பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் – ஒரு கண்ணோட்டம்…

2024 அக்டோபர் 1-15 கட்டுரைகள்

ஆத்மா எனும் இல்பொருள்

அ) ஆன்மா எனும் சொல்லுக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “வாழ்வியற் களஞ்சியம்” (பக்கம் 767) எனும் நூல் கீழ்க்கண்டவாறு ஆறு வகையான விளக்கங்களை அளித்துள்ளது:_

1. உடலினின்றும் வேறுபட்டதும் உடல் இறந்த பிறகும் உள்ளதும், உடல் போனபின் பூமியில் செய்த செயலின் பலன்களைத் துய்ப்பதுமான

மனித ஆவி.

2. சில வேளைகளில் இது பிரம்மம் என்பதற்கு மாற்றுச் சொல்லாக வந்துள்ளது. அப்போது இதன் பொருள் உலகத்தின் மூலத்துவம்.

3. சாருவாகர்கள், உடலினின்றும் வேறான ஆத்மா ஒன்றை ஒப்புக்கொள்ளவில்லை.

4. இது இருக்கு வேதத்தில் முப்பது இடங்களில் பல பொருள்களில் வந்துள்ளது.

5. மதப்பிரிவினர் சிலர் பிராணனையோ மனத்தையோ, ஆன்மா என்று கூறுகின்றனர்.

6. ஆன்மா என்பது சடப்பொருளாகிய பருவுடல், அய்ம்பொறிகள், பிராண வாயு முதலியவற்றுள் ஒன்று அன்று; வெறுமையும் அன்று; அறிவே வடிவாகிய பரம்பொருளும் அன்று; அது ஒரு தனி முதல் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.

ஆ) ஆன்மா (Soul) என்பதற்கு “எப்போதும் (அழிவின்றி) இருப்பதாக நம்பப்படும் ஒரு மனிதனின் பொருள் அல்லாத பகுதி” என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி பொருள் கூறுகிறது. (Non material part of a person believed to exist for ever. Oxford Advanced learner’s Dictionary of Current English 1985. Page 823)

இ) ஆத்மா என்பது என்ன என்று 1928ஆம் ஆண்டிலேயே பெர்ட்ரண்ட் ரசல் வினா எழுப்பினார். உடல் என்பது மனம் சார்ந்ததா? அல்லது மனம் உடலைச் சார்ந்ததா? அல்லது இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தனவா? என்ற கேள்விகளை முன்வைத்த ரசல் அதற்கு விடையாக மனமும் பொருளும் (இயற்கை) நிகழ்ச்சிகளே என விளக்கினார். அவர் மேலும் கூறும்போது உடல் எப்போது அழிகிறதோ அதனுடன் நினைவும் அழிந்துவிடுகிறது என்று தெளிவுறுத்தினார். மனம் அழியக்கூடியதே என்றும் உலகின் இறுதி சக்தியாக இருப்பது (அதாவது எஞ்சி நிற்பது) உடல் சார்ந்ததே அன்றி (அதாவது பொருள் சார்ந்ததே அன்றி) மனம் சார்ந்தது அன்று எனும் பொருள்முதல் வாதிகளின் கொள்கையை ரசல் வழிமொழிந்தார். (What is soul? asked Russell in 1928. Does the body depend on the mind? or vice versa or both and replied that mind and matter are both events. He suggested that memory dies with the body and sided with the materialists who held that mind is mortal and the ultimate power in the world is physical and not mental. (A philosopher Activist Bertrand Russell by Neil Keidon. Modern Rationalist November 1982)

ஈ) ஆத்மாவைக் கற்பித்தவன், கடவுளைக் கற்பித்தவனைப் போல முட்டாள் அல்ல; மாறாக அவன் ஓர் அயோக்கியன். பிறகு யார் முட்டாள் என்றால் ஆத்மாவை நம்புகிறவனே முட்டாள். ஆத்மா முதலியவற்றை வைத்துப் பிழைப்பு நடத்தி அதன்முலம் பலன் அனுபவிக்கிறவன். கடவுளைப் பரப்பியவனைப் போல சாதாரண அயோக்கியன் அல்ல; மகா, மகா அயோக்கியன்; அதாவது அயோக்கிய சிகாமணி! தந்தை பெரியார் அவர்களின் பின்வரும் ஆத்மா மறுப்பு வாசகங்களில் பொதிந்துள்ள கருத்துகளின் விளக்கமே இது.

“ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு பிதிர்லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன். இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா, மகா அயோக்கியன்.”

2. ஆத்மாவின் பொய்ம்மையைக் குறித்துத் தந்தை பெரியார் அவர்கள் விரிவாகப் பேசியும் எழுதியும் மக்களிடையே தீவிரமாகப் பிரச்சாரம் செய்தும் வந்துள்ளார். அவற்றுள் முதன்மையான ஒரு சில கருத்துகளை இங்குக் காண்போம்.

1. ஆத்மா என்பதை இதுவரை ஒரு மனிதனும் அர்த்தத்தோடு உறுதிப்படுத்தவே இல்லை. 4 + 3 = 10 என்று சொல்லிவிட்டு அந்தப் பத்தைப் பற்றியே விவகாரித்துக் கொண்டிருப்பது போலவே – அதாவது, பத்தை யார் யாருக்கு எப்படிப் பங்கிடுவது? எங்கு எங்கு வைப்பது என்று வேண்டுமானால் பேசு; அதற்கு மேல் 4 + 3 எப்படி 10 என்று மாத்திரம் கேட்கக் கூடாது என்கிற நிலையில்தான் இன்று ஆத்மா தத்துவம் இருந்துவருகிறது.

(‘குடிஅரசு’ 30.7.1949. ‘விடுதலை’ 18.8.1972)

2. ஆத்மா என்றால் என்ன? அது எப்படி சரீரம் பெற்றது? அதற்கு எப்படி கருமம் ஒட்டிற்று? அதன் நடத்தைக்குக் காரணம் என்ன? அது எப்படி மோட்சம் போகிறது? அது எப்படி மறுபடியும் சரீரம் பெற்று எழுகிறது? மனித ஆத்மா, மிருக ஆத்மா, பறவை ஆத்மா, புழு, பூச்சி ஆத்மா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன? ஆகிய இவைகளைப் பற்றியெல்லாம் பேசலாம்; விவரிக்கலாம்; வால்யூம் வால்யூமாகப் புத்தகம் எழுதலாம். ஆனால், ஆத்மா என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அப்படி ஒன்று இருக்க விஞ்ஞான சாஸ்திரம் (Science) அல்லது ஜீவதத்துவ சாஸ்திரம் இடம் கொடுக்கிறதா? என்பதைப் பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆத்மா இருப்பதாக அவர் சொன்னார்; கிறிஸ்து சொன்னார்; கிருஷ்ணன் சொன்னார்; புத்தர் சொன்னார் என்று சொல்லிவிடுவதும் ஆத்மாவை நம்பாதவன் கடவுளை நம்பாத நாஸ்திகனைவிடக் கேடானவன்; மடையன்; மட்டி என்றும் கடவுளை நம்பாவிட்டாலும் ஆத்மாவை நம்பித்தான் ஆகவேண்டும் என்றும் சொல்லி வருகிறார்களே ஒழிய, காரணகாரியங்களுடன் அறிவு அனுபவங்களுடன் பேசுபவர்களே காணக் கிடைப்பதில்லை.

(‘குடிஅரசு’ 30.7.1949, ‘விடுதலை’ 18.8.1972)

ஊ) பவுத்தம், இஸ்லாம், கிறிஸ்து, இந்து ஆகிய மதங்களில் பவுத்தம் தவிர மற்ற முக்கியமான மூன்று மதங்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையில்தான் ஆத்மாவையும், ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் பற்றிய விஷயங்களை வைத்துக் கொண்டிருக்கின்றன.

மேற்கண்ட ஆத்மா என்பதில்,

1. மனித ஆத்மா மாத்திரம்தான் மேற்கண்ட மத சம்பந்தங்களுக்காக – அதாவது, கடவுளுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்திற்காக- ஏற்பட்ட மதங்களுக்குச் சேர்ந்ததா அல்லது புல், பூண்டு, அணு, ஜந்து, ஊர்வன, பறப்பன, நகர்வன நீர்வாழ்வன முதலிய ஜந்துக்களின் ஆத்மாக்கள் என்பவைகளும் அதில் சேர்ந்தவைகளா?

2. இந்தப்படி மனித ஆத்மாவுக்கும் மற்ற ஆத்மாக்களுக்கும் வித்தியாசங்கள் உண்டா? அல்லது எல்லாம் ஒரே தன்மையானதுதானா?

3. மனித ஆத்மா மனித சரீரத்தில் இருக்கும் போது அது செய்த வினைக்கு ஏற்ற பலனைச் சரீரத்தை விட்டுப் பிரிந்த பிறகு அனுபவிக்கிறது என்பது போலவே மற்ற புல், பூண்டு, நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன, அணு, ஜந்துக்கள் முதலியவைகளின் ஆத்மாக்களும் சரீரத்தைவிட்டு விலகியபிறகு அவைகளின் வினைக்குத் தகுந்த பலனை அனுபவிக்கின்றனவா? (‘குடிஅரசு’ 3.5.1931).
எ) ஆத்மா ஓர் ஆராய்ச்சி என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் எழுதப்பெற்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூலில் ஆத்மாவின் பொய்ம்மையைப் பற்றிய பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆத்மாவைப் பற்றிய ஆய்வுக் கருத்துகளை அறிந்துகொள்ள விழையும் எவரும் அந்நூலைப் படித்துப் பயன்பெற வாய்ப்பு உள்ளது.

(தொடரும்…)