இந்தியாவில் உயர்ஜாதியினரால் மேடையேற்றப்படும் நாட்டியக் கலையும், பாரம்பரிய இசையும் அவர்களின் பொழுதுபோக்கிற்கும், தமது மதத்தைக் காப்பதற்கும், வர்ணதர்மத்தைக் காக்கும் ஜாதியைத் தக்கவைப்பதற்குமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்தான் கலையிலும், இசையிலும் கடவுளர்களைப் பற்றி மட்டுமே பாடுவதும் ஆடுவதுமாக இருக்கின்றனர்.
இசையும் கலையும் மனித மன உணர்வின் வெளிப்பாடுகளாகத்தான் தோன்றின. இந்தியா நீங்கலாக உலகின் பிற நாடுகளில் இன்னும் இப்படித்தான் இருக்கின்றன. அங்கெல்லாம் இதில் ஒரு பகுதியாக வேண்டுமானால், கடவுளைப் பாடுவதும், தேவதூதர்களை வழிபடப் பயன்படுத்துவதும், மதத்திற்காகவுமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் இசைக்கருவிகளைக் கொண்டு மட்டுமே இசைக்கோவைகளை உருவாக்கி அது இசைக்கப்படும்போது மனிதரின் உள்ளத்தை ஈர்த்து, அமைதியை இதமாகத் தரும் அருமருந்தாக இசை இருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ பெரும்பாலும் கடவுளர்க்கும், மதங்களுக்குமே பாரம்பரிய இசை பயன்படுத்தப்படுகிறது. மேலும், பாரம்பரிய இசை என்பது இது ஒரு சாராருக்கே உரியதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அப்படி ஆக்கிக்கொண்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கலையையும் இசையையும் அங்கீகரிப்பதுமில்லை; அவை இசையே அல்ல என்றும், கலையே அல்ல என்றும் சொல்லி வந்தனர். பழமைச் சமூகத்தைப் புரட்டிப்போட வந்த தந்தை பெரியாரும் திராவிட இயக்கத்தினரும், திராவிட இனத்தின் கலையையும், இசையையும் மீட்டெடுத்தனர். அவற்றில் மனித மேம்பாட்டிற்கும் ,தமிழ் மொழி உணர்விற்கும், திராவிட இன உணர்விற்கும் ஆக்கம் சேர்த்தனர். 75 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் இந்தக் குரலை ஒலித்து வந்துள்ளோம்.
சாஸ்திரிய சங்கீதம் என்றும், கர்நாடக சங்கீதம் என்றும் சொல்லப்படுவது பழந்தமிழர் கண்டெடுத்த தமிழிசையே என்பது நிறுவப்பட்டுவிட்டது. என்றாலும், இன்னும் அந்த இசை மேடைகளில் தமிழ்ப் பாடல்கள் துக்கடாப் பாடல்களாகத்தான் கடைசியாகப் பாடப்படுகின்றன. ஓரிருவர் தமிழ்ப் பாடல்களுக்குச் சற்று கூடுதல் இடமளிப்பது ஆறுதல். ஆனாலும், தமிழ்நாட்டு இசை மேடைகளில் முற்று முழுதாக தமிழ்ப் பாடல்களே பாடும் நிலை வரும்வரை நாம் இந்தக் குரலை ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். இந்தச் சூழலில்தான் மெல்ல மெல்ல மேல்தட்டு வர்க்கம் இசையென்றால் அது கடவுளுக்கு மட்டுமே ஆனதல்ல என்று கூறத் தொடங்கியுள்ளது. 2013ஆம் ஆண்டின் மார்கழி இசை விழாக்காலத்தில் முதல் முறையாக இந்தக் குரல் கேட்டது. கர்நாடக, சாஸ்திரீய இசை வடிவங்கள் எல்லாம் கடவுளைப் பற்றிப் பாடுவதற்கும் உணர்வதற்கும் மட்டும்தான் என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால் இந்த இசையையும் ராகங்களையும் வைத்துக்கொண்டு இன்றைய உலகத்தை அச்சுறுத்திவரும், இயற்கை ஆர்வலர்களைக் கவலைப்படுத்திவரும் புவி வெப்பமயமாதலைப் பற்றி சீஸன்ஸ் என்ற இசை ஆல்பம் தயாரித்து உலகெங்கும் கொண்டுசென்று இருக்கிறார்கள் வயலின் கலைஞர்களான கணேஷ்-_குமரேஷ் சகோதரர்கள். பூமி வெப்ப மயம் குறித்து ஒரு இசைத்தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.இதுபற்றி, ஒரு கலைஞனாகவும் அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் நாங்கள் இருவரும் இந்த சீஸன்ஸ் ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கியுள்ளோம். மரம் வளர்க்கிறோம், செடி வளர்க்கிறோம் என்று சொல்லி, இயற்கையை நாம் காப்பாற்றிக் கொண்டிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இயற்கைதான் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது (கல்கி, டிசம்பர் 22) என்று கூறியுள்ளனர். “இசை என்பது ஜாதி, மதங்களைக் கடந்தது. குறிப்பிட்ட ஜாதியினர்தான் கர்நாடக இசையைப் பயில வேண்டும்; பாட வேண்டும் என்பதல்ல. அனைத்து ஜாதியினரும் இதில் ஆழ்ந்த புலமை பெறும் வகையில் நம் சூழல் மாறவேண்டும். பிற ஜாதியினரின் திறமையைத் திறந்த மனதுடன் அங்கீகரிக்கும் பார்வை இங்கே வேண்டும். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒப்பற்ற கலைஞர்கள் இசைக்கு அபாரமான தொண்டாற்றியுள்ளனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கர்நாடக இசை என்பது ஜாதி, மதம் மட்டுமின்றி பக்தி, மொழி ஆகியவற்றையும் கடந்தது. ஒரு தலித், கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்று மியூசிக் அகடமியில் பாடவேண்டும். தலித்துகளும் சங்கீத கலாநிதி விருது பெறும் நாள் வரவேண்டும்- என்று பேசியிருப்பவர் பிரபல கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா (தி இந்து, 18.12.13). இவர் பேசிய இடம் சென்னை கலாஷேத்ரா அரங்கம்(16.12.2013). இந்த மாற்றத்தை நாம் வரவேற்போம். இசையை, மனித மாண்புகளை உயர்த்திடப் பயன்படுத்தப்பட வேண்டும். எல்லாப் பேதங்களையும் நீக்கி மானுடத்தை ஒன்றுபடுத்தப் பயன்படுத்த வேண்டும்.
கவிப்பேரரசு வைரமுத்துவும் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் உண்டாக்கிய பேரழிவுகளைப் பாடுபொருளாகக் கொண்டு அவர் ஒரு பாடல் எழுதி அதனை ஸ்ரீநிதி கார்த்திக் பரதநாட்டியமாக அரங்கேற்றவுள்ளார். இதுபற்றி, நிகழ்காலத்தின் மக்கள் பிரச்சினையைத் தள்ளிவைத்துவிட்டு கலைகள் முழுமைபெற முடியாது. வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது, கலை பூப்பறித்துக் கொண்டிருக்க முடியுமா? மக்கள், கலைகள் மீது ஆண்டாண்டு காலம் கொண்ட ஆதங்கம் இது.
மரபுகளை உடைக்கப் பார்க்கிறீர்களா என்று சிலர் கேள்வி கேட்கலாம். இல்லை. அப்படி இல்லை. ஆனால், விடுவிக்கப் பார்க்கிறோம். காலங்காலமாக ராதைகளுக்குக் கிருஷ்ணன் ஊதிய புல்லாங்குழல், இன்று இத்துப்போய் மேலும் சில ஓட்டைகள் கண்டுவிட்டது. கண்ணனுக்காக ஆடி ஆடி மூத்துப் போன ராதைகளுக்கு மூட்டு வலி வந்துவிட்டது. கூறியது கூறல் ஒரு குற்றம் என்றாகும்போது, ஆடியது ஆடல் குற்றம் என்றாகாதா? வந்து பாருங்கள். இது இளைஞர்களுக்கு மத்தியில் கணிசமான அதிர்வலைகளை ஏற்படுத்துமென்றே கருதுகிறோம்!
நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகியிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! என்று கவிப்பேரரசு கூறியுள்ளார். (ஆனந்த விகடன், 11.12.13) கலையும் இசையும் முழுக்க மக்களுக்கானதே தவிர, மதங்களுக்கும் கடவுளர்க்கும் ஆனதல்ல என்பதை சங்கீத விற்பன்னர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை வளரட்டும்; அதுவே தொடரட்டும்.
– அன்பன்