நன்கொடை

டிசம்பர் 16-31

ஆறு.கலைச்செல்வன்

“சார், சார்’’

யாரோ வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு அழைப்பதைக் கேட்ட இளம்பரிதி வெளியே வந்து பார்த்தார்.

அங்கு ஒருவன் ஒரு மஞ்சள் பையை அக்குளில் இறுக்கி வைத்துக்கொண்டு, கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நான்கு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கைகளில் சில நோட்டீசுகள் காணப்பட்டன.

இளம்பரிதி அவர்களைப் பார்த்து, “என்ன சேதி?’’ எனக் கேட்டார்.

“நாங்களெல்லாம் இந்த நகரில் பத்தாவது கிராஸ் தெருவிலே இருக்கோம். அங்க ஒரு மாரியாத்தா கோயில் கட்டப் போறோம். அதுக்கு நன்கொடை கேட்டு வந்திருக்கோம்’’ என்று கூறியபடியே கையில் நோட்டுப் புத்தகத்தை வைத்திருந்தவன் அதை இளம்பரிதியிடம் நீட்டினான்.

“பத்தாவது கிராசில் வசிக்கிற நீங்க அங்குள்ளவர்களிடமே நன்கொடை வாங்கி கட்ட வேண்டியதுதானே! இங்க ஏன் வர்றீங்க? இது முதல் கிராஸ் தெருவாச்சே’’ என்றார் இளம்பரிதி.

அதற்கு நோட்டை நீட்டியவன்,

“நீங்களும் அங்கே வந்து சாமி கும்பிடலாம். நம்ம எல்லாரையும் மாரியாத்தா தானே காத்துகிட்டு இருக்கா’’. என்னோட பேரு கந்தசாமி. நான்தான் அந்தக் கோயில் தர்மகர்த்தா’’ என்றான்.

“சரிப்பா கந்தசாமி. நான் யார் தெரியுமா?’’ என்றார் இளம்பரிதி.

“தெரியும். நல்லாவே தெரியும். நீங்க ஒரு டாக்டர்’’ என்று பதில் கூறினான் கந்தசாமி.

“நோய் வந்தா எங்களைப் போன்ற டாக்டர்கள்தான் காப்பத்தணும். மாரியத்தா காப்பாத்தறதா சொல்றீயே!’’ என்று கந்தசாமியைப் பார்த்துக் கேட்டார் இளம்பரிதி.
இப்படி அவர் கேட்டதும் உடன்வந்த இளைஞர்கள் டாக்டர் இளம்பரிதியை முறைத்துப் பார்த்தார்கள். சிலர் ஏதோ பேச முற்பட்டனர்.

கந்தசாமி அவர்களைப் பேச வேண்டாம் என சைகைக் காட்டிவிட்டு,

“அய்யா! நீங்க டாக்டராக இருக்கலாம். உங்களோட கடமை சிகிச்சையளிப்பது மட்டும்தான். ஆனால் குணமளிப்பது இறைவன் திருவருள்’’ என்றான்.

“அப்படியா! சரி, அப்படின்னா நோயைக் கொடுப்பது யாருடைய திருவருளப்பா?’’ என்று இளம்பரிதி கேட்டதும் கந்தசாமியும் அவனுடன் வந்தவர்களும் மீண்டும் அவரை முறைத்துப் பார்த்தனர்.

“சார், விதண்டாவாதமெல்லாம் வேணாம். மாடி வீட்ல குடியிருக்கீங்க. பத்தாயிரம் ரூபா நன்கொடை போடுங்க. எங்களுக்கு நேரமாவுது. இன்னும் நெறைய பேரைப் பார்க்கணும். சீக்கிரம் போடுங்க’’ என்று கூறியபடியே நோட்டுப் புத்தகத்தை மீண்டும் அவரிடம் நீட்டினான் கந்தசாமி.

டாக்டர் இளம்பரிதி அந்த நோட்டை வாங்கி அதன் பக்கங்களைப் புரட்டினார். பலரது பெயர்கள் எழுதப்பட்டு அவர்கள் பெருந்தொகை அளித்ததாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. அதே பத்தாவது கிராசில் வசிக்கும் மதிவாணன் என்பவர் பெயரும் எழுதப்பட்டு அவர் பெயருக்கு எதிரே பத்தாயிரம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மதிவாணன் என்பவர் இளம்பரிதியின் நெருங்கிய நண்பர். அவர் இவ்வளவு பெரிய தொகை கொடுத்திருப்பார் என்பதை இளம்பரிதியால் நம்ப முடியவில்லை.

“சற்று நேரம் இருங்கள், வருகிறேன்’’ என்று கூறியபடியே வீட்டிற்குள் சென்றார் இளம்பரிதி. பணம் எடுக்கத்தான் உள்ளே செல்கிறார் என கந்தசாமியும் மற்றவர்களும் நினைத்தனர்.

ஆனால் உள்ளே சென்ற இளம்பரிதி தொலைபேசியில் மதிவாணனைத் தொடர்பு கொண்டார். “மாரியாத்தா கோயில்கட்ட நீ பத்தாயிரம் ரூபா நன்கொடை கொடுத்தாயா?’’ எனக் கேட்டார்.

“இல்ல, இல்ல. அவங்க உன்கிட்டேயும் வந்துட்டாங்களா? நான் எதுவும் கொடுக்கல. எழுதியிருக்கிறவங்களைப் பாத்து மத்தவங்களும் கொடுப்பாங்கன்னு பொய்யா அவங்களே எழுதி வைச்சிகிட்டாங்க’’ என்றார் மதிவாணன்.

பக்தியின் பெயரால் எப்படியெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்பதை அறிந்த இளம்பரிதி கோபத்துடன் வெளியே வந்தார்.

“இதோ பாருங்கப்பா. என்னால எதுவும் நன்கொடை தரமுடியாது. உங்கமேல எனக்கு நம்பிக்கையும் இல்லை. வேறு ஏதாவது நல்ல காரியத்துக்கு நன்கொடை கேட்டு வாங்க. இப்ப நீங்க போகலாம்.’’

இவ்வாறு கூறிய இளம்பரிதியை கந்தசாமியும் அவனுடன் வந்தவர்களும் சுட்டெரிக்கும் விழிகளுடன் நோக்கினர். “ஓகோ, கொடுக்க மாட்டீங்களா! உங்களை அந்த சாமி பாத்துக்கும்’’ என்று மிரட்டியபடியே அவர்கள் சென்றனர்.

இரண்டு நாட்கள் சென்றன. அடுத்த நாள் காலை தூங்கி எழுந்தவுடன் வெளியே வந்தார் இளம்பரிதி. அன்று இரவு அவசரத்தில் காரை வீட்டின் முன்புறக் கதவுக்கு வெளியே நிறுத்தியிருந்தார். காரைப் பார்த்த இளம்பரிதி அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். காரணம் கார் அடித்து உடைத்து சேதப்படுத்தப் பட்டிருந்தது. யார் இப்படி செய்திருப்பார்கள் என யோசித்துக் கொண்டிருக்கும்போது கந்தசாமியும் அவனது கூட்டாளிகளும் அந்த வழியே சிரித்துப் பேசிக்கொண்டும் கும்மாளம் அடித்துக் கொண்டும் சென்றனர்.

அவர்களின் பேச்சிலிருந்தும் அவர்கள் பார்த்த பார்வையிலிருந்தும் இந்த வேலையைச் செய்தது கந்தசாமியும் அவனது ஆட்களாகவுந்தான் இருக்கும் என்பதை இளம்பரிதி புரிந்துகொண்டார்.

என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது அவரது மருத்துவ மனையிலிருந்து அவரை உடன் வருமாறு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏதோ அவசர கேஸ் போலும். அவரது மருத்துவமனை நகரின் மய்யப் பகுதியில் இருந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். காரில்தான் நாள்தோறும் செல்வார். ஆனால் இன்று கார் அடித்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஆட்டோவைப் பிடித்துத்தான் செல்ல வேண்டும் என முடிவெடுத்த அவர் உடன் கிளம்பினார். காவல்துறையில் புகார் செய்ய ஏனோ அவர் விரும்பவில்லை. பிறகு பார்க்கலாம் என்ற பாணியில் அமைதியாக இருந்தார்.

சில நாட்கள் சென்றன. ஒரு நாள் வானம் மேகக் கூட்டத்துடன் காணப்பட்டது. மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்திருந்தார் இளம்பரிதி. திடீரென இடி மின்னலுடன் கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. சாப்பிட்டு விட்டு சற்று நேரம் ஓய்வெடுக்க எத்தனித்தார் இளம்பரிதி. திடீரென இடி மின்னலுடன் கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. வெளியே வந்து பார்த்தார். கடும் மழை கொட்டிக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் மழையை இரசித்துப் பார்த்தார். அப்போது அவரது செல்போன் ஒலித்தது. அன்றும் ஒரு அவசர கேஸ் வந்துள்ளதாக செய்தி வந்தது. அங்கிருந்தவர்கள் முதலுதவி அளித்திருப்பார்கள் என்றாலும் தான் உடனே செல்ல வேண்டும் என்பதை இளம்பரிதி அறிந்திருந்தார். மழையும் வலுவாகப் பெய்துகொண்டிருந்தது. நண்பர் ஒருவரின் காரைச் சில நாட்களாகப் பயன்படுத்தி வந்தார். காரை வெளியே எடுக்க வேண்டும் என எண்ணியபடியே காரின் அருகில் வந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு ஆட்டோ அவர் வீடுமுன் வந்து நின்றது.

“டாக்டர், டாக்டர், போகலாம் டாக்டர்’’ என்று ஒரு அழுகுரல் ஆட்டோவின் உள்ளிருந்து கேட்டது. இளம்பரிதி சற்றும் தாமதிக்காமல் ஏதோ அவசர கேஸ் என நினைத்து ஆட்டோவில் ஏறி அமர்ந்துவிட்டார். ஆட்டோவின் உள்ளே கலக்கத்துடன் உட்கார்ந்திருந்த ஒருவனை உற்றுப் பார்த்த இளம்பரிதி அவன் கந்தசாமிதான் என்பதை உறுதி செய்துகொண்டார். ஆனால் அவன் எதுவும் பேசவில்லை. அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடி மழை நீருடன் கரைந்து கொண்டிருந்தது. இளம்பரிதியும் அவனை ஏன் என்னவென்று எதுவும் கேட்கவில்லை.

மருத்துவமனை வந்தவுடன் இளம்பரிதி இறங்கி உள்ளே சென்றார். ஒரு பெண் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவசரப் பிரிவில் இருந்தாள். உடன் அங்கு சென்ற இளம்பரிதி நோயாளியை ஆய்வு செய்தார். அவருக்குத் தேவையான ஊசி மருந்துகள் கொடுத்தார். டெங்கு காய்ச்சலாக இருக்கலாமென சந்தேகப்பட்டார். அதற்காக இரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டார். அப்போது அருகில் வந்த கந்தசாமி கதறினான்.

“அய்யா! என் மனைவியை நீங்கதான்யா காப்பாத்தணும். ஊரெல்லாம் மழை வெள்ளம். நான் எங்கும் போக முடியாது. உங்களை நம்பித்தான் வந்திருக்கேன் அய்யா. காப்பாத்துங்க’’ என்று கூறியபடியே இளம்பரிதியின் காலில் விழுந்தான்.

“என் கடமையை நான் கண்டிப்பாகச் செய்வேன்’’ எனக் கூறியபடியே இளம்பரிதி கந்தசாமியைத் தேற்றினார். தான் நண்பர் ஒருவரின் காரை தற்காலிகமாக பயன்படுத்தி வருவதையும், ஏனோ உடைக்கப்பட்ட காரை பழுது பார்க்க மனம் வரவில்லை என்பதையும் கந்தசாமியிடம் இளம்பரிதி தெரிவித்தார்.

மறுநாள் காலை, வழக்கம்போல் வெளியே வந்தார் இளம்பரிதி. அங்கு கந்தசாமி தன் நண்பர்களோடு வெளியே நின்று கொண்டிருந்தான். இளம்பரிதியைப் பார்த்ததும் அனைவரும் வணக்கம் தெரிவித்தனர்.

“அய்யா, உங்க காரை சேதப்படுத்தியது நாங்கதான். இதோ மெக்கானிக்கையும் அழைச்சி வந்திருக்கோம். நாங்களே சரி செய்து கொடுத்திடுறோம். நாங்க செய்ஞ்ச தப்பையெல்லாம் மனசில வச்சிக்காம என் மனைவிக்கு வைத்தியம் பாத்து பொழைக்க வச்சிங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல டாக்டர்’’ என்று உணர்ச்சியுடன் பேசினான் கந்தசாமி.

“என் கடமையை நான் செய்ஞ்சேன். உங்க பகுதியைக்கூட நான் வந்து பார்த்தேன். ஒரே குப்பைமேடாக இருக்கு. அதனால கொசுத் தொல்லையும் இருக்கு. ரோட்டிலேயே மலம் கழிச்சி வைச்சிருங்காங்க. இப்படி இருந்தா எப்படி நோய் வராம இருக்கும்? இந்த லட்சணத்தில கோயில் வேறு கட்டப்போறீங்க!’’ என்று கூறி நிறுத்தினார் இளம்பரிதி.

“இல்லை அய்யா இல்லை. நேத்தே நாங்க முடிவு பண்ணிட்டோம். கோயில் கட்டறதை நிறுத்திட்டு அந்த இடத்தில் நல்ல வசதியோடு கூடிய கழிவறை கட்டப்போறோம். இது என் மனைவிக்கு வைத்தியம் பார்த்துப் பொழைக்க வச்சதால சொல்லலே. கொஞ்ச நாளா உங்களைப் பற்றி நாங்க நிறைய கேள்விப்பட்டோம்.

உங்களோட சமூகத் தொண்டையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டோம். எப்பவோ நாங்க மாறிட்டோம். எங்களை நீங்க மாத்திட்டீங்க. நாங்க வர்றோம். காரை சுத்தமாக பழுது நீக்கி எடுத்துக்கிட்டு வர்றோம்’’ என்று கூறியபடியே கார் சாவியை வாங்கிக் கொண்டு புறப்படத் தயாரானான் கந்தசாமி.

“அது சரி கந்தசாமி. கழிவறை கட்டப் போறதா சொன்னியே. அதுக்கும் நன்கொடை கேட்டு வருவியா?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார் இளம்பரிதி.
“வருவேன் சார்’’ என்று சற்று வெட்கத்துடன் கூறியபடியே சென்றான் கந்தசாமி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *