தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் கொள்கை பரப்ப எம்.ஆர்.இராதா செய்த புரட்சிகள்!

செப்டம்பர் 16-30 2019

சாரோன் செந்தில்

முக்கிய அறிவிப்பு:  எனது இராமாயண நாடகம் இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கருதுபவர்கள் கண்டிப்பாக என் நாடகத்திற்கு வர வேண்டாம்! அவர்கள் காசும் எனக்கு வேண்டாம்! மீறிவந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும்.       

 இவண்,

அன்பன், எம்.ஆர்.ராதா

என்ற தகவலோடு 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி தேவர் மன்ற வாசலில் ஒரு விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் கூடி மொய்த்து நின்றார்கள். இப்படி ஒரு விளம்பரத்தைத் தமிழ்ச் சமூகம் கண்டிருக்கவில்லை. அந்த அறிவிப்பு எழுத்துகளின் இரண்டு பக்கங்களிலும் அச்சடிக்கப்பட்டிருந்த ராமனின் உருவம் _ இதுவரை அவர்கள் கேட்ட ராமாயணப் பிரசங்கங்கள், காலட்சேபங்கள் மற்றும் நாடகங்கள் எதிலும் _ கேட்டும் பார்த்தும் அறியாத கோலமாக இருந்தது.

அந்தப் போஸ்டரில் அதே ராமன் வலது கையில் பெரிய மாட்டு எலும்பும் இடது கையில் கள் மொந்தையோடுமிருந்தான்.

ராமாயண நாடக அறிவிப்பின் கீழ்ப்பகுதியில் முக்கிய அறிவிப்பாக இருந்தது மேற்கண்ட தகவல். வைதிக மரபு சார்ந்த நாடக முயற்சிகளில் பெரும்பாலும் புராணக் கதைகளின் பகுதிகளோ புராணப் பாத்திரங்களை மய்யமிட்ட கதையாடல்களோ மய்யக் கருக்களாகின. வைதிகக் கருத்துகள் கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் பரப்பப்பட்டன.

தான் கீழானவன் என்று பார்ப்பனரல்லாதார் தன்னை இழிவாக நம்பும்படியான உணர்ச்சிகள் நாடகங்களில் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டன. வைதிக மரபைப் பின்பற்றும் பாத்திரம் நல்லவனாகவும், வைதிகத்தைக் காப்பாற்றுவது பிறப்பொழுக்கம் என்றும் கருத்துகள் கட்டமைக்கப்பட்டன.

இப்போக்குகளின் காலகட்டத்தில்தான் திராவிட இயக்கம் அறிவின் துணைகொண்டு விழிப்புணர்வுப் பிராச்சாரங்களை முன்னெடுத்தது. அப்போதைய நாடகங்களின் பொருண்மை _ புராணம், தேசியம், சமூகம் என்றிருந்த நிலையில் _ சமூக சீர்த்திருத்தம் என்கிற சிந்தனை, நாடகப் பொருண்மைகளை மாற்றி அமைத்தது.

1920களின் இறுதியிலிருந்தே இப்புரட்சிச் சிந்தனை மிக வலிமையாக நாடக வடிவங்களுக்குள் நுழைந்தது. இச்சீர்த்திருத்தச் சிந்தனை ஏற்படுத்திய பண்பாட்டு அசைவுகள் கோயில், புராணம், கடவுள், சாஸ்திரம் போன்ற பொய்களுக்குள் அடைபட்டுக் கிடந்த நாடகத்தை மீண்டும் மக்களுக்கான பொது வெளிக்குக் கொண்டு வந்தது. இதற்காகச் சுயமரியாதை இயக்கம் மக்களின் பண்பாட்டு வெளிகளில் கோயில் அல்லாத பொது விழாக்கள் பலவற்றை அறிமுகம் செய்தது.       

திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், சுயமரியாதை இயக்கத்தின் பால் ஈடுபாடு கொண்டு திராவிடக் கருத்தியலோடு தம்மை முழுமையாக்கிக் கொண்ட பலர் குடும்ப நிகழ்வுகள், மன்ற நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் நாடகங்களை எழுதி அரங்கேற்றினர்.

1930கள் தொடங்கி ஒரு நூற்றாண்டு முழுக்க திராவிட இயக்கச் சிந்தனை எழுச்சிகளை நாடகங்களின் வாயிலாக நிகழ்த்திய பலரின் வரலாறுகள் ஆராய்ந்து ஆவணப்படுத்த வேண்டிய முக்கியக் களமாகும்.     

தமிழக மக்களிடையே இந்து மதம் எனும் மூட நம்பிக்கைகளை, கோயிலின் பூஜை, சாஸ்திரம், சடங்கு, சாங்கியம் எனும் பொய்களின் வழியாக ஆண்டு தோறும் பல நிகழ்வுகளின் மூலம் பரப்பினார்கள். அவை மக்கள் மனதில் நிலைபெற நாடகம் எனும் மக்கள் கலையினை கோயில் கலையாக மாற்றினர்.

பார்ப்பனியக் கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்களை மய்யப் பாத்திரமாக உருவாக்கி, எதிர்ப்பவர்களை முரண் பாத்திரங்களாக்கினார்கள். இதை பார்ப்பனர்கள் நேரடியாகச் செய்யவில்லை. தம் வைதிகக் கருத்துகளை ஏற்றுக்கொண்ட பார்ப்பனர் அல்லாதாரைக் கொண்டு இதை பனுவல்களாக மாற்றி, பார்ப்பனர் அல்லாதாரைக் (சூத்திரர்களை) கொண்டே இதை மக்களிடம் பரப்பவும் செய்தார்கள். மூட நம்பிக்கை _ பக்தி எனும் வடிவில் உள் நுழைந்தது. இதற்கு கம்பரின் ராமாயண பனுவல் ஒரு சான்று.

பகுத்தறிவற்று இதுபோன்ற கருத்துகளை ஏற்று  சுயமரியாதை கெட்ட தன்மையினை மக்களிடம் வெளிச்சமிட்டுக் காட்டத் தொடங்கியது திராவிடர் இயக்கம். தமிழில் புதிய கலை இலக்கிய மரபு தோன்றியது.  ஆனால், காலம் மாறியது. இயல், இசை தமிழில் மிகப் பெரிய மாறுதல்களை திராவிட இயக்கம் கொண்டு வந்தது. பணம் கொடுத்து திராவிட இயக்க மாநாடுகளில் மக்கள் பங்கேற்று பேச்சுகளைக் கேட்டார்கள். இயக்கத்தாரால் நடத்தப்பட்ட இதழ்களைப் படித்தார்கள். விழிப்பு வரத் தொடங்கியது. நிரம்பி வழிந்த புராண நாடக அரங்குகள் காலியாகின; ராதாவின் எல்லா நாடகங்களுக்கும் மக்கள் படை படையாக வந்தார்கள். ராதாவின் நாடகங்களுக்கு 1946  ஆங்கிலேயர் ஆட்சியிலும் பின்னர் கைமாறிய பார்ப்பன அடிமைகளின் ஆட்சியிலும் தொடர்ந்து தடைகள் விதித்தனர்.       

தடைகளை மீறி தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எங்கும் ராதாவின் நாடகங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்தன. 1954இல் ராதா பல ஆண்டுகளாக பல்வேறு அறிஞர்களின் ராமாயண ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ராமாயணம் நாடகத்தை உருவாக்கி அரங்கேற்றத்திற்கு விளம்பரம் செய்தார். வழக்கம் போல தடை விதிக்கப்பட்டது. பிறகு தடைகளை நீக்கியது அரசு. ராதா மூல ராமாயணமான வால்மீகி ராமாயண ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நாடகப் பனுவலை உருவாக்கி இருந்தார். சில நாள்களில் நீக்கிய தடையை ரத்து செய்து மீண்டும் தடை விதித்தது அரசு.       

இப்போது மெட்ராஸ் மாகாண சட்டசபை ராதாவிற்காகவே தனியாகக் கூடி, விவாதித்தது. ராதா சட்டமன்றத்திற்கே நேரடியாக போனார். இந்துக்களின் மனம் புண்படுவதாகவும் அதனால் ராதா ராமாயணம் நாடகத்தைப் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். அப்போது,

பின் ராதாவின் ராமாயண நாடகத்திற்குத் தடை விதித்தது அரசு. ராதவிற்காகவே புதிய நாடகத் தடை மசோதாவை (தனி நபர் நாடகத் தடை மசோதா) கொண்டு வந்து நிறைவேற்றியது.

மீறி ராதா, ராமாயண நாடகத்தை நடத்தினார். கைது செய்யப்பட்டார். விடுதலையாகி மீண்டும் ராமாயண நாடகத்தை நடத்தினார். மீண்டும் குடந்தையில் கைது செய்யப்பட்டபோது, ராமன் வேஷத்தைக் கலைத்து விட்டு வரும்படி காவல் துறையினர் சொன்னார்கள். மறுத்த ராதா குடிகார ராமன் வேடத்திலேயேதான் நீதிமன்றம் வருவேன் என்று மறுத்து விட்டார். பார்வையாளர்கள் காவலர்களை எதிர்த்து,

“ராதாவைக் கைது செய்யாதே!

நடிகவேள் ராதாவைக் கைது செய்யாதே!!

என்று திரண்டு எழுந்து முழக்கங்களிட்டுத் தடுத்தார்கள். அப்போது ராதா,

“கலா ரசிகப் பெருமக்களே! அவர்கள் ராதாவைக் கைது செய்யவில்லை, ராமனைத் தான் கைது செய்கிறார்கள். நமது நோக்கமும் அதுதான். ஆகையினால் காவல் துறையினரைத் தடுக்காதீர்கள்’’ என்றார். அரசாங்கத்தை எதிர்த்து ராதா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தான் போடுவது வால்மீகி வடமொழியில் எழுதிய உண்மையான ராமாயணம்தான் என்றும்,  தனது சொந்தக் கற்பனை அல்ல என்றும் பல அறிஞர்களின் ராமாயண ஆராய்ச்சியின் முடிவு என்பதை நிரூபித்தார்; வென்றார்.

இந்ச் சூழலில்தான் ராதா ராமாயண நாடக விளம்பரத்தை மேற்கண்ட அறிவிப்போடு வெளியிட்டார். நாடக வரலாற்றில் புதிய புரட்சியினைச் செய்தார்!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *