தன் மகள் விமலாவுக்கு இந்த ஆண்டே திருமணத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் சித்ராதேவி. எப்போதும் அவர் கையில் அய்ந்து ஜாதகங்களுக்கு குறையாமல் இருக்கும். ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் மட்டும் காட்டி பொருத்தம் பார்க்க மாட்டார். குறைந்தது மூன்று ஜோதிடர்களிடமாவது காட்டி பொருத்தம் பார்ப்பார். ஆனால், அப்போதும் அவர் திருப்தி அடையமாட்டார். சகுனமும் பார்ப்பார்.
“நீ இப்படியெல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தா இந்த யுகத்தில் நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் நடக்காது. ஜாதகம் வந்ததா, ஏதாவது ஒரு ஜோதிடரிடம் காட்டினோமா, கல்யாணத்தை முடிச்சோமான்னு இல்லாம இப்படி ஊரில் இருக்கிற அத்தனை ஜோதிடர்களிடமும் காட்டி எதையும் உருப்படாம செஞ்சுக்கிட்டு இருக்கிறே’’ என்று ஒருநாள் சித்ராதேவியைப் பார்த்து அவர் கணவர் செல்வராசு பொரிந்து தள்ளினார்.
உங்களுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லேண்ணா சும்மாகிடங்க. நான் ஜாதகம் பார்த்து மட்டும் முடிவு செய்ய மாட்டேன். சிவகாமி சன்னதிக்கும் போய் உத்தரவு கேட்டு விட்டுத்தான் எதையும் முடிவு செய்வேன்’’ என்று தீர்க்கமாகக் கூறினார் சித்ராதேவி.
“இப்படி ஜோசியம், ஜோசியம்னு அலையிறியே. மாப்பிள்ளையோட குடும்பம், குணம் பற்றி உனக்கு கவலையே இல்லையா?’’ என்று கேட்டார் செல்வராசு.
“எனக்கு முதல்ல மூணு ஜோதிடர்களும் ஜாதகம் பொருத்தமா இருக்குன்னு சொல்லணும். அதுக்கப்புறம் என் தெய்வம் சிவகாமசுந்தரி அருள்வாக்கு கொடுக்கணும். அப்புறம்தான் மாப்பிள்ளை குணம், குடும்பமெல்லாம் பார்ப்பேன்’’ என்றார் சித்ராதேவி.
“ஏன்தான் இப்படி சாமி பைத்தியமும், ஜாதகப் பைத்தியமும் பிடிச்சி அலையிறியோ தெரியல’’ என்று வெறுப்புடன் சொன்னார் செல்வராசு. அந்த இரண்டிலும் அவருக்கு எந்தவித ஈடுபாடும் கிடையாது.
“நல்ல மாப்பிள்ளை அமையாமலா போயிடும்’’ என்று முணுமுணுத்தபடியே அந்த இடத்தை விட்டு அகன்றார் சித்ராதேவி.
அம்மாவின் செயல்பாடுகள் எதுவும் விமலாவுக்கும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அம்மாவை மீறி அவளால் எதையும் செய்ய முடியவில்லை. அம்மாவின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசினால் வீண் பிரச்சனைகள் ஏற்படும் என அவள் நினைத்தாள். அதோடு மட்டுமல்லாமல் அம்மா தன்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் அவள் அறிவாள். அவளும் அம்மாவை மிகவும் நேசித்தாள்.
விமலா ஒரு பொறியியல் பட்டதாரி. வேலைக்காகப் பல இடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டிருந்தாள். போட்டித் தேர்வுகள் எழுதவும் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள். நிறையப் படித்தாள். தனது திறமைக்குக் கண்டிப்பாக தனக்கு நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவளுக்கு நிறையவே இருந்தது. படிப்பதோடு மட்டுமல்லாமல் காலை, மாலை வேளைகளில் கராத்தே பயிற்சிக்கும் சென்று வந்தாள். தற்காப்புக் கலை மீது அவளுக்கு அளவு கடந்த மோகம் இருந்தது.
வேலையில் சேர்ந்த பின்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவள் விரும்பினாள். ஆனால், அம்மாவோ விடவில்லை. ஒரே மகளான அவளுக்குத் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். நண்பர்களிடம் சொல்லியும், இணையத்தில் பதிவு செய்தும் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.
ஆனாலும் அம்மா ஜாதகம் பார்த்து, சகுனம் பார்த்து முடிவு செய்வதற்குள் நமக்கு விரைவில் திருமண ஏற்பாடு நடக்காது என்ற நம்பிக்கையுடன் தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் விமலா.
இவ்வாறாக ஓராண்டு கடந்தது. சித்ராதேவி ஜாதகமும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார். ஆனால், விமலாவோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் போட்டித் தேர்வுகளுக்காகப் படிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். அடிக்கடி நூல் நிலையம் சென்றாள். அவளைப் போலவே போட்டித் தேர்வுகளுக்கு நூல்களைப் படிக்க வந்த பண்பரசனுடன் அவளுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் கலந்து படித்து ஒரு மாதம் முன்பாக ஒரு போட்டித் தேர்வையும் எழுதினார்கள். அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருவருக்குமே இருந்தது. சில நாள்களில் அவர்களது நட்பு காதலாகவும் மலர்ந்தது.
தனது நிலையினை தந்தையிடம் நேரம் பார்த்துத் தெரிவித்தாள் விமலா. அதோடு மட்டுமல்லாமல் பண்பரசனுக்கும் அவனது பெற்றோர்கள் திருமணம் முடிக்க பெண் பார்க்கும் விவரத்தையும் தெரிவித்தார்கள். செல்வராசு மகிழ்ச்சியுடன் பண்பரசன் குடும்பத்தை அணுகினார்.
பண்பரசன் குடும்பம் பண்பட்ட பகுத்தறிவுக் குடும்பம். ஜாதகத்தில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று சொல்லி விட்டார்கள். பண்பரசன் விரும்புவதால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். இருப்பினும் பண்பரசனின் ஜாதகத்தை மட்டும் செல்வராசு வாங்கிக் கொண்டார். அதை விமலாவின் ஜாதகத்தோடு பொருத்தம் பார்த்தார். அதில் ஒரு சில மாற்றங்களையும் துணிந்து செய்து சித்ராதேவியுடன் கொடுத்தார்.
சித்ரா தேவியும் அதை வாங்கிக் கொண்டு மூன்று ஜோதிடர்களிடமும் காட்டி பொருத்தம் பார்த்து திருப்தி அடைந்தார்.
“ஜாகதமெல்லாம் பொருத்தமாயிருக்கு. கல்யாணத்தை முடிச்சுடலாம். பெண் பார்க்க வரச் சொல்லலாம்’’ என்றார் சித்ராதேவி.
“சரி, நான் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தகவல் சொல்லிடுறேன்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார் செல்வராசு.
“ஆனால்… ’ என்று ஏதோ இழுத்தார் சித்ரா தேவி. செல்வராசுக்கு பக்கென்றது. சித்ராதேவி ஏதோ குழப்பம் விளைவிக்க நினைப்பதாக எண்ணினார்.
“என்ன ஆனால்…?’’ என்று பதற்றத்துடன் கேட்டார்.
“பொண்ணு பார்க்க நம்ம வீட்டுக்கு வரவேண்டாம்’’ என்று சொன்ன சித்ராதேவியை இடைமறித்து,
“அப்புறம் எங்கே?’’ என்று கேட்டார் செல்வராசு.
“சிவகாமி சன்னதிக்குத்தான் பொண்ணு பார்க்க வரணும். அப்பவே நான் சிவகாமிகிட்டே அனுமதி வாங்கிப்பேன்’’ என்றார் சித்ராதேவி.
“முதன்முதலா வர்ரவங்களை வீட்டுக்கு வரச் சொல்றதுதானே மரியாதை’’ என்று முணுமுணுத்தார் செல்வராசு.
“அதைவிட சிவகாமி சன்னதிதான் சிறப்பு’’ என்று கூறி பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சித்ராதேவி. அவரது கூற்றுப்படியே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. திருமணம் நடந்தால் சரி என நினைத்தார் செல்வராசு. பண்பரசன் குடும்பத்தினரும் சித்ராதேவியின் கூற்றுக்கு உடன்பட்டுவிட்டனர்.
குறித்த நாளில் விமலாவை அழைத்துக் கொண்டு செல்வராசும் சித்ராதேவியும் கோயிலுக்கு வந்து சிவகாமி சன்னதியை அடைந்தனர். பண்பரசன் குடும்பத்தினரின் வரவுக்காகக் காத்திருந்தனர்.
ஆனால் சரியான நேரத்தில் பண்பரசன் குடும்பத்தினரால் வர இயலவில்லை. அவர்களின் கார் வரும் வழியில் பழுதடைந்து விட்டதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தாலும் வர சற்று தாமதமாகும் எனத் தகவல் தெரிவித்தனர். ஏறக்குறைய அவர்கள் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரமாவது தாமதமாகும் என்பதை சித்ராதேவி உணர்ந்தார்.
அதுவரை கோயிலைச் சுற்றிவந்து சாமிக்கு அர்ச்சனை செய்துவிட முடிவு செய்தார். பூ, பழம், தேங்காய் எல்லாவற்றையும் எடுத்து ஒரு தட்டில் வைத்தார். சன்னதிக்குச் சென்று அர்ச்சகரைப் பார்த்தார்.
அர்ச்சகர் மேற்சட்டை அணியாமல், தனது தொப்பை வயிறு தெரிய, குலுங்கிக் குலுங்கி சிரித்தபடியே யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
“சாமி, அர்ச்சனை செய்யணும்’’ என்று சித்ராதேவி கூறியதை அவர் செவிமடுக்கவே இல்லை.
நீண்ட நேரம் பேசி முடித்தபின் கடுகடுத்த முகத்துடன் சித்ராதேவியைப் பார்த்தார். இவர் அழைத்திராவிட்டால் இன்னும் கொஞ்சநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கலாமே என்பது அவரது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இந்த அர்ச்சனையை சீக்கிரம் முடித்துவிட்டு மீண்டும் செல்போனில் பேச முடிவு செய்தபடியே தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்.
சித்ராதேவி விமலாவின் பெயரையும், நட்சத்திரத்தையும் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார். ஆனால், அதை அர்ச்சகர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
உள்ளே சென்ற அர்ச்சகர் ஏதோ உளறிவிட்டு உடனே வெளியே வந்து தட்டைக் கொடுத்தார்.
சித்ராதேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் கொடுத்த தேங்காய் உடைக்கப்படாமல் உள்ளே இருந்த ஒரு மூளியை எடுத்து வைத்திருப்பதை அறிந்தார்.
“சாமி. நீங்க மந்திரமும் சரியா சொல்லலே. நான் கொடுத்த தேங்காயையும் உடைச்சதா தெரியல. என்ன அக்கிரமம் இது?’’ என்று கடுப்புடன் கேட்டார்.
அதைக்கேட்ட அர்ச்சகருக்கு ஆத்திரமாக வந்தது. மேலும் சித்ராதேவி தட்டில் பணமும் வைக்கவில்லை.
இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த அர்ச்சகர், “என்னடி அக்கிரமம்! கொடுத்ததை வாங்கிட்டுப் போடி’’ என்று கத்தியபடியே சித்ராதேவியை அடிக்க கையை ஓங்கியபடி பாய்ந்தார்.
இதை நொடிப்பொழுதில் கவனித்து விட்டாள் விமலா. உடனே அவள் தான் கற்ற தற்காப்புக் கலையைப் பயன்படுத்தி அர்ச்சகரின் கையைத் தட்டிவிட்டு அவரது அடியின் திசையை மாற்றினாள்.
அர்ச்சகர் நிலைதடுமாறினார். சித்ராதேவி மீது படவிருந்த அந்த அடி அருகில் இருந்த தூண் மீது பட்டது. அர்ச்சகர் கையைப் பிடித்துக் கொண்டு வலியுடன் அலறியபடியே கீழே விழுந்தார்.
“உன்னிடம் அடிவாங்க வேறு ஆளைப்பார்’’ என்று ஆவேசத்துடன் கத்தினாள் விமலா.
உடன் நிதானத்திற்கு வந்த சித்ராதேவி நடந்ததை உணர்ந்தாள். செல்வராசுவைப் பார்த்து,
“மாப்பிள்ளை வீட்டாரிடம் உடனே பேசுங்க’’ என்றார்.
அப்போது பண்பரசன் குடும்பத்தினரும் அங்கு வந்து சேர்ந்தனர். நடந்த சம்பவத்தை அறிந்தனர்.
“எங்களுக்கும் கோயிலுக்கு வர விருப்பம் இல்லை. இருந்தாலும் நீங்க விரும்பியதால் இங்கு வந்தோம். கோயில்களைப் பற்றி காந்தியடிகள் சொன்னதையும் நெனைச்சுப் பாருங்க’’ என்றார் பண்பரசனின் தந்தை.
“என் திருமணத்திற்கு நானும் விமலாவும் ஜாதி பார்க்கலே. ஆனால், இந்த இடமே ஜாதியை வளர்க்கும் இடம். ஜாதியைப் படைத்ததே நான்தான் என்ற சாமியே சொல்லியிருக்கே. நாமெல்லாம் சூத்திரர்கள், கீழ்ஜாதி என்றுதானே இங்குள்ளவர்கள் சொல்றாங்க. இங்கு வந்தால் நாம் அதையெல்லாம் ஒத்துகிட்டது போலாயிடும் அல்லவா?’’ என்றான் பண்பரசன்.
“நீ சொல்றது உண்மைதான் தம்பி. எனக்கும் இப்பத்தான் உண்மை விளங்குது தம்பி. இதுக்கெல்லாம் என்னதான் விடிவு?’’ என்று கேட்டார் சித்ராதேவி.
“நாம் மனிதர்களைத்தான் மதிக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் முழு வீச்சுடன் செயல்படுத்தப்பட வேண்டும். கோயிலுக்குப் போனால்தான் நல்லது நடக்கும் என்கிற மூடநம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்’’ என்றான் பண்பரசன்.
“உண்மைதான் தம்பி. ஜாதியத் திமிரால்தான் இந்த ஆளுக்கு என்னையே அடிக்கத் தோன்றியிருக்கு. தம்பி, நீ சொல்றது போல எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆனாத்தான் என்னைப்போல நம்பிக்கை உள்ளவர்களுக்கும் தீர்வு ஏற்படும்’’ என்றார் சித்ராதேவி.
“சரி, சரி. இங்கேயே ஏன் பேசிக்கிட்டு இருக்கணும்? வீட்டுக்குப் போகலாம்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினாள் விமலா.
“இனிமேல் இந்தப் பக்கம் வரவே கூடாது. மற்றவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்வோம்’’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டே புறப்பட்டார் சித்ராதேவி.
அனைவரும் புறப்படத் தயாரானபோது தட்டுத் தடுமாறி எழுந்த அர்ச்சகர், அவர்கள் போவதையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.