தொண்டருக்குத் தொண்டராக வாழ்ந்து, தந்தையின் வழியில் அவரின் மனித நேயக் கொள்கைகளை அகிலமெங்கும் எடுத்துச் செல்லும் தமிழர் தலைவர் வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுடன் சமீபத்தில் சீனா, தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சென்றிருந்த அனுபவத் துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சென்னை விமான நிலையத்தில் புறப்பட்டதிலிருந்து வந்து சேரும் வரை சென்ற இடங்களில் எல்லாம் செல்ல வேண்டிய நேரத்திற்கு முன்னதாக உரிய அனைத்துத் திட்டமிடுதலையும் கேட்டும் ஒருங்கிணைத்தும் செயல்பட வைத்தது எங்களது பயணம் முழுமைக்கும் வெற்றியைத் தந்தது எனலாம்.
சிங்கப்பூரிலிருந்து தைவான் சென்றபோது விமான நிலையம் அருகில் இருந்ததால் இன்னும் அரை மணி நேரம் கழித்துச் செல்லலாம் என மோகனா அம்மா அவர்களும், திருமதி. தமிழ்ச்செல்வி அவர்களும் கூறினர். உடனே புறப்படுவோம் என்று ஆசிரியர் கூறியதால் புறப்பட்டோம். விமானத்தில் ஏற 10 நிமிடங்கள்தான் மிஞ்சியது. இவ்வளவு முன்கூட்டியே புறப்பட்டு வந்தும் நேரம் சரியாக இருக்கிறது என்று சொல்லி தந்தை பெரியார் அவர்களைக் கோடிட்டுக் காட்டினார்.
அய்யா அவர்களிடம் சிறிது நேரம் கழித்துப் புறப்படலாம் என்று சொன்னால், இங்கு வேலையெல்லாம் முடிந்துவிட்டது. இங்கே அமர்ந்திருப்பதற்குப் பதிலாக ரயில் வரும் பிளாட்பார்மில் போய் அமர்ந்துவிட்டால் பயணத்திலும் தொல்லை இருக்காது. அதே போல் தோழர்கள் அங்கு வருபவர்களிடமும் சிறிது உரையாடலாம் என்று கூறுவதை ஞாபகப்படுத்தி, தன் புத்தியே என்றாலும் அய்யா தந்த புத்தியை மெய்சிலிர்க்கக் கூறி தந்தை தடத்தில் தடம் பிறழாமல் இருக்க வேண்டும் என்ற பாடத்தை எடுத்துக் கூறுவார்.
உலக மூத்த தொழில்நுட்பக் கல்வியாளர்கள் மாநாடு சீனாவில் உள்ள பீகிங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கிடைத்த ஓய்வு நேரத்தில் சில்க் மார்க்கெட் என்ற பொதுச் சந்தைக்குச் சென்றோம். எங்களுடன் நமது பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யத்தில் பயின்று, தற்போது பெய்ஜிங் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் சதீஷ் குமரன் அய்.எப்.எஸ். அவர்களும் அவரது வாழ்விணையரும் வந்தனர்.
எங்கு சென்றாலும் புத்தகக் கடையைவிட்டு வேறு எந்த இடத்திற்கும் செல்ல விரும்பாத ஆசிரியர், தான் அணிந்து வந்த காலணிகள் (ஷூக்கள்) திடீரென்று மோசமான நிலையை அடைந்தும்கூட மாநாட்டில் கலந்து கொண்டார். கருமமே கண்ணாயினார் என்ற முதுமொழிக்கேற்ப தனது பணியினை முடித்துவிட்டு எங்களின் நினைவூட்டலில் புதுக்காலணிகள் வாங்கச் சென்றோம்.
மூன்று கடைகளில் பார்த்தோம். ஆசிரியருக்குப் பிடித்திருந்த போதும், விலை அதிகமாக உள்ளது என்று திரு. சதீஷ் சொன்னதும் அப்படியே வைத்துவிட்டார். நான்காவது கடையில் சென்று பார்த்து ஒரு காலணியைத் தெரிவு செய்தபோது, நண்பர் சதீஷ் அவர்கள் நன்றாக உள்ளது, நேர்த்தியான விலை என்றதும் இன்னொரு காலணி இணையையும் வாங்கினார்கள்.
சொல்லிலும் செயலிலும் வாழ்விலும் உணர்விலும் பேச்சிலும் மூச்சிலும் பெரியார்! பெரியார் !! பெரியார்!!! அவருக்கு உரியார் நம் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியரைத் தவிர வேறு எவரும் இருக்க முடியுமா?
நாங்கள் சென்ற இடங்களில் சிங்கப்பூர் தவிர மற்ற இடங்களில் எங்களுக்கு முகவரி பெரியார் என்ற மூலம்தான் என்றால் அது மிகையாகாது. ஷங்காய் சங்கமத்தில் (தமிழர்களின் வரவேற்பில்) கலந்துரையாடும்போது ஒவ்வொருவரும் தந்தை பெரியார், உங்கள் (ஆசிரியரைப் பார்த்து) உழைப்பெல்லாம் இல்லையென்றால் நாங்கள் எவ்வாறு இந்த நிலையை அடைவது? எனவே, நீங்கள் (ஆசிரியரை) நீண்ட நல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டும். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயர்வடைய திராவிடர் கழகம் என்ற மனிதநேய இயக்கம் தொடர்ந்து தங்குதடையின்றிப் பணியாற்ற வேண்டும் என்ற அவாவைத் தெரியப்படுத்தினர்.
அதேபோல நாங்கள் தைவானுக்குச் சென்றபோது தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் மகேஷ், திருவாளர்கள் பெனக்டிக் சந்தோஷ், ஆப்ரஹாம் ஜோசப் மற்றும் இவர்களைப் போன்று இன்னும் பலர் இதே நிலையில் கருத்துத் தெரிவித்தனர். தந்தை பெரியார் பணியின் மூலமாக முகிழ்த்த நன்முத்துக்களாகிய இவர்கள், யாரால் வந்தோம்? எமது இயக்கத்தின் மனிதனை நினை தத்துவத்தால் வந்திருக்கிறோம் என்று மாறி மாறி ஆசிரியரிடம் கூறி தங்கள் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இவர்கள் மூலமாக பெரியார் உலகமெல்லாம் பேசுகிறார்; சிந்திக்கத் தூண்டுகிறார். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற வரிகளை நமது தமிழர் தலைவர் எவ்வாறெல்லாம் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை நேரிடையாகப் பார்த்த நிலையில், நண்பர்களே! சந்தித்தவர்களெல்லாம் ஏதோ மானமிகுவாளர்கள் என்று நினைத்துவிடாதீர்கள். மாறாக இ-_மெயில் மூலமாக பெரியார் என்ற உலக இணையத்தில் வந்தவர்கள் என்றால் பாருங்களேன். ஆசிரியர் அய்யா அவர்களின் கூற்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது. எது நம்மை இணைக்கிறது என்று பார்ப்போம். மாறாக, பிரிப்பதைப் பின்பற்றாமல் என்பது சரிதானே! சிங்கப்பூரில் நடைபெற்ற பெரியார் புகைப்படக் கண்காட்சியைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடனான வினா_விடை என்ற கலந்துரையாடலில் ஆசிரியர், சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திரு.விக்ரம் நாயர் (சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உள்ள இளைய உறுப்பினர், தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பெருமைக்குரியவர்). இவர்களோடு நானும் கலந்துகொண்டேன். பல்வேறு சிறப்பான வினாக்களை சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் ஆசிரியரிடம் கேட்டார்கள். அதுபோழ்து செல்வி குந்தவி, அய்யா நீங்கள் பெரியாரிடத்தில் நீண்ட நாட்கள் அவரோடு இணைந்து மற்றவர்களுக்கெல்லாம் கிடைத்தற்கரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த நிலையில் உங்களுக்கு மறக்க முடியாத சம்பவம் என்று எதைக் கருதுகிறீர்கள் என்ற வினாவைத் தொடுத்தார்.
அதற்கு ஆசிரியர் அவர்கள், பல்வேறு நிகழ்வுகள் என் மனக்கண் முன் நிழலாடுகின்றன. இருந்தாலும் ஒரு சம்பவத்தை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். அய்யா அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நோயுற்ற தோழர் ஒருவருக்குப் பொருளுதவி கேட்டதும், என்னைப் பார்த்து ஒரு விரலை உயர்த்திக் காட்டி செய் என சைகையில் விளக்கினார். அதை நான் 1,000 என்று எழுதிக்கொடுத்து விடுதலையில் அச்சாகி விட்டது. இதனைப் பார்த்த அய்யா அவர்கள் அச்சகப் பொறுப்பாளர்களை அழைத்துச் சினந்து, அச்சாகிக் கொண்டிருந்த பிரதிகளை உடனே நிறுத்தச் சொல்லி 100 ரூபாய் என திருத்தி வெளியிடச் சொல்லியுள்ளார்.
இந்தச் செய்தியை அறிந்த நான் அய்யா அவர்களைச் சந்தித்து, அய்யா தாங்கள் ஒரு விரலை உயர்த்திக் காட்டியதைத் தவறாகப் புரிந்துகொண்ட என்னால்தான் தவறு நடந்தது என்பதை விளக்கியதும், ஓஹோ! நீதான் அதைச் செய்தாயா? சொன்னால் நாம் அதைச் செய்யவேண்டும் அல்லவா, ஆகவேதான் நான் அதைத் திருத்தி வெளியிட்டேன். சரி, பரவாயில்லை என தந்தை பெரியார் கூறியதை நினைவுப்படுத்தினார். தவறுகளைப் பொதுவாக மறைப்பதும், மற்றவர்கள் மேல் போடுவதும் நடைமுறையில் பலர் செய்யும் செயல். அதையெல்லாம் மாற்றவேண்டும் என்ற உயரிய சிந்தனைகளை மட்டுமல்ல. செயல்படுத்துவதிலும் மாமனிதர் என்ற நிலையில் தமிழர் தலைவர் அவர்கள் இந்த உதாரணத்தைத் தனது மறக்கமுடியாத சம்பவங்களில் ஒன்றாக, குறிப்பாக தவறைச் செய்துவிட்டு வருத்தம் தெரிவிப்பதைவிட எதையும் சரியாக தீர கேட்டறிந்து செய்யவேண்டும் என்ற உன்னதக் கோட்பாட்டை உணர்த்தும்விதத்தில், மாணவர்களுக்குச் சொல்லி, தான் எப்போதும் அதன்பின் எந்த நிகழ்வையும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் செய்வதே கிடையாது என்று தான் கற்றுக்கொண்ட பாடத்தைப் பால பாடம் போல் நாம் அனைவரும், தவறு செய்யாமல் பணி செய்வதன் அவசியத்தை உணர்த்தும் வண்ணம் ஒரு வாழ்வியல் சிந்தனையாக விளக்கினார். இதைத்தான் அனைவரிடமும் ஆசிரியர் அவர்கள் எப்போதும் விரும்புவார்கள் என்பதை வலியுறுத்தும் வண்ணம் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
வாழ்வும் வாக்கும் வாய்மைக்கு வளம் சேர்க்கும் என்பது சரிதானே!
– பேராசிரியர் நல். இராமச்சந்திரன்
துணைவேந்தர் – பெரியார் மணியம்மை பலகலைகழகம்