கவிதை : நரிகளின் நாட்டாண்மை ஒடுக்குவோம்!

மார்ச் 16-31 2020

நாட்டுநடப் பெல்லாமே தலைகீ ழாக

                நல்லவர்கள் நடமாட நாணு கின்றார்;

கேட்டினையே செய்வோர்தாம் பெருத்துப் போனார்

                கீழ்மையிலே புரள்வோரே மேலோர் ஆனார்¢

ஓட்டையுள குடத்தில்நீர் நிரம்பு மாமோ?

                ஒழுக்கமிலார் என்றைக்கும் திருந்த மாட்டார்!

வாட்டத்தில் உழல்வோரின் வாழ்வில் மாற்றம்

                வரவேண்டும்; மறுமலர்ச்சி தோன்ற வேண்டும்!

நேர்மைக்குப் புறம்பாக நடப்போ ராலே

                நிகழாது முன்னேற்றம் நாட்டில்; எல்லாச்

சீர்மையுமே வெருண்டோடி விலகி நிற்கும்!

                சிறகொடிந்த பறவையெனச் சிதையும் வாழ்க்கை;

வேர்களிலே வெந்நீரைப் பாய்ச்சு வோரால்

                விடியாது பொழுதென்றும்; எழுந்து நின்றால்

நார்களையே நறுமலராய் ஏய்க்கும் குள்ள

                நரிகளது நாட்டாண்மை ஆட்டம் காணும்!

சட்டத்தைத் திருத்துவதன் மூலம் மேன்மை

                சாகடிக்கப் படுகின்ற கொடுமை என்னே!

திட்டங்கள் எல்லாமும் தோற்றுப் போகத்

                திணறுகிறார் தவிக்கின்றார் ஏழை மக்கள்!

கட்டற்ற பொருளியலின் வீழ்ச்சி யாலே

                கதிகலங்கி வளர்ச்சியுமே கானல் நீராய்

எட்டாத தொலைவுக்கே சென்ற தந்தோ!

                ஏமாற்றிப் பிழைப்போர்க்கே இனிய காலம்!

கல்வியிலே குளறுபடி; ‘நீட்’டால் நாளும்

                கலக்கமுற்றுத் தவிக்கின்றார் ஒடுக்கப் பட்டோர்!

பொல்லாத போக்கிலிகள் ஊழல் சேற்றில்

                புரண்டிங்கே கோடிகளைக் குவிக்க லானார்!

வெல்வதற்கே ஒருவருமே இல்லை யென்றே

                விளம்பரத்தேர் ஓட்டுகிறார்! இளைஞர் எல்லாம்

வல்லூறுக் கூட்டத்தை அடக்கி வென்று

                வரலாறு படைக்கும்நாள் தொலைவில் இல்லை!

– முனைவர் கடவூர் மணிமாறன்

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *