தமிழோவியன்
தமிழர் தலைவரின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ‘விடுதலை’ சந்தா அளிக்கும் விழா, ஜாதியை ஒழிக்க அரசமைப்புச் சட்டம் கொளுத்தப்பட்ட போராட்டத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவு நினைவு விழா ஆகிய விழாக்கள் அடங்கிய திறந்தவெளி மாநாடு திராவிடர் கழகத்தால் ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 2.12.2017 காலை ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் ஈரோடு வந்த தமிழர் தலைவருக்கு பறை, தாரை தப்பட்டை முழங்க எழுச்சியாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கழகத் தோழர்கள், இன உணர்வாளர்கள், பல்வேறு கட்சி, அமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் புடைசூழ பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் பயனாடை அணிவித்து வரவேற்றார்.
முற்பகல் நிகழ்வுகள்:
காலை 9 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் ஈரோடு மங்கள மகாலுக்கு வருகை தந்தார். பிறகு மேடைக்கு வந்த தமிழர் தலைவர் பிறந்த நாள் கேக்கை வெட்டினார். அப்போது தோழர்களின் வாழ்த்தொலிகளால் அரங்கமே அதிர்ந்தது. அதன் பின்னர், வரிசையாக இரண்டு மணி நேரம் தோழர்கள் மேடைக்கு வந்து தமிழர் தலைவருக்கு வாழ்த்துகளைக் கூறி சால்வைகள் அணிவித்து, பழங்களைக் குவித்து, நன்கொடைகளையும் சந்தாக்களையும் வாரி வழங்கினர். முற்பகல் 11 மணிவாக்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இரண்டு மணி நேரம் நின்றபடியே அனைவரின் வாழ்த்துகளையும் பெற்று, ஆசிரியர் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்பொழுது கழகத் தோழர்களின் கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று. பின்னர், புதிய நூல்களை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து அரங்கம் கருத்தரங்கிற்குத் தயாரானது. கருத்தரங்கம் தொடங்குவதற்கு முன்பாக ஈரோடு இராவணன், எழிலன், பெரியார் பிஞ்சுகள் பங்கேற்ற ‘நறுக்குகள்’ என்ற ஓரங்க உரையாடல் நிகழ்ச்சி இடம்பெற்றது.
தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்க ‘திராவிடர் இனம் தலைநிமிர’ எனும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது.
‘சமஸ்கிருத, இந்தித் திணிப்பை எதிர்ப்போம்’ எனும் தலைப்பில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, ‘தமிழக உரிமைகளை மீட்போம்’ எனும் தலைப்பில் தலைமைக் கழகப்பேச்சாளர் தஞ்சை
இரா.பெரியார் செல்வன், ‘பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்போம்’ எனும் தலைப்பில் தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், ‘பெண்ணுரிமை காப்போம்’ எனும் தலைப்பில் மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதினி ஆகியோர் உரையாற்றினர். ஈரோடு மாவட்டத் துணைச் செயலாளர் மா.மணிமாறன் நன்றி கூறினார்.
திறந்தவெளி மாநாடு!
மாலை 5 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் வீரப்பன் சத்திரத்தில் திறந்தவெளி மாநாட்டில் விறுவிறுப்பான பட்டிமன்றம் தொடங்கியது.
பட்டிமன்றம்
பட்டிமன்றத்திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நடுவராகவும் “தமிழர் தலைவரின் தொண்டில் விஞ்சி நிற்பது பெரியார் கொள்கையை உலகமயமாக்கியதே’’ என்ற அணியில் பேராசிரியர் அதிரடி க.அன்பழகன், கோபி.குமாரராஜா, புலியகுளம் வீரமணி ஆகியோர் எடுத்துக்காட்டுகளுடன் பதிவு செய்ய, “தமிழர் தலைவரின் தொண்டில் விஞ்சி நிற்பது பெரியார் கொள்கையை சட்டவடிவமாக்கியதே’’ என்ற அணியில் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் பூவை.புலிகேசி, மாநில திராவிடர் மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் மிகச் சிறப்பாக வாதிட்டனர்.
தமிழர் தலைவரின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ‘விடுதலை’ சந்தா அளிக்கும் விழா, ஜாதியை ஒழிக்க அரசமைப்புச் சட்டம் கொளுத்தப்பட்ட போராட்டத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவு நினைவு விழாவென முப்பெரும் விழாக்கள் அடங்கிய திறந்தவெளி மாநாடு மாலை 6.30 மணிக்குத் தொடங்கப்பட்டது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும் 95ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான பொத்தனூர் க.சண்முகம் முப்பெரும் விழாவிற்குத் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்தொலிக் கிடையே திராவிடர் கழகக் கொடியை ஏற்றிவைத்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
வாழ்க்கை இணையேற்பு விழா:
தருமபுரி மாவட்டம் கரியமங்கலம் வட்டம், கமலாபுரம் மு.சிசுபாலன்_செல்வராணி ஆகியோரின் மகன் சி.பகத்சிங்கிற்கும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் தொழுவூர் செயராமன்_சந்திரா மகள்
செ.கிருட்டிண வேணிக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்.
தாலி அகற்றும் நிகழ்வு
குடியாத்தம் அன்பரசு_தேன்மொழி இணையர் அடிமைத்தளையாம் தாலியை அகற்றி அதனைக் கழகத் தலைவரிடம் அளித்தனர்.
பெயர் இடல்
ஈரோடு அம்மாபேட்டை ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் மணிகண்டன்_முத்துலட்சுமி இணையர்கள் குழந்தைக்கு சமூகநீதி என்று தமிழர் தலைவர் பெயர் சூட்டினார்.
இசைத்தகடு வெளியீடு:
தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி கவிஞர் கலி.பூங்குன்றன், பாவலர் அறிவுமதி, கவிஞர் யுகபாரதி, கவிஞர் காளமேகம் ஆகியோர் இயற்றிய பாடல்கள் கொண்ட இசைப்பேழை வெளியிடப்பட்டது.
நூல்கள் வெளியீடு:
1. நீதிமன்றங்களில் தந்தை பெரியார் வழக்குகள்/வாக்குமூலங்கள்/தீர்ப்புகள்
_கி.வீரமணி
2. வியப்பின் மறுபெயர் வீரமணி
_மஞ்சை வசந்தன்
3. ஆசிரியர் கி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனை முத்துகள் – _இரா.கலைச்செல்வன்
4. ஆசிரியர் கி.வீரமணி தொண்டற வாழ்வு
_ தொகுப்பாசிரியர்: மஞ்சை வசந்தன்
5. Life and Happiness – Dr.K.Veeramani
6. Swimming against the current – Dr.K.Veeramani
7. பெரியார் பகுத்தறிவாளர் நாள்குறிப்பு.
8. விடுதலை இருமாத நாள்காட்டி 2018.
இந்த நூல்களை தமிழ்நாட்டு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெளியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் ப.போ.மோகன், தோழர் பி.மாரிமுத்து (சி.பி.எம்.), தோழர் ந.பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் உ.தனியரசு, தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முசுலீம் லீக் மாவட்டத் தலைவர் எம்.நூர்முகம்மது ஆகியோர் ஆசிரியரை வாழ்த்தி உணர்வுபொங்க உரையாற்றினர்.
ஏற்புரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது ஏற்புரையில்…
“நான், தந்தை பெரியார் அவர்களின் வாழ்நாள் மாணவன். இன்று ‘விடுதலை’ சந்தாத் தொகையாக முதல் கட்டமாக ரூ.67 இலட்சத்தை அளித்துள்ளனர் கழகத் தோழர்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘விடுதலை’ ஒவ்வொரு இல்லத்திற்கும் வந்தால்தான் சமூக இருள் விலகும்.
இது ஒரு ஜாதி ஒழிப்பு மேடை, தீண்டாமை ஒழிப்பு மேடை, சமூகநீதி மேடை, மதவாதத்தை ஒழிக்கும் மேடை. ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தால் சமத்துவத்தைக் கொண்டுவர முடியுமா? நாயை, பூனையைக் கொஞ்சுகிறார்கள். ஆனால், துப்புரவுப் பணியைச் செய்யும் என் சகோதரனைக் தீண்டினால் தீட்டா? தாழ்த்தப்பட்டவர் அய்.ஏ.எஸ். ஆகலாம்; அய்.பி.எஸ். ஆகலாம்; அர்ச்சகர் ஆக முடியாதா? என்று தனக்கே உரிய பாணியில் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு தமிழ் இருக்கை அமைப்பதற்காக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என ஆசிரியர் அறிவிப்பு செய்தார். நன்றியுரையை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ராம்கண் வழங்க விழா இரவு 10 மணிக்கு இனிதே நிறைவுற்றது.