ப |
யமா அது என்னை என்ன செய்யும்? என்ற பெரியாரின் வாழ்நாள் மாணவராக வரித்துக் கொண்டு, வயதா அது என்னை என்ன செய்யும்? என்று சவால் விட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆசிரியர் கி.வீரமணி! அவரின் அடர்த்தியான பணிகளும் பங்களிப்புகளும் மட்டுமல்ல அவரின் அனிச்சை செயல்களும் கூட அவர் யார்? எத்தன்மையவர் என்பதை அடுத்தவர்க்குப் பாடம் எடுக்கும்!
பெரியார் ஆசிரியர் மேல் வைத்த நம்பிக்கை, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, மண்டல் குழு அறிக்கை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக அய்ம்பதிற்கும் மேற்பட்ட முறை சிறை சென்றவர், சட்டரீதியாக 69% இடஒதுக்கீடு நிலைத்திருக்க காரணமாக இருந்தவர், பல கல்வி நிறுவனங்களைப் பெருக்கிப் பல்கியவர், பெரியாரை உலக மயமாக்கிக் கொண்டிருப்பவர் என்றெல்லாம் அவரை அறிமுகப்படுத்தி வரவேற்றபோது உடனடியாக எழுந்து நின்று கை கூப்பி நன்றி சொல்லி சில நொடிகளில் எழுந்து அமர்ந்த அந்தப் பாங்கு அய்யாவினுடைய பண்பு எப்பேற்பட்டது என்பதும் அவருடைய உடல் எந்த அளவிற்கு இந்தப் பொது வாழ்விற்கு உழைத்துப் பழகி இந்நாளிலும் இலகுவாக ஒத்துழைக்கிறது என்பதும் மிக வியப்பானது!
இது ஒரு காட்சி! கடல் கடந்து கண்டம் கடந்து ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் நடந்த கணநேரக் காட்சி! இது எதை உணர்த்துகிறது என்றால், முதலாவது அவரினுடைய நன்றி உணர்ச்சி, இரண்டாவது அவரின் உடல் அவர்
மனத்திற்கு ஏற்றபடி விரைந்து எழுந்து அமருகிற அந்தப் பராமரிப்பு… இவை இரண்டையும் பார்த்து வியக்காமல் ஒருவர் இருக்க முடியாது.
குவிந்திருக்கும் அவர் வாழ்வின் வியப்புகளில் இவை முதன்மையானது.தமிழர் தலைவர் ஆசிரியர் எப்போதும் சொல்வார், உடலியல் வயது வேறு உளவியல் வயது வேறு என்பார் .
அதுபோல உறுப்புகளின் மூப்பு என்பதும் அம்மூப்பு தீவிரமாகத் தாக்காமல் அதற்கானத் தொடர் பயிற்சிகளைக் கொடுத்து 92இல் சுறுசுறுப்பாக நடப்பதும் மேடைகளில் வீர முழக்கம் இடுவதும் ஒவ்வொரு நாளும் அன்றைய பிரச்சனையைக் கூர்ந்து கவனித்து முந்தைய கால வரலாற்றுத் தரவுகள், ஆதாரங்கள், அந்தப் பிரச்சனையை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று உடனுக்குடன் அதற்குச் சரியான தீர்வுச் சொல்வதுமென விறுவிறுப்பான மூளையையும் பெற்று முதுமையின் புலம்பல்களை எல்லாம் புதுமையாக்கி விடுபவர்.
அதனால்தான் அகவையைப் பற்றியெல்லாம்
அச்சம் கொள்ளாமல் புயல் தாக்குமா என்றெல்லாம் காத்திருக்காமல் ஆஸ்திரேலியாவுக்கும் அருளினார் ஒரு வாய்ப்பு, தந்தை பெரியாரை அறிய வைக்கும் அரிய வாய்ப்பு! கடலூரில் தொடங்கிய பயணம் கண்டம் விட்டு கண்டம் தாவி தொடர்ந்து கொண்டிருக்கிறது!
“ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் அழைப்பினை ஏற்று, சிங்கப்பூர் வழியாக மார்ச் 12 அன்று ஆஸ்திரேலியாவிற்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்றார். ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, பிரிஸ்பேன், கோல்ட் கோஸ்ட், கேங்பெரா, மெல்போன் ஆகிய பெருநகரங்களில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த உலக மகளிர் நாள் விழாக்களிலும் சுயமரியாதை குடும்பங்களின் சந்திப்பிலும் பங்கேற்று தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளை எடுத்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வுகளில் ஆஸ்திரேலியாவில் இந்நாள், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பங்கேற்று உரையாற்றினர். இப்பயணத்தின் போது வெவ்வேறு நகரங்களில்
நான்கு வானொலிகளுக்கும், ஒரு தொலைக்காட்சிக்
கும் நேர்காணல் வழங்கி, அவர்களின் கேள்வி
களுக்குப் பதில் அளித்தார். ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்ப
மாக தமிழர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர். சென்ற நகரங்களில் எல்லாம் விமான நிலையங்
களுக்கு வந்திருந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்
திற்கும் நூலகங்களுக்கும் ஆசிரியர் சென்று
வந்தார். ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக
முடித்துக் கொண்டு 29.3.2025 இரவு 10:30 மணிக்குச் சிங்கப்பூர் வழியாக சென்னை வந்தடைந்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி உடனிருந்தார். ஆசியா, வட அமெரிக்கா, அய்ரோப்பா, ஆப்பிரிக்க கண்டங்களில் தந்தை பெரியார் இயக்கத்தின் தாக்கமும் பெரியார் கொள்கைப் பரப்பும் அமைப்புகளும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. ஆசிரியரின் இந்தப் பயணத்தின் மூலம் மற்றொரு முதன்மையானக் கண்டமான ஆஸ்திரேலியாவில் பெரியாரின் கொள்கைப் பயிர் நடப்பட்டுள்ளது. ‘பெரியார் உலக மயம் உலகம் பெரியார் மயம்’ எனும் நோக்கில் பெரியாரை உலகம் முழுக்கக் கொண்டு செல்லும் பணியில் ஆசிரியர் அவர்களின் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாகும்!”
(30.03.2025 ‘விடுதலை‘ நாளேடு)
ஆசிரியர் அவர்களோடு பயணித்த கழகத்தின்
பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி அவர்கள் முன்னதாக தம் உரையில்,
“இந்த 2025ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மார்ச் 10 அன்று ஆசிரியர் சிங்கப்பூரில் காணொலி வாயிலாக பிறந்தநாள் உரை ஆற்றினார்கள்.
மார்ச் 16 நினைவு நாளன்று பிரிஸ்பானில் இன்று உரையாற்றுகிறார்கள்.
அய்யா சிட்னியில் ஒரு வாரம் இருந்தார்கள்; வந்து பார்த்தவர்கள் எல்லாருக்கும் ஒரே வியப்பு. எப்படி ஒரே தலைவர் ஒரே இயக்கம் என்று இவ்வளவு நாள் இருக்க முடியும் என்பதோடு, இந்த வயதிலும் எப்படி இவ்வளவு நினைவாற்றலோடு சிறப்பாக இயங்க முடியும் என்று… ஏனென்றால் அவரை இயக்க வைக்கும் விசை (பெரியார்) அப்படி ”
“அய்யா நாங்க இந்த ஊரு, எங்க அப்பா அம்மா திருமணத்தை நீங்கள் தான் நடத்தி வைத்தீர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, தந்தை பெரியாரிடம் “உங்கள் காலத்திலேயே நீங்கள் உங்கள் கொள்கைகள் வெற்றிப் பெற்றதைப் பார்த்தீர்கள்” என்று சொல்லும் போது தந்தை பெரியார் அவர்கள் எப்படி மகிழ்ந்தாரோ அதுபோல ஆசிரியர் அவர்கள் மகிழ்ந்தார்கள். அதுதான் நாம் அவர்கள் தொண்டுக்குச் செலுத்துகிற மரியாதை!” என்று ஆசிரியரைச் சித்திரம் போல் படம் பிடித்தார்!
15.3.2025 சிட்னியில் உள்ள எஸ்.பி.எஸ் (SBS) ஒளிபரப்புக் கூடத்தில் ரேமண்ட் செல்வராஜும், குலசேகரன் சஞ்சயனும் ஆசிரியர் அய்யாவிடம் உரையாடினார்கள். “இவ்வளவு ஆர்வமாக 92 வயதிலும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற அளவுக்குத் துடிப்பாக இருக்கிறீர்களே அதனுடைய ரகசியம் என்ன?” என்று கேட்டார்கள்.
“முதுமை என்றால் என்னவென்று தெரியாதது
தான் முதல் ரகசியம்” என்றார். “எனக்கு முதுமை
வந்து விட்டதாகவே நான் எண்ணியதில்லை” என்றார். நமக்கு இன்னும் நிறைய பணிகள் இருக்
கின்றன, தோழர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்ற உறுதிப்பாடு உடைய எண்ணம் எனக்குள் உள்ளது. என்னுடைய வட்டம் மிகத் தெளிவானது. தன் குடும்பம் தன் பிள்ளை தன் வீடு என்னும் சின்னதோர் கடுகு உள்ளம் என்பது சுயமரியாதை இயக்கத்தில் இல்லை! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுதான்! இளமையிலேயே இந்தக் கொள்கையைச் சிறு வயதிலிருந்தே வளர்த்துக் கொண்டதால் எனக்குள் ஆழமாக நிலைக் கொண்டு இருக்கிறது!” என்ற ஆசிரியரின் தெள்ளத் தெளிவான பதிலுரைப்பு பலகோடி முதுமையாளர்களுக்கு வாழ்வியல் போதிப்பு என்றால் மிகையல்ல!
ஆஸ்திரேலியாவில் பெரியார் அம்பேத்கர்
சிந்தனையாளர்கள் வட்டம் (PATCA)பேட்கா
சார்பில் அங்கிருந்த அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்யப்படும்போது, மிக உயரமாக இருந்தவர்கள் ஆசிரியரின் வசதி கருதி சற்று தன் உடம்பைக் குறுக்கிய போதும் கூட, எம்பி தான் பொன்னாடை போட்டார், அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் குறுகக் கூடாது என்று… இது ஒரு வாழ்க்கைப் பாடம்! பல்லாயிரக்கணக்கான மேடைகளில் ஆசிரியர் பல்லாயிரக்கணக்கானவர்களுக்குச் சிறப்புச் செய்திருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலியா மேடையிலும் தன் 92ஆவது வயதிலும் இப்படி சிறப்புச் செய்தார் என்ற செய்தி சாதாரணமானது அல்ல! அவர் வாழ்விலும் இந்த மனித குலத்தைக் குறுக விடாமல் தன் உழைப்பால் எம்பி எம்பி ஆன மட்டும் தடைகளை அசைத்துப் பார்க்கிறார் என்ற வரலாற்று உண்மை இதில் உள்ளது. m
______