சிகரம்
“ஒரு சமயம் உலகிலே தர்மாசாரியங்கள் சரிவர நடக்காது அழிந்துபோகக் கூடிய நிலை உண்டாயிற்று. அப்போது பிரம்மதேவன் சூரியனை அழைத்து பூலோகம் சென்று சில காலம் இருந்து தர்மங்களைக் காப்பாற்றி அவை சரிவர நடந்துவர ஏற்பாடு செய்யும்படி தெரிவித்தார்.
அதன்படி சூரியன் அயோத்தி நகரிலே உபரிசிரவசு என்னும் அரசனாக வந்து பிறந்தான். நாட்டிலே நசித்து விடக்கூடிய நிலையில் இருந்த தர்மங்களை மீண்டும் நிலைநிறுத்தி, அவற்றை முறை பிறழாது நடந்துவரச் செய்தான். அடிக்கடி அவன் இரதத்திலேறி நாடு முழுமையும் சுற்றிப் பார்த்து வருவான்.
ஒரு சமயம் அவன் அவ்வாறு சுற்றி வரும்போது வசந்த ருது வந்தது. உலகமே பூரண இன்பத்தில் திளைத்திருக்கும்போது தன் அருகில் மனைவி இல்லையே என்கிற ஏக்கம் உபரிசிரவசுக்கு உண்டாயிற்று. அந்த க்ஷணமே அவன் வீரியம் வெளிப்பட்டு விட்டது. அரசன் இலை ஒன்றைப் பறித்துத் தொன்னையாகத் தைத்து அதில் விழச் செய்தான். அதை எவ்வாறு அரண்மனையிலிருக்கும் தன் மனைவியிடம் சேர்ப்பது என்று தெரியாது திண்டாடினான். அப்போது அவனுடன் வந்திருந்த சேனம் என்றொரு வகைப் பறவை, அதைத் தன்னிடம் கொடுத்தால் கொண்டுபோய் சேர்ப்பதாகச் சொல்லிற்று. அரசனும் தொன்னையை அதனிடம் கொடுக்க பறவை அலகினால் அதைக் கொத்திக் கொண்டு பறந்துசென்றது.
யமுனை நதியின் மீது பறவை பறந்து செல்லும்போது அதை மற்றொரு பறவை கண்டது. மூக்கிலே பிடித்திருப்பது மாமிசமாக இருக்கக்கூடும் என்று எண்ணி அதைத் தாக்கியது. அந்தச் சண்டையின்போது தொன்னை நழுவி ஆற்று நீரிலே விழுந்துவிட்டது. அதிலிருந்த அரசனின் வீரியத்தை அவ்வழியே வந்த பெண் மீன் ஒன்று விழுங்கி விட்டது.
அந்த மீன் பூர்வத்தில் ஓர் அப்சரசாக இருந்தவள். பிரம்மதேவனின் சாபத்தால் கிரிகை என்கிற அவள் மீனாக யமுனை ஆற்றிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சில நாள்களுக்கெல்லாம் கிரிகையாகிய அந்த மீன் கருவுற்றது.
ஒருநாள் நதியிலே மீன் பிடித்துக் கொண்டிருந்த வலைஞன் ஒருவன் வலை வீசவே, அதில் கிரிகை அகப்பட்டுக் கொண்டாள். அளவில் பெரிதாகவும் தளதளவென்று பொன்னிறத்தோடும் ஜொலித்த அம்மீனை அவன் வீட்டுக்குக் கொண்டு சென்று அறுத்தான். அதன் வயிற்றிலே ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் இருந்தனர்.
புதையல் கிடைத்தால் அதில் சரிபாதி அரசனிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்று விதி. அவ்வாறே ஆண் குழந்தையை அரசனிடம் கொண்டு போய்க் கொடுத்தான் செம்படவன்.
ராஜ களையோடு விளங்கிய அந்த ஆண் குழந்தையைக் கண்டதும் அரசனுக்கு அதனிடம் வாஞ்சை உண்டாயிற்று. மீனவனை அழைத்து அக்குழந்தை அவனுக்குக் கிடைத்த விதத்தைத் தெரிவிக்குமாறு கேட்டான். அவனும் யமுனை ஆற்றிலே மீன் பிடிக்கையில் பெரிய மீன் ஒன்று கிடைத்ததையும் அதை அறுத்தபோது அதன் வயிற்றில் உயிரோடு குழந்தை இருந்ததையும் தெரிவித்தான். உபரிசிரவசுக்கு அந்தக் குழந்தை தன் மைந்தனே என்பது தெரிந்துவிட்டது. குமாரனை வாஞ்சையோடு வளர்த்து மச்சதேசத்துக்கு அரசனாக முடிசூட்டினான்.’’
மேற்கண்டவாறு இந்து மதம் கூறும் கருத்துகளில் எத்தனை அறிவுக்குப் பொருந்தா மடமைக் கருத்துகள்! சூரியன் பூமியில் அரசனாகப் பிறந்தது என்கிறது இந்து மதம். சூரியன் அரசனாகப் பிறக்குமா? சூரியன் ஒரு நெருப்புக் கோளம். அது பூமியைப் போல பல மடங்கு பெரியது. அது மனிதனாக எப்படிப் பிறக்க முடியும்?
அது மட்டுமல்ல. சூரியன் மனிதனாகப் பிறந்து வந்தபின் சூரியன் இல்லாமல் இந்த உலகம் இருண்டு கிடந்ததா? தாவரங்கள் சூரிய ஒளியில்லாமல் அழிந்தனவா?
இக்கருத்தில் ஏதாவது அறிவியல் உண்மை உள்ளதா? அப்பட்டமான மடமைக் கருத்தல்லவா?
அடுத்து சூரியன் தன் மனைவியை விரும்பி காமம் கொண்டதும் அவனது விந்து வெளிப்பட்டதாம்.
சூரியன் ஒரு நெருப்புக் கோளம் என்று முன்னமே கூறினோம். அதற்கு உறுப்புகள் ஏது? அதற்கு மனைவி எப்படி இருக்க முடியும்? அதற்கு உணர்வுகள் ஏது? அதற்கு விந்து சுரக்குமா? அட அடிமுட்டாள்களே! இப்படிக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
சூரியன் விந்து நதி நீரில் வீழ்ந்தபோது அதை ஒரு மீன் விழுங்கியதால் அது கருவுற்றது என்கிறது இந்துமதம்.
நாம் முன்னமே பலமுறை சொன்னது போல், விந்து வாய்வழியாய் விழுங்கப்படும்போது அது இரைப்பைக்குத்தான் செல்லுமே தவிர கருப்பைக்குச் செல்லாது. அப்படியிருக்க வாயால் விந்து விழுங்கப்பட்டு கரு தரித்தது என்பது அறிவியலுக்கும், நடைமுறைக்கும் அறவே பொருந்தாத மூடக் கருத்தல்லவா? இப்படிப்பட்ட மூடக் கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
அடுத்து சூரியன் விந்து மீனின் வயிற்றுள் சென்று கருத்தரித்து அழகிய ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறந்தன என்கிறது இந்து மதம். இது எப்படிப்பட்ட அறிவற்ற மூடக்கருத்து! மீனுக்கும் ஆணின் விந்துக்கு மனித பிள்ளை பிறக்குமா? ஆக, மேற்கண்ட இந்து மதம் கருத்து அத்தனையும் அறிவற்ற மடமைக் கருத்தல்லவா? அப்படியிருக்க இப்படிக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
தேவியை விரும்பிய அரக்கன்
ருரு என்னும் பெயரை உடைய அசுரன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு சமயம் சிவபெருமானின் பத்தினியான தாக்ஷாயணியைக் கண்டான். லோகமாதாவின் அழகு அரக்கனின் உள்ளத்தில் அப்படியே பதிந்து விட்டது. தேவியை எப்படியாவது அடைய வேண்டுமென்கிற ஆவலில் பிரம்மதேவனைக் குறித்து கடுமையான தவம் மேற்கொண்டான்.
பிரம்மதேவன் அவன் தவத்துக்கு மெச்சி அவன் முன்பு தோன்றி, “உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்’’ என்றார்.
“பிரபோ! தாக்ஷாயணியை நான் மனைவியாக அடைய வேண்டும். சிவபெருமான் எனக்கு அடங்கியவராக இருக்க வேண்டும்’’ என்று கோரினான் அசுரன்.
அவன் வார்த்தைகளைக் கேட்ட பிரம்மதேவன் திடுக்கிட்டார்.
“அடே தூர்த்தா! என்ன வார்த்தை சொன்னாய்? லோகமாதா உனக்கு மனைவியாக ஆக வேண்டுமா? தேவியிடமே நேரில் சென்று உன் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்! அப்போதே சிவபெருமான் உன்னை சம்கரிப்பார்’’ என்று சொல்லி மறைந்தார் பிரம்மதேவன். அதைக் கேட்ட ருரு அங்கிருந்து நேராகக் கைலயங்கிரிக்குச் சென்று பரமசிவனைக் குறித்துத் தவம் இயற்றினான்.
கண்ணைத் திறந்த பார்த்த அரக்கன் அக்கோர ரூபத்தைக் கண்டதும், “நீ தாக்ஷாயணி அல்ல. அந்தச் சுந்தர ரூபத்துக்கும் இந்தக் கோர ரூபத்துக்கும் எத்தனை வித்தியாசம்? இங்கே இனி ஒரு க்ஷணமும் நிற்காதே. உன்னை எரித்துச் சாம்பலாக்கி விடுவேன்’’ என்று கர்ஜித்தான்.
“உன்னால் முடியாத காரியம் அது’’ என்றாள் தேவி.
அசுரன் அண்டசராசரங்களும் கிடுகிடுக்கக் கர்ஜித்தவனாய் தேவியை அடிக்க ஓடிவந்தான். தேவி அவனைத் தன் கை முட்டியால் ஓங்கி அடித்தாள். அசுரனோ மாயையால் அஸ்திரங்களைத் தருவித்துத் தேவி மீது எய்தான். தேவி அவன் விடுத்த அஸ்திரங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி அவனைத் தன் கரங்களால் தூக்கி இரண்டாகக் கிழித்தாள். அவன் உடலிலிருந்து பூமியிலே சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் அவனைப் போன்ற பலசாலிகள் ஆயிரக்கணக்கானோர் தோன்றினர்’’ என்கிறது இந்துமதம்.
அசுரன் உடலிலிருந்து சிந்திய இரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பலசாலிகள் உருவாகினர் என்று இந்துமதம் கூறும் கருத்து அறிவியலுக்கு ஏற்றதா? பூமியில் சிந்தும் இரத்தத்திலிருந்து மனிதர்கள் உருவாவார்களா? ஒரு மனிதன், ஆணின் விந்தணுவும், பெண்ணின் சினை முட்டையும் சேர்ந்து கருவாகி, பின் உருவாகி வருபவன். அறிவியல் உண்மையும், நடைமுறையும் அப்படியிருக்க, பூமியில் சிந்திய இரத்தத்திலிருந்து மனிதன் தோன்றினான்; அதுவும் ஆயிரக்கணக்கில் தோன்றினார்கள் என்று கூறும் அறிவுக்குப் புறம்பான மூடக் கருத்துகளை மொத்தமாகக் கொண்ட இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்)