அறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புக் கவிதை

செப்டம்பர் 1-15 2019

எரிமலையில் ஓர் ஈரநீர் அருவி

 

ஈரோட்டில் உதித்ததோ

எரிக்கின்ற சூரியன்;

நீயோ, அதன்

சுடர் நெருப்பை வாங்கிச்

சூடாற்றிக்

குளிர் ஒளியாய் மாற்றிக்

கொடுத்த நிலா.

 

பெரியாரோ காட்டுத்தீ;

நீயோ அந்தத்

தீயினில் ஏற்றிய

திரு விளக்கு.

 

அதிசயம்தான்;

ஓர் எரிமலையில்

ஈரநீர் அருவி

எப்படித் பிறந்தது?

கரடு முரடான

முள் தோலுக்குள்

கனிந்த பலாச் சுளை நீ.

முகத்தையும்

முகவரியையும்

தொலைத்த தமிழன்

மூட நம்பிக்கைகளில்

உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனைத்

தட்டி எழுப்பினார்

தந்தை; தனயனோ

‘வெட்டிவா! பகையை’ என

வீரவாள் அவன் கையில்

கொடுத்து வரலாற்றின்

கொள்கைப் போர் தொடங்கிவைத்தான்.

(‘விதைபோல் விழுந்தவன்’ புத்தகத்திலிருந்து…)

 

 

 

 

 

 

 

 

 

– கவிக்கோ அப்துல் ரகுமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *