கே: பா.ஜ.க.வின் “வேல் யாத்திரை’’ எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கான முயற்சியா?
– செ.கோவிந்தன்,பொற்பந்தல்
ப: எதைத் தின்றாலும் பித்தம் தீராது! தமிழ்நாட்டில் பா.ஜ.க. சித்தம் நிறைவேறாது. எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது!
கே: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர் குழுவில் பெண்ணுக்கு எதிரே சிறுநீர் கழித்த அநாகரிக ஆளை இடம்பெறச் செய்திருப்பது எதைக் காட்டுகிறது?
– சரவணன், வியாசர்பாடி
ப:பா.ஜ.க._ஆர்.எஸ்.எஸ். எந்த அளவு பாலினக் குற்றம் புரிந்தோரைப் பாதுகாத்து மகுடம் சூட்டி மகிழ்கிறது என்ற மமதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது! மக்கள் தண்டனை தரத் தயாராகிவிட்டார்கள்.
கே: மனுநீதியிலுள்ள பெண்கள் விரோதக் கருத்துகளை திருமாவளவன் சுட்டிக்காட்டியதை, பெண்களுக்கு எதிராகப் பேசியதாகத் திரித்துக் கூறி ஆர்ப்பாட்டம் செய்வதை எதிர்கொள்வது எப்படி?
– ஆதிலட்சுமி, மதுராந்தகம்
தொல்.திருமாவளவன்
ப: பிரச்சாரம்! இடையறாத மனு குலத்தான் சூழ்ச்சி, சூது, இரட்டை வேடங்களை அம்பலப்படுத்தும் அடைமழைப் பிரச்சாரம்!
கே: நீதிமன்றமே ஆளுநர் செயல்பாட்டைக் கண்டிக்கும் அளவிற்கு அவர் நடந்துகொள்வதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
– மா.யுவராஜ், சோழிங்கநல்லூர்
ப: ஆட்சி மாற்றம் _ தமிழ்நாட்டில் வரும்போது பல சூழல் மாறும். அதற்கிடையில இதுபற்றி மக்கள் மத்தியில் இடையறாத பிரச்சாரம், அறப்போராட்டங்கள் நடைபெற்று ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணியில் தீவிரமாக முனைப்புக் காட்ட வேண்டும்.
கே: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடங்களை குழு பரிந்துரைத்துள்ள நிலையில் 7.5% ஆக அரசு குறைத்தது எதற்காக? 10%ஆக ஆக்குவதற்கான வழிவகை இருக்கிறதா?
– ரகு, திருச்சி
ப: ஆணையை தமிழக அரசு நினைத்தால் உடன் மாற்றலாம்; அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டுவது சட்டப்படியும், நியாயப்படியும் அவசியம்.
கே: தமிழகத்தை சிறந்த மாநிலமாக பா.ஜ.க. அரசு கூறுவதன் உள்நோக்கம் என்ன?
– நாராயணன், தாம்பரம்
ப: “வேலிக்கு ஓணான் சாட்சி; ஓணானுக்கு வேலி சாட்சி’’ என்னும் பழமொழியை நினைவூட்டிக் கொள்ளுங்கள்
கே: ‘துக்ளக்’ குருமூர்த்தியோடு மணிக்கணக்கில் ரஜினி பேசியதிலிருந்தே அவரை அடையாளம் காட்டுவதாகக் கொள்ளலாமா?
– கிருஷ்ணகுமார், ராஜபாளையம்
ப: புதிய அரசியல் புரோக்கர் இப்படியெல்லாம் ஆலாய்ப் பறந்தாலும், உயர உயரப் பறப்பதுபோலக் காட்டினாலும், ஊர்க்குருவி ஒருபோதும் பருந்து ஆகிவிட முடியாது! ஏற்கனவே அவரது பல முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன! அதன் தொடர்ச்சி தொடருகிறது, அவ்வளவுதான்!
கே: திராவிடம் வேண்டும் கழகங்கள் வேண்டாம் என்ற கமல்ஹாசன் நிலைப்பாடு பற்றி தங்கள் கருத்து என்ன?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப: கருத்துத் தெளிவற்ற வார்த்தை, சொல் விளையாட்டு. அவ்வளவுதான். மனுதர்மத்தை எதிர்ப்பது _ அது ஒரு குலத்துக்கொரு நீதி என்று கூறுவது திராவிடம் _ அதை எதிர்க்கத் துணிவில்லாதவர்களுக்கு ‘திராவிடம்’ வெறும் குழப்பமே! தமிழ்நாடு பா.ஜ.க.வின் ‘ஸ்லீப்பர் செல்’களை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் காணத் தவறமாட்டார்கள்!