தமிழைப்பழைய் நிலையிலேயே வைத்திருக்கலாமா?
பெரியார் நடத்திய ஏடுகளில் தமிழ்ப் பெயர்கள்
பெரியாரின் கருத்துகள் கடுமையாக இருந்தனவே தவிர, பெரியார் தமிழ் மொழிக்கு உரிய இடத்தை வழங்கத் தவறவில்லை. அவர் இயற்கை எய்தும் வரையும் தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு என்கிற உரத்த சிந்தனையிலேயே வாழ்ந்தவர் பெரியார். 1925ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பெரியார் ‘குடிஅரசு’ எனும் வார ஏட்டைத் தொடங்கிய விவரம் பெரியாரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
‘குடிஅரசு’ எனும் பெயர் பற்றி பெரியார், ஜனநாயகம் என்பது வடமொழிச் சொல். அதை வேண்டாமென்று ஒதுக்கி ‘குடிஅரசு’ என்ற பெயரை வைத்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி பெரியார் ஏட்டிற்குத் தமிழ் பெயராகச் சூட்டியது ‘தமிழ் எதிர்ப்பு’ ஆகுமா? பெரியாரின் இச்செயலினை நமது எதிரிகள் யாராவது அறிந்திருப்பார்களா? என்றால் இருக்காது.
பெரியார் உலக மனிதர் என்று மேலே குறிப்பிட்டோம் அல்லவா? தாய் மொழி என்பது எது? என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் இதுவரை எவரும் கூறாததாகும். தந்தை ஒரு மொழி பேசுபவராகவும், தாய் ஒரு மொழி பேசுபவராகவும் இருக்கிறபோது தந்தை மொழியா? தாய்மொழியா? இருமொழி ஒருவருக்கு எப்படித்தாய் மொழியாக இருக்கமுடியும்? இந்த இடத்தில் தாய்மொழி எனும் பற்றுக் கோடு காணாமல் போய்விடுகிறது. பெரியார், ஒருவனுக்குத் தாய்மொழி என்பது பிறந்த பழகிய வாய்ப்பினால் புகுத்தப்பட்டது (‘விடுதலை’ 15.10.1962) என்கிறார். இங்கே தந்தை மொழியும் தாய் மொழியும் வீட்டு மொழியாகி – பழகிய வாய்ப்பினால் கிடைத்த நாட்டின் மொழி தாய்மொழி ஆகிவிடும் என்கிறார் பெரியார்.
பழகிய வாய்ப்பினால் தாய்மொழி
வங்காளி ஒருவர் கேரளப் பெண்ணை மணக்கிறார். தமிழ்நாட்டில் வாழுகிறார். குழந்தை பிறக்கிறது. வளர்கிறது. அக்குடும்பம் தமிழைக் கற்று வாழ்கிறது. தமிழ் குடும்பம் ஆகிவிட்டது. தாய், தந்தையர்க்குப் பிறகு அக்குழந்தையும் அதனைச் சார்ந்தவர்களும் தமிழராகிவிட்டனர். தாய் தந்தையரின் தாய்மொழிகள் இங்கே காணாமல் போய்விட்டன. ஆகவே பெரியார் சொல்வது-போல பழகிய வாய்ப்பினால் தாய் மொழி புதிதாகவும் தோன்றிவிடுகிறது.
எனவே, தமிழ்மொழி பேசுவதை வைத்து ஒருவரை தமிழர் என்று கூறிவிட முடியாது. தமிழ் பேசத் தெரியாததால் தமிழர் இல்லை என்றும் சொல்ல முடியாது-. அதேபோல் இங்கிலாந்து சென்ற தமிழ்க் குடும்பப் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாமல் போய்விடுகிறது-.
தமிழ் மொழி பற்றி பெரியார்
“தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடமையாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும்’’ (‘விடுதலை’ 20.06.1959) என்றார் பெரியார். இதுமட்டுமில்லை. இதைவிடவும் தமிழர்களுக்கு அவர் புகட்டும் கருத்தைப் பாருங்கள்.
“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும். நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்’’ (‘விடுதலை’, 25.07.1972)
பெரியாரின் மேற்கண்ட இரு கருத்துகளும் அவர் தமிழ்மொழி மீது வைத்திருந்த பற்றையும் மதிப்பையுமே எடுத்துக்காட்டுகிறது. பெரியார் மொழிப்பற்று இல்லாதவராக இருந்தும் தாம் பிறந்ததும், பேசுவதும், எழுதுவதும், தமது கருத்தை வெளிப்படுத்தி பகிர்வதற்கானதுமான தமிழ்மொழி மீது அவருக்கு உள்ள ஆழமான ஈடுபாடு. இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானால் மொழி உணர்ச்சி இருந்தால் தான் முடியும் என்கிறார் பெரியார். இவ்வளவு ஆழமாகத் தமிழ் மொழியைப் பார்க்கிறவர் தமிழுக்கு எதிரானவராக எப்படி இருக்க முடியும்?
தமிழைப் பழைய நிலையிலேயே வைத்திருக்கலாமா?
தமிழை எவ்வெவ்வகையில் உயர்த்த வேண்டும்? அதற்குள்ள பழம் பெருமை மட்டும் போதுமா? அதன் இலக்கிய, இலக்கண பெருமிதங்கள் இக்காலச் சூழலில் தமிழ் மக்களின் வாழ்வுக்கு உதவுமா? வாழ்க்கை முறைக்கு ஏற்றதாய் இருக்க, உலகத்தோடு தொடர்பு கொள்ள, விரைந்து செயல்பட, பணியாற்ற நாம் மொழியை ‘பழைய’ நிலையி-லேயே வைத்திருக்கக் கூடாது என்பதே பெரியாரின் சிந்தனையாக இருந்தது.
பெரியார் தமிழ் மொழியைப் பற்றி கருத்துச் சொல்கிறபோது தமக்குத் தோன்றுகிற கருத்தை எடுத்து வைக்கிறவர் இல்லை. படித்துவிட்டு மட்டும் கருத்தைக் கூறாமல் வாழ்நிலையில் தமிழர்கள் படும் துன்பங்கள், இடையூறுகள், தடைகள் எல்லாவற்றையும் நேரில் பார்த்து அறிந்து தமது கருத்தை முன் வைப்பவர் அவர்! ஆகவேதான் மொழியையும் பழமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் எழுதினார்; பேசினார்.
தமிழை விரும்புவது ஏன்?
“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான்! அது தமிழ் மாண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை.’’
ஆகவே தான் பெரியார், 20.01.1935ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ தலையங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தங்களைப் பற்றி எழுதினார். தமிழ்மொழியை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். அதன்வழி தமிழர்களை உயர்த்த வேண்டும் என்கிற ஆதங்கத்தில் பெரியார் சொல்வதைக் கேளுங்கள்.
“தமிழ் மொழியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றி பலருக்கு அபிப்ராயம் இருந்தாலும் எவரும் தைரியமாய் முன்வராமலேயே இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய காரியத்திற்கு பாஷாஞானம், இலக்கண ஞானம், பொதுக்கல்வி ஆகியவை இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா? என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும் பாஷாஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்கா விட்டால் என்ன செய்வது? தவம் செய்வதா? அல்லது ஜபம் செய்வதா?”
இது பெரியாரின் குரல். ஆகவே அவர் முதன் நிலையில் தமிழில் சில எழுத்துச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவர் செய்தவைகளில் இன்று சிலவற்றை நாம் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்-படுத்தி வருகின்றோம். இப்படிப்பட்ட பெரியாரைத் தமிழ்மொழிக்கு எதிரானவர் என்று கூறுகிறார்களே?
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்
1947இல் பெரியார் ‘ஐ’, ‘ஔ’ பற்றிய எழுத்துகளை ‘அய்’, ‘அவ்’ என்று எழுத வேண்டும் என்று முடிவு எடுத்தார். இது குறித்தும் அவர் விளக்கமாக எழுதினார். பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அறிஞர் சோமலே எழுதியதை அப்படியே கீழே தருகின்றோம்.
“பத்திரிகையின் தேவைக்கு ஏற்ப எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வந்தவர் பெரியாரே. பெரியாரின் சிந்தனைப் போக்கினைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த பேராளர்கள் யாழ்ப்பாணத்தில் 1972 இறுதியில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரைகள் வாசித்துள்ளனர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்பதே தமிழக அரசு அவருக்கு நாட்டக் கூடிய நினைவுச் சின்னமாகும்.’’ (‘தமிழ் இதழ்கள்’: சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
அறிஞர் சோமலே பெரியார் பற்றி எடுத்துக் கூறுகிற கருத்துத் தமிழுக்கு எதிரானது ஆக முடியுமா? பெரியாரது எழுத்துச் சீர்திருத்தம் தமிழின் மேன்மையை நோக்கியது ஆகுமே தவிர, அதனைச் சிறுமைப்படுத்தியதாகவோ தமிழ்–மொழிக்கு எதிரானதாகவோ கொள்ள முடியுமா? பெரியாரின் கருத்துகளைப் பார்ப்பனர்கள் திரிக்கிறார்கள். நம்மில் இருக்கிற விபீஷணாழ்வார்களும் அவர்களது கருத்து-களுக்குத் துணை போகிறார்கள். பெரியாரால் தமிழ் மொழி குறித்து எடுத்து வைக்கப்பட்ட கருத்துகள் எத்தகைய நோக்கம் கொண்டவை என்பதைத் தமிழர்களாய் இருப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, பெரியார் தமிழுக்கு எதிரானவர் அல்ல. அவர் தமிழை உலகத் தரத்துக்கு உயர்த்த பாடுபட்டவர்!
(தொடரும்…)
– நேயன்