Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

துரியோதனன்

‘‘கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை

உற்றவர்க்கும் வீரரென்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக்

கொற்றவர்க்கும் உண்மையான கோதின் ஞான சரிதராம்

மற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால்’’

எனப் பேசியவன் துரியோதனன்.

ஜாதி இருக்கிறதுதான் என்றாலும் எங்கெங்கு ஜாதி பார்க்கப்பட வேண்டும் என்று பகுத்துக் கூறும் பாங்கு கவனிக்கப்படத்தக்கது.

தூணில் பிறந்த நரசிம்மன், அப்சரஸைப் பார்த்ததும் விந்து வழியவிட்ட பரத்வாஜன், அவன் விட்ட இந்திரியம் பிடித்த பானையில் பிறந்த துரோணன், குடத்தில் பிறந்த குள்ளமுனி அகத்தியன், சிதறிய இந்திரியத் துளிகளைச் சேர்த்துப் பிடித்துப் பிறந்த முருகன் பிறப்பெல்லாம் பெருமை தரும் பிறப்புகளா? எனக் கேட்டானாம் துரியோதனன். (வில்லிபாரதம் பாடல் 344_ ஆதி)

வில் போட்டியில் கலந்துகொண்ட கர்ணனின் பிறப்பு பற்றிய பேச்சு வந்தபோது கேட்டவன்.

பாண்டவர்களாகிய உங்களுடைய பிறப்பு எவ்வகைப்பட்டது என்று எல்லாருக்கும் தெரியும். (சோ எழுதிய மகாபாரதம் ஆதி. பக்கம் 107) என்றான்.

ஜாதி தெரியாத கர்ணனை அரசனாக்கி அதன் வாயிலாக சத்திரியனாக்கி விட்டவன்.

எப்படி என்றவர்களைக் கேட்டான்: வேறு குலத்தில் பிறந்தோர் பிராமணராகியுள்ளனர்.

சத்திரியனான விசுவாமித்திரன் பார்ப்பனனாகி உள்ளானே என்றானாம். சோ எழுதிய பாரதக் கதையில் 107ஆம் பக்கம் கூறுகிற செய்தி இது.

பாரதக் கதையின் காலத்தில் ஜாதிப் பிரிவு இருந்தது. இளக்கமாக இருந்தது, அதை இறுக்கமாக ஆக்குவதற்கு எழுதித் திணிக்கப்பட்டது கீதை.

இதனாலேயே துரியோதனனின் பாத்திரம் அதர்மம் பேசியதாக ஆக்கப்பட்டது.

எப்படியோ பிறந்த திருதராஷ்டிரன். குருடன். பாண்டு வெள்ளை நிறமுடையவன். குருடன் ஆட்சி செய்ய முடியாது எனக் கூறிப் பாண்டுவை மன்னனாக்கினர். பேருக்கு ஆண் பாண்டு. உடல் உறவில் ஈடுபட்டால் இறப்பான் எனச் சாபம்.

மனைவி பிருதை. குந்தி என்பார்கள். யார் யாரிடமோ கூடிக் கலவி செய்து குழந்தை பெற்றாள். பாண்டுவின் இரண்டாம் மனைவியும் அப்படியே.

பாண்டு இறந்தான். பின் யார் பட்டத்திற்கு வருவது? விவாதங்கள் நீண்டன.

திருதராஷ்டிரனின் மக்களான துரியோதனனும் அவன் தம்பியரும்தான் என்றனர் சிலர்.

திருதராஷ்டிரனின் பதிலியாக ஆண்ட பாண்டுவின் புத்திரர்கள் ஆள வேண்டும் என்றனர் சிலர்.

தீர்வு ஏற்படவில்லை. நாடு இரு கூறாக்கப்பட்டது.

பலராமனும் கிருஷ்ணனும் சகோதரர்கள். இவர்களின் தங்கை சுபத்திரை. பலராமனின் நண்பன் துரியோதனன். சுபத்திரையை துரியோதனுக்குத் திருமணம் செய்விக்க பலராமன் முடிவு செய்துவிட்டான். துரியோதனனும் சம்மதித்தான்.

சுபத்திரையோ அர்ச்சுனனை விரும்பினாள். அண்ணன் கிருஷ்ணனிடம் தெரிவித்தாள். கிருஷ்ணன் ஆமோதித்தான்.

சுபத்திரை சாமான்யப்பட்டவள் அல்லள். ஒரு நாள் கிருஷ்ணனிடம் கேட்டாள், “எல்லாப் பெண்களும் உன்னையே விரும்பி உன்னுடன் உடலுறவு கொள்ளும் அளவுக்கு உன்னிடம் இருப்பதை நான் அறிய விரும்புகிறேன் என்றாளாம். அண்ணனிடம் தங்கை பேசும் பேச்சா இது?

அண்ணனும் சம்மதித்ததுதான் அநியாயம். தங்கையை பூரி எனும் ஊருக்கு அழைத்துப் போய் தன்னிடம் இருப்பதைக் காட்டினான்.

கிருஷ்ண பக்தர்கள் சர்வம் ஜகன்னாதம் எனக் கூறுவது இதைத்தான். எந்த வேறுபாடும் கிடையாது என்பது பொருள். அண்ணன் தங்கையைப் புணர்ந்ததை ஞாயப்படுத்தும் வாக்கியம்.

சுபத்திரை அர்ச்சுனனோடு துவாரகையை விட்டே ஓடிப்போய்விட்டாள். இந்தச் செய்தியைச் சொல்ல துரியோதனனைச் சந்திக்கிறான் பலராமன். அஸ்தினாபுரத்து அரசவையே கொந்தளிக்கிறது. யாதவர்கள் மீது படையெடுத்து சத்திரியர் மானம் காக்கப்பட வேண்டுமென்று பீஷ்ம பிதாமகர் பேசினார்.

சுபத்திரையை ஏற்றிக்கொண்டு தேரை ஓட்டிச் சென்றது யார் என்று துரியோதனன் கேட்டான்.

அர்ச்சுனனை ஏற்றிக் கொண்டு தேரை ஓட்டிச் சென்றது சுபத்திரை என்கிறான் பலராமன்.

அர்ச்சுனனை விரும்பி அவனைக் கடத்திச் சென்றது சுபத்திரை எனும்போது, அவளுடைய விருப்பம் போலவே சுபத்திரை வாழட்டும். அவளுடைய விருப்பத்தை முறியடிக்க நம் படைபலத்தைப் பயன்படுத்தக் கூடாது. தனிப்பட்டோர் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள அரசின் படைபலம் உதவக் கூடாது. துவாரகையோடு உரசல் வேண்டாம்.

என்ன தெளிவு _ நேர்மைப் பார்வை. பெண்ணின் மனதை மதிக்கத் தெரிந்த மாண்பு. மிக்க பண்பின் குடியிருப்பு.

போர் செய்ய வேண்டும் என்ற கிழட்டு பீஷ்மர் கண்களில் நீர். குரல் உடைந்துவிட்டது. “மகனே! நீ பெருமைக்குரியவன்’’ என்று மனதாரப் பாராட்டினார்.

சத்திரிய தர்மம் முரட்டுத் தனமானது. நியாயம் அநியாயம் பார்க்காதது. தன் நலம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது. அத்தகைய சத்திரியர்களில் துரியோதனன், தனித்துவமானவன்.

காசிக்கு வந்தான் துரியோதனன். தன் தங்கை துச்சளைக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. காசியில் இருக்கும் விசுவநாதக் கடவுளிடம் முறையிட வந்தார்கள் குடும்பத்துடன்.

கங்கை புனிதநதி. இந்துக்கள் எனப்படுவோர் அனைவர்க்கும் கங்கா மாதா. அதன் கரையைப் பார்த்தான். ஊரின் அத்தனை அழுக்குகளும் அங்கே ஆற்று நீர் முழுவதும் குப்பை கூளங்கள். கரையில் வைத்து எரிக்கப்பட்ட பிணங்கள். பாதி எரிந்த பிணங்கள் புனித கங்கையில் வீசப்பட்டு மிதந்து செல்கின்றன. அனைத்தையும் கண்டான்.நதியை வணங்கும் மக்கள் நதிக்கரையில் கழித்த மல ஜலங்கள். முகம் சுழித்தான்.

அசிங்கம் இல்லாத இடமாகப் பார்த்து கங்கை நதிக்குள் இறங்க முயன்றான். நீரில் காலை வைக்கும்போது அதனைத் தடுப்பதைப் போல ஒரு குரல். பெண் குரல். “மாதாவின் தலையில் காலை வைக்காதீர்கள். மாதாவின் நீரைக் கையில் எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டபின் காலை வைக்கலாம்’’ என்றது.

குரல் வந்த திக்கைக் கவனித்தான். “உன் மாதாவின் மேல் கால் படக் கூடாது… பாதி எரிந்த பிணங்கள் மிதந்து உன் மாதாவின் உடல் முழுவதும் ஊர்வதை அருவருப்பாக உணரவில்லையா?’’

திடுக்கிட்டுத் திரும்பினாள் அவள். எதிர்பார்க்காத கேள்வி. யாரும் இப்படிச் சிந்தித்ததே இல்லை.

கேட்டவனைப் பார்க்கிறாள். வியப்பு. கண்களைத் தாழ்த்திக் கொள்கிறாள். நாணம்.

அகல் விளக்கின் திரியைக் கொளுத்தி கங்கை நீரில் ஓடவிட்டாள். பிணங்களைக் காண வசதி செய்தாளோ?

“அவள் யார்?’’ எனக் கேட்டான். “பாகதத்த மன்னனின் மகளான பானுமதி’’ என்று பதில் வருகிறது.

“திருதராஷ்டிர மன்னனின் தலைமகன் துரியோதனன்’’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

இருவரும் பார்த்துக் கொண்டனர். கண்கள் கவ்விக் கொண்டன. மனங்களும் இணைந்து கொண்டன.

“என்னை மணந்து கொள்கிறாயா?’’ கேட்டுவிட்டான்.

“என் தந்தை கோயிலில் இருக்கிறார்’’ அவளின் பதில்.

விதுரன் சந்தித்தான். மணம் முடிந்தது கோயிலில்.

(தொடரும்…)

 

– சு.அறிவுக்கரசு