Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சிங்கப்பூரில் நடந்த ‘‘பெரியார் கண்ட வாழ்வியல்’’ நிகழ்ச்சி !- கி.வீரமணி

பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்வில் பங்கேற்க 05.01.2007 அன்று சிங்கப்பூர் சென்றேன். சிங்கப்பூர் மேலாண்மை வளர்ச்சிக்குரிய பயிற்சி நிறுவனத்தில், சிங்கப்பூர் பகுத்தறிவுப் பேராசிரியர் இரத்தினகுமார் அவர்களால் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட ‘Thirukkural-A Guide to effective living’ என்ற நூல், சிங்கப்பூர் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் (தற்போது சிங்கப்பூர் குடியரசுத் துணைத் தலைவர்) அவர்களால் 06.1.2007 அன்று வெளியிடப்பட்டது. கொலம்பியா பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் கி.வேலன்டைன் டேனியல் ஆங்கிலத்திலும், நாம் திருக்குறளின் சிறப்புகளைத் தமிழிலும் எடுத்துரைத்தோம்.

பின்னர் தொடர்ந்து பல நிகழ்வுகளில் பங்கேற்று திரும்பினேன். பின்னர் நடந்த இந்நூல் பற்றிய ஆய்வரங்கத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப.திண்ணப்பன், சிங்கப்பூர் தமிழாசிரியர் கழகத்தின் தலைவர் எஸ்.சாமிக்கண்ணு, நூலாசிரியர் பேரா.ரத்தினகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். மறுநாள் (07.01.2007) சிங்கப்பூர் சமூக சேவை மன்றத்தின் பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சி மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகளுக்குப் பின் விழா தொடங்கியது. சிங்கப்பூர் இலியாஸ் அவர்கள் அமைப்பின் நோக்கங்களையும், பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சியின் சிறப்பையும் கூறினார். பேராசிரியர்
சுப.திண்ணப்பன், செல்வி ஸ்டோர்ஸ் உரிமையாளர் மா.அன்பழகன், ஆகியோர் உரைக்குப் பின் மாணவிகள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களைப் பாடினர். குழந்தை
களுக்குப் பரிசு வழங்கி பல்வேறு செய்திகளைக் கூறி உரையாற்றினோம். இறுதியாக தோழர் க.பூபாலன் நன்றியுரையாற்றினார்.

13.1.2007 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல மேலாண்மைக் கல்வி வளர்ச்சி நிறுவனத்தில் (Management Development Institute of Singapore MDIS) முக்கியப் பொறுப்பாளர்களைச், சந்தித்துக் கலந்துரையாடினோம்.

மேலாண்மைத்துறை இயலில் சுமார் 50 ஆண்டுகளுக்குமேல் தொண்டு ஆற்றி சேவை புரிந்து வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இந்த ‘எம்.டி.அய்.எஸ்.’ (MDIS) கல்வி நிறுவனம் ஆகும். சிங்கப்பூர் அரசின் அங்கீகாரத்துடன் இயங்கி வரும் தரம் வாய்ந்த கல்வியை அளிக்கும் இந்த நிறுவனத்தின் பன்னாட்டுத் தொடர்புத் துறைக்கான (Country Manager, International Business) நிருவாகத் துறை ஆலோசகர் பேராசிரியர் எஸ். குமார் MBA, CFP, CWM அவர்கள், டாக்டர் கண்ணையா (Head Academic, Finance & Accounting) . (இங்கிலீஷ் துறையின் நிருவாகி) ஆகியோருடன் தமிழர் தலைவர் கலந்துரையாடி, பெரியார் கல்வி நிலையங்களில் எப்படி இந்தக் கல்வியை மாணவர்கள் பெறுவதற்கான புரிந்துணர்வு (Memorandum of Understanding) ஒப்பந்தம் போடுவதுபற்றி ஆலோசனை செய்ததுடன், நமது அறக்கட்டளைகள் சார்பில் நடைபெறும் கல்விக்கொடை, பெரியார்தம் மனிதநேயம் பற்றியும் தந்தை பெரியாரின் அரிய கொடை மற்றும் தொண்டுள்ளம் பற்றியும் விளக்கினோம். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை அமைப்பின் பொருளாளர் திரு. நாகரத்தினம் மாறன் அவர்களும் உடன் சென்றிருந்தார்.

மறுநாள் 14.1.2007 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள சிறீ நாராயண குரு அறக்கட்டளை முதியோர் அமைப்பிற்குச் சென்று அங்குள்ள முதியவர்களுடன் உரையாடினோம். அங்கு செவிலியராகப் பணியாற்றிய ரம்யா அவர்கள் அழைத்துச் சென்று அனைத்து தளங்களிலும் உள்ளவர்களைப் பற்றியும் அவர்களது செயல்பாடுகள் பற்றியும் விளக்கிக் கூறினார். ஆதரவற்றவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் குன்றியவர்கள், ஆகிய அனைவரிடமும் தனித்தனியே பேச வாய்ப்புக்கிடைத்தது  நமக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியும் தந்தது. தொடர்ச்சியாக அவர்கள் அமைத்துள்ள நூலகத்தையும் சுற்றிப் பார்வையிட்டோம். இந்நிகழ்வில் நம்முடன் மாறன் – கவிதா, கலைச்செல்வன் – மலையரசி, மதிவாணன் – இந்திராணி, பார்த்திபன் – சித்ரா, புகழேந்தி புவனேஸ்வரி மற்றும் பெரியார் பிஞ்சுகளான இனிய நிலா, குந்தவி, பாக்யா, அபிநயா ஆதித்யா, வானதி ஆகியோர் வந்திருந்தனர்.

சிங்கப்பூர் சிறீநாராயண குரு அறக்கட்டளைப் பணியாளர்களுடன் ஆசிரியர்

சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி வரலாற்றில் மிக முக்கியமான கல்வி வளாகமான உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் 17.1.2007 அன்று நடைபெற்ற அறுவடைத் திருநாள் 2007 சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினோம். நம்முடன் திரைப்படப் பாடல் ஆசிரியர் யுகபாரதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம்.இலியாஸ் தொழிலதிபர் இ. செல்வக்குமார், தமிழவேள் நற்பணி மன்றத்தின் தலைவர் பார் தியாகராஜன் ஆகியோர் வழியில் காத்திருந்து நம்மை அழைத்துச் சென்றனர். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் தலைவர் ஜெயராஜ் பாண்டியன், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் சாமிக்கண்னு ஆகியோருடன் உரையாடும் போது தமிழ்மொழி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பாடத்திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். நாமும் தமிழ்ப் பாட நூல்களைப் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தோம். நம் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமாக உரையாடினோம். குறிப்பாகப் பெண்களுக்கென்று உருவான முதல் பொறியியல் கல்லூரி நம்முடைய கல்லூரி தான் என்பதைப் பேசிக்கொண்டிருந்த போதுதான் ஒரு செய்தி தெரிந்தது – அங்குள்ள வகுப்பறையில் இருந்து வந்த ஆசிரியை நம் நிறுவனத்தில் படித்தவர் என்பது! பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினோம். 20.01.2007 அன்று சென்னை திரும்பினேன்.

பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்வு (சிங்கப்பூர்)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் அவர்களின் மகன் செ. முகிலன் – அ.சவுந்தர்யா ஆகியோர் மணவிழா 22.1.2007 அன்று கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று வழங்கிய வாழ்த்துரை, “‘செங்கை சிவம் அவர்கள் நெருக்கடி கால கட்டத்தில் நாங்கள் எல்லாம் சிறைச் சாலையிலே இருந்தபொழுது ‘விடுதலை’, ‘முரசொலி’ போன்ற இதழ்கள் வெளி வருவதற்கு அந்த அலுவலகத்திலே இருந்து மிகுந்த உதவி செய்தவர் செங்கை சிவம். சிறந்த திராவிட இயக்கக் கொள்கைப் பற்றாளர். அவரது இல்ல மணவிழா சுயமரியாதை முறைப்படியும், மாலை நேரத்தில் நடப்பதும் மிகுந்த பாராட் டுக்குரியது” எனத் தெரிவித்தோம். மறுநாள் சென்னையில் ‘முரசொலி’ அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பாராட்டுரை வழங்கினோம். இந்நிகழ்வில் கலைஞர் விருதுகள் ஜெயகாந்தன், சிலம்பொலி செல்லப்பன், நடிகை மனோரமா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

நாம் சிறீரங்கத்தில் அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட இருக்கும். 128 பெரியார் சிலைகளில் முதல் வெண்கலச் சிலையை ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 27.1.2007 அன்று நாம் திறந்து வைத்தோம். தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தலைமை வகித்தார். மத்திய சமூக நலத்துறை இணையமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். முன்னதாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் கோபி வெங்கிடு தலைமையில் டாக்டர் பிறைநுதல் செல்வி தொடங்கி வைத்தார்.

பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த ஊரில் சிலை அமைவதற்கு பெருமுயற்சியெடுத்து முக்கியப் பணிகளை ஆற்றி உழைத்த ந.சிவலிங்கம், நம்பியூர் சென்னியப்பன் உள்ளிட்டோரைப் பாராட்டி உரையாற்றினோம்.

செங்கை சிவம் இல்லத் திருமணம்

‘விடுதலை’ ஒளிப்படக் கலைஞரும், நம் சுற்றுப்பயண உதவியாளருமான துறையூரைச் சார்ந்த எல்.என்.பாலசுந்தரம், பா. ராஜம்மாள் ஆகியோரின் செல்வன் பா.சிவக்குமார் அவர்களுக்கும், கோவை புதூரைச் சார்ந்த பொறியாளர் ஆர்.கே.பாலமுருகேசன், பா.பத்மாசினி ஆகியோரின் செல்வி பா.சவுமியலலிதா அவர்களுக்கும் வாழ்க்கை இணை ஏற்பு விழா சென்னை – பெரியார் திடலில் 28.1.2007 அன்று மாலை 6 மணிக்கு எமது தலைமையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன் வரவேற்றுப் பேசினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன்னிலை வகித்துப் பேசினார். மணமக்களை வாழ்த்தி தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலாளர் மா.செல்வராஜ், நீதிபதிகள் சங்கப் பொதுச் செயலாளர் நீதிபதி பரஞ்சோதி, கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, அகில இந்திய மருத்துவ தேர்வாணையக் குழுத் தலைவர் டாக்டர் அ.ராஜசேகரன், கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை ஆகியோர் உரையாற்றினர்.

முரசொலி அறக்கட்டளை விருது வழங்கும் விழா

நாம் நம் உரையில், “விடுதலை குடும்பத்தில் நடக்கக்கூடிய மணவிழா இந்த மணவிழா. சிவக்குமார் எங்களுடைய பிள்ளைகளில் ஒருவர். குடும்பத்து உறுப்பினர். அதுவும் போற்றத்தக்க குறை சொல்ல முடியாத பிள்ளைகளில் ஒருவர் என்ற பெருமைக்குரியவர்.  என் நண்பர்கள் சொன்னது போல் மாநிலம் தழுவியளவில் சிவக்குமார் அறிமுகமானவர் காரணம், எல்லோருடைய முகமும் இவருடைய கைப்பிடிக்குள் இருக்கிறது; அதாவது அவருடைய ஒளிப்படக் கருவிக்குள்ளே இருக்கிறது.

 

நம்பியூரில் பெரியார் சிலைத் திறப்பு விழா

என்னுடைய உதவியாளர்கள் என்று சொல்லக்கூடிய தோழர்கள் கடும் பத்தியத்திற்கு ஆட்பட்டவர்கள். ஒரு உலைக்களத்திலே எப்படி இரும்பு காய்ச்சி அடிக்கப்படுகிறதோ அதைப் போல அவர்கள் கடும் பத்தியமாக இருந்தாலும் அவர்கள் உயிர் அனையவராவார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எந்த நிலையிலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எங்களை விட்டுப் போக மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய அந்த மனதைப் பெற்று இருக்கிறவை நம்முடைய குடும்பங்கள். எனவே, தந்தை பெரியார் அவர்களுடைய அறிவார்ந்த கொள்கைகள் எங்களை ஒன்று படுத்தி இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சிவக்குமார் பழக்கம். எங்கள் குடும்பத்துப் பிள்ளைகளிலே ஒருவர். அப்படித்தான் கருதி இருக்கிறோம் என்றால் இன்னமும் சிவக்குமார் என்ன ஜாதி என்று எங்களுக்குத் தெரியாது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட மானுட சமுதாயப் பற்றின் வெளிப்பாடு.

சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மூலமாக பலவகையான மண வாழ்க்கைத் உருவாக்கி வருகிறார்கள்.  ஒரு நல்ல புது வாழ்விணையை திருமகள் இறையன் அவர்கள் உருவாக்கி இருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் பல மணவிழாக்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்டி நல்ல அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த மணமக்களுக்கு அதிக அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சீனத்தில் மா-சே-துங் 1949 இல் திருமணம் முறையில் ஒரு புரட்சி செய்தார். ஆனால் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதைத் திருமணப் புரட்சி என்பது 1928லேயே தொடங்கிவிட்டது. ” என்று உரையாற்றினேன்.

பா.சிவக்குமார் – பா.சவுமியலலிதா இணையேற்பு நிகழ்வு

தமிழக மூதறிஞர் குழுவின்  மேனாள் செயலாளர் வ.சுந்தரராஜுலு அவர்களின் வளர்ப்பு மகள் அனிதா, ஆவடி மாவட்ட துணைத் தலைவர் துரை.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மகன் தியாகராஜன் ஆகியோர் திருமணத்தை 30.1.2007 அன்று எமது தலைமையில் நடத்தி வைத்தோம்.

தமிழ்நாடு அரசின் சார்பில் புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550ஆம் ஆண்டு நிறைவு விழா நிதியமைச்சர் பேரா.க. அன்பழகன் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் 01.2.2007 நடைபெற்றது. நாமும் பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழியும் பங்கேற்று உரையாற்றினோம்.

செங்கல்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 தேதிகளில் நடைபெற்ற இடத்தில் 275 சதுர அடி நிலத்தை திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் அ.கோ.கோபால்சாமி விலைக்கு வாங்கி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கினார். 1.2.2007 அன்று செங்கல்பட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் சென்று கையொப்பமிட்டோம்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 11ஆம் ஆண்டு இயல், இசை, நாடக விழாவின் முதல் நாள் நிகழ்வு, எமது தலைமையில் சென்னை பெரியார் திடலில் 01.02.2007 நடைபெற்றது.

புத்தர் விழாவில் ஆசிரியர்

டி.கே.கலாவின் இன்னிசை நிகழ்ச்சிக்குப்பின், நூற்றாண்டு விழா காணும் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் படத்தினை கவிஞர் இன்குலாப் திறந்து வைத்தார். நாம் நிறைவுரையாற்றினோம். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சி.செங்குட்டுவன், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணித் தலைவர் கவிஞர் செ.வை.ரெ.சிகாமணி ஆகியோர் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினர்.

2.2.2007 அன்று நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில்,

புதுகை பூபாளம் குழுவினர் ‘புதிய கோணங்கிகள்’ என்ற தமிழிசை, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தனர்.

திராவிடர் கழகப் பொருளாளர், திராவிடன் நலநிதி தலைவர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை தலைமையேற்க கவிஞர் அறிவுமதி அறிமுக உரை நிகழ்த்தினார்.

பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான.ராசசேகரன், நகைச்சுவை நடிகர் குமரிமுத்து ஆகியோருக்கு ‘பெரியார்’ விருதினை வழங்கி நாம் பெருமைப்படுத்தினோம். கழகத் தலைவர். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் இராம.நாராயணன் வாழ்த்தி உரையாற்றினார். நிறைவாக நாம் சிறப்புரையாற்றினோம்.

3.2.2007 அன்று நடைபெற்ற மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், காயிதே மில்லத்  கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரறிஞர் அண்ணாவின் ‘காதல் ஜோதி’, ‘ஓர் இரவு’ மற்றும் ஆணாதிக்கக் கொடுமைகளை விளக்கும் நாடகங்களின் முக்கியக் காட்சிகள் நடத்திக் காட்டப்பட்டன.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் ஜீவா படத்தினை கவிஞர் இன்குலாப் திறந்து வைக்கிறார்

அறிஞர் அண்ணாவின் நாடகங்களான ‘வழக்கு வாபஸ்’, ‘நீதிதேவன் மயக்கம்’, சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் ஆகியவற்றை
உலகத் தமிழர் பேரவைத் தலைவர்
இரா.ஜனார்த்தனம், நடிகர் சங்கப் பொருளாளர் கே.என்.காளை மற்றும் அண்ணாவுடன் இருந்தவர்கள் பலரும் நடித்துக் காட்டினர்.

க.பார்வதி, திருமகள் இறையன், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கு.தங்கமணி, நீலா அம்மையார், உமா செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிஞர் அண்ணாவின் மகன் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் தலைமைவகித்தார். நிறைவாக நாம் விளக்கவுரையாற்றினோம்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் இயக்குநர் ஞான ராஜசேகரன், நடிகர் குமரிமுத்து ஆகியோருக்கு பெரியார் விருது

5.2.2007 அன்று இலங்கையைச் சேர்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் (யாழ்ப்பாண மாவட்ட எம்.பி. சிவாஜிலிங்கம், அம்பாறை மாவட்ட எம்.பி. பத்மநாபன், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. அரியநேத்திரன்) உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இரா.ஜனார்த்தனம் ஆகியோர் சென்னை பெரியார் திடலில் எம்மைச் சந்தித்து, பல்வேறு கருத்துகளை விவாதித்தனர்.

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகக் காட்சி

10.2.2007 அன்று புதுச்சேரி கனகசெட்டிக் குளத்தில் வசந்தம் இல்லத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு திறந்து வைத்து விட்டு அன்று மாலை கடலூர் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் பங்கேற்று ‘பெரியார் பார்வையில் தமிழ்’ என்னும் தலைப்பில் உரையாற்றினோம். மறுநாள் காலை தஞ்சையில் மறைந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சக்ரவர்த்தி அவர்களின் மகன் வெற்றிச்செல்வன்- இலக்கியா ஆகியோர் திருமணத்தையும், கழக மாணவர் கழகப் பொறுப்பாளர்களில் ஒருவரான மா.திராவிடச்செல்வன் – சுப்பு லெட்சுமி ஆகியோர் திருமணத்தையும் தொடர்ந்து மயிலாடுதுறையில் ரமேஷ்குமார்- கார்த்தியாயினி ஆகியோர் திருமணத்தையும் நடத்தி வைத்தோம்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் பங்கேற்ற மாணவர்கள்

பேராசிரியர் வேலுச்சாமி அவர்கள் எழுதிய கலைஞர் ஆய்வு நூல் வெளியீட்டு விழா 12.2.2007 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு உரையாற்றினோம். அமைச்சர்கள் எ.வ.வேலு,
என்.கே.கே.பி.ராசா ஆகியோர் பெற்று
க்கொண்டனர். இந்நூல் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியானது.

(நினைவுகள் நீளும்…)