தந்தை பெரியார் அவர்களின் உயிர்நாடிக் கொள்கைகளில் முதன்மையானது ஜாதி ஒழிப்பாகும். சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே ஜாதி இழிவு ஒழிப்பு, சமத்துவம், தடையில்லா சிந்தனை போன்றவற்றைக் கொண்டது.
ஜாதி ஒழிப்புச் சிந்தனையின் ஒரு கொள்கைத் திட்டமாக கிராமங்களில் அனைத்து ஜாதியினரும் ஒரேயிடத்தில் சேர்ந்து வாழும் வகையில் குடியிருப்புகளை அரசு அமைக்க வேண்டும் என்பதாகும். அந்த சிந்தனையின் வெளிப்பாடாக தந்தை பெரியாரின் மாணாக்கரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதி மக்களும் ஒன்றாய் வாழும் குடியிருப்புகள் உருவாக்கப்-படும் என்றும், அவை “பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்’’ என்று அழைக்கப்படும் என்றும் அறிவித்து செயல்முறைப்படுத்தினார். இவ்வாறு உருவாக்கப்பட்ட 240 பெரியார் நினைவு சமத்துவபுரங்களிலும் தந்தை பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டன. அங்கு மதம் சார்ந்த எந்த வழிபாட்டுத் தலமும உருவாக்கப்படக் கூடாது. அனைவருக்கும் ஒரே சுடுகாடு போன்ற விதிமுறையும் உள்ளது. இந்த விதிமுறைகள் மீறப்பட்டு சில இடங்களில் மதவழிபாட்டுத் தளங்கள் நீதிமன்ற ஆணைகளால் இடிக்கப்பட்டன.
இதற்குக் காரணம் தொடர்ந்து வந்த அ.தி.மு.க. ஆட்சி அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இவற்றை பராமரிக்காமல் விட்டுவிட்டதுதான். அண்மையில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆவடி கழக மாவட்டத்தில் அமைந்துள்ள குத்தம்பாக்கம் பெரியார் நினைவு சமத்துவப்புரத்தில் இருந்த தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உரையாற்றுகையில், தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியத்தைக் கண்டித்தார். கழகத் தோழர்கள் இந்த சமத்துவபுரங்களை ஆய்வு செய்து அங்கு குடியிருக்கும் மக்களுக்கான தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கூறினார். இனியாவது அரசு காழ்ப்-புணர்ச்சியை கைவிட்டு பராமரிக்க முன்வரவேண்டும்.
– க.கலைமணி,
மாவட்ட இளைஞரணி அமைப்பளர்,
ஆவடி மாவட்டம்.