ஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் – ஓர் ஒப்பீடு!

அக்டோபர் 16 - 31,2020

முனைவர் த.ஜெயக்குமார்

பகுத்தறிவு உலகின் 19ஆம் நூற்றாண்டில் உலகப்புகழ் அறிவு மாமேதை, ஒப்பற்ற பகுத்தறிவுப் பரப்புரையாளர், அமெரிக்க வல்லரசு நாட்டில் 1833ஆம் ஆண்டு பிறந்தவர் கர்னல் இராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆவர். அதே நூற்றாண்டில், சற்றேறக்குறைய 46ஆண்டுகளுக்குப் பின் 20ஆம் நூற்றாண்டின் முதன்மை தத்துவச் சிந்தனையாளராகவும், ஈடு இணைற்ற சமூக  சீர்திருத்த சமத்துவக் கொள்கைப் போராளியாகவும், இந்தியத் திருநாட்டில் 1879ஆம் ஆண்டு பிறந்தவர்தான் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் எனும் ஈ.வெ.ரா. (ஈரோடு வெங்கட்ட நாயக்கர் ராமசாமி) ஆவர்.

பிறப்புச் சூழலே அறிவுச் சிந்தனைக்குத் திறவுகோலானது

இங்கர்சாலின் தந்தையார் ரெவரென்ட் ஜான் இங்கர்சால் பெரும் கிறித்துவ மதப் பாதிரியார் ஆவார். அவர் வேதப் புத்தகத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்பக்கூடிய கடவுள் நம்பிக்கைகொண்ட மதப் பற்றாளராவார். அவர் தனது மகனையும் பாதிரியாராக்க வேண்டும் என்கிற பேராசையின் காரணமாக இங்கர்சாலை கண்டிப்புடன் வளர்த்ததோடு, கிறித்துவ மத வேதப் புத்தகமாம் பைபிளை வரிவரியாக வாசித்திடக் கட்டளையிட்டார். அவரும் விரும்பிப் படித்தார், ஆழமாகச் சிந்தித்தார். அவரது ஆற்றல்மிகு சுயஅறிவுச் சிந்தனையின் காரணமாக படிக்கப் படிக்க ஏராளமான சந்தேகங்கள் ஏற்பட்டன. அவை யாவும் கேள்விக் கணைகளாக வெடித்தன. அதற்கான விடைகள் சரியாகப் புலப்படவில்லை. மகனின் சந்தேகங்களிலும், வினாக்களிலும் நியாயம் இருப்பதை உணர்ந்த அவரது தந்தை, அவரது மூளையைக் கெடுக்காமல், மனசாட்சிக்கு உண்மையாக இருக்கும்படி சுதந்திரம் கொடுத்தார்.

அதேபோன்றுதான், பெரியாரின் தந்தையார் வெங்கட்டநாயக்கர் அவர்களும் மத ஆச்சாரங்களைக் கொண்ட வைணவ பக்தராவார். அதனால் நாள்தோறும் அவரது வீட்டில் இராமாயணம் போன்ற புராணக் கதாகாலட்சபங்கள், பக்தி பஜனைகள், நிகழ்ந்தவண்ணம் இருந்தன. இதனைக் கேட்டுக் கேட்டு இளம் வயதிலேயே அவரது சிந்தனையில் படும் பொது அறிவு வினாக்களுக்கு, விடைதேட முயற்சித்தார் பெரியார். அதோடு பெரியாருக்கு இருந்த ஒருவித குறும்புத்தனத்தின் காரணமாகவும் தலைவிதி போன்ற புரட்டுகளை எதார்த்தமாகத் தெளிவுபடுத்தினார். அதோடு நன்மை – தீமைகளுக்கும் நாமே காரணம் எனவும் உணரவைத்தார். மேலும், அவருக்கு நம்பிக்கையில்லாத கடவுள், புராணம் தொடர்பான பிரசங்கங்களில் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு விதண்டாவாதம் செய்வார். இவ்வாறாக நடைமுறைப் பட்டறிவின் மூலம் பெரியார் அவர்கள் ஒருவித இயற்கைப் பகுத்தறிவைப் பெற்றதோடு, அவருக்கு அப்போது தோன்றிய அய்யங்களுக்கு அறிவுத்தடை போடப்படாமல், சுயசிந்தனை நீரோட்டத்தோடு வளர்ந்ததால், பின்னர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தத்துவச் சிந்தைனயாளர்களுள் முதன்மையராகவும் இன்று உலகப் பெரியாராகவும், பகுத்தறிவுத் தந்தையாகவும் பரிணமிக்கச் செய்தது.

மாமேதைகளின் அறிவுக்கும் – கல்விக்கும் சம்பந்தமில்லை

இங்கர்சாலுக்கு பள்ளிப் படிப்பு என்பது குறைவுதான். ஆனால் நல்ல ஞாபகசக்தி கொண்டவர். மொழிகளை உபயோகிப்பதிலும், பேசுவதிலும் கதை சொல்வதிலும் திறமைமிக்கவர். சுயமாக நூல்களைப் படித்துப் படித்து ஏராளமான செய்திகளை மனதில் நிலைநிறுத்திக் கொண்டவர். பின்னாள்களில் சட்டங்களையும் படித்து தன்னை ஒரு வழக்கறிஞராக்கிக் கொண்டார்.

பெரியார் அவர்களோ 5 ஆண்டுகள் மட்டுமே தொடக்கக் கல்வி வரையில் பள்ளிப் படிப்பு பயின்று, தமது 10ஆம் வயதோடு படிப்பை நிறுத்திக்கொண்டவர். படிப்பைக் காட்டிலும் பெரியாருக்கு தொழிலில் அறிவுக்கூர்மை இருந்தது. 12 வயதிலேயே தமது தந்தையின் தரகுக்கடையாம் கமிஷன் மண்டிக்கு திறமைமிகு வணிகராகத் திகழ்ந்திட்டார். அதனூடே தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி போன்ற கலைக்களஞ்சியத் தொகுப்பு நூல்கள், இராமாயணம் உள்ளிட்ட புராணப் புத்தகங்களைப் படித்துப் படித்து அதனை ஆய்ந்து தோய்ந்து அறிவைப் பெருக்கிக் கொண்டதோடு, சுயமரியாதை, பகுத்தறிவு, சீர்திருத்தக் கருத்துகளை தமது சுயசிந்தனைகளோடு அவர்தம் பேச்சிலும் _ எழுத்திலும் பரப்பலானார்.

உலகிலேயே அதிமுக்கியமானவை – சுதந்திரமும், சுயமரியாதையும்

1877இல் இங்கர்சால் தமது கொள்கைப் பிரகடனமாக முழங்கியவை: “உலகத்திலேயே அதி முக்கியமான விஷயம் சுதந்திரம். அது உணவைவிட, உடையைவிடப் பெரியது. சிற்பம், ஓவியம், கலைகள் யாவற்றிலும் உயர்ந்தது. எல்லா மதங்களைக் காட்டிலும் சுதந்திரமே நனி சிறந்தது. இத்தகையை இணையில்லா மதிப்புடைய மனிதச் சுதந்திரம் எனும் மரகதத்தைக் காப்பாற்ற நான் எதனையும் இழக்கத் தயாராக இருக்கின்றேன்’’ என உலகிற்குப் பறைசாற்றினார்.

பெரியார் அவர்கள் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தபோது, தமது தலையாய திட்டமாகக் குறிப்பிட்டது யாதெனில்: “ஈவெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன்’’ என்றும், மேலும் சுதந்திரம் குறித்து தமது சிந்தனை வெளிப்பாடாக ‘குடிஅரசு’ இதழில் (18.7.1937) குறிப்பிட்டு எழுதியதாவது:

“மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.’’ இவ்வாறாக உலகில் “சுயமரியாதை’’ என்னும் ஒற்றைச் சொல்லை ஆயுதமாக்கி வெற்றி கண்டவர் பெரியாரே!

சுயமரியாதைக்கு பெரியார் தந்த விளக்கம் யாதெனில்: சொந்த அறிவுக்கு மரியாதை _ என் சுயமரியாதையை இழக்காமல், பிறர் சுயமரியாதையையும் பாதிக்காமல் அதாவது “எல்லோருக்கும் எல்லாமும்’’  என்பதாகும். நுட்பமான இச்சொல்லாடலில் பகுத்தறிவுச் சிந்தனை_சமத்துவ உணர்வு _ சமூக மேம்பாடு ஆகிய முக்குணங்களும் விளங்கும்.

கொள்கை லட்சியங்களுக்காகப் பதவியை விரும்பாதவர்கள்

1868ஆம் ஆண்டு இங்கர்சால் அவர்கள் அமெரிக்க_இல்லினாய்ஸ் மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலாக பெரிய பதவி வகித்தபோது, அவருக்கு கவர்னர் பதவி தேடி வந்தது. ஆனால், அந்த வாய்ப்பினை அவர் மறுத்தார். காரணம் அவர் தன்னுடைய கொள்கைகளை சிறிதளவும் விட்டுக்கொடுக்க மனமற்றவராக இருந்தார். அப்போது மறுப்புக்கான காரண விளக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது: “என்னுடைய நம்பிக்கை என்னைச் சேர்ந்தது, அது இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்ததன்று. இந்த உலகத்திற்கே மன்னராக ஆவதாயினுங்கூட என்னுடைய மன உணர்ச்சிகளில் ஒன்றையேனும் என்னால் அடக்கி விரட்ட முடியாது’’ என்று கூறி அப்பதவியை நிராகரித்ததோடு, தம் கொள்கைக்காக கடைசிவரை அரசாங்கத்தார் அளிக்ககூடிய எப்பதவியையும் ஒத்துக் கொள்வில்லை.

பெரியார் அவர்களையும் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த சமயத்தில், இந்தியாவின் சென்னை ராஜதானியின் பிரீமியர் முதல்வராகப் பதவியேற்க வருமாறு 1940இல் கவர்னராக பொறுப்பு வகித்த ஆர்தர் ஹோப் அவர்களும், பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக 1942இல் கவர்னராலும், வைசிராயாலும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தனர். அரசியலை விரும்பாத பெரியார் அவர்கள் பதவி தனை துச்சமென உதறித் தள்ளினார். தமது நோக்கம் சமூக சீர்திருத்தமே என அறுதியிட்டுக் கூறியவர் பெரியார்.

அதேபோன்று 1919இல் பெரியார் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்தபோதும், அதன் ஒத்துழையாமை இயக்கக் கொள்கைக்காக தாம் பொதுவாழ்க்கையில் அதுநாள் வரை வகித்து வந்த ‘ஹானரரி மாஜிஸ்திரேட்’ உள்ளிட்ட 29 கவுரவப் பதவிகளை ஒரே நாளில், ஒரே தாளில் ராஜினாமா செய்து பதவிகளைத் துறந்து வரலாறு படைத்தவர் என்பதும் பெரியாரின் தனிச் சிறப்பாகும்.

சமூக  அரசியல் மாற்றத்திற்குத் தூண்டுகோலான இவர்களின் சொற்பொழிவுகள்

இங்கர்சாலின் சொற்பொழிவுகள் அனைத்தும் கேட்போர் உள்ளத்தை இளகச் செய்து இழுத்ததுடன், அவர்களை வயப்படவும் செய்தது. அமெரிக்க நாட்டில் அதுவும் அக்காலத்தில் கட்டணம் செலுத்தி இங்கர்சாலின் பகுத்தறிவு ததும்பும் மதவாதத்திற் கெதிரான – கடவுள் நம்பிக்கைக்கெதிரான – நாத்திக நன்னெறிக் கருத்துகளைக் கேட்க மக்கள் திரண்டனர் என்பது உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாகும்!

1877இல் “மனிதன் – மங்கை – குழந்தை  அவர்தம் சுதந்திரம்’’  எனும் தலைப்பிலும், 1880  தலைவர் தேர்தலில் கார்பீல்டு, 1884 – அறவழி, 1885 – பொய்யும் அற்புதமும், 1894 – ஆபிரகாம் லிங்கன், வால்ட்டெயர், வேதப் புத்தகம், 1897- நான் ஏன் கடவுள் நம்பிக்கையற்றவர்? மனிதரை சீர்திருத்தும் விதம், இதேபோன்று உண்மை உணர்ச்சி, கடவுள்கள், 1899 – மதம் என்றால் என்ன? பேய்_பூதம்_பிசாசு அல்லது ஆவி, எந்த வழி? என்பன போன்ற பிரபலமான சொற்பொழிவுகள் சமூக அரசியல் மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமைந்தன. அவை யாவும் புத்தகங்களாகவும் பிரசுரிக்கப்பட்டன என்பதே பகுத்தறிவுக் கொள்கைப் பரவலுக்குச் சான்றாக அமைந்தன. இதைவிடக் கூடுதல் சிறப்பொன்று உண்டென்றால் அதுதான், இங்கர்சாலின் சொற்பொழிவு நூல்களை தமிழாக்கம் செய்து 1933களிலேயே 6 நூல்கள் வெளியிட்டவர்தான் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் அவர்களது சொற்பொழிவு குறித்துக் கூறவேண்டுமானால், நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போன்று ஆழமாக, அதாவது மூலபலத்தோடு தர்க்கம் செய்து வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்த்தெடுக்கும் கடப்பாரை போன்ற தாக்கத்தைக் கொண்டவையாகும். பெரியாரது தத்துவத் தாக்கம் என்பது அண்ட பிண்ட சராசரம் வரை பாயும் ஈட்டி போன்ற வலிமையானவையாகும். இந்தியாவின் முதன்முதல் மனிதஉரிமைப் போராட்டமாம் வைக்கம் பேராட்டம் என்பது 1924இல் மனிதன் தெருவில் நடக்க உரிமைக்கானது. இதில் பெரியாரின் தீண்டாமை ஒழிப்புக்கான சொற்பொழிவுகள் இந்தியாவையே புரட்டிப் போட்டது.

அதேபோன்று 1925இல் சமத்துவமற்ற சமூகத்தினை மேம்படுத்திட கல்வி –  வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரியாக இடஒதுக்கீடு கேட்டுத் தொடர் போராட்டம் செய்தும், பின் காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டபோதும் பேசிய பெரியாரின் வாழ்வுரிமைச் சொற்பொழிவுகள் மிகப்பெரிய சமூகப் புரட்சியை உண்டாக்கியது என்றே சொல்லலாம். மேலும், பெரியாரின் பிரபலமான சொற்பொழிவுகளும், பத்திரிகை இதழ்களில் அவர் எழுதியவையும், பெரியார் சிந்தனை நூல்களும், மிகப்பெரிய விழிப்புணர்வுத் தாக்கத்தினையும்_உணர்ச்சியையும் – கிளர்ச்சியையும் உண்டு பண்ணி சுயமரியாதை சொரணைபெற்று பகுத்தறிவால் மேம்பட்டிட வழிவகுத்ததையும் அறியமுடிகிறது.

பெரியாரின் சிந்தனைச் செல்வங்களான அவர்தம் நூல்வரிகளிலிருந்து 1930 இந்தியாவின் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த முதல் சிந்தனை 1930 – ‘கர்ப்ப ஆட்சி’, 1934 – ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நவீன பெண்ணியத்துக்கான உலகின் முன்னோடி நூல், 1938 – பெரியாரின் தொலைநோக்கு அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடான ‘இனிவரும் உலகம்’, 1944 – ‘கிராம சீர்திருத்தம்’, ‘தத்துவ விளக்கம்’ இப்படியான 153க்கும் மேற்பட்ட நூல் வடிவிலான சிந்தனைச் செல்வங்கள்தாம் இந்தியாவில் நிலவி வந்த ஆரியர் – திராவிடர் எனும் சமத்துவமற்ற சமூகத்தினைச் சீர்திருத்தி, அடிமைப்பட்டிருந்த திராவிடர் சமுதாயத்தை சமூக  பொருளாதார – அரசியலில் பெரும் மாற்றம் கண்டு முன்னேற்றமடைய தூண்டுகோலாக அமைந்தன என்பது புலனாகிறது.

(தொடரும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *