இந்த ஆண்டின் சமூகநீதிக்கான கி.வீரமணி விருது பெறும் வீ.கலைச்செல்வம்
தந்தை பெரியாரின் தொண்டு, மனிதநேயம் மற்றும் அவரின் இலட்சியக் கொள்கைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்கிற ஒரே பணிதான் தம் தொண்டறம் என வாழ்ந்து வரும் தமிழர் தலைவர் என்று கூறுவதைவிட, என்றும் என் பாசத்துக்குரிய மரியாதைக்குரிய என் இனிய நண்பர் என்றே அவரை அழைக்க விரும்புகிறேன்.
பெரியாரிடம் கேட்டதை, கற்றதை பலன் ஏதும் எதிர்பார்க்காமல், நன்றி மறவாமல் இன்றுவரை அய்யாவின் வழியில் மட்டும் வாழ்ந்துவரும் ஒரு நற்பண்பாளர்.
அவருடன் பழகும் வாய்ப்பு யாருக்குக் கிடைத்தாலும், அவரின் உயர்ந்த குணம் நம்மை உறுதியாகக் கவரும்.
சிங்கப்பூர் வரும்பொழுது, அவரைச் சந்திக்க யாருடன் (புதிதாக) சென்றாலும், எந்த வித்தியாசமும் இன்றி, அவர் காட்டும் அன்பு, மரியாதை, கனிவான பேச்சு, முதல்முறை சந்திக்கும் எவருக்கும், அவரின் பணிவு மனத்தை விட்டு நீங்காது. அதைப்போல், ஒவ்வொரு முறையும் அவரைச் சந்தித்துவிட்டு விடைபெறும்போது, வீட்டை விட்டு சற்று தள்ளி இருக்கும் மின்தூக்கி வரை வந்து வழி அனுப்பும் அவரின் இயல்பை, பண்பைப் பார்த்து பலமுறை மெய்சிலிர்த்து இருக்கிறேன், பெருமைப்பட்டு இருக்கிறேன். இப்படிப்பட்ட ஒருவரின் அறிமுகம் (1995ஆம் ஆண்டுக்குப் பிறகு) கிடைத்ததை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். வைக்கம் வீரர் என்றால் பெரியார். மனிதப் பண்பாளர் என்றால் அது நம் ஆசிரியர் அய்யா ஒருவர்தான்.
பெரியார் வழியில் ஆசிரியர் அவர்களின் சிம்பதியைவிட எம்பதி என்பதே மனித நேயத்தின் முக்கிய அம்சம் என்னும் வாழ்வியல் சிந்தனைகளை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
இளமை மாறா அவரின் சிரித்த முகத்திற்கு எங்கள் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் – உளம் நிறை நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
– வீ. கலைச்செல்வம், சிங்கப்பூர்