ஆசிரியர் பதில்கள்

டிசம்பர் 01-15

கேள்வி : இயற்கை நமக்கு எவ்வளவோ நன்மைகளைத் தந்திருக்கிறது. (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்). இருந்தும் அவற்றைப் பஞ்ச பூதம் என்று அழைக்கின்றார்களே ஏன்?  – தி.இரமணன், காஞ்சி

பதில் : வடமொழியில் – சமஸ்கிருதத்தில் அவ்வாறு அழைக்கப்படுவதை, பேச்சு வழக்காக்கி விட்டனர். அவ்வளவுதான். பஞ்ச – அய்ந்து. பூதங்கள் – என்பது இவைகளைக் குறிக்கும்.

கேள்வி : தங்களின் 79ஆவது பிறந்த நாளில் தாங்கள் தமிழினத்திற்குக் கூறும் செய்தி என்ன? – வெங்கட. இராசா, ம.பொடையூர்

பதில் : தமிழினம் தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய வழியில் மானமும் அறிவும் பெற்று, சுயமரியாதை வாழ்வான பகுத்தறிவு வாழ்க்கை வாழ்ந்து, சமுதாயக் கடன்களை செவ்வனே வளர்த்து, தொண்டாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள்தான்!

கேள்வி : தமிழ்நாட்டில் நடப்பது துக்ளக் தர்பார் ஆட்சியா? துக்ளக் சோ ஆலோசனையில் நடக்கும் அலங்கோல ஆட்சியா? –  காழி கு.நா. இராமண்ணா, சென்னை – 62

பதில் : அலங்கோல ஆரிய ஆட்சி. துக்ளக் ஆட்சி செய்ததில்கூட சிலவற்றில் காரணகாரியம் உண்டு. இங்கு…….? மருந்துக்குக்கூட, தேடினாலும் கிடைப்பதில்லை. வாக்களித்தவர்களை இப்படி உலகில் – இவ்வளவு விரைவில் தண்டித்ததாக வரலாறு இல்லையே!

கேள்வி : தமிழர்களும் தம் உரிமைக்காக, அன்னா ஹசாரே வழியில் சண்டித்தன மிரட்டல் பாணி போராட்டங்களை நடத்தினால்தான் மத்திய காங்கிரஸ் ஆட்சி திரும்பிப் பார்க்குமா? – ப. வரதராசன், கும்மிடிப்பூண்டி

பதில் : என்ன செய்வது? கலகம் விளைந்தால்தான் நியாயம் பிறக்கும் என்ற வழியில் நாட்டை காங்கிரஸ் தள்ளுவது ஒரு சிறிதும் சரியல்ல.

கேள்வி : இலங்கையில், எண்ணற்ற தமிழர்களைக் கொன்றபோது, வாய்மூடி மவுனியாக இருந்த இந்திய அரசு லிபியாவில் போரில் இறந்த மக்களுக்காக சர்வதேசிய நீதிமன்றம் இதைக் கேட்க வேண்டும் என்கிறதே. இதுதான் இனப்பற்றா? – உ.கோ.சீனிவாசன், திருப்பயற்றங்குடி

பதில் : நெஞ்சம் பதறுகிறது – இந்த நிலைகெட்ட மத்திய அரசின் இரட்டை நிலையை நினைத்தால்.

கேள்வி : அல்பேனியா நாத்திக நாடு என்பது உண்மையா? அந்நாட்டின் தகவல் ஏதாவது தருவீர்களா? – இயற்கைதாசன், கொட்டாகுளம்

பதில் : ஆம்; நாத்திக நாடு – தந்தை பெரியார் இலக்கு பற்றுக்கூட; ஒரு பாடத்திட்டம் இருந்தது முன்பு என்ற தகவல்கள் கசிந்துள்ளன. ஆய்வுக்குரியது, தேடிக் கண்டுபிடிக்கலாம். (கம்யூனிசத்தை முன்பு கைக்கொண்ட நாடு)

கேள்வி : மாநிலப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வரும் திட்டம் பற்றி மத்திய அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்பது பற்றிய விவரம், தங்களின் கருத்தென்ன? – பெ.கூத்தன், தி.க.சிங்கிபுரம்

பதில் : கிணற்றில் கல்லாக இருக்கிறது; மாநில அரசும் அல்லவா குரல் கொடுக்க வேண்டும். நம்முடைய முயற்சி துவக்கம்தான்!

கேள்வி : அன்னா ஹசாரே அவர்களைக் குடியரசுத் தலைவராக்கும் முயற்சியில் பா.ஜ.க. நினைத்துக் கொண்டிருப்பது பற்றிய தங்களின் கருத்து? – த.பெரியசாமி, முக்காணி

பதில் : கண்டிக்கப்படவேண்டிய ஒன்று; ஏற்கத்தக்கதல்ல.

கேள்வி : தமிழக மக்கள் நடந்து முடிந்த இரு தேர்தல்களிலும் தேர்தலைப் பரிசுப் பொருளாகக் கருதி வாக்களித்துள்ளனரே, இதுபற்றிய தங்களின் அறிவுப் பூர்வமான கருத்தென்ன?  – வெ.அழகரசன், சாத்தூர்

பதில் : பரிசுப் பொருளாகவா? அல்லது பரிசுபோல் பெறவேண்டியதைப் பெற்ற வாய்ப்பாகவா? – போகப்போகப் புரியும்! பணநாயகம் வாழ்க!

கேள்வி : உரிமைக்காக… மொழிக்காக போரிடவும், உழைக்கவும் திராவிடர் திராவிடர்! வாழவும், கல்வி வசதி பெற்று அதிகாரம் செலுத்தவும் பார்ப்பனர்!! இதனைத் திராவிடர் இன்னமும் உணராமலிருப்பதற்கு என்ன காரணம்?

– நெய்வேலி க. தியாகராசன்,கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : நம் ஊடகங்கள்கூட மக்களுக்கு இதை உணர்த்தத் தவறியதால்தான். இதை மாற்ற விடுதலை 50 ஆயிரம் சந்தா இயக்கம் நிச்சயம் பயன்படும். தமிழர்கள் இன உணர்வுடனும் நன்றி உணர்வுடனும் செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *