மனதில் பட்டதைத் தைரியமாகச் சொல்லும் தலைவர்
தமிழினப் பாதுகாவலராம் அய்யா அவர்களுக்குப் புதிய கார் பரிசளிப்பு விழா 19.8.1973 அன்று தஞ்சைப் பெருநகரில் தமிழினத்தின் வீரவரலாற்றுக் காவிய விழாவாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இவ்விழாவுக்கு நிகர் இவ்விழாதான் என்று வியக்கும் வகையில் நடைபெற்ற அவ்விழாவின் மாட்சியை வருணிக்க வார்த்தையே இல்லை எனக் கூறலாம். தன்மான இயக்க வீரர்களின் போர்ப்பரணி பாடும் பாசறை விழாவாகத் திகழ்ந்த இவ்விழாவில், தந்தைக்குப் புதிய காரினைப் பரிசளித்துப் பேசிய தமிழக முதல்வர் கலைஞர், புத்தராலும் பெற முடியாத வெற்றியைத் தந்தை பெற்று விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்டோரின் ஒரே குரலாகத் திகழ்கிறார் அய்யா என்றும் புகழாரம் சூட்டினார்.
தஞ்சை சோழ மன்னர்கள் ஆண்ட பூமி என்பது பழைய வரலாறு என்றாலும், கருஞ்சட்டை வீரர்களின் காவியத் தலைநகரம் என்றுதான் புதிய வரலாற்றுப் புகழேடுகள் கூறும் என்ற வண்ணம், தமிழ்ச் சமுதாயத்தின் விழி திறந்த வெண்தாடி வேந்தருக்குக் கார் பரிசளிக்கும் நிகழ்ச்சி, உணர்ச்சிக் காவியமாய்-கண்டோர் வியக்கும் ஓவியமாய் அமைந்திருந்தது!
தஞ்சை நகரம் பூண்டிருந்த விழாக்கோலம்…..! அப்பப்பா! வெறும் வார்த்தைகளால் வருணிக்கக்கூடியதா? இல்லையே! கழகக் கொடிகளைத் தோரணங்களாக்கி, கொள்கை முழக்கங்களை அவை ஏந்திவரும் குத்தீட்டிகளாய் – கொள்கை வேல்களாய் – மடைமையை நோக்கிப்பாயும் பகுத்தறிவுக் கணைகளாய்க் காட்சியளித்த வண்ணம், அறிவு ஒளி பரப்பின அவை.
எங்கெங்குக் காணினும் கருஞ்சட்டைப் பாசறை வீரர்கள்! குடும்பம் குடும்பம்! அகமும் புறமும் மலர, தம்மை வாழ்விக்க வாராது வந்த மாமணி போன்ற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு, ஒப்பற்ற பரிசளிக்க ஒருங்கே திரண்டு வருவதைத் தவிர எங்களுக்கு வேறு விழாதான் ஏது என்று கேட்காமல் கேட்பது போல் இருந்தது அவர்கள் வருகை! 27.8.73 அன்று காலை 8 மணி அளவில் சென்னை எழும்பூர் பெரியார் திடலில், தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் ஏகாம்பரம் பி.ஈ. அவர்களின் மைத்துனரும் சரோஜினி ஏகாம்பரம் எம்.பி.பி.எஸ். அவர்களின் சகோதரருமான செல்வன் துரைராஜன் அவர்களுக்கும், திருவள்ளூர் ஜே. சீனிவாசன் எம்.ஏ. அவர்களின் தங்கை செல்வி நிர்மலா அம்மையாருக்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் இனிது நடைபெற்றது.
விழாவில் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் அதிகாரிகள் ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள். அனைவரையும் பேராசிரியர் ஜே. சீனிவாசன் எம்.ஏ. அவர்கள் வரவேற்றுப் பேசினார். தந்தை பெரியார் அவர்கள் மணவிழாவிற்குத் தலைமை வகித்து, கொழுத்த இராகுகாலத்தில் திருமணத்தினை நடத்தி வைத்தார்கள். இதில் நானும் கலந்து கொண்டேன்.
விழாவில் தந்தை பெரியார் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
இந்தத் திருமண முறையானது, மாறுதல் முறையானது தமிழர் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியில் செல்லுபடி அற்றதாக ஆக்கப்பட்டு இருந்தது. பிறகு தமிழர்கள் ஆட்சியும், அதுவும் தமிழர் நலனில் அக்கறை கொண்டதுமான தி.மு.கழக ஆட்சி ஏற்பட்ட பிறகே செல்லுபடியாக்கப்பட்டது.
இந்தத் திருமண முறையானது காட்டுமிராண்டிக் காலத்தில் அதாவது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்கவேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ அது போலவே ஆணுக்குப் பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்.
இந்த நாட்டில் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும். இந்தத் திருமண முறை பெரிதும் சுயநலத்துக்காகவே ஒழிய பொது நலத்துக்கு அல்லவே. புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப் பாதுகாப்பதும், பெண்டாட்டி புருஷனைப் பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அதனை இரண்டு பேருமே சேர்ந்து காப்பாற்றவும்தான் பயன்படுகிறதே ஒழிய, சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லையே. அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அதுபற்றிக் கவலைப்படமாட்டான். ஒருவாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால், அது தன் வீட்டுக்குத் தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவேயாகும்.
ஆண்களும் பெண்களும் இத்தகைய தொல்லைகளில் மாட்டிக்கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அதனை விடுத்து புருஷன் பெண்டாட்டியாகி, தனிக் குடித்தனம் தனி சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொதுநல உணர்ச்சியற்றவர்களாகவே ஆகின்றார்கள். உலகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால்-உலகம் தொல்லை இல்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால் திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்கிவிட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பிறகு வந்தே தீரும். நான் சொன்னது நடக்காமல் இருக்கவில்லையே.
எனவே, திருமணத்துறையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளைப் பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படிக் கொடுமைப்படுத்துவது மிகவும் அக்கிரமமாகும். பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். பிறகு, ஒரு தொழிலும் கிடைக்கச் செய்த பிறகே திருமணத்தைப்பற்றிப் பேச வேண்டும். அதுவும், அந்தப் பெண்ணாகப் பார்த்து ஓர் ஆணைத் தெரிந்து எடுத்துக்கொள்ள வேண்டுமேஒழிய பெற்றோர்கள் குறுக்கே நிற்கக்கூடாது என்று எடுத்துரைத்தார்கள்.
இராகுகாலத்தில் திருமணம் செய்தவர்கள் சிறப்பாக வாழவில்லையா? என்று மணமக்களை வாழ்த்தி தேசிய நெடுஞ்சாலைத் தலைமை இன்ஜினியர் சி. வி. பத்மநாபன் பி.ஈ. பூண்டி ஆராய்ச்சி நிலைய டைரக்டர் குமாரசாமி பி.ஈ. உரை நிகழ்த்தினார்கள்.
விழாவில் நான் உரையாற்றியதாவது:
சோமு
இது தந்தை பெரியார் அவர்கள் கொள்கை வழிப்பட்ட இரு குடும்பங்களின் திருமணம் ஆகும். இது முழுக்க முழுக்க நமது கொள்கைப்படி நடக்கின்ற திருமணமாகும். இந்தத் திருமணம் இராகுகாலத்தில் நடைபெறுகின்றது. இது புதிதல்ல, ஏராளமான திருமணங்கள் இப்படி நடந்து கொண்டுதான் வருகின்றன. இராகுகாலத்தில் திருமணம் செய்து கொண்ட தோழர்கள் நல்ல நிலையில்தான் வாழ்கின்றார்கள். அம்மா அவர்களின் தம்பியும், இந்த திடல் நிருவாகியுமான தியாகராஜன் திருமணமும் அய்யா தலைமையில் இராகுகாலத்தில் நடந்தது. விடுதலை நிருவாகி என்.எஸ். சம்பந்தம் அவர்களின் திருமணம் அய்யா அவர்களின் தலைமையில்தான் இராகு காலத்தில் நடைபெற்றது. இவர்கள் எல்லாம் நல்ல நிலையில்தான் இருக்கின்றார்கள்.
சந்திர மண்டலத்தில் இறங்கிய அமெரிக்க விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கியதும் இராகு காலத்தில்தான். அதுவும் தமது இடது காலை எடுத்து வைத்துத்தான் இறங்கினார் என்று எடுத்துரைத்தேன்.
27.8.73 அன்று இரவு 7மணி அளவில் சென்னை பெத்துநாயக்கன் பேட்டை ரெங்கப்பிள்ளை தோட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக கழகத்தோழர் டபிள்யூ.பி. வேலாயுதம் அவர்களின் துணைவியார் திருமதி தனலட்சுமி அம்மையார் அவர்களின் மறைவுக்கு அனுதாபக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழகத்தோழர் ஏழுமலை தலைமை வகித்தார்.
நடராசன்
திருமதி அலமேலு அப்பாதுரை அவர்கள் மறைந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட வீராங்கனை திருமதி பத்மாவதி அம்மையார் அவர்கள் படத்தைத் திறந்துவைத்தார். அய்யா அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். கண்ணன், செங்கல்பட்டு வட்ட தி.க. செயலாளர் காஞ்சிபுரம் ஆர். ஜானகிராமன், லெட்சுமிரதன் பாரதி எம்.ஏ.பி.எல். ஆகியோர் பேசினார்கள். நகராட்சி மன்ற உறுப்பினர் என்.வி.என்.சோமு,காலஞ்சென்ற திருமதி தனலட்சுமி அம்மையார் அவர்களின் திருஉருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
இறுதியாக, தந்தை பெரியார் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்ட தாவது:- இந்தக் கூட்டம் நமது நண்பர் வேலாயுதம் அவர்களின் துணைவியார் காலஞ் சென்ற தனலட்சுமி அம்மையார் அவர்கள் முடிவெய்தியமைக்கு இரங்கல் கூட்டமாகவே நடக்கின்றது. காலஞ்சென்ற அம்மையாரையும் வேலாயுதத் தையும் எனக்கு நன்கு தெரியும். பூரண கர்ப்பவதியாக இருக்கும் நிலையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சட்டத்தை மீறிச் சிறை சென்றவர் ஆவார். அன்றைய காங்கிரஸ் ஆட்சி, அம்மையாரை போலீஸ் லாரியில் ஏற்றி 30,40 மைலுக்கு மேல் தொலைதூரத்தில் கொண்டுபோய்விட்டது. மயங்கிய நிலையில் ரோடு ஓரத்திலேயே படுத்துறங்கிய அம்மையாரைத் தோழர்கள் கூட்டிவந்தார்கள். அப்படிப்பட்ட வீரங்கனையாவார் அவர். கடைசி வரைக்கும் நமது கொள்கைப்படியே வாழ்ந்தார்கள்.
தோழர்களே, கலையாலே, மொழியாலே, நாகரிகத்தாலே மாறுபட்ட வட நாட்டானுடன் நாம் எதற்காகச் சேர்ந்தே வாழவேண்டும்? இந்தியா என்றால் என்ன? எதிலே இருக்கின்றது இந்தியா? இராமாயணத்திலா, பாரதத்திலா, கந்தபுராணத்திலா எதிலே உள்ளது? இந்தியாவில் இருந்து நமது நாடு விடுபட வேண்டும். அப்போதுதான் நமது இழிவு ஒழியும்; குறைபாடுகளும் நிவர்த்தியாகும். எனவே, நாட்டைத் தனியாக நாம் பிரித்துக் கொள்ள வேண்டும். அதற்காக உயிர்த் தியாகம் செய்யவும், சிறை செல்லவும் தயாராக இருக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள், நான் சுருக்கமாக உரை நிகழ்த்தினேன். இதில் ஏராளமான கழக தோழியர், தோழர்களும், பொது மக்களும் கலந்துகொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றக் கட்டிடத்தில் 27.7.73 வெள்ளி அன்று தந்தை பெரியார் அவர்கள் திருஉருவப் படத்தைத் திறந்து வைக்க வந்த போது நகர் மன்றத்தின் சார்பில் எனக்கு வரவேற்பிதழ் வாசித்தளிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் வழக்குரைஞர் வி.ஏ. இராதாகிருட்டிணன் கவிதையில் வரவேற்பிதழ் வாசித்தளித்தார்.
வரவேற்பை ஏற்றுக் கொண்டு தந்தை பெரியார் திருஉருவப் படத்தை நகர்மன்ற அலுவலக மண்டபத்தில் திறந்துவைத்துப் பேசுகையில் நான் குறிப்பிட்டதாவது: கழகத்தின் கொள்கைப் பிரச்சாரம் செய்யும் பொருட்டு இந்நகர் வழியாகப் பல முறை சென்றிருக்கிறேன். இப்போதும் கழகப் பிரச்சாரத்துக்கு வந்துள்ள நேரத்தில் திருவில்லிபுத்தூர் நகர் மன்றத்தின் சார்பில் வரவேற்புக் கொடுத்தமைக்கு, முதற்கண் எனது சார்பிலும் நான் சார்ந்துள்ள கழகத்தின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
எந்தத் தலைவரின் கீழ் தொண்டாற்றி அவரின் கொள்கைகளுக்காக உடல், பொருள், ஆவி அத்தனையையும் தரத் தயாராக இருக்கிறோமோ அந்தத் தலைவரின் திருஉருவப் படத்தை இந்த நகர்மன்றக் கட்டிடத்தில் திறந்துவைக்கும் பேறு கிடைத்தமைக்கு நன்றி. தந்தை பெரியார் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ-கட்சிக்கோ சொந்தமானவரல்ல; பரந்து விரிந்து கிடக்கும் இந்தச் சமுதாயம் அத்தனைக்கும் சொந்தமானவர். அறியாமை இருளைப் போக்க வந்த சுடரொளி அவர். பகுத்தறிவுச் சுடர்_ – இந்த நாட்டின் விடிவெள்ளி. அந்தத் தியாகத் தலைவனின் படத்தைத் திறந்து வைக்கும் பேறு எளிய தொண்டனாகிய எனக்குக் கிடைத்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் தந்தை பெரியார் படத்தை அமைச்சர் என். வி. நடராசன் திறந்து வைத்துள்ளார். முன்பெல்லாம் தலஸ்தாப னங்கள் யாருக்கு வரவேற்புக் கொடுக்கும் எவரது படங்களைத் திறந்து வைக்கும்? அமைச்சர்கள்-அதிகாரத்திலுள்ளோர் -மிட்டா மிராசுகளுக்குத்தானே. ஆனால், இன்று நிலைமை என்ன? அய்யா படத்தை இந்த திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தில் திறந்து வைக்குமளவு _- என் போன்ற தொண்டனுக்கு வரவேற்புக் கொடுக்குமளவு நிலைமை மாறியிருக்கிறது. வைதிக பாஷையில் சொன்னால், வைஷ்ணவாளுக்குப் பிரதான புண்ணிய நகரம் திருவில்லிபுத்தூர். அந்த நகரில் பகுத்தறிவு இயக்கத்தின் தந்தை பெரியாரின் படம் திறப்பு.
புராண ஸ்தலங்களில் தலைசிறந்து நின்ற – நிற்கும் திருவில்லிபுத்தூர் நகர் அய்யா படத்தைத் திறந்து வைத்ததன் மூலம் பகுத்தறிவு உலகிலும் தலைசிறந்து விளங்குகிறது.
அய்யாவின் கருத்துகள் கடுமை யான கருத்துகள். அவர் சொல்லும் எண்ணங்களை,- கருத்துகளை ஜீரணித்துக் கொள்ளும் தன்மை இந்தச் சமுதாயத் துக்கு இல்லை. அதனால் எதிர்த்தனர். இன்று ஏற்றுக் கொண்டுள்ளனரா? அதுவும் இல்லை. ஆயினும், இன்று அவரது கருத்தைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் எதிர்க்கும் மனப்பான்மை இல்லை. இதனால் கொள்கையிலிருந்து நாம் நழுவி விட்டோமா, இல்லை. மக்களிடையே கருத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள்.
ஈரோட்டு மருந்து கசப்பான மருந்து – பெரியாரின் பிரச்சாரமுறை கடுமையாக இருக்கும். நோயாளிக்கு டாக்டர் மருந்தைத்தான் கொடுக்க முடியும். ஆனால், அய்யா அவர்கள் மருந்தையே உற்பத்தி செய்பவர். புரையோடிப் போன சமுதாயத்தை அறுவைச் சிகிச்சை மூலம் குணமாக்க முயலும் தலைசிறந்த மருத்துவர் தந்தை பெரியார். இவரின் கருத்துகளைக் கடுமையாக விமர்சனம் செய்தவருண்டு – தத்துவங்களை ஏற்றுக் கொண்டாரில்லை. இருந்தும் அவரின் தொண்டு தொய்வில்லாதது, பயனைக் கருதாது பாடுபடும் தலைவர் அவர்.
உலகம் செல்லும் வழியில் செக்குப் போல் சுற்றிய தலைவர்களை இந்நாடு கண்டதுண்டு. புதிய கருத்தை – புதிய பாதையைக் காட்டியவர் பெரியார். பதவி பட்டங்களுக்கு ஆசை கொள்ளாதவர்! வெள்ளைக்காரன் காலத்திலேயே 24 பதவிகளை வகித்தவர். ராஜாஜியே தந்தை பெரியாரிடம் சென்று மந்திரி பதவி ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டியவர். ஆனால், அத்தனையையும் உதறிவிட்டுப் பொதுவாழ்வில் இறங்கியவர். ஓட்டைப்பற்றிக் கவலைப்படாமல், – பதவி மீது நாட்டம் கொள்ளாமல் நாட்டு மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடும் ஒரே தலைவர் தந்தை பெரியார். பின் விளைவுகள் எதுவும்பற்றிக் கவலைப்படாமல் தன்மனதில் பட்டதைத் தைரியமாகச் சொல்லும் தலைவர் பெரியார்.