறிவுப் போராளிகளான பெரியார் இயக்கத் தோழர்களின் பல தலைமுறைகள் தொடர்ந்த போராட்டங்களின் மூலமே! அனைத்து ஜாதியினரும், இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோயில்களில் அர்ச்சகராக, முறையான பயிற்சி பெற்ற பின் நியமிக்கப்படலாம் என சட்டமும் இயற்றப்பட்டு, அந்தச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு அளித்துவிட்டது. இருந்தாலும், ஆண்டாண்டுக் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள், எந்த வகையிலும் உரிமை பெற்று விடக்கூடாது என வஞ்சக மனத்துடன் போலி நியாயப் போர்வை போர்த்தி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. “கடவுள் வழிபாடு மீது நம்பிக்கை இல்லாதவர்கள் – கடவுளை மறுப்பவர்கள் – இந்துக் கோயில்களில் யார் அர்ச்சகர் ஆக வேண்டும் எனப் போராடுவது நியாயமா?’’ எனப் பொதுவெளியில் கேள்வியைக் கேட்டு, அதையே அடக்குமுறைக்கு ஆளானவர்களும் ‘கிளிப்பிள்ளை’ போல அப்படியே பேசி வரும் போக்கு இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. சட்டம் இயற்றப்பட்டு, அந்தச் சட்டம் சரியானதே என நீதிமன்றமே ஒப்புக் கொண்ட பின்னரும், எடுத்ததெற்கெல்லாம் ‘சட்டம் என்ன சொல்கிறது?’ என சட்டத்தைத் துணைக்கழைக்கும் ஆதிக்கக்கூட்டம், ‘அர்ச்சகர் நியமனச் சட்டத்தை மதிக்காதே’ எனும் வகையில் கருத்தைப் பரப்பி வருகிறது. இந்தப் போலி நியாயத்திற்கு வக்காலத்து வாங்குகின்ற வகையில் ஒடுக்கப்பட்ட சமுதாய இளைய தலைமுறையினரே செயல்பட்டு வருகின்றனர்!
இச்செயல் கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு வெளியே கல்வீசுவது போன்றதாகும். தமது உரிமைக்குப் போராட முனையாமல், உரிமையை மறுத்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது அநியாயம் இல்லையா? இப்படிப்பட்ட அநியாயச் செயலுக்கு நியாய முலாம் பூசி நமது சமூக இளைஞர்களை ஆதிக்கவாதிகள் மயக்கி வருகின்றனர். நியாய முலாமை உரசிப் பார்த்து உண்மை நிலையை இளைய தலைமுறையினர் உணர்ந்து செயல்பட வேண்டும். அனைவரும் வழிபடலாம் என்ற வழக்கத்தை ஏற்படுத்திவிட்டு, வழிபாடு நடத்துவது மட்டும் பிறப்பின் அடிப்படையில் ஒரு சமுதாயத்திற்கே உள்ள உரிமை என்பதில் நியாயம் உள்ளதா? கடவுள் நம்மைக் காப்பாற்றிவிடுவார், இன்னல்களைத் தீர்த்து வைப்பார் எனும் நம்பிக்கையோடு வரும் பல சமுதாயத்தைச் சார்ந்த பக்தர்களுக்கு, ‘ஏன் நாம் வழிபடும் கடவுளுக்கு வழிபாடு நடத்திட நமக்கு உரிமை இல்லை?’ என கேள்விக் கேட்கத் தோன்றவில்லை. கேள்வியினை எந்த வழிபாட்டாளர்களும் கேட்கவும் முனையவில்லை.
‘கடவுள் மறுப்பு என்பது எனது கொள்கை; அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது பொதுநல விருப்பம்’ என்றார் தந்தை பெரியார். அந்த விருப்பத்தினை நிறைவேற்றிட களம் கண்டார். கருத்துப் போர் புரிந்து சட்ட வடிவமும் பெற்றுத் தந்தது பெரியார் கண்ட இயக்கம். தனது இயக்கத் தோழர்கள் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதற்காகவா பெரியார் போராட்டம் கண்டார்? இல்லவே இல்லை. கடவுள் மீது நம்பிக்கை வைத்து, அர்ச்சகராகும் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காகவே போராடினார். இந்த உண்மை நிலை புரியாது ‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு யார் அர்ச்சகரானால் என்ன?’ என்று ஆதிக்க வாதிகளின் குரலுக்கு ஒத்துப் பாட்டு பாடும் பலர் உள்ளனர். போலி நியாயம் இன்னும் முழுமையாகத் தோலுரித்துக் காட்டப் படவில்லை. அண்மைக் காலமாக அதே ஆதிக்கபுரியினர் போலி நியாயமாக ‘இந்து மதக் கோயில்கள் இந்துக்களால் பராமரிக்கப்பட வேண்டும்’ என்று குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தையும் இந்து மதத்தைச் சார்ந்த அறங்காவலர்களே – அரசு ஊழியர்களே பராமரித்து வருகிறார்கள் எனும் அடிப்படை உண்மையினைத் தந்திரமாக மறைத்துவிட்டு, பிற சமுதாயத்தவரை மயக்க நிலைக்கு ஆதிக்கபுரியினர் ஆளாக்கி வருகின்றனர். உண்மை நிலை அறிந்து போலி நியாயத்தின் பக்கம் சாராமல் பொதுப்பணி ஆற்றிட, பொதுக் கருத்தாக்கத்தினை உருவாக்கிட இளைஞர் சமுதாயம் முன்வர வேண்டும். நுனிப்புல் மேய்வதைத் தவிர்த்து, கருத்தியல் சார்ந்து ஆழமாகச் சிந்தித்து, கடமை ஆற்றிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
(தொடருவோம்)