‘உண்மை’ நவம்பர் 1 -15 இதழில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் அருமை. ‘தீபாவளி’ பற்றிய மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. ஆரியர்கள் எப்படி தன்னுடைய பண்டிகைகளை நம்முடைய பண்டிகைகளாக மாற்றி அதன் மூலம் வணிகம் செய்கிறார்கள் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் வே.எழில் அவர்களின் ‘ஆண் குழந்தை வளர்ப்பு’ கட்டுரை இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. பெற்றோர்கள் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் உடல் போக்குகளையும், அவர்களுடைய குணம் சார்ந்த விஷயங்களையும் சிறு வயது முதலே சொல்லித் தந்து வளர்க்க வேண்டும் என்பதை ஆசிரியர் அருமையாக விளக்கி எழுதியுள்ளார்.
ஜெயக்குமார் அவர்களின், பெரியார் – இங்கர்சால் ஒப்பீட்டுக் கட்டுரை பகுத்தறிவாதிகளின் இனநலப் போக்குகளை நாம் அறிந்துகொள்ள உதவியாக உள்ளது. ‘அய்யாவின் அடிச்சுட்டில்…’ வரலாற்றில் ‘வி.பி.சிங் அவர்கள் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திய பாங்கு அருமை. ஆசிரியரின் ‘நச்’ பதில்கள் அருமை. முகப்புக் கட்டுரையாக உள்ள கோ.கருணாநிதியின் ‘ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கட்டாயம் ஏன்?’ கட்டுரை மத்திய ஆளும் பா.ஜ.க. எக்காலத்திலும் கணக்கெடுப்பை வெளியிடாது. அதனை மூடி மறைத்து நம்மை அடிமையாக நடத்தவே முயலும் என்பது அவர்களின் கொள்கையாக உள்ளது. மருத்துவர் இரா.கவுதமனின் மருத்துவக் கட்டுரை மருத்துவ உலகில் நடைபெற்று வரும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியும் அதன்மூலம் மனிதர்களின் நோய்க் கூறுகளை அழித்து நீண்ட நாள் வாழ முடியும் என்பதைக் கூறுகிறது. ‘உண்மை’ இதழ் அனைவரும் படிக்கும் வகையில் பல்வேறு செய்திகளோடு வெளிவருவது அருமை. தங்களின் பணி சிறக்கட்டும்.
இப்படிக்கு
சமத்துவ அசுரன்
‘உண்மை’ அக்டோபர் 16-31, 2020 படித்தேன். அதில் ஆசிரியர் எழுதிய தலையங்கம் படித்தபோது, நம் மக்களின் தியாகங்கள் பற்றிய நினைவுகள் மனதை வருடுகிறது. ‘உண்மை’யில் வெளிவரும் செய்தி இளைஞர்களுக்கு நல்ல பாடமாக அமையும். அதனை ஒட்டிய சில வரலாற்றுச் செய்திகள்:
1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று திருச்சி துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் இந்தியின் கட்டாயத்தை எதிர்த்துத் தந்தை பெரியார் வீறுரை.
1938 பிப்ரவரி 27இல் காஞ்சியில் தமிழக வரலாற்றில் முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு.
1938இல் அய்ந்து பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்முதலில் தளை செய்யப்பட்டனர்.
1939 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் உயிர் ஈகம் செய்தவர் நடராசன்.
26.1.1965 சிவகங்கை மாணவர் இராசேந்திரன் தமிழக வரலாற்றில் மொழிப் போருக்காகத் துப்பாக்கிச் சூடுபட்டு இறந்த முதல் பெருநிகழ்வு.
1965 பிப்ரவரி 2இல் கடலூர் – கடலூரை அடுத்த அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீரப்பன் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீயிட்டு வீரச்சாவு எய்தி ஈகியானார். உலக வரலாற்றில் 1965 போல மொழிப் போராட்டம் இதற்கு முன் நடந்ததாகச் செய்தியில்லை. அய்.நா.சபையிலும் பேசப்பட்டது. இந்த மொழிப் போரில்தான் முதன்முறையாய் இராணுவம் வந்தது.
முதன்முதலாய்த் தமிழர்கள் குவியல் குவியலாய்க் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம் நடந்தது. உலக வரலாற்றிலேயே மொழிக்காக முதன் முதலாய்த் தீக்குளித்த துயரம் நிகழ்ந்தது.
மொழிப்போர் வரலாற்றை அனைவரும் படிக்க வேண்டும். அப்போதுதான் அண்ணாவின் அறிவு புலப்படும், நமது ஆசிரியரின் ஒப்பரும் இயக்கப் பணியை வியப்போடு பார்க்கிறேன்.
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி