சட்ட எரிப்புப் போராட்ட வீரரும் பெரியார் பெருந்தொண்டரும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் சித்தார்த்தன் அவர்களின் தந்தையுமான ஈ.சுந்தர் (வயது 80) அவர்கள் 25.10.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இரங்கல் செய்தி அனுப்பி வைத்தோம்.
கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் சித்த கங்கையா மற்றும் உறுப்பினர்கள் 26.10.2005 அன்று சென்னை பெரியார் திடலில் எம்மைச் சந்தித்து இந்திய அளவில் சமூகநீதிக்கு இன்றைய தினம் ஏற்பட்டு இருக்கும் அச்சுறுத்தல்கள், அறைகூவல்கள் குறித்து விவாதித்தனர். அப்போது மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்த திராவிடர் கழகம் மேற்கொண்ட போராட்டங்களையும் முயற்சிகளையும் நாம் அவர்களிடத்தில் எடுத்துரைத்து அகில இந்திய அளவில் சமூகநீதிச் சக்திகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினோம்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் பல்கலைக்கழகத்தில் உள்ள மொழிப் புலக் கருத்தரங்க அறையில் செந்தமிழ்க் காவலர் பேரா.டாக்டர் அ.சிதம்பரநாதன் (செட்டியார்) அவர்களின் நூல் வெளியீட்டு விழா 3.11.2005 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு நாம் உரையாற்றுகையில், “இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். நன்றி காட்டுகின்ற விழாவாகும். இந்த நூலை நான் வெளியிட வேண்டி அழைத்ததற்கு மகிழ்வுடன் ஒப்புக்கொண்டதற்கான காரணம், மிகப்பெரிய கல்வி நாணயச் செம்மல் பேரா. அ.சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மாணவன் என்கிற முறையில் நன்றிக் கடன் செலுத்துவதாக நினைத்து அவருக்கு வீரவணக்கம் செலுத்த ஒரு வாய்ப்பு எனக் கருதி வந்தேன்” என்று உள்ளம் நெகிழக் குறிப்பிட்டேன்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கழகப் பணிகளைச் சிறப்பாக ஆற்றியவரும் பல ஆண்டுகளாக பெரியார் பெருந்தொண்டராகவும் பல்வேறு கழகப் பொறுப்புகளிலும் இருந்தவருமான சி.எம். பெருமாள் அவர்கள் 4.11.2005 அன்று மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துன்பத்திற்கும் ஆளானோம். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 4.11.2005 அன்று ‘விடுதலை’ ஏட்டில் இரங்கல் செய்தி வெளியிட்டோம்.
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள் தாங்கல் புதூரைச் சேர்ந்த நரசிம்மன்- சாவித்திரி இணையரின் மகன் கோபி மற்றும் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த கழகத் தோழர் கண்ணன்- கண்ணம்மா இணையரின் மகள் அன்புமணி எம்.ஏ., ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை 6.11.2005 ஞாயிறு மாலை 3 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடத்தி வைத்து பெரியார் கொள்கைகளை விளக்கிக் கூறினோம்.
வேலூர் கோட்ட திராவிடர் கழகப் பிரச்சார அமைப்புக்குழுத் தலைவரும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிருவாகக் குழு உறுப்பினரும், கல்விப் பணியாற்றி வருபவருமான செய்யாறு மானமிகு பா.அருணாசலம் அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அவரின் இணையர் அமிர்தம் அம்மையார் அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, இந்த இருவரின் 60ஆம் ஆண்டு மணவிழா ஆகிய முப்பெரும் விழாக்கள் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் 6.11.2005 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. தம்பதியருக்கு நாம் எமது இணையர் மோகனா அவர்களுடன் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தோம்.
விழாவையொட்டி திராவிடர் கழக நிதியாக ரூபாய் 1 லட்சத்தை பா. அருணாசலம் அவர்கள் எம்மிடம் வழங்கினார். பா.அருணாசலம் – அமிர்தம்மாள் தம்பதியரைப் பாராட்டி பல்வேறு கல்வியாளர்கள், கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றினர்.
நிறைவாக நாம் உரையாற்றுகையில், “அருணாசலம் அவர்கள் 60 ஆண்டுகாலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல; ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே சட்டை- இதுதான் அருணாசலம் அவர்களின் தனிச் சிறப்பாகும். உறுதி படைத்த இலட்சிய வீரர் என்பதற்கு எடுத்துக்காட்டு அருணாசலம் அவர்கள் என்றும், அவர் அப்படி இருப்பதற்கு அவரது இணையர் அமிர்தம் அம்மாள்தான் முழுமுதற்காரணம்” என்றும் அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினோம்.
தமிழ்நாடு மிகவும் நலிந்த வகுப்பினர் கூட்டமைப்பின் (மீனவர், குலாலர், சலவையாளர், மருத்துவர்) சார்பாக அதன் பிரதிநிதிகள் 7.11.2005 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் பெரியார் திடலில் எம்மைச் சந்தித்து மிகவும் நலிந்த பிரிவினருக்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டைத் தனி ஒதுக்கீடாகப் பிரித்து வழங்குவது குறித்து ஆலோசனை செய்தனர். உரிய ஆதாரங்களுடன் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக நாம் அவர்களிடம் உறுதியளித்தோம்.
தமிழ்நாடு ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களை நாம் 8.11.2005 அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடினோம். பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியின் ‘புரா’ திட்டம் குறித்து குடியரசுத் தலைவர் அவர்கள் பாராட்டியிருப்பது கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாக ஆளுநர் எம்மிடம் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி மேற்கொள்ள இருக்கும் ஒப்பந்தம் குறித்து நாம் ஆளுநரிடம் எடுத்துரைத்தபோது அவர் தனது மகிழ்ச்சி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேனாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள் 10.11.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினோம்.
அவர் மறைவையொட்டி 10.11.2005ஆம் நாள் ‘விடுதலை’ ஏட்டில்,“ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, இந்தியாவின் மிகப் பெரிய பதவியான குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று, அப்பதவிக்குப் பெருமை சேர்த்தவர். சமூகநீதியில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். வைக்கம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர். அவரின் மறைவு இந்தியத் துணைக் கண்டத்திற்கு மாபெரும் பேரிழப்பாகும்” எனக் குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டோம்.
இந்தோனேசியாவில் 12.11.2005ஆம் தேதி நடைபெறும் சுயமரியாதைத் திருமண வரவேற்பு விழா மற்றும் கல்விப் பணிகள் தொடர்பான விழாக்களில் கலந்துகொள்ள, 9.11.2005 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றோம்.
10.11.2005 அன்று காலை சிங்கப்பூர் சென்றடைந்து, 11.11.2005 அன்று இந்தோனேசியா நாட்டின் மேடான் விமான நிலையம் சென்றடைந்தோம்.
விமான நிலையத்திலிருந்து மணமகளின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் எம்மை வரவேற்றனர். அப்போது திரு.இராமதாஸ் (சுப்பிரமணியத்தின் தம்பி) அவர்கள் இதுவரை எந்தத் தலைவரும் எங்கள் ஊருக்கு வராத நிலையில், உங்களது வருகை எங்களுக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது என நண்பர்களிடத்திலும் எம்மிடமும் கூறி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். பின்னர் இரவு உணவை முடித்துக் கொண்டு, ஓட்டல் போலோனியாவுக்கு அழைத்து வந்து தங்க வைத்தனர்.
அடுத்த நாள் 12.11.2005 அன்று காலை 10.20 மணிக்குப் புறப்பட்டு, சரியாக காலை 10.30 மணிக்கு இந்தியத் தூதரகத்திற்கு திரு.சுப்பிரமணியம், பேராசிரியர் நல். இராமச்சந்திரன் ஆகியோரோடு சென்றடைந்தோம். அப்போது எம்.எஸ்.மந்தையா அய்.எஃப்.எஸ்., வி.எஸ். கோபால் அய்.எஃப்.எஸ்., (துணைத் தூதர்) மற்றும் அதிகாரிகள் எம்மை வரவேற்று, இந்தோனேசியா மற்றும் அங்குள்ள தமிழர்களைப் பற்றி எடுத்துரைத்தனர்.
தந்தை பெரியாரின் நூல்கள், பெரியாரின் நினைவு அஞ்சல் தலை, சிறப்பு அஞ்சல் உறை, பெரியார் அறக்கட்டளையின் பணி விளக்க ஆங்கிலக் கையேடு ஆகியவை அடங்கிய கோப்புகளைப் பரிசாக அளித்தோம். அதனைத் தொடர்ந்து தூதர் அவர்கள் எமக்கு நினைவுப் பரிசை அனைவரின் கரவொலிக்கிடையே இந்தியத் தூதரகத்தின் சார்பாக அளித்தார்.
அதன் பின்னர் தந்தை பெரியார் அவர்களின் தொண்டின் சிறப்பு அம்சங்களை ஆங்கிலத்தில் சுமார் 15 நிமிடங்கள் எடுத்து விளக்கினோம்.
பெரியார் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் பல்வேறு நிறுவனங்களையும், அதில் எவ்வாறு ஒரு பொது நிறுவனமாகவும் அதில் பேரறிஞர்கள் ஆற்றுகின்ற பங்கையும் எடுத்துரைத்தோம்.
தொடர்ந்து இந்தியத் தூதர் அளித்த தேநீர் விருந்தில் நாம் கலந்து கொண்டோம். பின்னர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மாட்சிமைக்குரிய கே.ஆர்.நாராயணனின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த வருகையாளர் பதிவேட்டில் இரங்கல் செய்தியைப் பதிவு செய்த நிலையில், இந்தியத் தூதரை நமது நிறுவனங்களைப் பார்வையிட வேண்டுகோள் விடுத்தோம். அதை அன்போடு தூதர் அவர்கள், தாம் அவசியம் இந்தியா வரும்போது வருகிறேன் என்று உறுதியளித்தார்.
இரண்டாம் நிகழ்ச்சி மலேசியா திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் ஒருவரான இரா.ப.தங்கமணி, பி.ஜே.கே.கிரேஸ் இரத்தினாவதி இணையர் மற்றும் மேடான் – இந்தோனேசியாவைச் சார்ந்த தமிழர்கள் மானமிகு ஜி. சுப்பிரமணியம் – எஸ். வைஜெயந்திமாலா இணையரின் செல்வங்கள்(முறையே) மணமகன் சிறீ. செய்முரளிதாசன், மணமகள் ரூஜிஸ்ராதேவி ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியானது 12.11.2005 அன்று மாலை 7.00 மணியளவில் மேடானில் அமைந்துள்ள முத்தியாரா சுவாரா நப்பிரி கொன்வென்ஷன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக இந்தியத் தூதர் (கான்சலேட் ஜெனரல்) மாண்புமிகு திரு.மந்தையா அவர்களும் அவரின் துணைவியார் அவர்களும் வந்து சிறப்பித்தனர். இந்தோனேசியா வழக்கப்படி வந்திருந்த விருந்தாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு, பின்னர் மணமக்கள், அவர்தம் பெற்றோர்கள் வரிசையாக வந்து மேடையில் அமர்ந்தவுடன் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் நிகழ்ச்சியாக இன்னிசைப் பாடலோடு தொடங்கி, வரவேற்புரையாற்றிய திரு.ஜூலியஸ் இராஜா அவர்கள் தமிழிலும் இந்தோனேசிய மொழியிலும் ஆற்றினார். தலைமை உரையை மானமிகு கோ.இராமதாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
நிறைவாக நமது உரையில் வந்திருந்த அனைவரையும் விளித்துவிட்டு, முதலில் மணமக்கள், அவர் தம் பெற்றோர், குறிப்பாக தோழர் தங்கமணியின் அரும்பணிகளை நினைவுகூர்ந்து இரு நல்ல தமிழ்க் குடும்பங்கள் இணைகின்றன. இந்த இரு குடும்பங்களையும் நல்ல பல்கலைக்கழகத்தோடு ஒப்பிட்டுக் காட்டி உரையாற்றியதைக் கேட்ட அவை மகிழ்ச்சியோடு காணப்பட்டது. பின்னர் அய்யா அவர்களின் வாழ்வியல் தத்துவங்களை இணைத்து மணமக்கள் வாழவேண்டியவை, தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை எல்லாம் விளக்கியும், தந்தை பெரியார் கருத்துகளையும் அறிவுரைகளையும் பற்றி விளக்கி உரையாற்றினோம்.
மறுநாள் (13.11.2005) மாலை சிங்கப்பூர் செல்லும் முன்பாக, திருவாளர்கள் சன்னாசி, பாஸ்கரன் ஆகியோர் மேடான் நகரத்தைச் சுற்றிக் காண்பித்தனர்.
இறுதியாக மாலை 6.30 மணியளவில் திருமதி கிருஷ்ணி இராமதாஸ், திருவாளர்கள் இராமதாஸ், ஆர்.பாஸ்கரன், சன்னாசி மற்றும் நண்பர்களின் வழியனுப்புதலோடு மறக்க முடியாத பாச மழையோடு சிங்கப்பூரை இரவு 11 மணிக்குச் சென்றடைந்தோம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கி வரும் சாண்டியாகோ பல்கலைக்கழகத்திற்கு 17.11.2005 அன்று சென்று, அதன் தலைவர் ஸ்டீபன் வெப்பர் (Stephen Weber) அவர்களைச் சந்தித்து கல்வி மற்றும் ஆராய்ச்சி குறித்த பரிமாற்றங்களுக்கான உடன்பாட்டில் கையொப்பமிட்டோம்.
இந்த ஒப்பந்தத்தின்படி வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியும் சாண்டியாகோ பல்கலைக்கழகமும் மாணவர், ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே கல்வி, ஆராய்ச்சி தொடர்பாக பரஸ்பரம் பரிமாற்றம் செய்துகொள்ளாலாம்.
பின்னர் நடைபெற்ற நிகழ்வில் நாம் உரையாற்றுகையில், தந்தை பெரியார் பற்றியும் அவருடைய வாழ்நாள் உழைப்பு, பெண்கள் முன்றேற்றம், சமூகநீதித் தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தோம். மேலும் கல்வி என்பது சமுதாய மாறுதலுக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான ஒரு கருவி என்ற தந்தை பெரியாரின் கருத்தைச் சுட்டிக்காட்டி விளக்கினோம். தொடர்ந்து 18.11.2005 அன்று நடந்த ‘Collo Quium” என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்கலைக்கழக மாணவர்கள்- ஆசிரியர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தோம்.
இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்னும் கல்வி நிறுவனம் அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாநிலத்தில் புகழ்பெற்ற சிகாகோ நகரில் சிறப்பாக இயங்கி வரும் தனியார் தொழிற்கல்வி நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் டார்ஸ் டி. வாசன் அவர்களும் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியின் தலைவர் என்ற வகையில் நாமும் 21.11.2005 அன்று கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டோம்.
இந்த உடன்படிக்கையின்படி மாணவர்கள் பரிமாற்றம், பேராசிரியர்களுக்கான பயிற்சி, மேல் படிப்புகள், கல்லூரிகள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இந்த ஒப்பந்தம் ஏற்பட டாக்டர். சோம. இளங்கோவன் சிறந்த ஒத்துழைப்பு நல்கினார்.
உடன்படிக்கை ஏற்பட்ட பின்னர், இல்லினாய்ஸ் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் டார்ஸ் டி. வாசன் அவர்களுக்கு தந்தை பெரியார் நூல்களை நாம் நினைவுப் பரிசுகளாக வழங்கினோம்.
சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், தமிழவேள் நற்பணிமன்றம் ஆகியவற்றின் சார்பாக ‘தினத்தந்தி’ நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு விழா சிங்கப்பூரில் அமைந்துள்ள தேசிய நூலகக் கட்டடத்தில் 4.12.2005 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
விழாவிற்கு சிங்கப்பூர் தமிழறிஞர்
சுப.திண்ணப்பனார் தலைமை தாங்கி உரையாற்றினார். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன் பங்கேற்று உரையாற்றினார்.
இறுதியில் நாம் சி.பா.ஆதித்தனார் அவர்களின் இனநல உணர்வையும் பொதுநலத் தொண்டுகளையும் பாராட்டிப் பேசினோம்.
சிங்கப்பூர் குடியரசின் மேனாள் அதிபரும் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தை நிறுவியருமான தேவன் நாயர் (வயது 82) அவர்கள் 7.12.2005 அன்று கனடா நாட்டில் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம்.
தேவன் நாயர் அனைத்து வர்க்க உழைப்பாளிகளுடனும் தொழிற்சங்க உறுப்பினர் களுடனும் இரண்டறக் கலந்து தொண்டாற்றியவர். மனிதாபிமானம் மிக்கவர். மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர். தமிழ் மொழிக்கு நடைமுறையில் ஓர் அந்தஸ்தை உருவாக்கித் தந்தவர்.
அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் 11.12.2005 அன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் கலந்துகொண்டு தேவன் நாயர் படத்தைத் திறந்து வைத்து இரங்கலுரையாற்றினோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப வெளிநாடு பயணம் மேற்கொண்ட நாம் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 12.12.2005 அன்று இரவு 10 மணிக்கு சென்னை திரும்பினோம்.
தா.பழூர் ஒன்றிய மேனாள் திராவிடர் கழகத் தலைவரும் அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பெரியார் படிப்பக நிருவாகியுமான முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மு.ரெங்கசாமி (வயது 84) அவர்கள் 17.12.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி அனுப்பி வைத்தோம்.