பெண்ணால் முடியும் : உலகின் இளம் பெண் பிரதமர்

அக்டோபர் 16 - 31,2020

தந்தை பெரியாரின் பெண்ணிய பொன்மொழிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவது,  பெண்களுக்கு படிப்பு, சொத்துரிமை ஆகியவை இருந்துவிட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்றமடைந்துவிடும். நம் முன்னேற்ற வண்டிக்குப் பெண்கள் முட்டுக்கட்டை என்பது நம் சமுதாயத்துக்கே அவமானமாகும். ஆதலால், சீர்திருத்தம் செய்ய வேண்டியவர்கள், பெண்கள் விடுதலையும், அறிவும், படிப்பும் பெறும்படி பார்க்க வேண்டும்.  ( 29.9.1940, குடிஅரசு பக்கம் 15)

தற்போது மிக உயர்ந்த அதிகாரம் என்னும் பொறுப்பில் உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணியாக அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வருபவர், அரசியலுக்கு வந்து ஏழே ஆண்டுகளில் பின்லாந்தின் இளம்பெண் பிரதமர் என்கிற சிறப்பைப் பெற்ற சன்னாமரின்.  முப்பத்து நான்காம் வயதிலே இந்த உயரிய பொறுப்புக்கு மக்களால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாழ்க்கையில் அவர் எதிர்நீச்சல் போட்டு வென்றதைப் பார்க்கையில் நமக்குள் புதிய நம்பிக்கை பிறக்கிறது.

அவரின் குடும்பச் சூழலே அவர் மிகவும் பக்குவப்படக் காரணமானது. இளம் வயதில்  தந்தையை இழந்த அவர், தாயாரால் வளர்க்கப்பட்டார். அவரது குடும்ப பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்ள தன்னுடைய பதினைந்தாம் வயதில் பேக்கரி கடையில் பணியாற்றினார். பள்ளிக் காலத்தில் படிப்பைத் தொடர பருவ இதழ்களை விநியோகம் செய்யும் பணியையும் செய்துள்ளார். அவருக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தவர், அவருடைய தாயார்.அவர் விரும்பியதைச் சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை தன் மகளுக்குத் தந்திருக்கிறார். குடும்பத்திலேயே   பல்கலைக்கழகத்திற்குச் சென்ற முதல் ஆளும் சன்னாமரின் தான்.

தன்னுடைய இருபதாவது வயதில் அரசியலில் பிரவேசித்தார். ஹெல்சின்கியின் வடபகுதியில் இருந்த டாம்பீயர் என்னும் ஊரில் உள்ளூர் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தொடர்ந்து போட்டியிட்டு தன்னுடைய இருபத்தியேழாம் வயதில் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015இல் பின்லாந்தின் முக்கிய அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து மக்களின் ஆதரவு கொடுக்கப்பட்டு, அனைத்து கட்சிகளாலும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு பெரும் வெற்றியும் பெற்றார். இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த அவர் நாட்டை வளம் பெற்ற நாடாக மாற்ற இலக்கு அமைத்தார். எதிரிகளின்  விமர்சனத்தை அவர் பொருட்படுத்தவில்லை. “என் வயதைப் பற்றியோ, பாலினத்தைப் பற்றியோ எனக்கு என்றும் சிந்தை கிடையாது. அரசியலில் நான் வெற்றி பெறுவதற்குக் காரணம் மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை தான்” என உறுதிமிகக் கூறுகிறார்.

பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக இளம் வயதில் பெரிய பொறுப்பை ஏற்ற நிலையில், “நான் சமுதாயத்தை எப்படி நோக்குகிறேன் என்பதை நான் வளர்ந்த சூழல் தீர்மானித்தது. எதிர்காலம் நோக்கியுள்ள பெரிய பிரச்சனைகளுக்கு மூத்த தலைமுறையினர் தீர்வு காணாததே நான் இப்போது அரசியல் களத்தில் இருப்பதற்குக் காரணம்“ என்கிறார். அனைத்து மகளிருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய அய்ரோப்பாவின் முதல்நாடு என்ற பெருமையுடையது பின்லாந்து. 1907 இல் உலகில் முதன் முதலாகப் பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பின்லாந்தில் தற்போது முக்கியமான பொறுப்புகளில் அதிகமான இடங்களில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலகம் இன்று எதிர் கொண்டுள்ள கரோனா தொற்றுப் பரவலையும் எதிர்கொண்டு மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருவதாக உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *