நீதிக்கட்சி என்ற அழைக்கப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தூணாக விளங்கிய திராவிட இயக்கத்தின் தனிப் பெரும் தலைவராம் சர்.பிட்டி தியாகராயரின் நினைவு நூற்றாண்டு இது. ஆம்! பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக்காகவே தம் வாழ்நாளின் பெரும் பகுதியையும் தான் சேகரித்த பெரும் செல்வத்தையும் செலவு செய்து அம்மக்களை விழிபுறச் செய்த வள்ளல் பெருமகன் மறைந்து நூறாண்டுகள் கடந்துவிட்டன.
தொண்டறப் பணிக்கு முன்னோடி
இன்றைய தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்த திராவிட மாடல் ஆட்சியின் தொண்டறப் பணிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். அடர்ந்து பரந்து விரிந்து தமிழ் மக்களுக்கு நிழல் தரும் இந்தத் திராவிட இயக்கம் எனும் ஆலமரத்தின் அடி வேரில் ஒருவரான அவர் மறைந்து நூறாண்டுகள் ஆகின்றன.
செல்வக் குடியில் பிறந்தவர்
1852 ஆம் ஆண்டு ஏப்ரல் 27இல் கொருக்குப்பேட்டையில் பிறந்தார். இவரின் முன்னோர் சென்னைக்கு வடக்கே உள்ள சத்தியவேடு பகுதியில் வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள் ஆவர். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தியாகராயர் பி.ஏ. பட்டதாரியான பின் சென்னையில், நெசவாலையைத் தொடங்கி பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கினார்.
பிட்டி தியாகராயரின் குடும்பம் அப்போதைய சென்னையின் மிகச் செல்வாக்குள்ள குடும்பங்களில் ஒன்று. குதிரைகள் பூட்டிய ‘சாரட்’ வண்டியைத்தான் இவர்கள் பயன்படுத்தி வந்தனர். மோட்டார் வாகனம் வந்தவுடன் அதனை வாங்கிப் பயன்படுத்தினர்.
பல்தொழில் வல்லவர்
தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. அதில் ஏராளமானவர்கள் வேலை செய்தனர். இந்தத் தொழில்களுக்கு உதவியாக நூறு படகுகளைக் கொண்ட சொந்தப் போக்குவரத்துத் துறையையே வைத்திருந்தார்.
பள்ளி – கல்லூரி நிறுவியவர்
இதற்கு உதாரணமாக 1876ஆம் ஆண்டு பஞ்சத்தின் போது பசியோடு வந்தவர்களுக்கு உணவு வழங்கிய நிகழ்வைச் சொல்லலாம். குறிப்பாக தென்னிந்திய வர்த்தக வளர்ச்சி மற்றும் தொழில் பெருக்கத்திற்கு தியாகராயரின் பணிகள் அளப்பரியது. தன்னுடைய சொந்த வருமானத்தில் வண்ணாரப்பேட்டைப் பகுதியில் ஒரு பள்ளியை 1897இல் தொடங்கினார். அதற்கு ’வடசென்னை செகண்டரிப் பள்ளி’ எனப் பெயர் சூட்டினார்.இங்கு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்பட்டது. இதுவே பின்னாளில் உயர்நிலைப் பள்ளியாகவும், சென்னை ’சர் தியாகராயா கல்லூரி’யாகவும் உயர்ந்தது. இதுதவிர பல்வேறு பள்ளிகளையும், கல்லூரிகளையும், தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகளையும் நிறுவினார்.
பொதுவாழ்வின் தொடக்கம்
தியாகராயர் இளங்கலைப் பட்டம் பெற்ற ஓரிரண்டு ஆண்டுகளிலேயே பொது வாழ்வில் இறங்கினார். தியாகராயர் 1881ஆம் ஆண்டு முதல் தமது முப்பதாவது வயதில் ‘Madras Native Association’ எனும் அமைப்பில் இணைந்து பணியாற்றியதிலிருந்தே அவரது அரசியல் வாழ்க்கை பொது வாழ்க்கை தொடங்கியது. இச்சபையே பின்னாளில் சென்னை மகாஜன சபை என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்தச் சபைதான் தென்னிந்தியாவில் ஏற்பட்ட முதல் அரசியல் அமைப்பாகும். இதில் 24 ஆண்டுகள் பணியாற்றினார்.
காந்தியடிகளுக்கு வரவேற்பு
இந்திய தேசியக் காங்கிரசின் மூன்றாவது மாநாடு 1887 டிசம்பரில் சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள ‘மக்கீஸ் கார்டன்’ எனும் பகுதியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்குப் பக்ருதீன் தியாப்ஜி எனும் பம்பாயைச் சேர்ந்த இசுலாமியர் தலைமை தாங்கினார். தியாகராயர் இம்மாநாட்டை நடத்துவதற்கு ரூ.200 நிதியும் அளித்தார். தியாகராயரின் காங்கிரஸ் ஈடுபாடு 1914 வரை தொடர்ந்தது. இவ்வாண்டில்தான் சென்னை காஸ்மாபாலிடன் கிளப்பில் சென்னை மக்களின் சார்பில் காந்தியடிகளுக்குத் தியாகராயரால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் சுதேசி இயக்கத்தைத் தொடங்கிய போது ஆதரவளித்து வந்த தியாகராயர், காங்கிரஸ் கட்சி அதன் அமைதி வழி தவறி வன்முறையில் ஈடுபட்ட போதெல்லாம் அதைக் கண்டித்து வரலானார், காங்கிரஸ் கட்சி பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்ததையும் அவ்வகுப்பாருக்கு மட்டுமே அக்கட்சியின் செயல்கள் பயனளித்து வருவதையும் தியாகராயர் சுட்டிக்காட்டினார்.
ஊழியர் மேலே; தலைவர் கீழே!
தியாகராயரின் அறிவுரைகளைக் காங்கிரஸ் புறக்கணித்தது. எந்த மரியாதையையும் அவர்கள் தியாகராயருக்கு வழங்குவதாகத் தெரியவில்லை.ஆகவே, தியாகராயர் அரசியல் உலகைப் பார்ப்பனர்களிடமிருந்து மீட்பதற்கான வழிவகைகளை யோசிக்கலானார். பார்ப்பனர்கள் செய்யும் ஆதிக்கத்தை நேரில் உணரும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது அந்தக் கோயிலுக்கு ரூபாய் பத்தாயிரம் நன்கொடை வழங்கி இருந்தார் தியாகராயர். அந்த நிகழ்ச்சிக்குச் சென்ற போது நிகழ்ச்சியின் மேடையில் இவரிடம் பணியாற்றும் நகராட்சி ஊழியரான ஒரு பார்ப்பனர் அமர்ந்திருக்க, சென்னை நகர் மன்றத் தலைவர் ஆன தியாகராயர் கீழே உள்ள இருக்கையில் அமர வைக்கப்பட்டார்.
முதல் மாநகர் மன்றத் தலைவர்
சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி மன்ற உறுப்பினராக ஏறக்குறைய 41 ஆண்டுகள் ஆறு மாதங்கள் பணியாற்றினார். பின்னர் அம்மன்றத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற முதல் இந்தியத் தலைவர் இவரே. தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அப்பதவி வகித்தார்.
1910-1912 ஆண்டுகளில் மாநகராட்சிப் பிரதிநிதி என்ற முறையில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுத் தொண்டாற்றினார். மேலும் சென்னை மகாஜன சபை, அகில இந்திய காங்கிரஸ் பேரவை, ஆகியவற்றிலும் முறையே 1904. 1908 ஆண்டுகளில் ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். இருந்தாலும் சமூகத்தில் இருந்த ஆதிக்கம் காரணமாக பார்ப்பனரால் இவ்வாறு நடத்தப்பட்டார்.
நீதிக்கட்சி உருவாக்கம்
எத்தகைய கல்வி பொருளாதார வாய்ப்பு பதவி இருந்தும் சமூகத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலவி இருப்பதை உணர்ந்தவுடன் அதனைப் போக்கும் வழியைப் பற்றிச் சிந்திக்கலானார். அதன் விளைவுதான் பின் நாட்களில் நீதிக்கட்சி. என்று மக்களால் போற்றப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம். திராவிட இயக்கத்தின் முன்னோடி இயக்கம் நீதிக்கட்சி, – டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் என்ற மும்மணிகளும் சேர்ந்து தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) என்பதைத் தோற்றுவித்தனர். அவர் எதிர்பார்த்த திட்டங்களை டாக்டர் சி.நடேச முதலியார் வகுத்தளிக்க, டாக்டர் டி.எம்.நாயர்
துணை நின்றார். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கிலச் செய்தித் தாளையும் ‘திராவிடன்’ என்ற தமிழ்ச் செய்தித் தாளையும், ‘ஆந்திர பிரகாசிகா’ என்ற தெலுங்கு இதழையும் நடத்தினார். இவ் இதழ்கள் பார்ப்பனரல்லாதாரிடையே ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின.
பார்ப்பனரல்லாதார் அறிக்கை
1916 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று பார்ப்பனர் அல்லாத மக்களின் கொள்கைப் பிரகடனம் என்று போற்றத்தக்க பார்ப்பனர் அல்லாதார் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில், 1913 ஆம் ஆண்டில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன்பாக சாட்சியம் கொடுத்த அன்றைய சென்னை நிர்வாக சபை அங்கத்தினரான அலெக்சாண்டர் கார்டியூ அளித்த செய்திகளைப் பற்றியும் மாகாணத்தின் அரசாங்க அலுவலகப் பணிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம், பற்றியும் பார்ப்பனர் அல்லாத மக்கள் அவல நிலை ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்திருந்தது. மேலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் செய்ய வேண்டிய பணிகளையும் குறிப்பிட்டு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை பார்ப்பனரல்லாத மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இதுகுறித்துத் தமது வாழ்க்கை வரலாற்றில் திரு.வி.க. “1916ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் ஓய்வில் சென்னை ஆமில்டன் வாராவதிக்கருகே இராஜு கிராமணியார் தோட்டத்தில் யாழ்ப்பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் சார்பில் மகாநாடு ஒன்று கூடியது. மகாநாடு மூன்று நாள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஓர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம்மாநாட்டுக் கொட்டகையிலேயே அன்று மாலை பிராமணரல்லாதார் முன்னேற்றம் பற்றி தியாகராயச் செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்விதமே கூட்டம் சேர்ந்தது.தியாகராயச் செட்டியார் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும், அதனால் பிராமணரல்லாதார் நசுக்குண்டு நாசமடைவதைப் பற்றியும் பேசி. காங்கிரசை நம்ப வேண்டாம், அவற்றினால் பிராமணரல்லாதார் மயங்குறல் வேண்டாம் என்று வற்புறுத்தினார்”எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக நீதிக்கட்சி வளர்ச்சியில் முழுக் கவனம் செலுத்தினார். கோயம்புத்தூர் முதல் பார்ப்பனர் அல்லாதார் மாநாடு, முதல் கோதாவரி பார்ப்பனரல்லாதார் மாநாடு புலிவேந்தரா மாநாடு, தெலுங்கு தலைவர்களின் விஜயவாடா மாநாடு, திருநெல்வேலி தமிழ் தலைவர்கள் மாநாடு, சேலம் பார்ப்பனரல்லதார் மாநாடு, சென்னை கூட்டமைப்பின் முதல் மாகாண மாநாடு என்று வரிசையாக மாநாடுகளை நடத்தினார். தொடர்ச்சியாக ஆங்கிலேய அரசுகளிடம் பார்ப்பனர் அல்லாதார் உரிமைகளை மீட்டெடுக்க அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று போராடினார்.
பின்னர் நீதிக்கட்சியாக வளர்ந்து 1920 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை ஆட்சியில் பங்கேற்றது.
அச்சமயம் தமக்களிக்கப்பட்ட முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்து தியாகத்தின் சின்னமாகத் திகழ்ந்தார். இவரது பொது நலத் தொண்டினைப் பாராட்டும் வகையில் அரசு இவருக்கு ராவ் பகதூர் பட்டமும் (1909), திவான் பகதூர் பட்டமும் (1919), சர். பட்டமும் (1920) அளித்துச் சிறப்பித்தது.
1920இல் மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி நடைபெற்ற நேரடித் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் மேயர் என்கிற பெருமையை தியாகராயர் பெற்றார். அப்பொழுது சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அவர் கொண்டு வந்ததே இந்தியாவின்
முதல் மதிய உணவு திட்டம். அடுத்த ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வென்றது. முதலமைச்சர் பதவி இவரைத் தேடி வந்தபொழுது அதைக் கடலூர் சுப்பராயலு ரெட்டியாருக்கு விட்டுக் கொடுத்தார்.
மிகப்பெரிய செல்வந்தர் இவர். .சென்னை பின்னி மில்லில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. அதை முன்னெடுத்து நடத்தியவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
ஆட்சியில் நீதிக்கட்சி இருந்தாலும் காவல் துறை ஆங்கிலேயே அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அவரைக் கைது செய்ய உத்தரவு
வந்தது. அப்பொழுது மாற்றுக் கட்சியில் இருந்தாலும் தியாகராயர் கொதித்து எழுந்து, ‘‘திரு.வி.க.வைக் கைது செய்தால் இந்த ஆட்சி எங்களுக்குத் தேவையில்லை” என்று எச்சரித்தார். கைது நடவடிக்கை நின்றது .
டாக்டர் நாயர் மறைவுக்குப்பின் நீதிக் கட்சியைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து, அதன் மூலம் பல்வேறு சமூகப் புரட்சித் திட்டங்களையும் அரசுநலத் திட்டங்களையும் கொண்டு வரக் காரணமாக இருந்துவந்த தியாகராயர் 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் இரவு 9.45 மணி அளவில் காலமானார்.
அவர் காலமான செய்தி பரவிய சில நிமிடங்களில் சென்னை மாநகரம் முழுவதும் இருந்து பொதுமக்கள் அவரது மாளிகையைச் சுற்றிலும் நிரம்பிவிட்டனர்.
நீதிக்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்தனர். அவரை காலம் முழுவதும் எதிர்த்து வந்த ‘இந்து’ ஏடு கூட ஒரு சிறந்த தலையங்கத்தை வெளியிட்டது. திரு.வி.க. அவர்கள் நடத்திய ‘நவசக்தி’ என்ற மாத ஏட்டில் 1925 மே மாத
இதழில் ‘பெருங்கிழவர் பிரிந்தார்’ என்ற தலைப்பில் ஒரு உருக்கமான தலையங்கத்தை எழுதினார். அதன் ஒரு பகுதியில், ” தியாகராஜ செட்டியார் வாழ்வில் அறியக் கிடக்கும் நறுங்குணங்கள் பல. அவைகளுள் தலையாயது அவர்பால் சுயநலமின்மை என்பது. அவர் பரு உடல் மறையும் மட்டும் தமது நலங்கருதி எச்செயலும் நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. லார்ட் வெல்லிங்டன் காலத்தில் தமக்கு நல்கப்பட்ட மந்திரி பதவியை வேண்டாமென்று செட்டியார் மறுத்ததொன்றே அவரது சுயநலமின்மையை வலியுறுத்தும். இக்குணம் அவர்பாலிருந்தமையாலன்றோ அவர் அரசியல் வாழ்வில் பிற்போக்குடையவராய் இருந்ததையுங் கவனியாது சென்னைவாசிகள் அவரைச் சட்டசபை அங்கத்தினராகத் தெரிந்தெடுத்தார்கள். சென்ற முறை அவர்க்கு மாறாக அவர் கட்சியாருள்ளிட்ட பல கட்சியார் பிரச்சார வேலை செய்தும், சென்னை, செட்டியாரைக் கைவிடாது காத்தது. இதற்குக் காரணமாக நின்றது அவர்பால் சுயநலமின்மையே என்று சொல்லலாம்.
“ஒழுக்கத்திற் சிறந்த செட்டியார், எவர்க்கும் அஞ்சாது, தமது மனச்சான்றுக்குத் தோன்றுவதை உள்ளவாறே வெளியிடுவார். – பிறர் புகழ்வதை எதிர்நோக்கிச் செட்டியார் எதையும் மறைத்துப் பேசமாட்டார். அவர் பளிங்கனைய மனமுடையார். தியாகராஜச் செட்டியார் நோக்கு சிங்கம் போன்றதாயினும், அவர் இயல்பு ஆவையொத்தது. இஃது அவரோடு பழகிய நண்பர்கட்குத் தெரியும். தியாகராஜர் எக்கருத்தையுங் காலத்தில் செய்பவர். கால தேவதையின் சீற்றத்துக்கு அவர் என்றும் ஆளானதில்லை.
தியாகராஜ செட்டியார், தமது வாழ்வில் எத்துணையோ அறநிலையங்கட்கும் வாணிபச் சங்கங்கட்கும், கல்விக் கழகங்கட்கும் தலைவராகவும் அங்கத்தவராகவும் இருந்து தேச சேவை செய்திருக்கிறார். அவரது வாழ்வு பெரிதும் பரோபகார வாழ்வாகவே நடந்து வந்தது. இல்லறத்திலிருந்து இத்துணைத் தொண்டு செய்த ஒருவர் வாழ்வு பின்வருவார்க்கு இலக்கியம் போன்றதென்பது மிகையாகாது. ” என்று குறிப்பிட்டிருந்தார்.
தந்தை பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ இதழ் கீழ்க்கண்டவாறு ஒரு துணைத் தலையங்கம் வடித்திருந்தது.
பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கி வந்த சிறீமான் பி. தியாகராய செட்டியார் அவர்கள் 28.4.1925 இரவு 9.45 மணிக்கு இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகெய்திய செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகிறோம். இச்செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் பெருந்துக்கத்தில் ஆழ்த்தும் என்பதில் அய்யமில்லை. அவரது இடது கன்னத்தில் முளைத்த ஒரு சிறு கொப்புளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! என்னே மனிதர்தம் வாழ்நாளின் நிலை! அரசியல் உலகில் எமக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம். தென்துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். எனினும், அப்பெரியாரின் அருங்குணங்களையும், அளவில்லா தேசபக்தியையும், ஆற்றலையும் நாம் போற்றுகிறோம். ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் இவரது அரசியல் கொள்கை களை வெகு தீவிரமாகக் கண்டித்துப் பேசின சிறீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களை மறுநாள் காலையில் சென்னைத் தெருவில் சந்தித்தபோது, சிறீமான் முதலியாரை விளித்து “நண்பனே! நேற்று கடற்கரையில் நீ என்னை வாய்மொழிகளால் கண்டித்தது போதாது. இக்கழி கொண்டு என்னைப் புடைத்திருத்தல்
வேண்டும்” என்று தமது கையிலிருந்த கழியை சிறீமான் முதலியாரிடம் கொடுத்தனராம். அரசியல் கொள்கையில் தம்மினும் வேறுபட்டாரிடம் இப்பெருந்தகையார் நடந்து கொண்ட பெருந்தன்மையைப் பாராட்டுகிறோம்.
சென்னை நகர பரிபாலன சபையில் நாற்பதாண்டு
கள் அங்கத்தினராக அமர்ந்து இவர் ஆற்றிய அருந்தொண்டுகள் யாவராலும் மறக்கற்பாலதல்ல. தமது முதுமையிலும், உடல்வலி குன்றித் தளர்வெய்திய காலத்திலும் நகர மாந்தர் நலத்தையே மனத்துள் கொண்டு சென்னை நகர பரிபாலன சபையின் தலைமையேற்று உழைத்து வந்தமையே இதற்கு தக்க சான்றாகும்.
நமது நாட்டுப் பண்டைக் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதில் மிக்க ஊக்கங் காட்டி வந்த பெரியார் ஆவார். தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுச்சங்கம் ஒன்று கண்டு அதில் முதன் முதலாக விசைத்தறியை (Fly shuttle) உபயோகிக்க முயற்சி செய்தவராவார். தமது வாழ்நாள் முழுவதும் வைதீகநெறி பற்றியே
வாழ்ந்து வந்தார் என்றும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வமிக்குடையராய் அரும்பொருள் உதவி வந்தனரென்றும் அவரையும், அவரது குடும்பத்தையும் அறிந்தோர் நமக்கறிவிக்கின்றனர்.
தமது இளவயதில் டாக்டர் நாயர் அவர்களின் கூட்டுறவு பெறும் வரையில் காங்கிரஸ்வாதியாகவே இருந்து தேசத் தொண்டு ஆற்றி வந்தார். நமது தமிழ்நாட்டுத் தவப்பேற்றின் குறைவினால் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். இறக்கும் வரையில் அதன் தலைவராக விளங்கி வந்தார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழிநின்று தேசத் தொண்டாற்றி வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எமது கொள்கை. அதுகிடக்க, அவரது அரசியல் கொள்கைகளையும், முறைகளையும் ஆராய்ச்சி செய்வதற்காக நாம் இன்று முற்படவில்லை; அவைகளைக் கண்டித்தெழுதவும் கருதவில்லை.
அப்பெரியாரின் அரசியல் கொள்கைகள் எவ்விதமிருப்பினும். அவருடைய தேசபக்தியை
யும், அருங்குணங்களையும். உறங்கிக் கிடந்த பார்ப்பனரல்லாதார்களை உயிர்ப்பிக்கச் செய்த பேராற்றலையும் நாம் போற்றி அப்பெரியாரைத் தமிழ்நாடு இழக்க நேர்ந்தமைக்குப் பெரிதும் வருந்துகிறோம். அவரது புதல்வருக்கும், புதல்விகளுக்கும். மனைவிக்கும் எமது அனுதாபத்தை இதன் வாயிலாக அறிவித்துக் கொள்ளுகிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.
– ‘குடிஅரசு’ – துணைத் தலையங்கம்
நீதிக் கட்சியின் தந்தையாய், தூணாய் விளங்கி திராவிட இனத்தின் வளர்ச்சிக்கு அடி கோலிய தியாகராயர் மறைந்து நூறு ஆண்டுகளாகின்றன. இன்று தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. நீதிக் கட்சியின் அடிநாதமான அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்னும் இலக்கு நோக்கிப் பயணம் செய்து வருகிறோம். கல்வியிலும் தொழில் வளர்ச்சியிலும் சமூக மேம்பாட்டிலும் இன்று நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமான நீதிக் கட்சியின் வேரான சர்.பிட்டி தியாகராயர் நினைவு நாளில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கும் ஆதிக்க மத வெறிக் கும்பலை எதிர்க்கும் போரில் சளைக்காது நிற்போம்… அனைவருக்கும் அனைத்துமான இலக்கு நோக்கிப் பீடுநடை போடுவோம். m