சிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்?

ஆகஸ்ட் 16-31 2019

தேவ நேயப் பாவாணர்

மதப் பைத்தியம்

பொதுவாக ஒரு மதம் ஏற்படும்போது, அதன் அடியார்கள் அல்லது அதை ஏற்படுத்துவோர் தங்கள் மதக் கருத்துகளையும், தங்கள் முன்னோரைப் பற்றிய சில சரித்திரப் பகுதிகளையும் தொகுத்து நூல்கள் எழுதி வைக்கிறார்கள். அல்லது பாட்டுப் பாடி வைக்கிறார்கள். அவை அம்மதத்திற்கு மறை (வேத) நூல்களாகின்றன. அவற்றில், கலையியல் உண்மைக்கு மாறான சில கருத்துகள் இருக்கலாம். கலை வரவர வளர்ந்து வருகிறது. கலை வளர்ச்சியடைந்த காலத்தில், அதன் உண்மைக்கு மாறான கருத்துகள் மறை நூல்களில் இருக்குமானால், அவற்றை விலக்கிக் கொள்வது கடமையாகும். மனிதனுக்கு மதமேயன்றி மதத்திற்கு மனிதன் அல்லன்.

ஒவ்வொரு துறையிலும் மனிதன் தன் அறிவை வளர்த்து வருகிறான். அறிவு வளர வளர தன் கருத்துகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். தன் அறியாமையை மதத்தின் மேலேற்றி மதநூலைக் கலை நூலோடு முரண்படக் கூறின், கடவுளின் தன்மைக்கே முரண்பாடு கூறியதாகும். அதோடு கலையும் வளராது; நாடும் கீழ் நிலையடையும்; அறியாமையும் அடிமைத்தனமும் ஓங்கும்.

சில மத நூல்களில், அவற்றை எழுதியவரின் அறியாமையாலோ தன்னலத்தாலோ, மன்பதை (சமுதாயம்) முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள சில தீய கருத்துகள் புகுத்தப்பட்டுள்ளன. பிறப்பாற் சிறப்பென்பதும் தாழ்த்தப் பட்டோர்க்குக் கோயிற்புகவு (ஆலயப் பிரேவேசம்) இல்லையென்பதும் இத்தகையன. இதனால்தான் மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை எனச் சிலர் கருதுகின்றனர்.

சிவனடியாருள் சிறந்தவராகச் சொல்லப்படும் அறுபத்துமூவருள், இயற்பகை நாயனார், சிவனடியார்போல வேடம் பூண்டு வந்த ஒருவனுக்குத் தம் மனைவியைக் கொடுத்ததுமல்லாமல், அதைத் தடுக்க வந்த தம் இனத்தாரையெல்லாம் வெட்டிக் கொன்று முன்பின் அறியாத அக்காமுகனை ஊருக்கு நெடுந்தூரம் யாதோர் இடையூறுமின்றிக் கூட்டிக் கொண்டு போயும் விட்டனர். இது ஒரு பெரிய மானக்கேடு. ஏனாதிநாத நாயனார் தம் எதிரியாகிய அதிசூரனோடு வாட்போர் செய்யுங்கால், அவன் வஞ்சனையால் நீற்றைப் பூசி நெடுநேரம் கேடயத்தால் மறைத்து வைத்திருந்த தன் நெற்றியைத் திடீரென்று காட்ட அவர், “ஆ கெட்டேன்! இவர் பரமசிவனுக்கு அடியவராய்விட்டார்’’ என்று வாளையும் கேடயத்தையும் விட்டுவிடக் கருதி, பின்பு “ஆயுதமில்லாதவரைக் கொன்ற குற்றம் இவரை அடையாதிருக்க வேண்டுமென்று’’ எண்ணி, அவற்றை விடாமல், உண்மையில் எதிர்ப்பவர் போல நடித்து நேரே நிற்க, பழிகாரனாகிய அதிசூரன் அவரை வெட்டிக் கொன்றான். மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் போல வேடம் பூண்டுவந்த தம் பகைவனாகிய முத்திநாதனாற் குத்துண்டிறக்கும்போது, அவரை சேதமின்றி ஊருக்கு வெளியே கொண்டு போய்விடும்படி தம் வாயிற்காவலனாகிய தத்தனுக்குக் கட்டளையிட்டார். இவை போன்ற சிவனடியார் சரிதங்கள் இன்னும் பலவுள. இவற்றால், சிவனடியாரான தமிழர் தம் உயிரையும் மானத்தையும் பொருட்படுத்தாமல் மதப்பித்தங் கொண்டு பகைவருக்குக்கூட எதையும் கொடுக்கத் தயாராயிருந்தனர் என்பது வெளியாகும். இயற்பகை நாயனார் சரிதம் பெரிய புராணத்தில் மங்கல முடிவாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது. அது செவிவழக்காய் மட்டும் வழங்கிய காலத்திலேயே இங்ஙனம் மாற்றப்பட்டிருத்தல் வேண்டும். பிராமண வடிவம் கொண்டு அவருடைய மனைவியைக் கேட்க வந்த சிவபெருமானாகக் கருதப்படுகிறவன், உண்மையில் ஒரு மனிதனாகவேயிருத்தல் வேண்டும். மேன்மேலும் இனத்தார் எதிர்த்து வந்ததை அக்காமுகன் கண்டஞ்சி, இறுதியில் ஓடி ஒளிந்திருக்க வேண்டும். இறுதியில் சிவபெருமான் காட்சி கொடுத்ததாகக் கூறுவது அடியார்க்கெல்லாம் பொதுவாகக் கூறப்படும் மங்கல முடிவு. சிவபெருமானே இயற்பகையாரின் மனைவியைக் கேட்டதாக வைத்துக் கொண்டாலும், அது முடிவின்றி முன்னதாகத் தெரியாமையால், சிவனடியார் வேடம் பூண்டுவந்த எவர்க்கும் தம் மனைவியைக் கொடுத்திருப்பார் என்பது வெட்ட வெளியாகின்றது. மேலே கூறப்பட்ட மற்ற ஈரடியார்களும் பகைவரென்று தெரிந்த பின்பும் போலிச் சிவவேடத்தாருக்கு இணங்கியமையும் இதை வலியுறுத்தும்.

சில திருப்பதிகங்களில் தேரோட்டக் காலத்தில் தேர்க்காலின்கீழ் தலையைக் கொடுத்திருப்பதும், கும்பகோணத்தில் மகாமகக் குளத்தில் மிதியுண்டு சாவதும், சில கோயில்கட்குப் பிள்ளை வரத்திற்குச் சென்று தெரிந்தோ தெரியாமலோ தம் மனைவியரைக் கற்பிழக்கச் செய்வதும் அல்லது இழப்பதும், கோவில் வழிபாட்டிற்குச் சென்றவிடத்துத் தம் அழகான அருமந்த மகளிரைத் தேவ கணிகையராக விட்டுவிட்டு வருவதும், பண்டைத் தமிழருள் பகுத்தறிவற்று மானங்கெட்ட மதப்பித்தர் சிலரின் செயல்களாகும்.

இந்த 20ஆம் நூற்றாண்டிலுங்கூட, சில மதப்பித்தர் ஆங்கிலக் கல்வி சிறப்புப் பெற்றிருந்தும் தாய்மொழி கெட்டாலும் தமது மதம் கெடக்கூடாதென்று கருதி, வேண்டாத வட சொற்களையும் புறம்பான ஆரியக் கொள்கைகளையும் தழுவுகின்றனர். உயிரையும் மானத்தையும் வீணாய் இழக்கத் துணியும் மதப்பித்தர்க்கு இது எம்மட்டு?

மேலும், தமிழை வளர்ப்பதால் மதம் கெடப்போவதுமில்லை. தாய்மொழியையும் மதத்தையும் தூய்மைப்படுத்துவதால் அவை வளர்ந்தோங்கு மென்பதையும் தமக்குப் பெருமை உண்டாகுமென்பதையும் அவர் ஆராய்ந்தறிவதுமில்லை; ஆராய்ந்தவர் சொல்லினும் உணர்வதுமில்லை. இத்தகையோர் இருப்பின் என்! இறப்பின் என்!

சிலர் மதம் பற்றிய வடசொற்கட்குத் தென் சொற்கள் இல்லையென்றும், மதத்துறையில் வடசொற்கள் வந்துதான் ஆக வேண்டுமென்றுங் கூறுகின்றனர். இது தாய்மொழியுணர்ச்சியும் சொல்லாராய்ச்சியும் சரித்திர அறிவும் இல்லாமையால் வந்த கேடு. மேலும் சைவ மாலியமும் (வைஷ்ணவ) அவற்றின் முதல் நூல்களும் தமிழர்களுடையவையாயும் தமிழிலும் இருக்க அல்லது இருந்திருக்க, அவை ஆரியர் கொண்டு வந்தவையென்றும், அவற்றின் முதல் நூல்கள் வடமொழி மறைகளே யென்றுங் கொள்கின்றனர்.

“தம்மானை யறியாத சாதியார் உளரே!’’ இவர்க்கு எத்தனை மொழி நூல்கள் வெளி வந்தென்ன? எத்தனை மொகஞ்சோதாரோக்கள் அகழப்பட்டென்ன?

வடமொழியிற் சொற்கள் ஆனது போன்றே தமிழிலும் ஆக முடியும். ஈராயிரம் ஆண்டுகளாக வடமொழியைத் தழுவி வந்ததால் தமிழில் சொல் வளர்ச்சியில்லாது போயிற்று. இன்றும் தமிழர், சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் அஞ்சுவதிலும் மிகுதியாகப் பார்ப்பனருக்கு அஞ்சுவதே தமிழ் வளர்ச்சிக்குத் தடையாயுள்ளது.

ஒரு நாட்டின் நாகரிக அல்லது முன்னேற்ற நிலைக்கு மதப் பொறுதியும் (இணக்கம்) ஓர் அறிகுறியாகும். பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் தற்கால இங்கிலாந்திற் போன்றே, மதப் பொறுதியிருந்து வந்தது. கடைத் தமிழ்ச் சங்கத்தில், சைவர், வைணவர்(மாலியர்), பௌத்தர், சமணர், உலகாயதர் முதலிய பல மதத்தினரும் புலவராயிருந்தனர். செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் வைணவனாயும் அவன் தம்பி இளங்கோவடிகள் சமணராயும் இருந்தனர். இங்ஙனம் பல மதத்தினரும் ஒற்றுமையாய்  வாழ்ந்ததால், தமிழ்நாட்டில் அமைதி நிலவியது. கல்வியும், கைத்தொழிலும், வாணிகமும், அரசியலும் ஓங்கி நாடு நலம் பெற்றது. இக்காலத்திலோ, சில குறும்பர், மதப் பிரிவினையுண்டாக்கித் தமிழ்நாட்டைச் சீர்குலைக்கின்றனர்.

                                                  (நூல் : தமிழர் மதம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *