ஓய்வறியாச் சூரியன்நீ
உலகின் பெருந்தலைவன்!
ஏய்ப்போர் திமிரடக்க
எழுந்த எரிமலை நீ!
நீயில்லாத் தமிழகமோ
நிலவில்லா வானம்தான்!
தாயில்லாச் சேயெனவே
தவிக்கின்றோம் இந்நாளில்!
சாகாத வானம் நீ!
சரியாத இமயம் நீ!
ஆகா மடமையினை
அழிக்கவந்த செந்தீ நீ!
நாடுமொழி இனம்வாழ
நாளும் உழைத்தவன் நீ!
ஈடிணையே இல்லாத
இன்பத் தமிழ்முரசம் நீ!
எதிரிகளின் வஞ்சகத்தை
இறந்தபின்னும் வென்றவன் நீ!
புதிராய் இருந்தவன் நீ!
புரட்சி விதைத்தவன் நீ!
கண்ணீரில் நாங்கள்
கலங்கி நனைகின்றோம்;
உன்போல் ஒருதலைவன்
உருவாகத் காத்திருப்போம்!
தன்மானம் தன்மதிப்பைத்
தமிழரிடம் சேர்த்தவன் நீ!
அண்ணாவைப் பெரியாரை
அடியொற்றி வாழ்ந்தவன் நீ!
சீரார் தமிழ்மொழியைச்
செம்மொழியாய் ஆக்கியவன்;
ஆரூரின் செம்புகழை
ஆழப் பதித்திட்டாய்!
தமிழும் தமிழினமும்
தமிழ்நாடும் தலைகுனிந்து
நிமிராத வெம்பழியை
நீக்கத் துடித்தவன் நீ!
உன்பெருமை யாவையுமே
உலகம் மறக்காது;
என்றென்றும் எங்களுடன்
இன்மொழிகள் பேசிடுவாய்!
எழுத்தினிலும் பேச்சினிலும்
என்றும் முரசொலித்தாய்!
விழுதுகள் நாங்களெல்லாம்
வேருன்னை நினைத்திருப்போம்!
– முனைவர் கடவூர் மணிமாறன்