‘பரியேறும் பெருமாள்’
‘பரியேறும் பெருமாள்’ படம் அல்ல. உரையாடல் களம். தாழ்த்தப்பட்ட மக்களின் வலியையும் வேதனையையும் பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல்., மேல ஒரு கோடு (சட்டக்கல்லூரி மாணவன்) என்ற கதாநாயகன் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். குட்டை நீரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் தம் வேட்டை நாய்களை குளிப்பாட்டியதற்காக பரியனின் ‘கருப்பி’ என்ற நாயை தண்டவாளத்தில் கட்டி வைத்து இரயிலில் அடிபட்டு சாகும்படிச் செய்யும் கோரக் காட்சி மூலம் ஜாதி வெறி பிடித்த கிராமத்தை படம்பிடித்துக் காட்டுவதில் தொடங்கி படம் முடியும்வரை ஜாதிவெறி தலைவிரித்தாடும் இடங்களையெல்லாம் கூடுமானவரை தொட்டுக் காட்டுகிறார் இயக்குநர்.
பரியன் பல இடங்களில் ஜாதிவெறி பிடித்த மிருகங்களின் கோரப்பற்களில் சிக்கி தப்பித்து வரும் காட்சிகள் அனைத்தும் நெஞ்சைப் பதறவைப்பதுடன் இந்தியாவில் நடந்துவரும் ஜாதிவெறிச் செயல்கள் எல்லாம் சிந்தனையில் வந்து சேர்ந்து மன இறுக்கத்தை ஏற்படுத்து-கின்றன. கொலைகளை விபத்தாகவும், தற்கொலையாகவும் மாற்றும் ஜாதியம் குறித்த காட்சி அமைப்பு சமுதாயத்தின் பொய் முகத்தைக் கிழித்துத் தொங்கவிடுகிறது.
பரியனை அவமானப்படுத்தும் பல காட்சிகளையும் அதேபோல அவரது தந்தையை அவமானப்படுத்தி வீதியில் ஓடவிடும் காட்சியையும் காணும்பொழுது அவமானத்தால் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாடு இது என்று ஓங்கிக் கன்னத்தில் அடித்து உணர்த்துவது போலிருக்கிறது.
“நீ என்னவா ஆகணும்?’’
“டாக்டர் ஆகணும்.’’
“தம்பி இது ‘லா காலேஜ்’. இங்க படிச்சா வக்கீல்தான் ஆகமுடியும்.’’
“சார், ஊசி போடற டாக்டர் இல்லை. டாக்டர் அம்பேத்கர் ஆகணும்’’ என்னும் வரியில் கதாநாயகனின் உரையாடல் ஆரம்பித்து, “என்னதான் உங்களுக்கு பிரச்சினை? என்னைக் கொலை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? வா என்னைக் கொலை செய்’’ “நீங்க நீங்களா இருக்குற வரையிலும், நாங்க நாயா இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரையிலும் இங்கே எதுவும் மாறாது’’ என்று பரியன் பேசும் வசனங்களில் மட்டும் அல்ல; பல இடங்களில் வசனமே இல்லாமல் உணர்வையும் வெளிப்படுத்தும் காட்சிகளிலும் இயக்குநர் நம்மைப் பேச வைக்கிறார்.
“இப்பயெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க? இந்தக் காலத்தில் ஜாதியை மய்யமாக வைத்துப் படம் எடுப்பதைத் தவிர்த்துவிட்டுச் சொல்ல வேண்டிய பிரச்சினைகள் எத்தனையோ இருக்கிறது. அதையெல்லாம் மய்யப்படுத்தி படமெடுக்கலாம்’’ என்று திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்யும் எதிரிகளின் சூழ்ச்சிக்கு மக்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருப்பதால் குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டிய பல படங்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், சமுதாயத்தின் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் சில படங்கள் கவனம் பெறாமல் செல்வதுமான நிலை ஏற்படுகிறது.
அந்நிலை மாற “பரியேறும் பெருமாள்’’ போல் படம் எடுக்கின்ற இயக்குநர்களைப் பாராட்டுவதும், கொண்டாடுவதும் படத்தை வெற்றியடையச் செய்வதும் நம்முடைய கடமையாகும்.
இதுபோன்ற படம் தயாரிப்பதில் பொருளாதார இழப்பு மட்டுமல்லாது வெளியிடவே முடியாத அளவுக்குப் பல்வேறு பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நன்றாக தெரிந்திருந்தும் மக்களிடையயே ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை கலை வடிவத்தில் கொண்டுசெல்ல தொடர்ந்து முனைப்புக் காட்டும் இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு பாராட்டுகள். பரியன் மூலமாக நம்முடன் உரையாடிய இயக்குநர் மாரி செல்வராஜூக்கு நம் பாராட்டுகள்!
ஜாதிவெறிக் கொலைகள் ஆதாரமின்றி நிகழ்த்தப்படுவதையும், தற்கொலைக்குத் தூண்டப்படுவதையும் தொடர்ந்து கண்டுவரும் நமக்கு இளவரசன், கோகுல்ராஜ், டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா, ரோகித் வேமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா என்று நம் கண் முன்னாலேயே உயிர்கள் பறிக்கப்பட்டதை மீண்டும் நினைவூட்டுகிறார் இயக்குநர்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகக் காட்டப்படும் கதாநாயகி, பரியனிடம் காதலைச் சொன்னதும் அதுகுறித்த எந்தவொரு சிந்தனைக்கும் செல்லும் முன்பே தன் மீது நிகழ்த்தப்படும் கொலை முயற்சியைக் கடைசிக் காட்சியில் மிக அழுத்தமாகப் பேசுகிறார் பரியன்.
கதாநாயகியின் தந்தைக்கும் பரியனுக்கும் நடக்கும் இறுதி உரையாடல் படத்தை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்கிறது. அமர்ந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தி புரியவைக்க முனைகிறது. நீலத்தின் அரசியலை, நூறாண்டு காலங்களில் இத்தகைய உரையாடல்களின் மூலம் வெற்றிக்கு நகர்த்திச் சென்று கொண்டிருக்கும் கருப்பின் பரப்பு தேசமெங்கும் விரியட்டும்! அதில் நீலம் ஒளிரட்டும்!
– ஒவியா அன்புமொழி