விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்தும் விசயங்கள் எத்தனையோ இருந்தாலும் மிக முதன்மையானதாகப் ‘பண்பாடு’ என்பதும் உள்ளது. ஆம், மனிதர்கள் விலங்குகளைப்போல உடலால் மட்டுமல்ல, முதன்மையாக மனதால் வாழ்பவர்கள். எந்த ஒரு விலங்கும் தனது மனமகிழ்வுக்காக தனது உடலைத் தானாக வருத்திக் கொள்வதில்லை. விலங்குகள் இன்றளவும் அவற்றின் உடல் தேவைகளால் உந்தப்பட்டே அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடுகின்றன. அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்கின்றன.
ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் தாங்களே உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்ற “பண்பாட்டுச்” சிறையில் தங்களைத் தாங்களே பூட்டி வைத்துக்கொண்டு அல்லல் படுகின்றனர்.
காலமும் சமூகமும் வெகுவாக மாறிய பிறகும் அந்தப் பண்பாட்டைக் கைவிடாமல் அல்லது காலத்திற்கு ஏற்ப புதிதாக ஒரு பண்பாட்டை உருவாக்கிக் கொள்ளாமல் பழையதையே தொடர்கின்றனர். அதனால் அவை தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாக நின்று நிலைத்து ஆதிக்கம் செலுத்துகின்றன.
விலங்குகள் கூட இயற்கையில் ஏற்படுகின்ற அல்லது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட மாறுதலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொண்டு இயற்கையோடு இயைந்து அல்லது கட்டுப்பட்டு வாழ்கின்றன. ஆனால், மனிதர்கள் மட்டும் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தித் தமது விருப்பத்திற்கு அல்லது தேவைக்கு ஏற்ப இயற்கையை மாற்ற முனையும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத்திலும் இரண்டாயிரம் – மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கைக்கு அடிமைகளாக இருந்த ஆரியர்கள் உருவாக்கிய கருத்தியலை, நடைமுறைகளை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே தொடர விரும்புகின்றனர்.
பண்டைய ஆரியர்களின் பண்பாடான யாகம் வளர்த்து அதில் உணவுப் பொருட்களைப் போட்டு வழிபடும் முறையை இன்று 2024ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களை அழைத்து, அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் தட்சணை கொடுத்து, தங்களது புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் நடுக் கூடத்தில் தீ வளர்த்து அதில் உணவுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் போட்டு சமஸ்கிருத மந்திரம் ஓதி வழிபாடு செய்வதை என்னவென்று சொல்வது?
இதற்கு அடுத்து இன்னும் சிலரோ, ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல!’ என்று எல்லாப் பழைய பழக்க வழக்கங்களுக்கும் அறிவியல் விளக்கம் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர். இது அறிவியலை ஏற்றுக் கொண்டதாகச் சொல்பவர்களின் நிலையாக உள்ளது.
இதற்கும் அடுத்து மூன்றாவதாக, இன்றைய நவீன கால வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப பழைய பழக்க வழக்கங்களைச் சுருக்கியும் தேவைக்கு ஏற்ப கொஞ்சமாக மாற்றியும் நடைமுறைப்படுத்தும் காரியவாதிகள் பலர் உள்ளனர். இந்தக் காரியவாதத்திற்கும் முன்னோடிகள் பார்ப்பனர்கள்தான். ஆம், பார்ப்பனர்கள் கடலைத் தாண்டிப் பயணிக்கக் கூடாது என்ற இந்துமத விதியை மீறி உயர்கல்வி கற்க வெளிநாடு சென்றபோது தாய்நாட்டு மண்ணைப் பொட்டலம் கட்டி உடன் எடுத்துச் சென்றால் அது விதி மீறலாகாது என்று பரிகாரம் கண்டுபிடித்தவர்கள் பார்ப்பனர்கள்தான்.
ஆக, ஒருகாலத்தில் பார்ப்பனர்களும் பார்ப்பனிய அடிமைச் சிந்தனை கொண்டவர்களும் உருவாக்கிய பண்பாட்டை நிரந்தரமாக்கி அதற்கு கட்டுப்பட்டு நடக்கும் அடிமைகளாகத் தமிழர்கள் தங்களை மனப்பூர்வமாக ஒப்புக் கொடுத்துள்ளதுடன் அந்த அடிமை நிலை குறித்துப் பெருமிதம் கொள்வதும், இதில் இருந்து மீறி நடப்பவர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும், இழிந்தவர்களாகவும் பார்க்கும் பார்வையும் உள்ளது.
நமது ஜாதிய வர்க்க சமூகத்தில் இந்தப் பண்பாட்டு அடிமைத்தனமும், அடிமைச் சிந்தனையும் ஜாதிகளின், வர்க்கங்களின் படிநிலை இருப்புக்கு ஏற்ப கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பதைக் காண்கிறோம்.
இதைப்பற்றி அறிவாசான் தந்தை பெரியார் 1930களிலேயே சுட்டிக்காட்டி உள்ளார் :
இதனை வேறொரு விதமாகச் சொல்வதென்றால் கிராமப்புற நிலவுடைமைப் பொருளாதாரச் சூழலுக்குள் வாழ்பவர்களை விடவும் நவீன முதலாளியப் பொருளாதாரச் சூழலுக்குள் வாழ்பவர்கள் இந்தப் பண்பாட்டு அடிமைத்தனத்தில் இருந்து ஒப்பீட்டு ரீதியாக கூடுதலாக விடுதலை பெறும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லத் தோன்றுகிறது. அதேசமயம் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மற்றொரு பண்பாட்டையும் ஏற்றுக் கொண்டாடுபவர்களாகவும் உள்ளனர். அது மேற்குலக முதலாளியப் பண்பாடாகும். இந்த முதலாளியப் பண்பாட்டைத்தான் மத அடிப்படை வாதிகள் கடுமையாக இன்று எதிர்க்கின்றனர். காதலர் தினத்தை எதிர்ப்பது, பஃப் கலாச்சாரத்தை எதிர்ப்பது, Living together வாழ்க்கையை எதிர்ப்பது….. என இது நீள்கிறது.
ஆகவே, இங்கு இப்போது நடைபெற்று வருவது பழைய நிலவுடைமை – பார்ப்பனியப் பண்பாட்டிற்கும் நவீனமுதலாளியப் பண்பாட்டிற்கும் இடையிலான முரண்பாடும் போராட்டமுமே ஆகும். அந்தவகையில் பார்ப்பன நிலவுடைமைப் பண்பாட்டை விட முதலாளியப் பண்பாடு முற்போக்கானது என்ற அடிப்படையில் அதன் பக்கம் நிற்பதும் ஆதரிப்பதும் முற்போக்காளர்களின் கடமையாக உள்ளது. ஆனால், இந்த இடத்தில் தான் இங்கு தோழர்கள் பலரிடம் தவறு நிகழ்கிறது. இன்னும் பெரும்பாலோர் பார்ப்பனிய நிலவுடைமைப் பண்பாட்டின் செல்வாக்கின் கீழ் உள்ளனர். இதற்கு தமிழர் மரபு, தமிழ்ப் பாரம்பரியம் போன்ற புரிதல் காரணமாக அமைகின்றன.
பார்ப்பன நிலவுடைமை அரசியலில் இருந்து கறாராகத் துண்டித்துக் கொண்ட ஒரு தமிழர் மரபையும் தமிழ்ப் பாரம்பரியத்தையும் இவர்களால் அடையாளம் காண முடியாத சூழலில் தான் இந்த அவலம் நிகழ்கிறது.
இந்த இரு நிகழ்வுகளும் நமக்கு ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது படித்தவர்களும் நகர்ப்புறத்தவர்களும் தங்களது பொருளாதாரத்தை கல்வி, மருத்துவம், முன்னேற்றம் போன்றவற்றிற்கு கூடுதலாகச் செலவிடக் கூடியவர்களாக உள்ளனர். கிராமப்புற மக்கள் தமது பொருளாதாரத்தைக் கூடுதலாக பண்பாட்டு நடவடிக்கைகளில் இன்றுவரை வீணடித்து வருகின்றனர்.
பண்பாடு என்பது காலச்சூழலுக்கும், உலக வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் ஏற்ப மனித வாழ்வைப் பகுத்தறிவுக்கு ஏற்ற பாங்கில் பண்படுத்திக்கொள்வதாகும். ஆதிக்க ஒழிப்பு, சமூகநீதி, சமத்துவம் நிலைக்க உகந்ததாய் ஆதிக்கம் அழித்து ஏற்றத்தாழ்வை அகற்றுவதாய் அப்பண்பாடு அமைய வேண்டும். பண்பாட்டு விழாக்கள் இவற்றை நிலைநாட்டவும், கொள்கை பரப்பவும், கூடி மகிழவும், தோழமை வளர்க்கவும் பயன்படவேண்டும்!