தேடிவரும் வான்பருந்தை உயரே கண்டு
ஓடிவந்து குஞ்சு காக்கும் கோழி போன்று
நாடிவந்த இனப்பகைவர் நாட்டிவிட்ட
கேடிழைக்கும் பிறவி பேதம் தகர்த்தெறிய
ஓடியோடி சாதிமதச் சாக்க டையில்
ஒவ்வாத மூடவழக் கத்தில் மூழ்கி
வாடிநாளும் முகவரியைத் தொலைத்த நம்மை
மீட்டெடுத்தார் பகுத்தறிவுப் பெரியா(ர்) அன்றோ!
ஆரியத்தின் சூழ்ச்சியிலே சிதைந்து வீழ்ந்தே
அறிவிலியாய் விலங்கினமாய்ச் சிந்திக் கின்ற
வீரியத்தைத் தொலைத்தவராய்ச் சாதி சாமி
மதம், சடங்கு, சாத்திரங்கள் தம்மி லாழ்ந்து
காரிருளும் கதிரவனை மறைத்த பாங்காய்
ஆரியமும் மறைத்ததாலே வெகுண்டெ ழுந்து
கூரியதம் பகுத்தறிவுத் தீயால் தீய்த்துக்
குனிந்ததலை நிமிர்த்தியவர் பெரியா(ர்) அன்றோ!
கட்டிவைத்த காளைமாட்டை அவிழ்த்து விட்ட
கதைபோலக் கற்பனையால் கட்டுக் கட்டாய்க்
கட்டவிழ்த்து விட்ட,கட்டுக் கதைக ளாலே
கட்டுக்குள் வைத்திருந்த ஆரி யர்தம்
கொட்டத்தை அடக்கியினம் மீட்க அன்று
கட்டுக்க டங்கிடாத எரிம லையாய்ப்
பட்டென்று வெடித்திட்ட பெரியார் தம்மால்
பைந்தமிழர் மானமது மீட்கப் பெற்றோம்!
தந்தைஈ.வெ. இராமசாமி என்னும் வீரர்
தமிழகத்தில் தோன்றாமல் இருந்தி ருந்தால்
எந்தமிழர் இனமின்றும் ஆரி யத்தின்
ஏய்ப்பினிலே அடிவருடிச் சிதைந்தி ருக்கும்;
எந்நாளும் சுயமற்று வீழ்ந்தி ருக்கும்;
ஏற்றமிகு தமிழராக எழுச்சி யூட்டி
அந்நாளில் மாற்றியதால் தலைநி மிர்ந்தோம்;
அருந்தலைவர் பெரியாரைப் போற்றுவோம் நாம்!
– இராம.இளங்கோவன், பெங்களூரு