நம்பிக்கை தரும் திரைப்படங்கள் : நாடோடிகள்-2

மார்ச் 16-31 2020

கலைமணி & இளையமகன்

ஊரின் பிரச்சினைகளை தன் மேல் போட்டுக் கொண்டு செயல்படும் கதையின் நாயகன் ஜீவா (நடிகர் சசிகுமார்), தன் ஜாதித் தலைவர் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவரையும் சேர்த்தே எதிர்க்கக் கூடிய போராட்டக்காரர். அதனாலேயே அவருக்குப் பெண் தரத் தயங்குகின்றனர் _ சொந்த மாமா உள்பட பலரும்! சொந்த வாழ்க்கை இப்படி ஆகிறது எனினும் நண்பர்களுடனும், மூத்த செஞ்சட்டைத் தோழர் ஒருவருடனும், மருத்துவரான பெண் தோழர் செங்கொடி (அஞ்சலி)யுடனும் போராட்டங்களைத் தொடர்பவர். சமூக ஊடகத்தின் வாயிலாக மாணவர்களையும், இளைஞர்களையும் “நாமாவோம்!’’ என்ற முழக்கத்தோடு ஒன்று திரட்டி போராட்டத்துக்குத் தயார் செய்யும்போது, காவல்துறை உதவியோடு அதைக் குலைக்க எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள் ஆதிக்கவாதிகள். இக் காட்சியும் தொலைக்காட்சி செய்திகளில் காட்டப்பட, அப்போது பார்க்கப் போன பெண் குடும்பமும் திருமணத்திற்கு மறுக்கிறது.

இப்படி வரிசையாகத் திருமணம் தள்ளிப்போகும் நாயகனுக்கு ஊரில் உள்ள சிலர் மூலம் ஒரு பெண் குடும்பத்திலிருந்தே அழைப்பு கிடைத்து, திருமணமும் நடக்கிறது. முதலிரவு அறையில் தற்கொலைக்கு முயலும் மனைவியிடம் காரணம் கேட்க, தான் காதலித்ததையும், தன் காதலன் உயிரைக் காப்பதற்காகவே, தான் இத்திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதையும் தெரிவிக்கிறார் மணமகள். அன்றிரவே தன் நண்பர்களுடன் ஆலோசித்து, தன் காதலனைத் தேடிப்  பிடித்து, இரவோடு இரவாக ஊரைவிட்டு அனுப்பிவைக்கிறார் நாயகன் ஜீவா.

மணமகள் காணவில்லை என்கிற செய்தியை மறுநாள் காலையில் அறிந்து உறவினர்கள் தேடத் தொடங்க, “அவரை அனுப்பிவைத்தது நான் தான்’’ என்று ஜீவா சொன்னதும், அவர் மீது கோபம் கொண்டு தாக்கத் தொடங்குகிறார்கள். காதலர்களைத் தேடி ஆணவக் கொலை செய்துவிடத் துடிக்கும் ஜாதி வெறியர்கள், அவர்களைத் தேடி அலையத் தொடங்குகிறார்கள். அதே வேளையில் பல்வேறு ஊர்களுக்கு இடம் மாற்றி, இறுதியில் கேரளாவில் இடதுசாரித் தோழர்கள் மூலம் தங்க வைக்கிறார் ஜீவா. வீட்டுக்குப் பேச வேண்டும் என்கிற வழக்கமான இளம் ஜோடிகளின் உந்துதலால், உறவினருக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு பெண் பேசிவிட, சமாதானம் ஆனது போல ஏமாற்றி, காதலர்களைக் கொன்றுவிட திட்டம் தீட்டுகின்றனர் _ ஜாதிவெறி பிடித்த பெண்ணின் உறவினர்கள். இவர்களிடமிருந்து இருவரையும் காப்பதற்காக நாயகனும் அவரது தோழர்களும் மேற்கொள்ளும் முயற்சிதான் விறுவிறுப்பான ‘நாடோடிகள் _- 2’. போராட்டக் களத்தில் இணையும் ஜீவாவும், செங்கொடியும் வாழ்க்கையில் இணைய முடிவெடுப்பது இன்னொரு கிளைக் கதை.

படத்தின் இயக்குநர் சமுத்திரக் கனியை திரையுலகில் முதலில் தனித்துக் காட்டிய நாடோடிகள் முதல் பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்கும் கருத்தளவில் பெரும் வளர்ச்சி உண்டு. முதல்பாகத்தில் காதலர்களைச் சேர்த்துவைக்க கடுமையான தியாகங்களுக்குப் பிறகும் போராடும் நண்பர்களையும், இளமை மகிழ்ச்சியில் திளைத்தபின் பிரிந்துசெல்லும் காதலர்களையும் காட்டி, எனினும் உண்மைக் காதலுக்காக மீண்டும் நண்பர்கள் போராடத் தயாராக இருப்பதாகக் காட்டும்  படம், காதலர்களைச் சாடும் பாணியில் கூடுதலாக நகர்ந்து, சற்றே பொதுப்புத்தி சாயலில் செல்லும். அது ஒருவகை சமூகப் பிரதிபலிப்பு. ஆனால், இரண்டாம் பாகம் சிந்தனைப் போக்கிலேயே மாற்றம் கொண்டது. இன்னும் தெளிவான பாதைக்கு நகரத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி என்பதைச் சொல்லும் படம்.

ஜாதி வெறி பிடித்தால், தான் சீராட்டி, பாராட்டித் தூக்கி வளர்த்த பெண் வேற்று ஜாதி பையனைக் காதலிப்பதை உலகமே அழிந்துவிடுவதைப் போலக் கருதி, தான் பெற்ற மகளையே கொல்லக்கூடிய அளவுக்கு இட்டுச் செல்லும் சமூக அழுத்தம் இன்றும் தொடர்கிறது என்பதே ‘நாடோடிகள்_-2’ கதையின் முக்கிய கருவாகும்.  ஜாதியின் தீவிரம் பற்றிச் சொல்லும்போது, ‘இரண்டாயிரம் வருடங்களாக இருந்து வரக்கூடிய கொடியநோய்’ என்பன போன்ற வசனங்களில் அனல் பறக்கிறது.

ஜாதி ஒழிப்பு, -சமூக நீதிப் பாதையில் இந்தியாவுக்கே வழிகாட்டிடும் இடமாக விளங்கி வருவது பெரியார் திடலே என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தப் படத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டக் களத்துக்கு அழைப்பு விடுக்கும் இடமாக பெரியார் திடலை மய்யப்படுத்தி, சரியான இடத்தையே அடையாளம் காட்டியுள்ளார் இயக்குநர். அந்தக் கூடுகையின் போது, காவல்துறையின் உதவியோடு, மாணவர்களுக்குள் மாணவர்களாக திட்டமிட்டுப் புகுந்துவிடும் மதவாத காலிக் கும்பல் அறிவாசான் தந்தை பெரியாரின் சிலையை உடைக்க கடப்பாரையுடன் ஓடி வருகிறார்கள். ஒட்டுமொத்த அரங்கத்தையும் பரபரப்புக்குள்ளாக்கி விடுகிறது அந்தக் காட்சி. அதனைத் தடுக்கப் பாயும் கதாநாயகன் சசிக்குமார், “சிலையை உடைச்சுடுவியா? உடைத்துப் பார்!’’ என்று காலிகளை அடித்து விரட்டும் காட்சி தமிழகத்தின் உணர்வுநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

வலதுசாரிகளும், பாசிஸ்ட்களும், பார்ப்பன மத வெறியர்களும் ஆளும் நேரத்தில் பெரியார், அம்பேத்கரிய, இடதுசாரி இயக்கக் கருத்துகளை, கொள்கைகளை அடிக்கடி நினைவுபடுத்தக் கூடிய காட்சிகளை துணிச்சலோடு எடுக்கும் தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலையை மெய்சிலிர்க்கச் செய்யும் இக்காட்சிக்காகவே போற்றப்பட வேண்டியவர் ஆகிறார் சமுத்திரக்கனி. எடுக்காட்டாக ‘சாட்டை’, ‘கொளஞ்சி’, ‘எட்டுத்திக்கும் பற’ உள்ளிட்ட அண்மைக்காலத்தின் பல படங்களில், முற்போக்கான கதாபாத்திரங்கள் ஏற்று, சமூக சிந்தனையுள்ள கருத்துகளைப் பேசி நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி மீதான எதிர்பார்ப்பை ‘நாடோடிகள் -_ 2’ ஈடுகட்டுகிறது.

இதே போல, தெளிவான கருத்துகளுடனுடனான இன்னும் பல படங்களை தமிழ்ச்சமூகம் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறது. துணிச்சலும், திறமையும், சமூக அக்கறையும் கொண்டு களத்துக்கு வருவோர்க்குக் கைகொடுத்து, தூக்கிப் பிடிக்க வேண்டியது நம் கடமை. அதைச் செய்யக் காத்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *