Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரின் மாணவர் கலைஞர்!

“பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்.. ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்….’’ என்று எழுதியவர் கலைஞர். அவர் தனது குருகுலத்தில் பயின்ற இலட்சியக் கல்வியின் விளைவே இந்த வரிகள்.

திருக்குவளையும் திருவாரூரும் அவர் பள்ளிப் படிப்பைப் பயின்ற ஊர்களாக இருக்கலாம். ஈரோடுதான் அவரது அரசியல் பல்கலைக்கழகம். மாணவர் நேசனும் முரசொலியும் அவருக்கு முறைசாரா கல்வி என்றால், ‘குடிஅரசு’ இதழ்தான் அவருக்கு முறைப்படி அனுமதி தந்து பயிற்சி அளித்த கல்வி நிறுவனம். காரணம், அங்குதான் அவர் பெரியார் என்ற ஆசிரியரின் நேரடிப் பார்வையில் பாடம் கற்றார். பயிற்சி பெற்றார். அந்தப் பாடங்களில் அவர் எந்தளவு தேர்ச்சி பெற்றார்? பெரியாரின் ஈரோடு ‘குடிஅரசு’ குருகுலத்தில் பயின்ற கலைஞர், முதல் பெஞ்ச் மாணவரா? கடைசி பெஞ்ச் மாணவரா? முதல் மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்தவரா? தேர்ச்சி பெற முடியாமல் போனவரா? ஆசிரியரின் சொற்படி நடந்த அடக்கமான மாணவரா? தன் விருப்பப்படி செயல்பட்ட துடுக்குத்தனமான மாணவரா? கேள்விகளை எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம். திருவையாறு இசைவிழாவில் சூத்திரப் பாடகர் பாடியதால் புனிதம் கெட்டுவிட்டதாக நினைத்து, மேடையை கழுவி புனிதப்படுத்திய வருணாசிரம- சனாதனவாதிகளின் தீண்டாமை செயல்பாட்டை, ‘குடிஅரசு’ இதழில் ‘தீட்டாயிடுத்து’ என்ற துணைத் தலையங்கம் மூலம் வெளுத்து காயப் போட்டவர் கலைஞர். அதன் வாயிலாக, தனது ஆசிரியர் பெரியாரின் நம்பிக்கைக்குரிய மாணவரானார். திராவிடர் கழகக் கொடி உருவாக்கம் தொடர்பாக பெரியார் நடத்திய ஆலோசனையின் விளைவாக,  கறுப்பு வண்ணத்தின் நடுவே சிவப்பு வட்டம் என வரையறுத்து அதனை ஈரோடு சண்முகவேலாயுதம் உள்ளிட்டோர் வடிவமைத்தபோது, சிவப்பு வண்ணத்திற்கான மையைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், பெரியாரின் மாணவர் கலைஞர் தன் விரலில் குண்டூசியால் குத்தி, ரத்தத்தால் சிவப்பு வட்டம் வரைந்து, கொள்கைக் கொடிக்கு தன் குருதியோட்டத்தால் உயிரோட்டம் தந்தார்.

ஈரோடு குருகுலத்தில் கலைஞர் என்ற மாணவர் ஒவ்வொரு நாளும் காட்டிய  வேகம் சீரானதா, சரியானதா, இந்த வேகம் எங்கே போய் நிற்கும் என்பதெல்லாம் ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மாணவரின் இயல்பை அறிந்திருந்தார் ஆசிரியர்.

புலவர்களின் இலக்கிய வியாக்கியானங்களில் பெரியாருக்கு எப்போதுமே நாட்டம் இருந்ததில்லை. புராணங்களிலும் பொய்ச்சுருட்டு இலக்கியங்களிலும் கற்பனை மிகு கவிதைகளிலும் உள்ள சமூகக் கேடுகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்தவர் அவர். கலைஞருக்கு அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டெனினும், தமிழ் மீது அவருக்குத் தணியாத காதல் இருந்தது. மாணவரின் மன ஓட்டத்தை ஆசிரியரும் அறிவார். அதன் விளைவுதான், ‘குடிஅரசு’ குருகுலப் பயிற்சியின்போது கலைஞர் எழுதி வெளியிட்ட ‘கவிதையல்ல’ என்ற புதுக்கவிதைப் புத்தகம்.

ஆசிரியர் விரும்பாத துறையில் மாணவர் எழுதிய புத்தகம் எனினும், மறைத்து வைத்துப் படிக்கக்கூடியதல்ல. விரித்து வைக்கலாம். பகுத்தறிவுக் கருத்துகளின் விளக்கம் அது. ஆசிரியரின் பாடங்களைப் பாக்களாகத் தந்திருந்தார் மாணவர்.

எறிபத்தர் எதிரிகளை

மழுவால் வதைத்தார்

முறிபட்டார் தாய்தந்தை

மனைவி மக்கள் கோட்புலியால்.

நிலைக்களமாம் அன்புக்கு

சைவம் என்பீர்!

கொலைக்களமாம் குலச் சிறையால்

சமணர் செத்தார்.

தலைக்கனம் பிடித்துப் பிதற்றுகின்ற

மெய்யன்பீர்!

வலைக்குள் மாட்டிட

வளர்த்து வந்த புராணத்தைச்

சாக்காட்டால் மோதிச் சடுதியில்

சாய்த்திடுவோம்.

பூக்காட்டில் புகுந்து வரும்

தென்றலல்ல நாங்கள்.

புயல் என அறிவீர்!

ஆசிரியர் மேடைதோறும் முழங்குகிற கருத்துகள்தான். அதை மாணவர் அழகு தமிழால் வண்ணம் பூசி கவிதையாக வழங்கினார். ராமனைப் பாடும் கம்பதாசர்கள் நடுவே இராவணனை_-இந்திரஜித்தை _இரணியனை -இன்னும் ஏராளமான பாத்திரங்களைத் திராவிடப் பார்வையில் பாடினார் மாணவர். குருகுலப் பயிற்சிக்குப் பின் வேறு வேறு இடங்களுக்கு சென்று தன் திறமையை வெளிப்படுத்தி, பலரின் பாராட்டுகளை மாணவர் பெற்று வந்தார். எங்கு சென்றாலும், ஈரோட்டு பூகம்பாத்தால் பழமை லோகம் இடிபட்டதை விளக்கும் பகுத்தறிவுப் பார்வையே அவரது எழுத்தெனும் ஆயுதமானது.

“சபாஷ்.. பலே.. நல்ல வேலையைத்தான் செய்கிறான்’’ என ஆசிரியர் தன் மாணவர் குறித்து மனதுக்குள் மகிழ்ந்தார். எனினும், கண்ணகியை நாயகியாகக் கொண்ட சிலப்பதிகாரத்தை உயர்த்திப் பிடித்து, ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுவதை ஆசிரியரால் ஏற்க முடியுமா? மாணவரோ, கற்புக்கரசியாய் கண்ணகியை நிலை நிறுத்தாமல், முடியாட்சி அவையில் ஜனநாயகக் குரல் கொடுத்து, தன் கணவனின் படுகொலைக்கு நீதி கேட்ட புரட்சிப் பெண்ணாகக் கண்ணகியைக் கண்டார்.

ஆசிரியரின் பார்வை வேறு. மன்னன் தவறு செய்தால் அவனிடம் நீதி கேட்பதும், அவன் தண்டிக்கப்படுவதும் நியாயம். அதற்காக மதுரையும் மக்களும் என்ன தவறு செய்தார்கள். அவர்களை ஏன் கண்ணகி எரிக்க வேண்டும்? அதுவும் தன் இடது பக்க மார்பகத்தை திருகி எறிந்ததால் மதுரை மாநகர் எரிந்தது என்றால் அதில் பாஸ்பரஸ் இருந்ததா என்பதே ஆசிரியரின் கேள்வி. அதுமட்டுமா, மதுரையில் பரவிய தீ, பார்ப்பனர்களை எரிக்காமல் கண்ணகி விதிவிலக்கு அளித்ததில் என்ன நியாயம் என்பதும் ஆசிரியர் எழுப்பிய வினா. மாணவரோ, வடநாட்டு இறக்குமதிகளான ராமாயன சீதைக்கும், மகாபாரத திரௌபதிக்கும் மாற்றாக தமிழ்க்  காப்பியமான சிலப்பதிகாரத்தின் கண்ணகி, மாதவி உள்ளிட்டோரை முன்னிலைப்படுத்தினார்.

குருகுலத் தேர்வுகளில் காப்பியங்கள் குறித்து எழுதப்படும் விடைகளுக்கு ஆசிரியரிடமிருந்து அத்தனை சுலபமாக மதிப்பெண் பெற முடியாது. இதனை மாணவரும் அறிவார். அதே நேரத்தில், மானுட இலக்கியமான திருக்குறள் என்றால் ஆசிரியர் மகிழ்வார் என்பது மாணவருக்குத் தெரியும். கம்பராமாயணம், -பெரியபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களுக்குப் பதில் திருக்குறளில் உள்ள கருத்துகளை அனைவர் மனதிலும் பதிய வைப்பதற்காக சிறப்பு வகுப்புகளை நடத்தியவர் ஆசிரியர். அதனால் மாணவரும் குறளின் பெருமையை _ -புகழை தன் எழுத்துகளில் ஓவியம் போலத் தீட்டினார்.

குறள் என்றாலும் அதில் பெண்ணடிமைத்தனம் தலைக்காட்டினால் இகழ்தானே! ஆசிரியரின் இந்தப் பார்வை  மாணவர் அறியமாட்டாரா? அதனால்தான்

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

என்ற குறளுக்கு விளக்கம் எழுதிய மாணவர்,

கணவன் வாக்கினை கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி என்பவள், பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்- என்று எழுதினார்.

குருகுலத்தில் பயின்றதையும் பயிற்சிப் பெற்றதையும் தேர்வில் சரியாக எழுதி மதிப்பெண் பெறுவது சிறப்புதான். அதேநேரத்தில், தனது பணியில் ஒருவர் எப்படி அதனை செயல்படுத்துகிறார் என்பதைப் பொறுத்துதானே ஆசிரியருக்குப் பெருமை சேரும். கலைஞர் என்ற மாணவர், அதே குருகுலத்தின் மூத்த மாணவரான அண்ணாவுடன் சென்று அவரது இயக்கத்தில் பங்கேற்ற பிறகு, அரசியல் களத்தில் தனது ஆசிரியரான பெரியாரிடமே, தான் கற்ற வித்தைகளைக் காட்டுகின்ற காலம் ஒன்று இருந்தது. ‘முரசொலி’ இதழ் வழியே ஆசிரியரை நோக்கியும் கணைகளை ஏவினார். தேர்தல் எனும் தேர்வுக் களத்தில் ஆசிரியர் கற்றுத் தந்த பாடங்களுக்கு வேறு கோணத்தில் விளக்கங்கள் தந்து வெற்றி பெற்றார். அவ்வப்போது ஆசிரியரிடம் குட்டுப் பட்டார். ஆனாலும் ‘ஆசிரியர்_-மாணவர் உறவு’ என்பது நெஞ்சில் மலர்ந்த வாசனை மாறாத- வாடா மலராகவே இருந்தது.

மூத்த மாணவர் அண்ணா ஜனநாயகக் களத்தில் வென்று பதவியேற்றார். ‘ஆட்சியையே தனது ஆசிரியருக்குக் காணிக்கை’ என சட்டமன்றத்தில் அறிவித்தார். சொல்லால் அல்ல! அவர் நிறைவேற்றிய சுயமரியாதை திருமணச் சட்டத்தினால்! அவருக்குப் பின் பதவியேற்ற மாணவரான கலைஞர், தன் அண்ணனைவிட வேகமாகப் பாயக்கூடியவர். அந்தப் பாய்ச்சலை சட்டங்கள் வழியாகவும் திட்டங்கள் வழியாகவும் காட்டினார்.

குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம பங்கு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றி சாதனை புரிந்தார். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் 69% இடஒதுக்கீடு அளித்தார். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், கிராமப்புறத்தினர், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில் படித்தோர், திருநங்கை-நம்பியர் என எவரெல்லாம் எதன் பெயரிலெல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் தன் ஆசிரியர் சொல்லித் தந்த சமூக நீதியின் பெயரால் உரிமைகள் கிடைக்கச் செய்தார். ஆசிரியரின் நெஞ்சில் ஒரு முள் தைத்திருப்பதை மாணவர் அறிந்திருந்தார். கோவில் கருவறைக்குள் நுழையமுடியாமல் பிறப்பினால் நீடிக்கும் ஏற்றத்தாழ்வே அந்த முள். சட்டரீதியான அறுவை சிகிச்சை செய்யாமல் அதனை அகற்ற முடியாது. அந்த அறுவை சிகிச்சையை செய்தால், குய்யோ முறையோ என்று சிலர் கூக்குரலிட்டு சிகிச்சையே நடக்காமல் தடுத்து விடுவார்கள்.   அதனை அறிந்திருந்தும் சட்டரீதியான அறுவை சிகிச்சையை செய்தார். கூக்குரலிட்டுத் தடுத்தார்கள். தன் ஆசிரியர் மரணத்திற்கு முன்பாக அகற்ற முடியாமல் போனாலும், தன் நெஞ்சிலும் தைத்திருந்த அந்த முள்ளை, தன் மரணத்திற்கு முன்பாக அகற்றிக் காட்டிவிட்டே நம்மிடமிருந்து அந்த மாணவர் விடைபெற்றார்.

பகுத்தறிவு குருகுலமாம் ஈரோடு ‘குடிஅரசு’,-’விடுதலை’ அலுவலகத்தில் பயிற்சி தந்த ஆசிரியருக்கு தன் பதவியையே காணிக்கை என்றார் மூத்த மாணவர். இளைய மாணவரோ, அந்த  ஆசிரியர் மறைந்தபோது, ‘தன் பதவியே போனாலும் பரவாயில்லை’ என்று அரசு மரியாதை அளித்து காணிக்கை செலுத்தினார்.

பெரியாரின் மாணவரான கலைஞர் முதல் வகுப்பில் தேறிய மாணவரா, கடைசி பெஞ்ச் மாணவரா, அடக்கமானவரா, துடுக்குத்தனம் நிறைந்தவரா என்பதெல்லாம் பள்ளிப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளன. பதிவேடுவளைக் கடந்த வாழ்க்கையின் பக்கங்களில் எல்லாம் தனது ஆசிரியரின் பகுத்தறிவு -சமுகநீதிப் -பெண்ணுரிமை காக்கும் நாத்திக மாணவராகவே நிறைந்திருக்கிறார் கலைஞர்.     

– கோவி.லெனின்,
இதழாளர்